வேலங்கோடு வெற்றி அம்மன் திரைப்படக் கம்பெனியின் தயாரிப்பு மானேஜரான அம்பியின் உண்மைப் பெயர் அவருக்கே ஞாபகமில்லை. அவரது திருமணப் பத்திரிகையில் கூட தியாகராஜன் என்னும் `அம்பி' என்று மாற்றி அச்சடித்து விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! தமிழ்ப் பட உலகில் முப்பது வருஷங்களாக இருக்கும் ("இருக்கும் என்று சொல்லாதீர்கள் அண்ணா. குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் என்று சொல்லுங்க'') அம்பிக்கு இண்டஸ்ட்ரியில் தெரியாத நட்சத்திரங்களோ, டெக்னீஷியன்களோ, தயாரிப்பாளர்களோ கிடையாது, படே படே ஸ்டார்களைகூடப் பெயர் சொல்லிக் கூப்பிடுவார். நீ, வா, போ என்றுதான் பேசுவார் உரிமையுடன். அவர் சர்வீசில் எத்தனையோ கம்பெனிகளைப் பார்த்துவிட்டார். பள்ளங்கள் கோபுரங்களாகியிருக்கின்றன. கோபுரங்கள் மறைந்து போயிருக்கின்றன!
அதோ வருகிறார், அம்பி!
மேல்பட்டன் போடாத ஸ்லாக், பாண்ட். ஹவாய் சப்பல், கழுத்தில் மெல்லிய தங்கச் சங்கிலி அமெரிக்கன் கிராப். நெற்றியில் குங்ககுமப் பொட்டு. முகத்தில் மூன்று நாள் வளர்ச்சி புகையிலைக் கறையேறிய பல்வரிசை, கையில் பெரிய டைரி அதைவிட பெரிய டைரி அளவு காகிதங்கள் திணிக்கப்பட்ட சட்டைப்பை.
"என்ன அம்பி. ஆளையே காணோம்?''
"நீங்க கேட்டுவிடுவீங்க சார், ஆளையே காணோம், தேளையே காணோம் என்று! செட்டியார் படத்திற்கு டேட் அனௌன்ஸ் பண்ணிட்டார். கிளைமாக்ஸ் எடுத்தாகலை. ரீரிகார்டிங்கு ஆவணும். ஸ்டூடியோவுக்கு ஏகப்பட்ட டிமாண்ட். அவனவன் தீபாவளி வருது என்றால் குஷியாக இருப்பான். அம்பிக்கு, ’ஏண்டா தீபாவளி வருகிறது' என்று இருக்கிறது. எல்லா ஃப்ளோரும் ஃபுல். ரெட்டியார் இதுவரை அம்பிக்கு கைவிரிச்சதில்லை. `அம்பி, பொசிஷன் ரொம்ப டைட்டுப்பா' என்கிறார். "டைரக்டர் இரண்டு நாள் கால்ஷீட் கொடுத்தாரு. அந்த தேதியில் நிம்முவுக்கு பெங்களூர் அவுட்டோர். உடனே புரொட்யூசர் தங்கராஜுவிற்கு போன் பண்ணேன். `நிம்மு கால்ஷீட்டை எனக்கு கடன் கொடுங்க. பின்னால் நான் திருப்பிக் கொடுத்துடறேன்' என்றேன். தங்கராஜுவை காஸ்ட்யூமராக இருந்த காலத்திலிருந்தே எனக்குத் தெரியுமே!
"நம்ம முதலாளி என்ன சொல்றார் தெரியுமா? ஃப்ளோர் இல்லாவிட்டால் போகட்டும். அவுட்டோரில் கொஞ்சம் வேலையிருக்கே, முடிச்சுடேன்' என்கிறார். எங்கே தெரியுமா அவுட்டோர்? காஷ்மீரில்! ஒரு ஓட்டலிலும் இடம் கிடையாது ஏகப்பட்ட கவர்மெண்ட் பர்மிஷன் வாங்கணும். அவருக்கெங்கே இதெல்லாம் தெரியப்போறது?
...அவுட்டோர் என்றாலே நமக்கு அலர்ஜி. ஒரு கதையை கேளுங்கள். காஷ்மீரில் ஒரு சமயம் ஷுட்டிங்க். ஏழு நாள் ஷெட்யூல். சர்க்கஸ் கம்பெனி மாதிரி எல்லாரையும் கட்டி இழுத்துக்கொண்டு போய் இறக்கறேன். ஹீரோயின்.... பேர் எதுக்கு?..ஹீரோயினை ஒரு பெரிய ஓட்டலில் இறக்கியாச்சு. நம்ப ஆளுங்களுக்கெல்லாம் சுமாரான ஓட்டலில் இடம் போட்டு உக்கார வெக்கறேன். காமிராமேன் வரார். `அம்பி, காமிரா மவுண்ட் பண்ணுகிற ஸ்க்ரூ மெட்ராசில் தங்கிப் போயிடுத்து அது வந்தால்தான் நாளைக்கு வேலையாகும்' என்கிறார். கிளம்பி வரவங்க எல்லாவற்றையும் சரிபார்த்து எடுத்துக்கிட்டு வரவேண்டாமா? இதெல்லாம் கூட அம்பியா பார்க்கணும்?... மேக்கப்மேன் மணி, "என்னப்பா மெட்ராசிலேயும் 100 ரூபாய் பேட்டா, இங்கேயும் அதே ரேட்டா?'' என்கிறார்.முதலாளியோ "`அம்பி, இழுத்துப்பிடி, இழுத்துப்பிடி என்று மென்னியைப் பிடிக்கிறார்.
"கதையை நடுவில் விட்டுவிட்டேனே.... ஒரு மாதிரியாகப் பத்து மணிக்கு அப்பாடான்னு படுக்கையை விரிக்கிறேன். போன் அடிக்கிறது. ஹீரோயின்தான். `அம்பி, இந்த ஓட்டலில் ஒண்ணுமே சரியில்லை. வேப்பம்பூ ரசம் சோறு கிடைக்குமா? என்று கேட்குது. காஷ்மீர்லே குங்குமப்பூ ரசம் கூட கிடைக்கும். வேப்பம்பூவுக்கு எங்கே போவேன்? எட்டு படத்திலே அம்மன் வேஷம் போட்ட ஹீரோயின் ஆச்சே! அதன் வேப்பம்பூ கேக்குது! .....எனக்கு கோபம் வரவில்லை. வந்திருந்தால், `என்னம்மா மசக்கையா? . ' என்று கேட்டிருப்பேன். முதலிலேயே சொல்லியிருந்தால் மெட்ராசிலிருந்து விமானத்தில் வரவழைத்திருப்பேன். அப்புறம் அந்த ராத்திரியில் ஸ்ரீநகர் பூரா டாக்சியில் அலைந்து ஒரு மதராசி ஓட்டலைத் தேடிப் பிடித்து தக்காளி ரசம் வாங்கிவந்தேன். டாக்சி செலவு மட்டும் ரூ 122 ரூபாய் ஆச்சு.....எப்படி இருக்கு பாருங்கோ, நம்ம பொழைப்பு...
”வரேன் அண்ணா! ரேவதி `ரஷஸ்' பாக்கணும்னு சொன்னார். போய் அரேஞ்ச் பண்ணணும்....''
வழக்கம் போல், ரசித்தேன் சார்.நன்றி!
ReplyDeleteரசித்தேன் சார்.
ReplyDelete