நான் ஒரு நாள் என் சுயசரிதையை எழுதப் போகிறேன் என்று என் அருமை மனைவி கமலாவிடம் சொன்னேன்.
``நல்ல காரியம்தான். ரொம்பப் பேர் சுயசரித்திரம் என்ற பெயரில் ஏகமாகக் கற்பனைகளைக் கலந்து எழுதுவார்கள். அந்தக் கவலை உங்கள் புத்தகத்தைப் பற்றி எனக்கு துளிக்கூட சந்தேகம் கிடையாது. ஏனென்றால் உங்களுக்குத் தான் கற்பனை வறட்சியாயிற்றே'' என்று சொன்னாள். அதோடு விட்டாளா? எங்கோ படித்த ஜோக் நினைவுக்கு வர, ”சுய சரித்திரம் எழுதுங்கோ. முதல்ல கதாநாயகனை மாத்திட்டா சூப்பராக இருக்கும்" என்றாள்!
அவள் சொன்னால் சொல்லட்டும் என்று துணிந்து செயலில் இறங்கினேன். என் அகராதியில் `பின்வாங்குதல்' என்ற பதமே கிடையாது. (பார்க்கப் போனால் இன்னும் உண்மை பேசுதல், வாங்கிய கடனை திருப்பித் தருதல் போன்ற எத்தனையோ ஆயிரம் வார்த்தைகள் கிடையாது.)
``சரி, என்ன தலைப்பு?'' என்று அவளை யோசனை கேட்டேன்.
``நூலும் பட்டும் கோர்த்து வாங்கின தலைப்பு'' என்றாள்.
அவளுக்கு எப்பவும் புடவை ஞாபகம். (இத்தனைக்கும் போன வருஷம் பாருங்கள்... பொங்கலுக்கு, குடியரசு தினத்திற்கு, தமிழ் வருடப் பிறப்புக்கு, நவராத்திரிக்கு, தீபாவளிக்கு, ஆடிவெள்ளிக் கிழமைக்கு என்று ஒரு பண்டிகை கூட விடாமல் புடவை வாங்கித்தர மாட்டேன் என்று சொல்லி இருக்கிறேன்!)
``உன்னைக் கேட்பதை விட முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது..என் மூளையைக் குடைந்து தலைப்பைக் கொடுக்கிறேன் பார்'' என்று சொல்லி விட்டு எழுத உட்கார்ந்தேன்.
`நான் ஒரு சாமானியன்' என்று எழுதினேன்.
``இது என்ன பலசரக்கு, சாமான் என்று... ஏதோ ஆனியன் மாதிரி இருக்கிறது. அதுவும் சரிதான். ஒருவிதத்தில் ஆனியன் மாதிரி உரிக்க உரிக்க உள்ளே ஒன்றுமே இல்லாதது போல் உங்க லைஃப்லேயும் விஷயம் கிடையாது'' என்று சிம்பாலிக்காகத் தலைப்பு கொடுத்ததாக வாசகர்கள் - தப்பித் தவறி யாராவது வாங்கி வாசித்தால் - நினைத்துக் கொள்வார்கள்'' என்றாள் என் மனைவி.
``சரி... அதை விடு. 'உள்ளது உள்ளபடி!' சொல்லு..எப்படி இருக்கு?''
``படி, படி என்றாலும் யாரும் படிக்கப் போவதில்லை. படி, ஆழாக்கு என்று கணக்கில்லாமல் அள அள என்று அளந்திருப்பீங்க என்று அவர்களுக்குத் தெரியும். அதனாலே.............”
``விடு, கமலா. 'நினைவு அலைகள்' - எப்படி இருக்கு தலைப்பு?''
``நினைவுதானே - மறதி மன்னர் என்று உங்கம்மா சொல்லி இருக்காளே உங்களைப் பற்றி. உங்கள் மறதி ஜகப்பிரசித்தம். இந்த அழகிலே ”நினைவு அலைகள்” என்ற தலைப்பை வைத்கதால் ஊரே சிரிக்கும். எல்லாம் கலப்படமற்ற புருடாவாகத்தான் இருக்கும் என்று கரெக்டாக ஊகித்து விடுவார்கள்.”
இதன் பிறகு நான் நூறு தலைப்பு சொல்லி, கமலா அவற்றை 101 தடவை ரிஜக்ட் செய்து விட்டாள். (ஒரே தலைப்பையே மறந்து போய் இரண்டு தடவை சொன்னதால் தலைப்பு நூறு. ஆனால் ரிஜக் ஷன் நூற்றியொன்று !)
ஆகவே விரைவில் தலைப்பை முடிவு செய்து, அது கமலாவால் ஏற்கப்பட்டதும் என் சுயசரிதை எழுதலாம் என்று இருக்கிறேன்.
மதிப்பிற்குரிய திரு.அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
ReplyDeleteதலைப்புக்கே இந்த அளவு விவாதம் என்றால், அப்புறம் ஒவ்வொரு பக்கத்துக்கும்...
ஆனாலும் மேடம் மேற்பார்வையில் சீக்கிரமே உங்கள் சுயசரிதையைப் படிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.
அன்புடன்
திருமதி சுப்ரமணியம்
தலைப்பில்லாத சுயசரிதை என தலைப்பிடுங்கள். உங்கள் மனைவியால் எந்த ஆட்சேபணையும் செய்ய முடியாது என்று நினைக்கிறேன்.
ReplyDeleteSir,
ReplyDeleteSuperb!!!!!!! (Try that... really)
Kothamalli
/..என்று ஒரு பண்டிகை கூட விடாமல் புடவை வாங்கித்தர மாட்டேன் என்று சொல்லி இருக்கிறேன்! / இதற்கு அப்புறமும் மாமியின் கோ-ஆபெரேஷன் எதிர் பார்க்கிறீர்களே! எப்படியாவது ஒரு பட்டுப் புடவை வாங்கிக் கொடுத்து நல்ல தலைப்பைப் பிடியுங்கள்.
ReplyDeleteகல்யாணம் வரையிலான முதல் பாகத்துக்கு மாமி பர்மிஷன் வேண்டியிருக்காது, ஆனால் எழுதப்போகும் முக்கிய விஷயங்கள் எல்லாம் ஒரு வேளை கல்யாணத்திற்குப் பிந்தியவையா?
எப்படி இருந்தால் என்ன, நாங்கள் ஆவலுடன் உஙள் சுயசரிதைக் கதையைப் படிக்க காத்துக்கொண்டிருக்கிரோம்! - ஜகன்னாதன்
//தலைப்பில்லாத சுயசரிதை என தலைப்பிடுங்கள். உங்கள் மனைவியால் எந்த ஆட்சேபணையும் செய்ய முடியாது என்று நினைக்கிறேன்//
ReplyDeleteஐயய்யோ.சரி தான். தலையில் ஒன்றுமில்லாதது போல் தலைப்பிலும் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட போகிறார்கள்!
மாமி full form-ல இருக்காங்க; உங்க ஒவ்வொரு தலைப்பையும் சும்மா விளாசி தள்றாங்க. ஒரு மாற்றத்திற்கு மாமி உங்களை தாளிக்கிறது நல்லாத்தான் இருக்கு.
ReplyDelete<<< முகமூடி said...
ReplyDeleteமாமி உங்களை தாளிக்கிறது நல்லாத்தான் இருக்கு.>>>
ஏதோ எ்னக்கு ஒரு சமயம்.
உங்களுக்கு அங்கே எப்படி வசதி? டெய்லியா? அய்யோ,ந்நான் பார்க்க, கேட்க கொடுத் வைக்கலியே!:)
'பெருங்காய வாசனை' என்று பெயரிடலாம். கடுகு சுய சரிதைக்கு இது ரொம்பப் பொருத்தமா இருக்கும்.
ReplyDelete<<< Kasu Sobhana said... 'பெருங்காய வாசனை' என்று பெயரிடலாம்.>>
ReplyDeleteநல்ல யோசனைதான்...பெரிய காயத்திற்கு வழி வகுக்கும்
கமலாவின் கணவன் - இது என் யோசனை
ReplyDelete-Raghotaman