June 12, 2010

குந்தன்மல் சௌகார் -கேரக்டர்

"நகைகளின் பெயரில் கடன் கொடுக்கப்படும்'  என்று எழுதப்பட்ட போர்டு தொங்கும், அந்த எட்டடிக்கு எட்டடி சின்னக் கடையின் கல்லாவின் முன் சப்பணம் கட்டி உட்கார்ந்துகொண்டு, எதிரே இருக்கும் பளபளக்கும் தராசில் இரண்டொரு வெள்ளி நகைகளை நிறுத்துக் கொண்டிருக்கும் நபர்தான் குந்தன்மல் சௌகார். அந்த சின்ன ஊரின் ஒரே லேவாதேவிக்காரர்.
பளிச்சென்று வெள்ளை மல் வேட்டி, வெள்ளை ஜிப்பா, பிரிமணை மாதிரி முறுக்கப்பட்டு தலையில் கட்டப்பட்டுள்ள வெள்ளை முண்டாசு, இவைகளுக்கு "மேட்ச்" ஆவது போன்ற வெள்ளை "தொங்கு' மீசை! வாழ் நாள் முழுவதும் வெள்ளையப்பருடனும் வெள்ளி நகைகளுடனுமே கழித்து விட்டதால் இப்படி வெள்ளையாகக் காட்சி அளிக்கிறாரோ!.
"என்ன சௌகாரே,  நீங்க என்ன மல் துணியைப் பீஸ் கணக்கில் வாங்கிடுவீங்களா? முண்டாசிலிருந்து திண்டு வரை ஒரே மல் தானா?'' என்று கேட்டால், "ஸுத்தம் ஸோறு போடும். நமக்கு எதுக்கப்பா ஆடம்பரம்? நம்ப பேரே என்னா தெரியுமா? குந்தன்மல்''  என்பார்.  "ஸர்ரி... ஸர்ரி... என்னா கையிலே, வெள்ளி கொலுஸா? இப்பத்தானே மூட்டுக்கினு போனே, மல்லாக்கொட்டை வித்தேன்னு சொல்லி.... சரி, அம்பது ரூபாய் வாங்கிட்டு போ.... அரே கோன் ஹை.... இஸ்கோ பச்சாஸ் ருப்யா தேதோ'' --தன் உதவியாளருடன் மட்டும் இந்தியில் தான் பேசுவார்.
இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே தமிழ் நாட்டுக்கு வந்துவிட்ட அவர் இரண்டு வருஷத்திற்கு ஒரு முறை ராஜஸ்தான் போய் வருவார். வரும்போது ஒரு மாப்பிள்ளை, அல்லது மருமகன், அல்லது பக்கத்து ஊரில் வியாபாரத்தைத் துவங்கப் போகும் உறவினர் ஆகிய யாருடனாவது வருவார். சௌகார் இருந்த ஊரில் பணத் தேவையில்லாத நபரே இல்லாததால் அவர் கடைக்கு வராதவர்களே கிடையாது. நூறு ரூபாய் கடன் வாங்க வருபவர்களிடமும் துருவித் துருவிப் பேசி, என்ன செலவிற்காகப் பணம் வாங்குகிறார் என்பதைக் கண்டு பிடித்து விடுவார். இதனால் ஊரில் உள்ள எல்லாருடைய சொந்த விஷயங்கள், குடும்ப விவகாரங்கள், சச்சரவுகள், கோர்ட் வழக்குகள் ஆகியவை யாவையும் குந்தன்மல்லுக்கு அத்துப்படி. பணம் இருக்கிற இடத்தில் குணம் இருக்காது என்பார்கள். குந்தன்மல் இதற்கு விதிவிலக்கு. "வளவள'வென்று பேசுவார். "கலகல'வென்று வெள்ளிக் காசுகளைப் போல் சிரிப்பார். எல்லாரிடமும் அன்னியோன்னியமாகப் பேசுவார்.
"இன்னா பாப்பம்மா, கத்திரிக்காயா? கால் கிலோ போடு. அரை கிவாலோ? சரிய்யா போச்சு. வெலைவாசி  இருக்கிற நிலையிலே யாருக்குக் கட்டுப்படி ஆவுது. உனக்கு இன்னா, மண்ணிலே வெதை தூவிட்டே. காயா காய்க்குது. நம்ப பாடு அப்படியா?''
"போ, சாவுக்காரே, உன் கல்லாப் பெட்டியிலே பணம் தானாகக் குட்டி போடுதே...''
"போடும், போடும். அவன் அவனுக்கு ரூபாயைக் கொடுத்துப்பிட்டு பணம் வருமா வராதான்னு பயந்துகிட்டே கிடக்க வேண்டியிருக்குது. அவன் கொடுக்கற ஒண்ணே காலணா வட்டிக் காசுக்காக அவன் நகைகளை பூதம் காக்கற மாதிரி காப்பாத்திக் கொடுக்கணும்.
"அவன் பூட்டானே  யார் அவன்? ஆமாம், அவன்தான் அருகாணி, வாங்கின பணத்தைக் கொடுக்காம டில்லி பூட்டானே, நஷ்டம் இன்னா ஆச்சு....ஸர்ரி.... ஸர்ரி, உன்னோடு பேசிக்கினு இருந்தா வேலை ஆவாது. அரே சுகன்சந்த், இந்தா கத்திரிக்காய் வாங்கிக்கினு போ.''
சௌகார், "பூட்டானே" என்று குறிப்பிட்ட அருகாணி, இருபத்தேழு வருஷத்துக்கு முன்பு ஐம்பது ரூபாய் வாங்கியவன். அதைத் தான் அவர் எப்போதும் சொல்லிக் கொண்டு இருப்பார்!
பணம் செலவழியாத எந்த வேலையானாலும் சௌகார் உற்சாகமாக அதில் பங்கேற்பார். ஆகவே ஊரில் உள்ள குடும்பச் சண்டை போன்ற விவகாரங்களில் பஞ்சாயத்தாக இருப்பார்.
"இத பாரு, கேசவலு! வீணாக ஏன் லோலோன்னு சத்தம் போடறே? அவன் யாரு? நீ பெத்த புள்ளைதானே? சொத்தைப் பிரிச்சு குடு என்றால், குடுத்துடேன். அவன் கேட்கிறபடி ஆயிரமோ இரண்டாயிரமோ மேலே கொடுத்து சமாதானமா போவியா... அத்தைவுட்டுட்டு..... "
மற்றவர்கள் பணம் என்றால் ஆயிரம் ரூபாய் ஒரு பைசா மாதிரி, இவர் கல்லாவிற்குள் வந்து விட்டால் ஒரு பைசா ஆயிரம் ரூபாய் மாதிரி....!
"துட்டு லெட்சுமியாச்சே! அலட்சியப்படுத்தக் கூடாது'' என்பார். ஆகவே ’லெட்சுமி' உபாசகர் ஆக அவர் இருப்பதில் வியப்பு இல்லை.!

5 comments:

 1. நீங்கள் சொல்ல சொல்ல அவரை நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. அசாத்யமான எழுத்தாளர் சார் நீங்கள்!

  ReplyDelete
 2. //தன் உதவியாளருடன் மட்டும் இந்தியில் தான் பேசுவார்.//

  //மற்றவர்கள் பணம் என்றால் ஆயிரம் ரூபாய் ஒரு பைசா மாதிரி, இவர் கல்லாவிற்குள் வந்து விட்டால் ஒரு பைசா ஆயிரம் ரூபாய் மாதிரி....!

  அருமை sir...

  - Raghothaman

  ReplyDelete
 3. You had recalled my village memories. In my village the same above said man was their. Now i don`t know.

  Your writings are so good

  Kannan, Dubai

  ReplyDelete
 4. Thank you. Infact every vilalge, town has these money lenders.

  ReplyDelete
 5. நீங்கள் சொல்வது சத்யமான உண்மை. இவர்கள் கோபம் கொண்டு நான் பார்த்தது இல்லை. பிழைக்க வந்த இடத்தில் எப்படி பிழைப்பு நடத்துவது என்பதை நன்கு உணர்ந்த சாமர்த்தியசாலிகள். இவர்களிடம் இருந்து தமிழன் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :