May 15, 2010

- கடுகு

பத்திரிகைகளிலும் மேடைப் பேச்சுக்களிலும் அரசியல் கூட்டங்களிலும் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி: `... என்னைக் கேட்க உனக்கு என்ன அருகதை இருக்கிறது?'
ஒரு அரசியல்வாதியின் பேச்சையோ, நடவடிக்கையையோ விமர்சிக்க எந்த மாதிரி அருகதை இருக்க வேண்டும் என்பதை மட்டும் இதுவரை யாரும் விளக்கியதில்லை.
இதே மாதிரி சினிமா டைரக்டர்கள், ``என் படத்தின் கிளைமாக்ஸைப் பற்றிக் குறை சொல்ல உனக்கு என்ன அருகதை இருக்கிறது?'' என்று கேட்பார்கள். அதுவே விமர்சித்தவர் ஒரு டைரக்டராக இருந்தால், ``.... அந்தப் படத்தில் என்ன கிழித்தாய்? எந்த முகம் இருக்கிறது, என்ன அருகதை இருக்கிறது என் படத்தை விமர்சிக்க?'' என்று கேட்பார்கள்.
சரி, விமர்சித்தவன் யாரோ ஒரு குப்பனோ சுப்பனோ என்று வைத்துக் கொள்வோம். ``என் படத்தைப் பற்றி இவ்வளவு வாய் கிழியப் பேசுகிறாயே... நீ ஒரு படத்தை டைரக்ட் பண்ணிக் காட்டேன். அதற்குப் பவிஷு இல்லை. பேச வந்துட்டீங்க!'' என்று மூக்கு சிவக்க கேட்பார்கள்.
அதாவது ஒரு படத்தை விமர்சிக்க வேண்டுமென்றால் ஒரு திரைப்படத்தைத் தயாரித்திருக்க வேண்டும். வேடிக்கையாக இருக்கிறது.
ஒரு ஹோட்டலில் சாப்பிடப் போகிறோம். ``என்னய்யா, போண்டாவில் உப்பு இல்லையே?'' என்று கேட்டால், ``என் ஹோட்டல் போண்டாவை விமர்சிக்க உனக்கு என்ன அருகதை இருக்கிறது? இருபது லட்ச ரூபாய் முதலீடு செய்து ஹோட்டல் நடத்த உன்னால் முடியுமா? இல்லை, உனக்குத் தான் போண்டா போடத் தெரியுமா? இதற்கு வக்கு இல்லாத நீ என்னை விமர்சிக்க உனக்கு அருகதை ஏது?'' என்று பதிலுக்கு ஹோட்டல்கார் சொல்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவ அபத்தம் அரசியல்வாதிகளும் மற்றவர்களும் `அருகதை உண்டா?' என்று கேட்பது.
ஆனால் அரசியல்வாதியாகி விட்டால் இவர்களுக்கு யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கத் தகுதி உண்டு. அமெரிக்க அதிபரை  விமர்சிக்கலாம். சைனாவை, ரஷ்யாவை, பாகிஸ்தானை என்று எவரையும் விமர்சிக்கலாம்.
 சரி. அவர்களைப் நீங்கள்  பாராட்டி விட்டால் இப்படிக் கேள்வி கேட்க மாட்டார்கள். ஒரு சினிமாவைப் பாராட்டி எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது சினிமாவைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? பாராட்ட உனக்கு என்ன அருகதை இருக்கிறது?'' என்று கேட்க மாட்டார்கள்.
     இதுபற்றி அசை போட்டுக் கொண்டிருந்த போது நண்பர் நடேசன் வந்தார்.
``என்ன நடேசன், கோபமாக வர்றீங்க?'' என்று கேட்டேன்.
``ரோட்டில் போய்க் கொண்டிருக்கிறேன். சைக்கிளில் போற ஒரு பையன் மேலே இடிச்சுட்டான். `ஏண்டா இப்படி இடிக்கிறே'ன்னு கேட்டால், அவன் `நான் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கின சைக்கிளில் போறேன். பத்து ரூபாய் கூட பெறாத செருப்பைப் போட்டுக் கொண்டு நடந்து போற உனக்கு என்னைக் கேட்க என்ன அருகதை இருக்கு?' என்று கேட்கிறான்!''
`` 'அப்ப நான் சைக்கிள் வாங்கிட்டால் எனக்கு அருகதை வந்து விடுமா?' என்று கேட்டேன். அதுக்கு அவன், `அதெப்படி வரும்? நீ மலிவு விலை வேஷ்டி கட்டிக் கொண்டு இருக்கிறாய். நான் இம்போர்ட்டட் ஜீன்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறேன். வேஷ்டி போய் ஜீன்ஸைக் கேட்பதா? அதற்கு அந்த அருகதை கிடையாது!' அப்படின்னான்...''
``சரி, இந்த விஷயத்தை வெச்சு ஒரு கட்டுரை எழுதி எல்லாரையும் விளாசித் தள்ளப் போறேன்...''
``என்ன சொல்வாங்க தெரியுமா? கட்டுரை எழுத இவனுக்கு என்ன அருகதை இருக்கு? இவன் என்ன தாகூரா, டால்ஸ்டாயா, பெர்னார்ட் ஷாவா என்கிற ரேஞ்சில் கேட்பார்கள். எதுக்கப்பா வம்பு? சும்மா இரு'' என்றார் நடேசன்.
``சரியப்பா...'' என்றேன் நான்.

3 comments:

  1. கடுகு சார் அவர்களே,
    இப்பதிவை விமர்சிக்க அருகதை உண்டா இல்லையா தெரியவில்லை
    நாகராஜன்

    ReplyDelete
  2. தெரிஞ்ஜ விஷயம் தான். உங்கள் வழக்கமான நகைசுவையும் மிஸ்ஸிங். - ஜகன்னாதன்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!