September 08, 2016

பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து....

 நான் டில்லியிலிருந்த போது சுமார்  இருபது வஷங்களுக்கு மேல் தினமும் ஸ்டேட்ஸ்மென் தினசரியைத்தான் படித்து வந்தேன். அது கல்கத்தா பத்திரிகையாக இருந்தாலும், டில்லி பதிப்பில், டில்லி செய்திகள் நிறைய இடம் பெறும். அத்துடன் சுப்புடு அதில்தான் இசை விமர்சனங்களை எழுதி வந்தார். மேலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும்  MONDAY NOTEBOOK என்ற பகுதியில் பல சுவையான துணுக்குகள் தொகுப்பாக வரும்.. அதில் வந்த ஒரு தகவலை முதலில் தருகிறேன்.
" டியூக் ஆஃப் எடின்பரோ ( பிரின்ஸ் ஃபிலிப்) பற்றிய குட்டிச் செய்தி.
ஒரு  சமயம் அவர் ஒரு சேம்பர் ஆஃப்  காமர்ஸின் கூட்டத்தில் பேச சம்மதித்திருந்தார். அது ஒரு பிரபல சேம்பர்.  நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சேம்பரின் தலைவர் தன் வரவேற்புரையில் பிரின்ஸைப் பற்றிக் குறிப்பிட்டபோது பிரின்ஸின் பல திறமைகளை ’ஆஹா’ ‘ ஓஹோ’வென்று விவரித்தார். 
பிரின்ஸின் துடிப்பான நகைச்சுவை  திறமையை வானளாவப் புகழ்ந்துவிட்டு, ஒரு ஆங்கில கவிதையிலிருந்து நான்கு வரிகளைக் கூறினார் அது பிரின்ஸிற்குப் பொருத்தமான பாராட்டு வரிகளாக இருந்ததால் ஒரே கைதட்டல் கிடைத்தது. அத்துடன் தன்  உரையை முடித்துக் கொண்டார். 
அதன் பிறகு பிரின்ஸ் உரை நிகழ்த்திய போது, சேம்பர் தலைவரின் தடபுடல் பாராட்டுகளுக்கு தன் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். அத்துடன் தலைவர் கவிதையின் இரண்டாவது பத்தியைக் கூறாமல் விட்டதற்காக்க கூடுதல் நன்றியைத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ”விடுபட்ட அந்த நான்கு வரிகளை நான் சொல்கிறேன்” என்று கூறி அவற்றை தன் நினைவிலிருந்து சொன்னார்.
அந்த வரிகளில், அதற்கு முந்தைய நான்கு வரிகளுக்கு முற்றிலும் எதிரான கருத்துகள் இருந்தன. உதாரணமாக அவரை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்த வரிகளைத் தொடர்ந்து வந்த வரிகள், “இப்படியெல்லாம் பாராட்டலாம் என்றால் அவருடைய உண்மையான குணம், திறமை சாமர்த்தியம் எல்லாம் நேர் எதிர் ” என்கிற ரீதியில் இருந்தது. (இந்த கவிதை யாரோ ஒருவரைப் பற்றி யாரோ ஒரு கவிஞர் எழுதியது) சேம்பரின் கூட்டத்தில் முழுக் கவிதையையும் அவர் சொன்னதும், சிரிப்பும் கைத்தட்டலும் கூரையைப் பிளந்தன!
 ஸ்டேட்ஸ்மென் இதழில் முழு கவிதையையும் பிரசுரித்து இருந்தார்கள். இந்த துணுக்கை வெட்டி எடுத்து வைத்திருந்தேன் . துரதிஷ்டம். அது காணாமல் போய் விட்டது . தேடித்தேடி ஏமாற்றம் அடைந்தேன் .
இந்த சுவையான துணுக்கை நமது ’தாளிப்பு’வில் போடலாம் என்று எண்ணினேன். முழுக் கவிதையையும் போட்டால் தான் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி, மீண்டும் மீண்டும் தேடினேன், பலனில்லை. அதன் பிறகு ஒரு ஐடியா தோன்றியது (’பிரமாதமான’ என்ற வார்த்தையை ‘ஐடியா’வுக்குமுன் சேர்த்துக் கொள்ளுங்கள் தப்பில்லை!.)
’ஏன், எடின்பரோ கோமகனுக்கே கடிதம் எழுதி கேட்கக் கூடாது?’ என்று தோன்றியது. அவருக்கு ஈமெயில் முகவரி கிடையாது. மேலும் அவரது பிரைவேட் செகரட்ரிக்கும் தபாலில் தான் கடிதம் எழுத வேண்டும்.  ( ராணியின் வலைத் தளத்தில் இந்த விவரங்கள் இருக்கின்றன.)
 அதன் படியே கோமகனுக்கு நீண்ட கடிதம் எழுதினேன். சில நாட்கள் கழித்து அவருடைய செயலாளரிடமிருந்து எனக்குக் கடிதம் வந்தது. பிரின்ஸ் ஃபிலிப்ஸுக்கும் கவிதை மறந்து விட்டது. அவருக்கு இப்போது வயது 95!
பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வந்த கடித்தை அப்படியே கீழே தந்துள்ளேன்.
 BUCKINGHAM PALACE
13th June 2016

Dear Mr......
Thank you for your letter dated 6th May.
I am sorry to send a disappointing reply, but I am afraid this office is unable to help with your search for the poem quoted in an archived New Delhi edition of 'The Statesman'. I fear that too many years have passed now, for collective memories to assist. I wonder if there is an archivist at the offices of 'The Statesman' who could help you?
Nevertheless, I know His Royal Highness would wish me to send his best wishes. I hope you ultimately succeed in your quest to source the quote.
பி. கு.   அதன் பிறகு அவரின் யோசனைப்படி ஸ்டேட்ஸ்மென்(டில்லி) ஆசிரியருக்கு விவரமான கடிதம் எழுதினேன். இதுவரை பதில் இல்லை!

5 comments:

 1. என்ன ஒரு முயற்சி... சோம்பித் திரியாமல் புத்தகங்களைப் படிப்பதிலும், நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதுவதிலும், கடிதங்கள் எழுதுவதிலும், அவற்றை எங்களோடு பகிர்ந்துகொள்வதிலும்... பாராட்டுக்கள்.

  நீங்களே கட்டுரைகள் எழுத ஆரம்பித்துள்ளதைக் கவனித்துவிட்டோம். வாழ்த்துக்கள். இனி வண்டி ஸ்பீட் எடுக்கவேண்டியதுதான்.

  ReplyDelete
 2. 'நீங்கள் போட்டிருக்கும் நீர்யானை படம், தாய்வான் Zooவில் இருக்கிறது. அங்கு பலமுறை நான் சென்றிருக்கிறேன்.

  ReplyDelete
 3. It may be really difficult for an old article to be recovered as there were no computers at that time. Still, we got the feel of the poem and also appreciate the Prince's recollection of the full poem and not getting carried away by the accolades. It is also nice his office also showed courtesy by responding to you.

  ReplyDelete
 4. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  வணக்கம்.

  முழுக் கவிதையும் கிடைக்கவில்லையென்றாலும் கூட, அந்த சம்பவத்தின் சுவையும் சுவாரசியமும் படிப்பதற்கு அருமை.

  கோமகனின் அலுவலகத்திற்கு எத்தனை கடிதங்கள் வரும், அத்தனை கடிதங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, (விரிவான) எழுதும் அவர்களது அலுவலகத் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

  அன்புடன்

  சீதாலஷ்மி சுப்ரமணியம்

  ReplyDelete
 5. தாங்கள் எழுதிய விளம்பர வாசகங்களைப் படித்துவிட்டு இந்தப்பதிவைப் படிக்கும்போது, எனக்கு பல ஆண்டுகள் முன்பு the statesman பத்திரிக்கையின் வாரப்பத்திரிக்கையின்(junior statesman) விளம்பரம் ஞாபகம் வந்த்து. " every Saturday day eighty five paise JS"

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :