May 26, 2010

நடேசன் - கேரக்டர்

மதுராந்தகத்தில் ஏராளமான நஞ்சை புஞ்சை நிலங்களுக்கும், ஊரில் ஏழெட்டு வீடுகளுக்கும், வாழை, வெற்றிலைத் தோட்டங்களுக்கும் அதிபரான நடேசன் சுயமாகச் சம்பாதித்தது ஒன்றுமில்லை. எல்லாம் பரம்பரை பரம்பரையாக வந்தது. நடேசனின் `ஆட்சிக் காலத்தில்' இந்த பரம்பரைச் சொத்துகள் சிறிது குறைந்தனவே தவிர கூடவில்லை.
தோப்பிற்கோ, களத்துமேட்டிற்கோ நடேசன் போவது அபூர்வம். அவரைச் சந்திக்க வேண்டுமானால் செங்கற்பட்டு கோர்ட்டுத் தாழ்வாரங்களில்தான் பார்க்கலாம்! அந்த கோர்ட் பியூனுக்கு அடுத்தபடி அதிக `சர்வீஸ்' போட்டவர் அவர்தான்! முப்பது வருஷங்களாக கோர்ட் வராந்தாக்களில் உலாத்திவரும் நடேசனுக்கு கோர்ட்டில் ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு சுவரும் பரிச்சயமானவை. வாரத்தில் இரண்டு மூன்று நாளாவது கோர்ட்டிற்கு வராவிட்டால் அவருக்குப் பைத்தியம் பிடித்துவிடும். வரப்பு வழக்கு, சொத்து வழக்கு, குத்தகை கேஸ், வீட்டு வாடகை பாக்கிக வழக்கு, தோப்பு காண்ட்ராக்ட் வழக்கு, வட்டி பாக்கி வழக்கு என்று ஏதாவது வழக்கு நடந்துகொண்டே இருக்கும்!
நடேசனால் லாபமடைந்தவர்களில் கோர்ட் ஊழியர்கள் நீங்கலாக முக்ககியமானவர், `வாய்தா' வரதராஜன். இவர் ஒரு வக்கீல். வாய்தா எக்ஸ்பர்ட். நடேசனுக்கு எதிராக கேஸ் போடுபவர்களை, வாய்தாக்கள் வாங்கியே படாத பாடு படுத்துவார். வரதராஜனின் வீட்டிற்கு `நடேச நிலையம்' என்று பெயர் வைத்தாலும் தகும். எல்லாம் நடேசனின் பணம்தான்!
நடேசன் அலங்காரப் பிரியர். அகலமான சரிகைக்கரை வேஷ்டி (சற்று உயரமாகத் தூக்கிக் கட்டப் பட்டிருக்கும்) வெளிர் மஞ்சிசள் சில்க் சட்டை, ஏழெட்டு மோதிரங்கள், விசிறி மடிப்பு அங்கவஸ்திரம், காதில் கடுக்கன், நெற்றியில் சந்தனப் பொட்டு, நடு வகிடு கிராப்பு, சட்டை பாக்கெட் நிறைய காகிதங்கள், கோல்ட் கவர் பேனா, இடதுகையில் வெள்ளிப் பொடி டப்பி-- இவைதான் நடேசன்.
வக்கீல் வீட்டிற்குப் போகும்போது வலது கையில் பத்து பன்னிரண்டு வாழைக்காயும் வெற்றிலைக் கவுளியும் இருக்கும். “ “என்ன வக்கீல் சார்... எப்படியும் இன்னிக்கு வாய்தா வாங்கிடுங்க, நாலு தபா அந்த பசங்களை இழுத்தடிடிச்சால்தான் புத்தி வரும். யாருன்னு நெனைச்சிக்ட்டு இருக்காங்க. உம், நடேசனை தெரியாது. வக்கீல் சார், நம்ப குமாஸ்தா கிட்டே பணம் கொடுத்துட்டேன். சாட்சிப் படியை கோர்ட்டிலே கட்டிடச்சொல்லி...
........என்ன சொல்றீங்க?  ஜேபி கனமாக இருக்குதே என்றா?  நீங்க ஒண்ணு.... உங்களுக்கு பீஸ் கொடுக்காமல் ஏமாத்திடவா போறேன். காருக்கு டயர் மாத்தணுமா? நாளைக்கு மெட்ராஸ் போறேன். வூட்லே என்னமோ வளை வாங்கணும்னு சொல்லிச்சுங்க, வர்றபோது நம்ப வண்டிக்கு இரண்டு டயர் போட்டாந்துடறேன். இப்போ பணம் கையிலே கொண்டு வரலே. ஜட்ஜ்மென்ட் காபி எடுக்கணும். ரிஜிஸ்தர் நோட்டீஸுக்குப் பணம் மாதிரி சில்லரை செலவுக்குத்தான் வெச்சிருக்கேன்...
அட, என்ன ஸார்!  இந்தாங்க இருநூறு ரூபாய். மத்ததைப் பின்னால் தரேன்...  வேலி விவகாரத்தை கோர்ட்டுக்கு வெளியே முடிச்சுலாம்னு வெங்கடாசலம் சொல்றானாம். வேண்டாங்க. போனாப் போவுதுன்னு விட்டால் பின்னால் ரொம்ப தலைமேல் ஏறுவாங்க... இனிமேல் நம்ம பக்கமே வர்றதுக்கு பயப்படணும். நல்லா புத்தி வரணும். கடைசி வரைக்கும் போய் அவங்களை போண்டியாக்கணும். என்னமோ வேடிக்கை காட்டறாங்களே.
"ஆமாம், உங்களை கேட்கணும்னு இருந்தேன். மறந்துட்டேன். மாஜிஸ்ட்ரேட்டிற்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி விட்டதுங்களாமே. அமீனா சொன்னார், யாரு வர்றாங்களாம். சேலத்திலிருந்துன்னாங்க. யாரு பாலுசாமியா? அடப்பாவமே அவரு வாய்தா தர்றதுக்கே அழுவாரே...
"இதோ வராரே, நம்ப குமாஸ்தா. என்ன லோகு, அண்டிமாண்டு பத்திரத்தை காபி எடுத்தாச்சா? என்னது, காபி செலவா? அட இன்னாய்யா, உனக்கு இல்லாத காபி செலவா? எப்படியும் இன்னிக்கு நோட்டீஸ் ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பிச்சுடு.... ஆமாம், அந்த ஆலப்பாக்கத்தான் கேஸ் இப்படி கவுந்து போச்சே! அப்பவே முட்டிக்கிட்டேன். அந்த அழுக்கு கோட்டு வக்கீலை வைக்காதேன்னு. நம்ப ஐயாகிட்ட கொடுத்து இருந்தால் பாயிண்ட் பாயிண்டா பிச்சு உதறி இருக்க மாட்டாரா? போவட்டும். அவன் கொடுப்பனை அவ்வளவுதான்...!
"சரி, வக்கீல் சார்..நான் போய் ஓட்டலில் நாஸ்தா பண்ணிவிட்டு சப் ஜட்ஜ் கோர்ட்டாண்டை வந்துடறேன்... நீங்களும் வந்துடுங்க...''

1 comment:

  1. கேரக்டர் ரொம்ப பழைய டைப்பாத் தெரியுதே, இப்ப யாரும் இந்த கெட் அப்ல வர்ரது இல்லயே. கொஞ்சம் லேட்டஸ்டா குடுங்க சார். ஆட்டோ, அருவாளு, இதெல்லாம் எடுத்துகினு வராங்கோ சார், பழய மாதிரி வெள்ளி பொடி டப்பா இல்லீங்கோ.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :