என் அருமை மனைவி கமலாவுக்கு எந்த வேளையில் அந்த யோசனை தோன்றியதோ எனக்குத் தெரியாது. (தெரியாது என்றா சொன்னேன்? தப்பு, தப்பு, அவளுக்கு அந்த ஐடியா தோன்றிய வேளை, எனக்குப் போதாத வேளை!)
சூடாகக் காப்பியைக் கொடுத்தபடியே (சூடான காப்பி என்பது எனக்கு அவள் வைக்கும் ஐஸ்!) கமலா கேட்டாள்.
""எப்போ காரை வாங்கப் போகிறீங்க?''
""அநியாய விலை விக்கிறது, கீரை கெட்ட கேட்டுக்கு இவ்வளவு கிராக்கியா?'' என்றேன். சமயத்தில் இப்படி அரை குறையாகக் காதில் விழுந்தது போல் நான் பாவிப்பது உண்டு.
""நான் காரைச் சொன்னால், நீங்க கீரையைச் சொல்றீங்க. அதுவே உங்க அக்கா...''
""இதோ பார், கமலா. இனிமேல் எங்க அக்காவுக்கு ஒரு ரிப்பன் கூட வாங்கிக் கொடுக்கலை. அவளுக்கு வாங்கிக் கொடுத்தால், உங்கிட்டே வாங்கிக் கட்டிக்க வேண்டியிருக்குது... என்ன கேட்ட? கார் வாங்கணும்னா?.. இதென்ன புதுசா?... இத்தனை நாளாக எதிர்வீட்டு மைதிலி கண்ணன் புடவை வாங்கினால், நீ வாங்குவே. அடுத்த வீட்டு மல்லிகா மோகன், பிளாஸ்டிக் டப்பா வாங்கினால் நீ வாங்குவே. மூணாவது வீட்டு ஜானகி சந்துரு எவர்சில்வர் பாத்திரம் வாங்கினால், நீயும் வாங்குவே. கோடி வீட்டு சுதா மூர்த்தி, நகைச் சீட்டுக் கட்டினால், நீயும் கட்டுவே. இந்த நாலு பேர்லே யார் கார் வாங்கியிருக்கா, சொல்லு. அவங்களை ஒரு கை பார்த்துவிட்டு வருகிறேன்'' என்றேன்.
""நன்னாயிருக்குதே நீங்க சொல்றது? ஏன் என்னைப் பார்த்து தான் அவங்க ஏதாவது வாங்கட்டுமே. "மிஸஸ் கமலா கடுகு கார் வாங்கியிருக்கா, நாமும் வாங்கலாம்' என்று அவங்க சொன்னால் என்ன தப்பு?''
""ஒரு தப்பும் இல்லை கமலா... உனக்குத் தெரியும்னு நினைக்கிறேன், சீட்டுக் கட்டிக் கார் வாங்க முடியாது. வாயைக் கட்டி, வயத்தைக் கட்டித்தான் கார் வாங்கணும்.''
""இதுமாதிரி இடக்கரடக்கலாப் பேசறதைத்தான் உங்கம்மா நன்னாக் கத்துக் கொடுத்திருக்கா... ஒவ்வொருத்தர் மாதிரி சினிமா, டிராமான்னு கேட்கிறேனா?...ஓட்டல், பீச்சுன்னு சொல்றேனா? கேவலம் ஒரு கார்... அதைக் கேட்டால் இவ்வளவு பேச்சும் ஏச்சுமா?'' -- இதைத் தொடர்ந்து கமலா பேசியதை எழுதத் தமிழ் மொழிக்கு வளம் போதாது. ஒரே சமயத்தில் அழுது கொண்டும், மூக்கை உறிஞ்சிக் கொண்டும் கேவியபடியே அவள் பேசியதை எழுதுவது இயலாத காரியம்.
* * *
சில நாள் கழித்துக் கமலா சொன்ன "கேவலம்' ஒரு காரை நான் வாங்கினேன். என் மைத்துனன் தொச்சுதான் சகாயமாக வாங்கிக் கொடுத்தான். சகாயம் என்பது என் நிதி நிலைமைகளில் பெருத்த காயம் ஏற்படுத்தியது! ஆப்கானிஸ்தானத்திலிருந்து பேரீச்சம் பழம் வருவது குறைந்து போய்விட்டதால், இந்த மாதிரிக் கார்களைப் பணம் கொடுத்து வாங்குகிறார்கள்!
கார் வாங்கிய சந்தோஷத்தில் கமலா ஒரு சுற்றுப் பருத்து விட்டாள்.
""போதும், கமலா. ரொம்ப சந்தோஷப்படாதே... அப்புறம் காருக்குள் நுழைய முடியாதபடி ஆகிவிடுவாய்'' என்றேன்.
கமலாவிற்கு வாயெல்லாம் பல். எனக்கு வயிறு எல்லாம் எரிச்சல்.
அடுத்த ஒரு வாரம் கமலா ரொம்ப பிஸி. என்னையோ, என் அக்காவையோ, என் அம்மாவையோ ஒரு செகண்ட் கூட, "வாயில்' போட்டுக் கொள்ளவில்லை. காரணம் அவளுக்குத் தன் புதுக் காரைப் பற்றிப் பெருமை அடித்துக் கொள்ளவே நேரம் போதவில்லை! சங்கீதக் கச்சேரிகளுக்குச் சென்றாள். வழக்கமாகப் புடவை, பாத்திரம், "எத்தனாவது மாசம்?' போன்ற சப்ஜெக்டுகளை விட்டு விட்டு, "பெட்ரோல் அநியாய விலை விக்கிறது? இதுக்கு ஏதாவது கவர்மெண்டு வழி செய்யணும்' என்றோ, ""இந்த வெயில் காலத்தில் காருக்குள் உட்கார்ந்தால் அடுப்புக்குள் உட்காருகிற மாதிரி இருக்கிறது' என்றோ, கார் சம்பந்தமாகவே பேசிக் கொண்டிருந்தாள். எந்த விஷயத்தைப் பற்றி யார் பேசினாலும் அதை எப்படியாவது காருடன் சம்பந்தப்படுத்திப் பேசி, தான் கார் வாங்கியதைத் தெரிவித்து விடுவாள்!
ஒரு வாரம் கழித்து கமலா, "ஏன்னா. எப்போது காரில் வெளியே போக வேண்டுமென்றாலும் உங்களையே தொந்தரவு பண்ண வேண்டியிருக்கிறது,. நானும் டிரைவிங் கத்துண்டா உங்களுக்குச் சௌகரியமாக இருக்குமே'' என்றாள்.
உரலில் அகப்பட்டுக் கொண்டாகி விட்டது. உலக்கைக்குப் பயப்பட்டால் நடக்குமா? கமலாவிற்கு லேர்னர்ஸ் லைசென்ஸ் வாங்கிக் கொடுத்தேன்.
ஒரு நல்ல நாளாகப் பார்த்து டிரைவிங் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். முதலில் கிளட்ச், கியர், ஆக்ஸிலேட்டர், ஸ்டீயரிங், பிரேக், ரிவர்ஸ், இவைகளைப் பற்றி விளக்கினேன்.
"இப்படி ஆரம்பிக்கும்போதே அரை டஜன் விஷயங்களைச் சொன்னால் யாரும் கத்துக்க முடியாது. ஒண்ணொண்ணா சொல்லிக் கொடுங்க. இன்னிக்கு பிரேக்'' என்றாள்.
அவள் வழியே நான் போனேன். காரை ஸ்டார்ட் செய்தாள். கியரை நான் போட்டு விட்டேன். கார் எப்போது விமானமாக மாறிற்று? கமலா ஆக்ஸிலேட்ரை, நடராஜப் பெருமான் தன் காலின் கீழுள்ள முயலகனை அழுத்துவதைப் போல அழுத்த, கார் டேக் ஆஃப் செய்தது! ரைட் சகோதரர்களே! நீங்கள்ஒரு விமானத்தைக் கண்டுபிடித்துப் பெருமை தீட்டிக் கொண்டீர்களே, கமலா உங்களுக்கு முன்பேயே பிறந்திருந்தால், அந்தப் பெயரை அவள் தட்டிக் கொண்டு போயிருப்பாள்!
காரை நோக்கி ஒரு ஆலமரம் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தது. "கமலா, மரம், மரம்'' என்று கத்தினேன். ""என்கிட்டே ஏன் கத்தறீங்க... அதை ஒதுங்கிப் போகச் சொல்லுங்களேன். என்கிட்ட கத்தறதுக்குத் தான் உங்கம்மா சொல்லிக் கொடுத்திருக்கிறாள்'' என்றாள்.
சட்டென்று பிரேக்கை அழுத்தினேன். கமலா ""வீல்' என்று அலறினாள். அவள் கால் மேல் என் காலை வைத்து அழுத்தியதால், "கால், கால்' என்று கத்தினாள். (காள் காள் என்று கத்தினாளோ!)
கியர் போடுவதற்குக் கமலா பட்டபாடு இருக்கிறதே, அதை அதிகம் விவரிக்க முடியாது. காரணம், அது எங்கள் விவாகரத்தில் போய் முடியும். மேலே தூக்கியபடி போட்டால் முதல் கியர், கீழே வந்தால் இரண்டு, முன் பக்கம் அழுத்தியபடி மேலே தூக்கினால் மூன்றாவது...''
""அதெப்படி? மேலே போட்டால் ஒன்று, அதுவே மூன்று...''
""ஒண்ணும் மூணும் ஒரே பொஸிஷன் மாதிரி இருந்தாலும் மேல் பக்கமாக இழுத்துப் போடும்போது முதல் கியர்...''
""எதுக்கு இப்படி வைச்சிருக்காங்களோ? 1, 2, 3, 4, என்று வரிசையாக வெக்கறது, சரியான வடிக்கட்டியவன் காரை மேனுஃபாக்சர் பண்ணவன்'' என்று திடீர் சர்ட்டிபிகேட்டைக் கொடுத்தாள்.
""இல்லை கமலா... எல்லாக் கார்லேயும் இப்படித்தான் இருக்கும்...''
""அப்போ, எல்லாரும் கலப்படமில்லாத முட்டாள்கள்'' என்றாள் கமலா.
நல்ல காலம், ஃபோர்டு, ரோல்ஸ் ராய்ஸ், டோயாட்டா, வாக்ஸால், எட்செட்ரா, எட்செட்ரா கார் தயாரிப்பாளர்களுக்குத் தமிழ் தெரியாது. ஆகவே நான் பிழைத்து இருக்கிறேன் - மான நஷ்ட வழக்குகளில் அகப்பட்டுக் கொள்ளாமல்!
""கமலா, நியூட்ரல் கியர் பற்றிச் சொல்லலையே. ஒரு கியரிலிருந்து இன்னொரு கியருக்குப் போகும்போது நியூட்ரல் வழியாகத்தான் போகும்''
""இதென்ன கூத்து அப்பப்போ, ""தாச்சி' தொடற மாதிரி நியூட்ரலைத் தொடணுமா? மயிலாப்பூரிலிருந்து திருவல்லிக்கேணி போகணும்னா ராயபுரத்தை தொட்டுட்டுப் போகிற கதையாக இருக்கிறதே!'' என்று சொல்லியபடியே கியரை மாற்ற, அது நியூட்ரலில் விழுந்து இருப்பதை அறியாமல், கமலா ஆக்ஸிலேட்டரை அழுத்த, கார் இஞ்சின் ஓவென்று -- அதாவது கமலாவின் குரலுக்கும் ஒரு படி மேலே போய் -- அலறியது.
நான் கியருக்குத் தள்ளிவிட்டேன். கார் மறுபடியும் பஞ்ச கல்யாணியாயிற்று. இந்த தடவை "குதிரை' கமலாவைப் பின்னால் தள்ளிவிட அவள் ரொம்பவும் குலுங்கி விட்டாள். பயந்து போய்விட்டாள். என் வாழ்க்கையிலே, கமலா பயந்ததை அன்று தான் முதன் முதலில் பார்த்தேன்.( மனமெல்லாம் செண்பகப்பூ!) சந்தேகமில்லாமல் கார், அகத்துகாரரை விட உசத்திதான்!
ஒரு மாதிரி செட்டில் ஆன பிறகு மேலே காரை ஓட்டினாள். எதிரே கார் ஒன்று வந்தது. ""கமலா, கொஞ்சம் ஓரம் ஓட்டு'' என்றேன். பின்னால் கார் வரும்போது, ""சைட் கொடு கமலா'' என்றேன். நாலைந்து தடவை இப்படிச் சொன்ன பிறகு, கமலா பொறுமை இழந்தாள். "எல்லாருக்கும் இடம் கொடுத்துக் கொண்டு இருந்தால் தலை மேலே ஏறுவாங்க'' என்றதுடன், "எதுக்கு இத்தனைக் கார் ரோடுலே ஓடணுமோ? ஒரு பாவிக்கும் இந்த கியர், பிரேக் தொல்லை இல்லை. நிம்மதியா ஓட்டறாங்க. நம்ப கார்லேதான் எல்லா வம்பும்'' என்றாள்.
சுமார் பத்து நாட்கள் பாடம் நடத்தினேன். கமலா ஒரு மாதிரியாகக் கற்றுக் கொண்டு விட்டாள்.
""ஆமாம், ரிவர்ஸ் எப்படி எடுப்பது என்று சொல்லிக் கொடுக்கலையே?' என்று கேட்டாள். ஒரு சுபயோக சுப தினத்தில் (மன்னிக்கவும், ”அசுபயோக அசுபதினம்' என்று திருத்தி வாசிக்கவும்) உரல் - உலக்கைத் தத்துவத்தின் அடிப்படையில், ரிவர்ஸ் சொல்லிக் கொடுத்தேன். தீவுத் திடலில் சொல்லிக் கொடுத்ததால், ஒரு சங்கடமும் இல்லாமல் அனாயாசமாகக் கற்றுக் கொண்டு விட்டாள்.
அன்று வீட்டிற்கு வந்தோம். ""காரை ரிவர்ஸ் செய்து காரேஜில் விடுகிறேன்' என்றாள் கமலா. ""சரி' என்றேன். காரை ரிவர்ஸ் எடுத்தாள் ஜம்மென்று. ஆனால், துர்திர்ஷ்டவசம், காரேஜ்தான் காணாமல் போய்விட்டது.
நேரே பின் சுவரிலே போய் கார் மோத, சுவர் தன் மூதாதையரை நாடிப் போக, மேலே இருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை, சடசடவென்று உடைந்து விழ, கொடுக்கிற தெய்வம் இப்படிக் கூரையைப் பொத்துக் கொண்டு வருகிறதோ என்று நான் வெளியே தலை நீட்ட, ஒரு மரச் சட்டம் என் தலையை முத்தமிட, நான் அலற, கமலா ""கோவை சரளா' மாதிரி கத்தினாள்!
நேரே பின் சுவரிலே போய் கார் மோத, சுவர் தன் மூதாதையரை நாடிப் போக, மேலே இருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை, சடசடவென்று உடைந்து விழ, கொடுக்கிற தெய்வம் இப்படிக் கூரையைப் பொத்துக் கொண்டு வருகிறதோ என்று நான் வெளியே தலை நீட்ட, ஒரு மரச் சட்டம் என் தலையை முத்தமிட, நான் அலற, கமலா ""கோவை சரளா' மாதிரி கத்தினாள்!
* * *
ஆப்கானிஸ்தானிலிருந்து பேரீச்சம்பழம் வர ஆரம்பித்து விட்டது. ஆனால் என் காருக்கு விமோசனம் வரவில்லை!!
சார், இதைப் படிச்சுட்டு இன்னமும் சிரிச்சுட்டிருக்கேன். அதிலும் அந்த முயலகன், பஞ்சக்கல்யாணி, ரிவர்ஸ் கியர், கோவை சரளா மேட்டர் சூப்பர்.
ReplyDeleteI read this again after a long time & really went to splits...Hats off to you mama
ReplyDeleteரசித்து சிரித்துவிட்டு, மீண்டும் நினைத்து சிரித்துவிட்டு, இப்போது கம்மெண்ட்:
ReplyDelete/-- இதைத் தொடர்ந்து கமலா பேசியதை எழுதத் தமிழ் மொழிக்கு வளம் போதாது./ அப்போது தமிழ் செம்மொழி இல்லையோ? - ஜகன்னாதன்
One of the best. :-))))
ReplyDelete"kamala" is best by every test!
ReplyDeleteரொம்ப ரசித்து சிரித்துக்கொண்டிருந்தேன். அதிலும் அந்த கியர் 4ம் வரிசையாக வைத்துத்தொலைக்க வேண்டியது தானே என்பதை நினைத்து நினைத்து அதிகம் சிரித்தேன். வாழ்த்துக்கள்
ReplyDeleteகமலா பயந்ததை அன்று தான் முதன் முதலில் பார்த்தேன்.( மனமெல்லாம் செண்பகப்பூ!) சந்தேகமில்லாமல் கார், அகத்துகாரரை விட உசத்திதான்!
ReplyDeleteகண்டிப்பாக ஒத்துகொள்ள வேண்டிய செய்தி, அமெரிக்கா வந்த புதிதில், வெள்ளைக்கார கிழவனிடம் மணிக்கு $65 கொடுத்து இந்தியாவில் இடதுபுறம் ஒட்டிய காரை, இங்கே வலதுபுறம் ஓட்ட கத்துக்கொண்டு, என் மனைவிக்கு கல்யாணமான புதிதில், நிறைய சண்டைபோட்டு(இமம் விவாகரத்தில் முடியாமல்), எனக்கு மனைவியை திட்ட கார் கத்துகொடுதல் ஓர் சான்ஸ். ஆச்சர்யம், நான் ஒருமுறை பெயில் ஆகி இரண்டாம் முறை லைசென்ஸ் வாங்கினேன், என் மனைவிக்கு ஒரே சந்தோசம்... பாழப்போன driving டெஸ்ட் இன்ஸ்பெக்டர் என்மனைவியை புகழ் தானாம்.... சூப்பரா கார் ஓட்டேரேனு.... ஜொள்ளு விட்ட வெள்ளைக்காரன், அதிக மார்க் போட்டு ஒரேதடவையில் லைசென்ஸ் கொடுத்து விட்டான். ஆனால் இன்னும் (10 வருடங்களாக) parallel பார்கிங் கத்துகொடுகிறேன்.... அவள் கேள்வி அப்பறம் எதுக்கு அவனவன் பார்கிங் garage கட்டி இருக்கான், அவன் பொழைக்க வேண்டாம். எல்லாம் என் வயிதெரிச்சல்.....
படித்து சிரித்தேன் சார்.
ஜெய் நாராயண்