June 15, 2010

உள்ளே இருக்கும் பொன்

சிக்கன் ஸூப் ஃபார் த ஸோல்   (Chicken soup for  the Soul)  என்ற  புத்தகத்தில் ஜேக் கான்ஃபீல்ட் ( Jack Canfield)  எழுதியுள்ள  கோல்டன் புத்தா என்ற கட்டுரையைப் படித்து நெகிழ்ந்து போனேன். அந்தக் கட்டுரையை சுருக்கி த் தருகிறேன். ( கூடுதல் தகவலையும் சேர்த்து.) 
---------------- 
1988'ம் ஆண்டு என் மனைவியும் நானும் ஹாங்காங்கில் ஒரு மகா நாட்டில் கலந்து கொள்ள வந்தோம்.  அப்படியே தாய்லாந்திற்கும் ஒரு சுற்றுலா பயணமாகச் சென்றோம்
    பாங்காக்கில் உள்ள புத்தர் கோவில்களைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். எங்களுடன் ஒரு மொழிபெயர்ப்பாளர் வந்தார்.  அங்கு பல கோவில்களைப் பார்த்தோம்.  பெரும்பாலான கோவில்கள் பற்றிய விவரங்கள் கனவு போல மறந்து விட்டாலும், ஒரு கோவில் எங்கள் நினைவிலும் மனதிலும் ஆழமாக பதிந்துவிட்டது. பாதிப்பையும் ஏற்படுத்தி விட்டது.
     அந்தக் கோவிலின் பெயர் தங்க புத்தர் ஆலயம். அது சிறிய கோயில். சுமார் 30 அடிக்கு 40 அடிதான் இருக்கும். உள்ளே நுழைந்ததும் அப்படியே பிரமித்துப் போய்விட்டோம். அங்கிருந்த புத்தர் சிலையைப் பார்த்தோம். எவ்வளவு பிரம்மாண்டமான சிலை! சொக்கத் தங்கம்! என்னமாய் தகத்தாயமாய் ஜொலித்தது, பத்தரை அடி உயர தங்கச்சிலை. பத்தரை மாற்றுத் தங்கம். சாலிட் கோல்ட்! இரண்டரை டன் எடையாம்.  மொழிப்பெயர்ப்பாளர் சொன்ன தகவல்.
அதன் மதிப்பு உத்தேசமாக சொன்னால் 300 மில்லியன் டாலர் இருக்கலாம்.! புத்தரின் கம்பீரமான சிலை. மெலிதான புன்முறுவலுடன் கருணையுடன் நோக்கும் பொலிவின் அழகை எப்படி விவரிப்பேன்!

     வியப்படங்கிய பிறகு, புகைப்படங்கள் எடுத்த பிறகு, சற்று அருகில் சென்று பார்த்தோம்.  கண்ணாடி பெட்டி மாதிரி ஒன்று இருந்தது. அதனுள் சுமார் எட்டு அங்குல கனமும் பன்னிரண்டு அங்குலம் அகலமும் உள்ள ஒரு களிமண் பாளம் வைக்கப்பட்டிருந்தது.  எதற்குக் களிமண்ணைக் கண்ணாடி பெட்டியுள் வைத்திருக்கிறார்கள்
 வெளியே புத்தர் சிலையைப் பற்றிய வரலாறு எழுதப்பட்டிருந்தது அதில் விவரங்கள் இருந்தது.
 பாங்காக் துறைமுகத்தை மேம்படுத்த திட்டமிட்டபோது   ஒரு நெடுஞ்சாலையின் குறுக்கே,  கவனிப்பாரற்று இருந்த ஒரு புத்தர்  கோவில்    வருவது தெரிந்தது.  அந்த கோவிலில் இருந்தது  களிமண்ணால் ஆன பிரம்மாண்டமான சிலை.  சிலையை வேறு ஒரு இடத்தில் வைத்துவிடத்  தீர்மானித்தார்கள்.    ஒரு பெரிய கிரேன்  வந்தது.  சிலையை செயின்களால் கட்டி   தூக்கினார்கள் . புதிய கோவிலுக்காக  ஒதுக்கப்ப்பட்ட இடத்திற்குக்  கொண்டுபோக, மெள்ள நகர்ந்த சமயம் சங்கிலி அறுந்து சிலை விழுந்து விட்டது. மழை வேறு பெய்யத் துவங்கியது.  மறு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று சிலையை  தார்ப்பாயால் மூடிவிட்டுப் போய்விட்டார்கள்.



மழை நின்றதும் அன்று மாலை,  மடாலயத்துத் தலைமைத் துறவி சிலை எப்படி இருக்கிறது என்று பார்க்க வந்தார்., மெதுவாகத் தார்ப்பாயை விலக்கி டார்ச்சைப் போட்டுப் பார்த்தார். களிமண்ணில் ஒரு சின்ன விரிசலில் ஏதோ பள பளவென்று ஜொலித்தது. "உள்ளே ஏதாவது இருக்குமோ... ஏதோ மினுமினுக்கிறதே' என்று நெருங்கி உற்றுப் பார்த்தார். மடத்திற்குள் சென்று ஒரு உளியை எடுத்து வந்து, மெதுவாகக் களிமண்ணைப் பிளந்தார். ஆச்சரியம், ஆச்சரியம்! உள்ளே ஒரு உலோகச் சிலை இருப்பது தெரிந்தது.! பத்தரை மாற்றுத் தங்கம் என்பது சந்தேகமில்லாமல் தெரிந்தது..

மறுநாள்,  சிலையின்  மேலே இருந்த மண்ணை பலர் பல மணி நேரம்  வேலை செய்து முழுதுமாக பாளம் பாளமாகக் கொத்தி எடுத்தார்கள்.  ஒரு முழு தங்கச் சிலை புத்தர் வெளியே தோன்றினார். சாந்தமான அழகுடன் ஜொலித்தார். அப்போது வெட்டி எடுத்த மண்ணைத்தான் கண்ணாடி பேட்டுக்குள் வைத்திருகிறார்களாம்!
*           *              *
இந்த தங்க புத்தரின் வரலாறு என்ன?  பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட தங்கச் சிலை இது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.  ஒரு சமயம் தாய்லாந்தின் மீது  பர்மா படையெடுத்து வந்தது.  அப்போது, கோவிலைச் சார்ந்த மடத்தில் இருந்த துறவிகள் இந்தத் தங்கச் சிலையைப் எப்படி பாதுகாப்பது என்று தெரியாமல் தத்தளித்தார்கள். சிலையைத் தூக்கிகொண்டு எங்காவது  பத்திரமாக  வைப்பது என்பது இயலாத காரியம்..கடைசியில் அவர்களுக்கு ஒரு யோசனைத் தோன்றியது. . அதன் மீது முழுவதும் களிமண்ணை கனத்த அடையாகப் பூசிவிட்டார்கள்.  மண்னால் ஆன சிலை மாதிரி அது மாறிவிட்டது.  துரதிர்ஷ்டம்,  மடத்தின் துறவிகள் அனைவரும் போரில்  கொல்லப்பட்டனர். ஊர் மக்களும் இறந்து போயிருக்கவேண்டும்.  ஆகவே அந்த புத்தர், தங்க புத்தர் என்பது எவருக்கும் தெரியாமல் போய்விட்டது ஆகவே அவர்  களிமண் புத்தராகவே  வழிபடப்பட்டு வந்தார்--1957ஆம் ஆண்டு வரை!
*           *
ஊர் திரும்ப விமானத்தில் உட்கார்ந்தேன். என் மனம் என்னவோ தங்க புத்தரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.

"நாமெல்லாரும் களிமண் புத்தர் சிலைகள்தான். நம் மீதுள்ள களி மண் பாளங்களை அகற்றினால் நமது தங்கம் வெளிப்படும். நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தங்கப் புத்தர் உள்ளார்.  தங்க ஏசு உள்ளார். தங்கமான குணங்களின் மொத்த உருவம் உள்ளே இருக்கிறது.


இரண்டு, மூன்று வயது வரை நாம் எல்லோரும் தங்கச் சிலைகள்தான். அதன் பின்தான் களிமண்ணைப் பூசிக் கொள்கிறோம். போகட்டும். அந்த மடத்துத் துறவி  மேலே பூசப்பபட்டிருந்த களிமண்ணை உளியால் பாளம் பாளமாக வெட்டி எடுத்து தங்கச் சிலையை வெளியே கொண்டு வந்தாரே, அது போல் நாம் செய்ய வேண்டாமா?  இல்லை களிமண்ணாகவே நாம் இருக்கப் போகிறோமா?  அல்லது அந்த துறவி செய்வார் என்று  காத்திருக்கப் போகிறோமா? 

பின் குறிப்பு: இப்போது  அந்த கோவிலை பெரிய அளவில் புதுப்பித்து இருக்கிறார்கள்.

8 comments:

  1. சில வருடங்களுக்கு முன் படித்த, பிடித்த ஜென் கதையொன்று. (நினைவிலிருப்பதை எழுதுகிறேன்)

    அந்த இளம் புத்த துறவி நீண்ட தூரம் நடந்த களைப்புடன் அந்த மடாலாயத்தை அடைகிறார். ஏற்கெனவே நிறைய துறவிகளுடன் இடம் போதாத நிலையில் இருக்கும் நிலையில் மடத்தின் தலைமை குரு, இவருக்கு வேண்டாவெறுப்பாக வெளியே ஓரமாக இளைப்பாற இடம் தருகிறார். இரவு. கடும் குளிர்.

    ஒரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தர் வடிவிலான மரச்சிலைகளை எரித்து குளிரைப் போக்கிக் கொள்கிறார் இளம் துறவி.

    நடுநிசியில் வெளியே வரும் தலைமை குரு இதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். கோபத்துடன் அவரைத் திட்டி நெருப்பை அணைக்க முனைகிறார். 'தான் செய்ததில் தவறொன்றுமில்லை' என்பது இளம் துறவியின் வாதம்.

    எரிச்சலைடையும் தலைமை குரு, தலைமைப் பீடத்திற்கு அந்த இளம் குருவைப் பற்றின புகாரை அனுப்புகிறார்.

    சில நாட்களில் அதற்கான பதில் வருகிறது. தற்போதைய தலைமை குருவை அந்த நிலையிலிருந்து நீக்கியும், இளம் துறவியை தலைமைப் பொறுப்பில் அமர்த்துவதற்குமான அறிவிப்பே அது.


    (இந்தப் பதிவை வாசித்தவுடன் மேற்குறிப்பிட்ட ஜென்கதைதான் நினைவிற்கு வந்தது)

    ReplyDelete
  2. Kadugu Saar...

    Arumai, namma oor Srirangam Sri Ranganatharai (Moolavar) kooda ippadi thaan kapartrinargal. Our Rangan is more precious than Gold. You must have also heard about the story of a Namperumal (Utsavar) made out of solid gold who was stolen away by the muslim invaders and never came back to Srirangam. We are unfortunate.

    -Sri

    ReplyDelete
  3. "எல்லோரும் நல்லவர்கள் தான் இந்த மண்ணில் பிறக்கும் போது" ; ஜென் தத்துவங்கள் அனைத்துமே "நான்" தொலைவதை அடிப்படையாக கொண்டவை தானே ! "நான்" என்பது தொலைந்து போனால் நமக்குள் இருக்கும் விலை மதிப்பில்லாத தங்கம் (உன்னதம்) வெளிப்படும்.

    இந்த வரலாற்றை ஏற்கனவே படித்திருந்தாலும், மீண்டும் படிப்பது ஒரு நல்ல அனுபவம். நல்ல பதிவு. இதே போன்ற கட்டுரைகளையும் எதிர்பார்க்கிறோம் !நன்றி அய்யா

    ReplyDelete
  4. I agree with what Mr sri wrote. the same story with srirangam temple.

    ReplyDelete
  5. அருமையான வரலாற்றுத் தகவல்! அருமையான தத்துவம்!

    ReplyDelete
  6. மதிப்பிற்குரிய திரு.அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    நல்ல தகவல்.

    நன்றி,

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  7. அருமையான பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete
  8. ஆசையை துறந்த மா மனிதருக்கு தங்கத்தில் சிலை செய்ய யாரோ ஆசை பட்டிருகிறார்கள்.... விவரங்கள் அருமை

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!