May 06, 2010

டயரியும் நானும் - கடுகு

எனக்கு டயரி எழுதும் பழக்கம் கிடையாது. (`அதுவரைக்கும் நாங்கள் பிழைத்தோம்' என்று நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவது தெரிகிறது!) அதற்கு பல முக்கியக் காரணங்கள். முதலாவது சோம்பேறித் தனம். இரண்டாவது நாம் மறக்க விரும்பும் விஷயங்களை எழுதித் தொலைப்போம். எப்போதாவது டைரியைப் புரட்டினால் அதுதான் முதலில் கண்ணில் படும். அந்த விஷயத்தை வாழ்நாள் முழுதும் மறக்க முடியாதபடி பாடாய்ப் படுத்தும். மூன்றாவது: என்னிடம் கறுப்புப் பணம் கிடையாது.
அது என்ன கறுப்புப் பணத்திற்கும் டைரிக்கும் சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? நீங்கள் கேட்காவிட்டாலும் கேட்பதாகப் பாவித்துப் பதில் சொல்கிறேன்!
வருமான வரி அதிகாரிகள் எங்கேயாவது ரெய்டு சென்றார்கள் என்றால் செய்திகளில் முதலில் வருவது: ``ரெய்டின் போது கணக்கில் காட்டாத பல லேவாதேவி (யார் அந்த `தேவி?!' அசின் மாதிரி இருப்பரா” அல்லது தமன்னா மாதிரி இருப்பாரா? )  விவரங்கள் குறிக்கப்பட்டிருந்த டைரியைக் கைப்பற்றினார்கள்.''
அந்த ஆசாமி எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டுப் பேர்வழியாக இருந்தாலும் டயரி எழுதியிருப்பான்! அப்படித்தான் செய்திகள் வரும்!
இப்படிப்பட்ட செய்திகளை நிறையப் படித்ததன் விளைவாக டயரி = கறுப்புப் பணம் என்று என் மனதில் பதிந்து விட்டது.
இதை எல்லாவற்றையும் விட வேறொரு காரணமும் இருந்தது. சுமார் நூறு வருடங்கள் கழித்து என் கொள்ளுப் பேரனின் கொள்ளுப் பேரன் என் டயரியைப் படிக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். படிக்கப் படிக்க என்னைப் பற்றிய மதிப்பு அவனுக்குக் குறைந்து கொண்டே போகும்.
உதாரணமாக ``தீபாவளி போனஸ், பிராவிடண்ட் பண்டில் கடன் ,இரண்டையும் சேர்த்து ஒரு 20,000 ரூபாயில் கலர் டிவி இன்று வாங்கினேன்'' என்று எழுதியிருப்பேன். அதைப் படித்து விட்டு அவன் என்ன நினைப்பான் தெரியுமா? ``ஹும் பிசாத்து.. 20,000 ரூபாய்... நாலு ஃப்ரண்ட்ஸுடன் நாம் ஸெவன் ஸ்டார் ஓட்டலுக்குப் போய் டின்னர் சாப்பிடுவதற்கு ஆகிற செலவு கூட இல்லை. பெரிய டிவி வாங்கிட்டாராம்... ஜம்பமாக டயரியில் எழுதியிருக்கிறார்'' என்று நினைப்பான்.
நான் எழுதியிருப்பேன்- ஆயிரம் ரூபாய்க்குத் தர்மம் பண்ணியதாக. அதைப் படித்து விட்டு, ``சுத்தக் கஞ்சப் பயலாக இருப்பார் போலிருக்கிறதே! ஒரு கட்டு கொத்தமல்லி விலை கூட இல்லை. பெரிய தர்மம் பண்ணி விட்டார். இதை டைரியில் எழுதாமல் கல்வெட்டாகக் கூட பொறித்து வைத்திருக்கலாம்!'' என்று கேலியாகச் சொல்லக் கூடும். இப்படிச் சொல்பவர் என் கொள்ளுப் பேத்தியின் கொள்ளுப் பேத்தியின் கணவராக இருந்தால் இன்னும் ஆபத்து. ``எங்க தாத்தாவின் தாத்தாவை நீங்கள் இப்படி கேவலமாகப் பேசுவதா?'' என்று அவள் சண்டை பிடிக்க, அது நாளடைவில் முற்றி அவளது விவாகரத்தில் போய் முடியக் கூடும். ``எல்லாம் அந்த கொ.தாவின் கொ.தாவினால் வந்த வினை!'' என்று அவள் சபிப்பாள். இதெல்லாம் எனக்குத் தேவையா?
என்னைக் கேட்டால் டயரிகளில் எண்பது சதவிகித டயரிகள் புதுக்கறுக்கு அழியாமல் இன்னும் பல வருஷங்கள் பலர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும். பத்து சதவிகிதம் டைரிகள் முதல் இரண்டு பக்கங்கள் மட்டும் எழுதப்பட்டு (இன்று புத்தாண்டு. புது வருஷம் பிறந்தது!') இருக்கும். மீதி பத்து சதவிகித டைரிகள் `பால் கணக்கு - தயிர் கணக்கு' நோட்டுப் புத்தகமாக உபயோகப்படுத்தப்படும்.
ஆனந்தரங்கம் பிள்ளை - பீப்ஸ் டயரி
எல்லாருமா ஆனந்தரங்கம் பிள்ளை மாதிரியோ , சாமுவேல் பீப்ஸ் மாதிரியோ டயரி எழுத முடியும்?
சாமுவேல்  (PEPYS)பீப்ஸ் டயரி சுமார் ஒன்பதரை வருடக் குறிப்புகள். கிட்டத்தட்ட 15 லட்ச வார்த்தைகள். இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸ் காலத்தில் வாழ்ந்த சாமுவேல் பீப்ஸ் (1633-1703) கூட ஒருவித `ஷார்ட் ஹாண்ட்'டில்தான் எழுதினார். தனது தனிப்பட்ட எண்ணங்களை யாரும் படித்து விடக் கூடாது என்று கருதி `டேக்கிகிராஃபி' என்ற, ஏறக்குறைய உலகமே மறந்து விட்ட சுருக்கெழுத்து முறையில் எழுதியிருந்தார். (இருந்தாலும் சுமார் நூறு வருஷங்களுக்குப் பிறகு 1825ல் டயரியை கடும் முயற்சிக்குப் பின் படித்து விட்டார்கள்!) எனக்கு டேக்கிகிராபி தெரியாது. நான் டயரி எழுதாததற்கு
அதுவும் ஒரு காரணம்.
       இன்னொரு அல்ப காரணமும் இருக்கிறது. உதாரணமாக டயரியில் `குப்புசாமிக்கு இன்று ஐந்து ரூபாய் கடன் கொடுத்தேன் என்று எழுதியிருந்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பத்து வருஷம் கழித்து இதைப் பார்த்தால், `யார் அந்தக் குப்புசாமி? அவருக்கு எதற்கு ஐந்து ரூபாய் கடன் கொடுத்தேன்? உண்மையிலேயே ஐந்து ரூபாய்தானா அல்லது ஐயாயிரம் என்பதைச் சுருக்கி `ஐந்து' என்று எழுதினேனா?' என்பன போன்ற பல கேள்விகள் தலையைப் பிய்த்துக் கொள்ள நேரிடும். இவையெல்லாம் போகட்டும் என்று விட்டு விட்டால் கூட, `கொடுத்த பணத்தைக் குப்புசாமி திருப்பிக் கொடுத்தானா? மறந்து விட்டோமா? பணம் கோவிந்தாதானா?' என்று பல கேள்விகள் மண்டையைக் குடையும். எதற்கு இத்தனை தொல்லை?டயரியே எழுதாவிட்டால் ஒரு வம்பும் இல்லையே!
    அதனால்தான் நான் டயரி எழுதுவதில்லை! 
    அதனால்தான் நீங்களும் பிழைத்தீர்கள்!

4 comments:

 1. oh, diary yezhuduvadil ivvalavu kashtam irukka? adanaaldaan naan kooda diary yezhudaradillainnu ninaikiren. thanks kadugu sir for the nice article.

  ReplyDelete
 2. Kadugu sir. I really enjoyed the humour you find in every day life and ordinary things. Hats off for your works!!! I stumbled upon your site and i have already become a big fan of yours

  ReplyDelete
 3. <<< Vijay said... I really enjoyed the humour you find in every day life and ordinary things. ! I stumbled upon your site and i have already become a big fan of yours >>>>>

  So you mean mine was the stumbling blog! Good.:)
  Make many more stumble here.

  ReplyDelete
 4. டயரி எழுதுவதைப் பற்றி நீங்க எழுதி இருப்பது முற்றிலும் சரி. அதிக பட்சம் ஒரு வாரம் சில குறிப்புகள். பிறகு வெள்ளைத் தாள்கள். நாம் உபயோககரமாக எதுவும் எழுதுவது இல்லை என்றாலும், சில டயரிகளில் உபயோககரமான பல தகவல்களை அச்சிட்டு கொடுத்துவிடுகிறார்கள். நான் மார்கழி மாத பாட்டு சீசன் சமயம் சென்னை செல்லும் பொழுதெல்லாம் மின்வண்டியில் வந்து விற்கப் படுகின்ற இரண்டு ரூபாய் விலை - மினி டைரி கம பாக்கெட் காலெண்டரை வாங்கி விடுவேன். அட்டையோடு சேர்த்து எழுபத்தாறு பக்கங்கள் கொண்ட ஒரு மினி என்சைக்ளோபீடியா !!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :