May 12, 2010

ராவ்பகதூர் ராமேசம் - கேரக்டர்

பளபளவென்று வழுக்கை. பின்புறம் சீப்பை வளைத்து ஒட்ட வைத்தாற்  போல் (நரைத்த) முடி. நல்ல சிவப்பு. கணுக்காலுக்கு மேல் நிற்கும் பட்டை ஜரிகை வேஷ்டி,  தும்பைப் பூப்போன்ற மல் ஜிப்பா. விசிறி மடிப்பு அங்கவஸ்திரம், வெள்ளிப் பூண் கைத்தடி. இதுதான் ராவ்பகதூர் ராமேசம். மணி என்ன ஆகிறது? நாலரையா? அப்படியானால், ராமேசம் பீச்சிற்குக் கிளம்ப நேரமாக் விட்டது! "டிரைவர், ஐயாவிற்கு நேரமாகிறதே. வண்டி எடுக்கவில்லை?'' என்று திருமதி ராமேசம் கேட்பாள்.
வண்டி வந்ததும் ராமேசம் ஏறி உட்கார, சமையல்காரர் ஒரு ஃப்ளாஸ்க் தண்ணீரைக் கொண்டு வந்து காரில் வைப்பார். சரியாக ஏழு மணிக்கு ராமேசம் திரும்பி வந்துவிடுவார். பீச்சில் ஒரே இடத்தில் அவரது ஒரே நண்பரான மாத்ருபூதத்துடன் கடந்த 16 வருஷங்களாக உட்கார்ந்து, உலக விஷயங்களை அலசிவிட்டு வருவார். தினமும் என்னதான் பேசுவார்கள்?
         இதோ ஒரு சாம்பிள்; "மாத்ருபூதம், இந்த தாட்சரின் கவர்மென்டில் மிஸ்டர் ஹீத்தைப் போடாதது தப்பு, லங்காஷைர் பகுதிகளில் ஹீத்திற்கு சப்போர்ட் இருக்குது. நார்த் ஹாம்ப்டன், ஏவன்மௌத் பக்கத்தில் இவளுக்கு சாலிட்டாக இருக்குது சப்போர்ட். இதைப் பார்த்தால் நைன்டூன் தர்ட்டியில் பொப்பிலி ராஜா செய்ததைப் பாராட்டணும்....
கம்பூச்சியா விவகாரம் சின்ன பூச்சியாக இருந்து இப்போ வளர்ந்துட்டுது.. என்னைக் கேட்டால் காம்பிளிகேஷன்ஸ் ஜாஸ்தியாகத் தான் போகும். வீணாக நம் மண்டையை உடைச்சிண்டு என்ன லாபம்?...பாரேன், இந்த பாலமுரளியும் பாலசந்தரும் பாலகர்கள் மாதிரி சண்டை போட்டார்களே, என்ன  ஆச்சு...? கடைசியிலே அகாடமிகாரர்கள் கவர்மென்ட் அறிக்கை மாதிரி ஒரு ரிப்போர்ட் கொடுத்துட்டாங்க... நேற்று ரேடியோவிலே டைகர் கச்சேரியைக் கேட்டியா? என் டாட்டர்-இன்-லாவிடம் டேப் பண்ணச் சொன்னேன். டைகருக்கு அப்புறம் தோடி பாட, ஆளைத் தேடி கண்டுபிடிக்கணும்....
அதிருக்கட்டும், பூதம், போலீஸ்மென் ஸ்டிரைக்  பண்ணப் போறங்களாம். பாத்தியா.... சி.ஆர். இந்த விஷயத்தை அந்தக் காலத்தில் எப்படி ஹாண்டில் பண்ணினார்? அவர் மாதிரி யாருக்கு சாமர்த்தியம் இருக்கு....!
 புதன்கிழமை இன்டியன் ஆன்த்ரோ பாலிஜிகல் சொஸைட்டியில் யாரோ வில்கின்ஸன் என்பவர் பேசுகிறாராம், வருகிறாயா போகலாம்...யாருடா தம்பி. சுண்டலா விக்கறே? இங்கே வா. உனக்கு என்ன வயசு ஆச்சு? படிப்பு கிடிப்பு உண்டா? இந்த மாதிரி சின்ன பசங்களை உருப்பட விடாமல் செய்துவிடறாங்க, இதை தடுக்க எங்கே நடவடிக்கை எடுக்கிறார்கள்? மேல் நாடுகளில் இதை யெல்லாம் அக்கறையாக் கவனிச்சு ஆக் ஷ்ன் எடுக்கறாங்க. மேல் நாடு, என்றால் ரொம்பப் பேர் முகம் சுளிக்கிறாங்க. அவங்க ஒரு விஷயத்தை எடுத்தால் எவ்வளவு அக்கறையா, `டிவோடட்' ஆகச் செய்யறாங்க... பூதம்! நாளைக்கு ஈவினிங்க் நான் வரவில்லை. என் டாட்டர்-இன்-லா சொன்னா, ஏதோ புதுப்படம் வந்திருக்குதாம் `அப்பா நீங்க பார்க்கணும்னு சொன்னா. போய் பார்த்துவிட்டு வந்துடறேன். தட் பாய் பாரதி ராஜா ஸீம்ஸ் டு பி மேன் ஆஃப் டேலன்ட்...''
இவர் மாத்ருபூதத்திடம் பேசுவதும் ஒன்றுதான்; தன் கருத்துகளைத் தன்னிடமே உரக்கப் பேசிக்கொள்வதும் ஒன்றுதான். இவர்கள் உரையாடலில் மாத்ருபூதத்தின் பகுதி ஐந்து சதம் என்றால் மீதி தொண்ணூற்று ஐந்து  சதம் இவருடையதுதான்! எழுபத்து ஒன்பது வயது ஆனாலும் அவர் சுறுசுறுப்புடன் இருப்பதன்  ரகசியம்: திட்டமிட்ட, கடிகாரத்தை ஒட்டிய வாழ்க்கை. உலக விஷயங்கள் அனைத்திலும் ஈடுபாடு, கவலைப்பட தெரியாத மனம்!

5 comments:

 1. மிக்க மகிழ்ச்சி, கடுகு சார்! நன்றி.

  ReplyDelete
 2. யதிராஜ சம்பத் குமார்May 12, 2010 at 9:39 PM

  வழக்கம் போலவே கேரக்டர் அருமை!! இம்மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் மூன்று வெவ்வேறு நபர்களைப் பற்றிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அவற்றைப் படித்ததும் உங்களது கேரக்டர்களையே நினைவு படுத்தியது.

  ReplyDelete
 3. ஸ்ரீமான் மாத்ருபூதம் ஒரு தலையாட்டி பொம்மையாக இருந்திருக்க வேண்டும்! பாவம், திருமதி ராமேஸம் எப்படி சமாளித்தாளோ!

  உஙகள் காரெக்டர்கள் எங்களுக்கு அந்தக் கால செய்திகள் / மனிதர்கள் பற்றி அசை போட நல்ல வாய்ப்பு தருகிறார்கள். நன்றி. - ஜகன்னாதன்

  ReplyDelete
 4. //பின்புறம் சீப்பை வளைத்து ஒட்ட வைத்தாற் போல் (நரைத்த) முடி.//

  என்ன ஒரு உவமை. :-)))))

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :