June 20, 2010

தாடித் தாத்தா - கேரக்டர்

மூன்றே தெருக்கள் கொண்ட கிராமத்தின் நடுத்தெருவில், கூரை வேய்ந்த வீட்டின், மழமழவென்று மெழுகப்பட்ட திண்ணையில் உட்கார்ந்திருப்பவர்தான் தாடித் தாத்தா. இவர் கிராமத்தின் உயிர் நாடி. ஒரு காலத்தில் பிரைமரி ஸ்கூல் வாத்தியாராக இருந்து ஓய்வு பெற்றவர். ஆதலால் "கல்விமான்'!
ஊரின் தனிநபர் பஞ்சாயத்து (ஒன் மேன் ட்ரிப்யூனல்). நாடி ஜோஸ்யர், நாட்டு வைத்தியர், அரசியல் அறிஞர், பகுதி நேர போஸ்ட்மாஸ்டர், தெருக்கூத்து வாத்தியார் - எல்லாம் இவரே. ஊரில் இவருக்குத் தெரியாமல் அல்லது இவரது ஆலோசனை இன்றி ஒரு காரியமும் நடக்காது.
"யாரு ... பச்சையா போவறது. இப்படி வா ... இந்த தபால் பையைக் கட்டிப் போட்டு விட்டுப் போ. ரன்னர் வருவான்.ஆமாம்... ராத்திரி இன்னா களத்து மேட்டிலே தகராறு. மறுபடியும் மருதாசலம் தண்ணி போட்டு விட்டு வந்துட்டானா? எத்தினி தபா சொல்லியிருக்கேன்! அவனுக்குப் புரிஞ்சாதானே. நம்ம வைத்திய  சாஸ்திரங்கள்ளே சுத்தமாகப் போட்டிருக்குது...
” சேத்திரமது  துமியளவும் தவிர்த்திடு. நேத்திரமது நேய மாகும். சாத்திரம் கூறும் சத்தியமதை பாத்திரமே நீ அறிவாய், பாத்திரு, புன்னைவன நாயகனே'' என்று கல்லுளி சித்தர் பாடலே  பாடியிருக்காரு.  இதெல்லாம் யாரு படிக்கிறாங்க.  "சின்னிம்மா' பாட்டு பாடறாங்க, பட்டணம் தான் "போவலாமடி பொம்பளை'ன்னு ... ஹும், யாரைச்சொல்லியும் பயனில்லை. குரு ஓட்டம் போய் சனி வூட்டை வுட்டு நகந்தாத்தான் வெசாழ தசை வருது. அது இருக்குதே இன்னும் இரண்டு மண்டலத்துக்கு மேலே ....''

தாடித் தாத்தாவுக்கு, தாத்தாவாகும் முன்பு என்ன பெயர் என்பது யாருக்கும் தெரியாது. பலருக்கு நினைவு தெரிந்த நாள் முதல், கற்றாழை நார் மாதிரி பளபளக்கும் நெளிந்து நீண்ட ஓடும் தாடி. வயது ஏறியதால் உடலில் ஒரு மினுமினுப்பு. வலது கையில் தாயத்து. சிவப்பு துண்டு, வேஷ்டி.. இடுப்பில் போன நூற்றாண்டைச் சேர்ந்த பட்டை பெல்ட் அவரது ஒட்டிய வயிற்றை மேலும் சின்னதாக்கியது. நெற்றியில் இருந்த பெரிய குங்குமப் பொட்டு அவருக்கு மதிப்பைத் தந்தது.
தாடித்தாத்தா போஸ்ட்மாஸ்டராக இருப்பதுவும் பொருத்தம். தகவல்கள் பல அவரது திண்ணையில் பரிமாறப்படும்.
ஜோதிடம் தெரிந்தவர் என்று அவர் கூறிக்கொள்வதால்,"தாத்தா, புள்ளைக்கு மொட்டை அடிக்கணும். நாள் பார்த்துச் சொல்லு'', ', "மாரியம்மா விழாவை என்னிக்கு வெச்சுக்கலாம்?'' என்பது போன்று பலர் கேட்பார்கள்.
"அடுத்த மாசம் விழா, தெருக்கூத்து எதுவும் வெச்சுக்க முடியாது. போஸ்டல் இன்ஸ்பெக்டர் வராரு... வூட்டுக் கூறையை மாத்தணும். திண்ணையை சுத்தமாக மொழுகி வைக்கணும். டவுனுக்குப் போகச்சே ராமசாமியை காபி பில்லை வாங்கியாரச் சொல்லணும். இன்ஸ்பெக்டருக்கு காபி கொடுக்கணும்...முருகேசா! உன் வூட்டுலேருந்து நல்ல எளநீயாகக் கொண்டு வந்து வை. என்ன பார்க்கறே? இன்ஸ்பெக்டர் கண்டிப்பானவர். அப்பாலே நம்ம எர் தபாலாபீஸை மூடிடப் போறாரு..யாருடா அங்கே - பண்ணையார் வூட்டு புள்ளைங்களா? குந்துங்க . சிலேட்டுலே எழுதுங்க. அணில், இடு, இலை ... எழுத்து சுத்தமாக இருக்கணும்.'
' தாடித்தாத்தா எப்போதும் இயங்கியபடியே இருப்பார். அந்தக் கிராமமும் அவரைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும்!

2 comments:

 1. மதிப்பிற்குரிய திரு.அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  சமீபத்தில் மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்துக்குப் போயிருந்தோம். ரிடையர்ட் ஆசிரியர் ஒருவர் - நீங்கள் வர்ணித்திருப்பது போலவே தோற்றம் - ஆனால் அதிகம் பேசவில்லை, சுறுசுறுப்பாக தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இதைப் படித்ததும் அவர் நினைவு வந்தது.

  அன்புடன்

  திருமதி சுப்ரமணியம்

  ReplyDelete
 2. Charactero characteril ivarai sandhikkalaiye?

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :