June 30, 2010

பையாகுட்டி -- கேரக்டர்

காஞ்சீபுரம் பாசஞ்சர், காட்டாங்கொளத்தூர் ஸ்டேஷனிலிருந்து புறப்படும் சமயம், திறந்த கோட்டுப் பறக்க, வேட்டியை டப்பா கட்டு கட்டியபடி ஓடி வந்து தொத்திக் கொள்ளும் ஆசாமி தான் திருவாளர் பையாகுட்டி. பெயருக்கு ஏற்றார்ப் போல் சிறிய கச்சலான ஆசாமி தான் பையாகுட்டி. ஒருகையில் எல். ஜி. பெருங்காயப் பை, மற்றொரு கையில்  குடை, ரிடையரான பிறகு ஒரு தனியார் கம்பெனியில் "மாடு' போல் உழைக்கும் ஜீவன்.
அந்த வண்டியில் பையாகுட்டி ஏறியதும் கலகலப்பு ஏற்படும். "வாய்யா பையாகுட்டி.... அக்சப்டென்ஸ் என்ன?'' என்று யாராவது கேட்பார்கள்.
 ஆம், பையாகுட்டியின் வாழ்க்கையில் ரேஸ், ரம்மி, குறுக்கெழுத்துப் போட்டி, ஐரிஷ் ஸ்வீப் ஸ்டேக்ஸ், நியூயார்க் காட்டன் ஆகியவைகள் தான் முக்கிய பங்கு பெற்றிருந்தன!
வாய் ஓயாமல் பேசுவார் பையாகுட்டி. "ஏண்டா ராமு, ராத்திரி உன்னை, த்ரீ மெயிலில் காணோம்? ஒரு கை குறைஞ்சுதுன்னு  ஒரு பாசஞ்ஜரைப் போட்டுக் கொண்டோம். பாவிக்கு என்னமா ஆடித்துத் தெரியுமா கை! எல்லாரையும் துரத்தித் துரத்தி அடிச்சான். இத்தனைக்கும் "பிரும்மச்சாரி'யும் "பத்து'வும் எவ்வளவு திருட்டு ஆட்டம் ஆட முடியுமோ அவ்வளவு ஆடினார்கள். பெரிய கல்லுளிமங்கனப்பா அவன். எல்லாரையும் சுருட்டி பைக்குள்ளே போட்டுக் கொண்டான்.
 அதிருக்கட்டும், அடே "மொக்கை' முருகேசா! பேப்பரைப் பாத்தியா? பெங்களூரிலே "ஜான்ஸி ராணி'க்கு என்ன ஆச்சு பாத்தியா? புல் மேய போய்விட்டதுடா புல்லு! அது நாசமா போக!  ராமன், பெங்களூர் போனான். அதன் தலையிலே நூறு  கட்டச்சொன்னேன். பணம் கோவிந்தா! ப்ளேஸில் கூட வரவில்லைடா. சரியான குன்ரோல் குதிரைடா அது.  நீ சொன்னியேன்னு நான் கட்டினேன்.... இவன் வந்தானா இன்னிக்கி? அவன் தாண்டா நம்ப சம்பத்து. "வீக்லி இருந்தா வாங்கு. என்னாச்சுன்னு பாக்கணும். தீபாவளி பம்பர் கிராஸ்வேர்ட் போட்டானே? பம்பரா, ஜம்பரா என்று பார்க்கலாம். அறுபது கூப்பன் போட்டிருக்கிறேன்.''
"பையாகுட்டி! பேசினது போறும்..வந்ததும் முதலில் கட்டை எடுத்துப் போட்டுவிட்டு நீ அறுப்பதை அறுத்துக் கொண்டிரு. உட்காருங்கடா, சரியாக. டவலைப் போடு. கலைச்சு போடுங்கடா...பையாகுட்டி! என்ன அஞ்சு பைசாவா,  பத்துப் பைசாவா?''
"'என் பொண்டாட்டி, ஏதோ எவர்சில்வர் பாத்திரம் வேண்டும் என்று இருபத்தைந்து ரூபாய் கொடுத்திருக்கா. போடுங்கடா பத்து பைசாவே, ஆடலாம்.  யாருடா இவன், சீட்டைக் குலுக்கற அழகைப் பாரு! கத்துக்குட்டிங்கள்ளாம் வந்து விடறதுங்க.  நேற்று யார் யார் எனக்குப் பாக்கி? ராமு அஞ்சு ரூபாய், 'பிரும்மச்சாரி" இன்னிக்கி வரலை, ஏழு ரூபாய் பாக்கி வச்சுட்டான். நான் மறந்துடுவேன்னு நினைச்சுக்கிட்டு ஒரு வாரத்திற்கு தலைகாட்டமாட்டான். அப்புறம் "மானேஜர்' நாலு ரூபாய் பாக்கி.
..
“கேளுங்கடா ஒரு விஷயம், நம்ப ’மானேஜர்’ இருக்கானே, அதாண்டா வரதன். இவன் பெரிய கம்பெனிக்கு மானேஜர் என்று நான் நினைத்துக் கொண்டு. நேற்று இவன் கம்பெனிக்குப் போயிருந்தேன். பாடாவதி ஆபீஸ்டா! நம்ம காட்டாங்கொளத்தூர் ஸ்டேஷன் மாஸ்டரே பரவாயில்லை, கூப்பிட்டக் குரலுக்கு ஒரு ஸ்வீப்பராவது இருக்கிறான். ’மானேஜர்’ ஆபீஸ்லே இவன் தாண்டா ஏக சக்ரவர்த்தி. இந்த அழகில் இவன் ஏதோ புடவையைக் கிழித்து "டை-'யாகப் கட்டிக்கொண்டு ஜம்பமாகப் பேசுகிறான்1...
“போட்டாச்சா! ஜோக்கரைத்  திருப்பேன்... என்ன ஆடுதன் ஏழா? பாழா போச்சு.  ஜோக்கர் வெட்டினவன் சுந்தரமா? தம்பி, உன் விரல் அளவைக் கொடு, மோதிரம் பண்ணிப் போடறேன். ஜோக்கரா வெட்டினே? என் கழுத்தை வெட்டினே!..''
   பையாகுட்டி இப்படி எல்லாரையும் பிய்த்து உதறுவதைப் பற்றி யாரும் லட்சியம் செய்யமாட்டார்கள். அவரையும் நன்றாக "கோட்டா' செய்வார்கள்.எல்லோருக்கும் அவர் "பையா குட்டி' தான்!
அந்த ரயிலில் பல வருடங்களாகப் போய்க் கொண்டிருப்பவர். ஆகவே இஞ்ஜின் ட்ரைவர்கள், டி. டி. ஆர்கள், ’கார்டுகள்' எல்லாரும் அவருக்குப் பழக்கமானவர்கள். சமயத்தில் யாராவது சீசன் டிக்கட்டு  கொண்டு வர மறந்து போய் டிக்கட் எக்ஸாமினரிடம் அகப்பட்டுக் கொள்வார்கள். அப்போது பையாகுட்டியின் உதவியை அவர்கள் நாடுவார்கள்.
"ராஜகோபால்... இவன் நம்ப பையன்தான். புது கல்யாணம், செகண்ட் ஷோ போனார்...அதனாலே   ரொம்ப நேரம் தூங்கிப் போய்ட்டாரு மாப்பிள்ளை!  அவசர அவசரமாய் வரும்போது சீசன் டிக்கட் மறந்துட்டாரு... போகட்டும் உடுப்பா.'' என்பார்.
"யாருடா இன்னிக்கு டிரைவர்? வேலாயுதமாக இருக்கும், வண்டி இப்பவே லேட். இன்னும் ’கிராஸிங்' போட்டால், பீச் ஸ்டேஷன் போவதற்குள் விடிந்துவிடும்.  “நல்லா வாலை முறுக்கி வண்டியை ஓட்டச் சொன்னார் பையாகுட்டி” என்று  டிரைவர் கிட்ட சொல்லி விட்டு வா:” என்பார்! பீச் ஸ்டேஷனுக்குப் போனதும். "என்ன வேலு, சொன்னபடி ஒரு "தம் பிடிச்சு கொண்டாந்துட்டியே... வெரி குட்... உன் பொண் கல்யாணத்துக்கு தேதி நிச்சயம் பண்ணிட்டியா? யாரு இது, புது ஃபயர்மென்?'' என்று விசாரிப்பார் பையாகுட்டி.
  ஆபீஸிலும் பையாகுட்டி பெரும்பாலான நேரத்தை குறுக்கெழுத்துப் போட்டி பாரங்களைப் பூர்த்தி செய்வதில் கழிப்பார்.  என்றோ ஒரு நாள் ஒரு லட்ச ரூபாய் பரிசு கிடைக்கும் என்று நம்பிக்கையில் அவர் இத்தகைய போட்டிகளிலும், பந்தயங்களிலும், லாட்டிரி டிக்கட்டுகளிலும் செலவழித்த தொகையே கணிசமானது.
  "எனக்கென்னடா குழந்தையா, குட்டியா? வந்தால் சரி, வராவிட்டால் போகட்டும்,'' என்று அடிக்கடி, மிகவும் அலட்சியமாகக் கூறுவார்!

7 comments:

 1. பள்ளிக் காலங்களில் ரயில் பயணம் செய்தபோது பார்த்த ஆசாமிகளை நினைவுபடுத்தி விட்டீர்கள்.

  ReplyDelete
 2. அற்புதமாக படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள். நீங்களும் அந்த ரயிலில் சென்றீர்களா?

  ReplyDelete
 3. The card game conversation reminds me of "kitta Iyer"-an inspector in education department who lived in Bawa madam lane,North Main street, tanjore-our lane in early 60s and 70s.

  Arumayana padivu,agasthaian sir, sowkkiyama?

  raju-dubai

  ReplyDelete
 4. ....raju-dubai
  மிக்க சந்தோஷம். பாராட்டுக்கு நன்றி...நான் சௌக்கியம். ---கடுகு

  ReplyDelete
 5. கண்களை திறந்து வைத்துக்கொண்டால் எல்லோரும் இந்த மாதிரி மனிதர்களைப் பார்க்கலாம். ஆனால் வீடியோவில் பார்ப்பதைப் போல் எல்லோராலும் வர்ணிக்க முடியாது. உங்கள் நகைச்சுவையான எழுத்துத் திறமைக்கு வந்தனம். - ஜகன்னாதன்

  ReplyDelete
 6. திரு ஜகன்னாதன் அவர்களுக்கு, மிக்க நன்றி.. கோபுலுவின் படங்களால் தான் என் வர்ணனைகளில் உள்ள குறைபாடுகள் அடிபட்டுப் போகின்றன.

  ReplyDelete
 7. ஸ்ரீமான் கோபுலு தமிழ் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கிடைத்த வரம், சந்தேகமில்லை. அவர், தன் படத்துடன் அச்சாகும் கதை / கட்டுரைகளின் தரத்தை உயர்த்துவதில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை. கதை / கட்டுரை தன் மனத்திற்கு உகந்தால் மட்டும் அவர் படம் வரைவாரோ என்று விய்க்கிறேன். நன்றி. - ஜகன்னாதன்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :