June 06, 2010

கமலாவுடன் சென்ற கல்யாணம் - கடுகு

நண்பர் சாரநாதன் அன்று என் வீட்டிற்கு வந்திருந்தார். பொதுவாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம்.

''... ஆமாம். கிட்டா வீட்டுக் கல்யாணத்திற்குப் போயிருந்தாயா? ஏதோ கலாட்டா என்று கேள்விப்பட்டேனே...'' என்றார்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா'' என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, என் அருமை மனைவி கமலா, ""என்ன ஒண்ணுமில்லையா... அது பெரிய கதையாச்சே'' என்றாள்.

"என்னப்பா! அந்தக் கதையை எனக்குச் சொல்லக் கூடாதா?'' என்று சாரு கேட்க,

"நீதான் சொல்லேன் கமலா'' என்றேன்.

கமலா, "நீங்கதான் கோர்வையாகச் சொல்வீங்க... ஒரு விஷயத்தையும் விடாமல் கச்சிதமாய் சொல்வீங்க... எனக்கு நடுநடுவில் மறந்து போய்விடும்'' என்றாள்.
அவள் வைத்த சின்ன ஐஸை பெரிய ஐஸ் மலையாகக் கருதி, உச்சி குளிர்ந்த நான் தொண்டையைக் கனைத்து விட்டு ஆரம்பித்தேன்.
''...அன்றைக்கு கிட்டா வீட்டுக் கல்யாணத்தில்...''

"திடுதிடுப் என்று ஆரம்பித்து விட்டீர்களே. முதலில் நாம் கிளம்பிப் போன விவரத்தைச் சொன்னால் தானே பின்னால் நடந்த விஷயங்கள் விளங்கும்'' என்றாள் கமலா.

''...ஆமாம், நாங்கள் இரண்டு பேரும் கிளம்பின சமயம் நம்ம சுப்புவும் ராமுவும் லூனாவில் வந்து இறங்கினார்கள்...''

""லூனா இல்லை. டி.வி எஸ்-50'' என்று திருத்தினாள் கமலா.

"ஆமாம், ஆமாம்... சுப்புவும் ராமுவும் வந்தார்கள். அந்த சமயம் என் கார் ஸ்டார்ட் ஆகலை. அவர்களைத் தள்ளச் சொன்னேன்.''

"ஏன் கார் ஸ்டார்ட் ஆகலை என்பதைச் சொல்லுங்கோ. அப்பத்தான் எல்லாம் புரியும்'' என்றாள் கமலா.

""ஆமாம், சாரு... கார் பாட்டரி வீக் ஆக இருந்தது. புது பாட்டரி வாங்க கையில் பணம் இல்லை... கார் ஸ்டார்ட் ஆகலையா...''

"இருங்க... இருங்க... பாட்டரி வாங்க ஏன் பணம் இல்லை என்பதை முதலில் சொல்ல வேண்டாமா?'' - இது கமலா!

"யெஸ், அது மறந்துட்டுது. என் சிஸ்டர் சரோஜா அவசரமா ஆயிரம் ரூபாய் கேட்டிருந்தாள். பணம் அவளுக்கு அனுப்பிவிட்டிருந்ததால் ஷார்ட் ஆகிவிட்டது... கார் ஸ்டார்ட் ஆகலையா...''

"அடடா... என்ன அவசரமோ? உங்க அக்காவுக்கு எதுக்குப் பணம் அனுப்பினீங்கன்னு சொல்ல மறந்துட்டீங்களே... நானே சொல்லறேன். டி.வி. வாங்கணும்னு சீட்டு கட்டிண்டு வந்தாளாம். இன்னும் 7,8 மாசம் கட்டணும். இதுக்குள்ளே டெஸ்ட் மாட்ச்  வந்துடுத்து. அப்படியே ஸ்போர்ட்ஸ் என்றால் உயிரை விடற மாதிரி, உடனே டி.வி. வாங்கணும்னு, பழைய செட்டை வாங்கினாள். மூணாம் நாள் பல்லை இளிச்சிடுத்து. ரிப்பேருக்கு ஆயிரம் ரூபாய் ஆகும் என்றார்களாம். அதனால் இவர் தண்டம் அழுதார். இப்படி வாரி வழங்கினால் கார் பாட்டரி என்ன, டார்ச் பாட்டரி கூட வாங்க முடியாது. சரி... மேலே நீங்க கிட்டா கல்யாண கதையைச் சொல்லுங்க...உம்..'' என்றாள்.

"சொல்றேன்... ஆமாம்... கார் ஸ்டார்ட் ஆனதும், அவங்களை காரில் ஏறிக் கொள்ளச் சொன்னேன். பின்னால் ஏறிக் கொண்டார்கள்.''

"பின்னால் நான் தான் உட்கார்ந்து இருந்தேனே. முன்னாலே தான் அவங்க உட்கார்ந்தாங்க... நீங்க கூட சம்பத்தின் தொப்பை கியர் போடறதுக்கு இடைஞ்சலா இருக்குதுன்னு சொன்னீங்களே...''

"ஆமாம்... ஆமாம்... அப்புறம் எல்லாருமா போய்ச் சேரும்போது மணி எட்டேகால் இருக்கும்...''

"எட்டரைன்னு சொல்லுங்க. கார் ரேடியோவிலே கூட உங்கள் விருப்பம் வந்ததே.''

"ஆமாம் சாரு. எட்டரைக்குக் கல்யாண வீட்டிலே நுழையறோம்.''

"அடடா... என்ன அவசரமோ? காரைப் பார்க் பண்ணதைச் சொல்ல வேண்டாமா? இவர் பார்க் பண்ண ரிவர்ஸ் பண்ணினாரா... அங்கே பின்னால் தக்காளிப்பழ கூடைக்காரி உட்கார்ந்து இருக்கிறா... கூடையின் மேல் கார் மோத, பழம் ஏராளமாக நசுங்க, தக்காளிக்காரி, காளியாக மாறினாள்.''

"போறும் கமலா... அதெல்லாம் எதுக்கு?.. கேளப்பா, கிட்டா கல்யாணத்தில்...''

"இதெல்லாம் எதுக்கா? அவள் போட்ட கத்தலில் கல்யாண வீட்டிலிருந்து எல்லாரும் வெளியே வந்ததும், பெண் வீட்டுப் பாட்டி ஒருத்தி, "இந்தப் பிள்ளை வீட்டுக்காரர்கள் புதுப் பணக்காரர்கள் போல இருக்கிறது. கார் வாங்கிட்டா போதுமா, ஓட்டத் தெரிய வேண்டாமா?' என்று நங்கு நடிச்சதும் அதுக்கு நீங்கள்....''

              அன்றைய தினத்திற்குப் பிறகு இதுவரை கிட்டா வீட்டுக் கல்யாணத்தைப் பற்றிக் கேட்க சாரநாதன் வாயைத் திறந்ததே இல்லை. ஏன், எந்தக் கல்யாணத்தைப் பற்றியும்!

14 comments:

 1. கமலா மாமி இருக்கும் வரை மனசு எப்பவும் லைட்ஆவே இருக்கும் ..
  thank u sir

  ReplyDelete
 2. அடப் பாவமே... தக்காளிப் பழக்காரம்மா மேல மோதிட்டு அதை மூடி மறைக்க வேற பாக்கறீங்களா?? மாமி சொல்றதுதான் கரெக்டு.

  ReplyDelete
 3. மதிப்பிற்குரிய திரு.அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  /இப்படி வாரி வழங்கினால் கார் பாட்டரி என்ன, டார்ச் பாட்டரி கூட வாங்க முடியாது/

  மேடம் சொன்னால் ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம்!!.).)

  அன்புடன்

  திருமதி சுப்ரமணியம்

  ReplyDelete
 4. யதிராஜ சம்பத் குமார்June 7, 2010 at 8:00 AM

  கல்யாண கலாட்டாவை விட இந்த கலாட்டா சூப்பர்.

  ReplyDelete
 5. சார், நீங்க கிட்டா கல்யாண வீட்ல என்ன கலாட்டா ஆச்சுனு சொல்லவே இல்ல.. அதை ஒரு தனி பதிவா போடுங்க சார்..

  - Raghothaman

  ReplyDelete
 6. படிக்கப் படிக்கத் திகட்டாத வார்த்தைகள் உங்களுக்கே சொந்தம் சார். நீங்கள் ப்ளாக் வைத்திருப்பது நாங்கள் செய்த அதிர்ஷ்டம்!

  ReplyDelete
 7. எங்கோ படித்த மாதிரி இருந்ததே என்று் யோசித்தேன்! மார்ச்சில் ‘கமலாவும் கதைச் சுருக்கமும்’ கட்டுரையின் உல்ட்டா போல் இருக்கிறது! மீண்டும் சிரித்து வைத்தேன்! - ஜகன்னாதன்

  ReplyDelete
 8. இன்று பேப்பரில் Bloomberg UTV விளம்பரம் பார்த்து ரசித்தீர்களா? - R. J.

  ReplyDelete
 9. <<< Jagannathan said... இன்று பேப்பரில் Bloomberg UTV விளம்பரம் பார்த்து ரசித்தீர்களா? - R. J..>>

  இல்லை....நான் இந்தியாவில் இப்போது இல்லை!

  ReplyDelete
 10. Have a nice stay wherever you are and bring us new experiences you can share with. - R. J.

  ReplyDelete
 11. If you have time, you may visit the timesofindia.com, epaper dt 8.6.10 (Chennai version), last page. I wondered that as a professional what will be your comment on the same. Aplogies for intruding in your trip abroad. - R. J.

  ReplyDelete
 12. Saw the Ad. To understand it, one has to read the small print. In Ad agencies professionals generally say that very raarely people read the small print.
  If a reader is confused about the headline, he would just flip the page.

  ReplyDelete
 13. Dear Sir,
  Thanks for taking the time to see the ad and reply to me. It was a full page ad and it was possible to read the explanations below in the hard copy of the newspaper.
  I do agree the advertisers generally hide the real facts under an * - which are never readable (recently I saw a long statement explaining the * in brown small font letters in a light brown background). Law ministry / consumer forums should do something about it.- R. J.

  ReplyDelete
 14. Sir,
  Mami's memory power is so sharp...so you can ask mami to write your biography so that it will be very useful ( will come to know all about you and your family...who will get this oppurtunity)for us..(My special thanks to mami)

  Kothamalli

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :