May 01, 2010

நாணா. - கேரக்டர்

சைலன்சர் இருந்தும், சைலன்சர் இல்லாத மோட்டார் சைக்கிளைவிட அதிகமாக படபட சப்தம் போடும் மூன்றரை ஹார்ஸ் பவர் மிலிடிரி மோட்டார் சைக்கிளில் அட்டகாசமாக, அண்ணாமலை மன்றத்தின் ஸ்டேஜின் வாசல் கதவு வரை வந்து வண்டியை ’ஜங்க்’ என்று நிறுத்துபவன்தான் நாராயணசாமி என்னும் நாணா.
நல்ல உயரம். நல்ல அகலம். ஆஜானுபாஹுவான ஆள். பூப் போட்ட ஸ்லாக், மேல் பட்டன் திறந்திருக்கும், கழுத்தில் தங்கச் செயின், இடது கையில் டிஜிட்டல் கடிகாரம்.  கழுத்தில் லாவகமாகச் சுற்றப்பட்டிருக்கும் கர்ச்சீஃப். இடது கையில் சாவிக்கொத்து.
நாணா இருக்குமிடத்தில் அட்டகாசமான சிரிப்பு இருக்கும். ஊர் வம்பு இருக்கும். சென்னையிலுள்ள அமெச்சூர் நாடக நடிகர்களைப் பற்றியும் குரூப்களைப் பற்றியும், அரட்டையும் கீழ்வெட்டும் இருக்கும். நகர சபாக்களைப் பற்றி  நுனி நாக்கு விமர்சனம் இருக்கும்.
நாற்பதைத் தாண்டிய நாணா ஒரு அமெச்சூர் நாடகக்குழுவின் சர்வாதிகாரி. இருந்தும் எல்லாரும் அவனை ’நாணா’, ’நீ’, ’வா’, என்று சர்வ உரிமையுடன் பேசுவார்கள். அவர்களுக்குத் தெரியும், நாணாவிடம் தாராளமாக உரிமை எடுத்துக் கொள்ளலாம் என்று. சில சமயம் கோபம் வந்து நாணா கத்த ஆரம்பித்தால் எல்லோரும் கப்சிப் தான்.
நாணா, நாடகத்தில் நடிப்பதை நிறுத்தி பல வருஷங்களாகின்றன. இருந்தும் நாடகத்தின் மேல் தீராத மோகம்.
"என்னடா, பசங்களா.... மணி ஐந்தரை ஆச்சு. சரியா ஆறாவது மணிக்கு டிராமாவிற்குப் பெல் அடித்துவிடுவேன்... எவனாவது ரெடியாகவில்லை என்றால் அவன் இனிமேல் நம்ம குரூப் பக்கமே தலைவைத்துப் படுக்கவேண்டாம்.... யாரு தர்மலிங்கமா? மேக்கப் போட நீ வந்துட்டியா இன்னிக்கி... உங்கப்பா எங்கே? மனோஹர் டிராமாவிற்குப் போய்ட்டாரா? பத்து ரூபாய் அவங்க ஜாஸ்தி கொடுக்கிறாங்க அதனாலே இவர் ஓடிப் போய்ட்டாரு... சரி.... சரி.... பின்னால் பேசிக்கிறேன். நீ வேலையைக் கவனி.
"ஆமாம், ஏண்டா சேச்சா...  மீசையை சரியா ஒட்ட வெச்சுக்கோ... கலைவாணர் அரங்கத்திலே ஆன மாதிரி ஆகப்போகுது... ஏம்மா சொர்ணா, ஏழு கம்பெனி நாடகத்துலே நீ நடிக்கிறது தப்பில்லை. உன் வண்டியும் ஓடணும். நான் கொடுக்கற ஸாடே ஸாத் ரூபாயில் உன் வண்டி ஓடுமா.?.. அதுக்காக "துரியோதனன்' நாடக டயலாக்கை எங்க காமெடி நாடகத்தில் போட்டுக் குழப்பாதே... ஏற்கனவே கிச்சு குரூப்காரங்க நம்பளைக் கவிழ்க்கப் பார்த்துகிட்டு இருக்காங்க. சரி சரி போ... மையை கண்ணிலே ஏகமா வாரி பூசிக்காதே. நாம, எக்ஸார்ஸிஸ்ட் டிராமா போடலே...
"ஏம்பா ரகு... வர்ற டிராமாவிலிருந்து பிராம்ப்டிங்க் கிடையாது. டயலாக்கை நெட்டுரு போடாமல் கதை பண்ண முடியாது...இனிமேல் சிக்ஸ்ர் அடிக்கிற கதையே நடக்காது.தெரிஞ்சுக்கோ!''
"ஏண்டா நாணா, ராமமூர்த்தி நேத்து புது டிராமா போட்டான் பார்த்தியா?''
"பார்த்தேன்... ரொம்ப ரொம்ப பாலிஷ் பண்ணணும்... கேளு கதையை. நேற்று டிராமா பார்க்கப்போனேன்... அது ஒரு பாடாவதி சபா. "சார் டிக்கட்டு'ன்னு கேக்கறான், கேட்டிலிருந்த பொடிப்பயல்! யாரைப் பார்த்து? என்னைப் பார்த்து இது வரை எந்த சபாவிலும் டிக்கட் கேட்டதில்லை. நாணாவை அவனுக்குத் தெரியாது... " ‘யாருடாப்பா கொழந்தை. உங்க செக்ரட்டரியை கூப்பிடுப்பா'ன்னேன்... அப்போ என்ன ஆச்சு ? சோ வந்து இறங்கறான் காரில்... ".யாரு நாணா அண்ணாவா? நம்ப டிராமாவிற்கெல்லாம் நீங்க வர்றதேயில்லையே... நாளைக்கு என் டிராமா இருக்கு, உனக்கு கார் அனுப்பறேன் அப்பிடி'ன்னான். பார்த்தான், கேட்காரப் பொடியன். அசந்து போய்ட்டான்...
"அதிருக்கட்டும், ஒரு சமாசாரம் சொல்லணுமே இந்த டில்லி கணேஷ் இருக்கானே அவன் வந்து, "அண்ணா ட்ரூப் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் உங்க அட்வைஸ் என்னன்னு கேட்டான். "ஏண்டா வீண் தொல்லை. டயம் இருக்கிறபோது என் குரூப்பிலே ஆக்ட் பண்ணுடா'ன்னேன். நம்ப புது டிராமா "உயரப் பறந்த ஊர்க்குருவி'லே அவனைப் போட்டுக்கலாம்.  நல்ல பயல். கொஞ்சம் நான் ட்ரெய்னிங் கொடுத்தா ஷேப் ஆயிடுவான்.
”மணி ஆச்சுடா... என் வாயைப் பார்த்துண்டு இருக்காதீங்க, ரெடியாயிடுங்க... ஏய், தொரை... அரையே அரை கப் காபி கொடு... மத்தியானம் பூரா ராகவனுடன் ஸ்க்ரிப்ட் டிஸ்கஷன். டயலாக்கா எழுதியிருக்கான், வார்த்தைக்கு வார்த்தை நான் சரி பண்ண வேண்டியிருந்தது.. ஒரே தலைவலி...பசங்களா, முதல் விசில் கொடுத்துடறேன்...''
    உலகம் நாடகமேடையாக இருக்கலாம் நாணாவிற்கு வாழ்க்கையே நாடகமேடை!

5 comments:

 1. உங்களுடைய கேரக்டர்களை பற்றி படிக்கும் போது நிறைவான மகிழ்ச்சி ஏற்படுகிறது!

  ReplyDelete
 2. Dear Sir,
  Once again a wonderful pen sketching.
  I am not sure how many who witnessed the same scene, would have been able to write such a narration. great inimitable style.
  Shankar

  ReplyDelete
 3. நாடக காதலன் .இதைவிட அழகா யாரும் portay பண்ண முடியாது

  ReplyDelete
 4. பத்மா சரியாக சொன்னார்கள். அருமை.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :