May 25, 2017

மனிதன் பறவை ஆகலாம் - பாகம் 1


 முன் குறிப்பு:
சுமார் 45 வருஷத்திற்கு முன்பு தினமணி கதிரில், நான் மொழிபெயர்த்த இந்த கட்டுரை சமீபத்தில்  ஒரு வாசக ரசிகர் கண்ணில் பட்டிருக்கிறது.  படித்துப் பார்த்திருக்கிறார்.. அவருக்குப் பிடித்திருந்தது. ‘தாளிப்பு’வில் போட சிபாரிசு செய்ததுடன், அதை தட்டச்சும் செய்து அனுப்பி விட்டார்.
அதை இரண்டு பாகங்களாகப் போடுகிறேன். உங்களுக்குப் பிடித்திருந்தால் என்னைப் பாராட்டுங்கள்; இல்லாவிட்டால் அந்த  நேயரைக் காய்ச்சுங்கள்.. அடடா. அவசரத்தில் மாற்றி எழுதி விட்டேன்!  அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்!
=============================
திடீரென்றுதான் ஸாமுக்குத் தோன்றியது, தம்மால் பறக்க முடியும் என்று. மாதா கோவிலில் வேதத்திலிருந்து சில அத்தியாயங்களைப் படித்துக் கொண்டிருந்த ஸிஸ்டர் மின்னியின் சொற்பொழிவை வேண்டாவெறுப்பாக , ஸாம், அவர் மனைவி முல்லி இருவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். "ஆழமான நம்பிக்கை மலையையும் நகர்த்தும்" என்ற வேத வாக்கியத்திற்கு அவர் அப்போது விளக்கம் தந்துகொண்டிருந்தார்.
"கோவிலில் கூடியிருக்கும் ஆயிர கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து மலையடிக்குப் போய், "மலை நகர வேண்டும்" என்று திடநம்பிக்கையுடன் விரும்பினால் போதும்; அது தானாகப் பத்தடி ஒதுங்கிப் போகும். ஆனால் மலையை நகர்த்த வேண்டிய அவசியம் இப்போது யாருக்கும் இல்லையாதலால், நம்பிக்கையால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை" என்பதை மட்டும் உணர்ந்தால் போதும்....
கடைசியாகத் தொண்டை கிழிய அந்த வேத வாக்கியத்தைப் பாடி முடித்துவிட்டுச் சபை கலைந்தது.
வெளியே பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த முல்லியும் ஸாமும் காலிபோர்னியாவின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஸாமுக்குத் தெரியும், காலிபோர்னியாவிலேயே நிரந்தரமாகத் தங்க நினைக்கிறாள் முல்லி என்பது. ஏனெனில் முல்லியாவது, அவர்களது பெண் லாவினியாவது காலிபோர்னியாவை ஒரு நாளைக்கு நாற்பது தரமாவது புகழ்வார்கள். லாவினியாவுக்கு ஹாலிவுட்டில் பெரிய சினிமா ஸ்டாராக ஜொலிக்க ஆசை. ஆக, அவர்களுக்கு இங்கிலாந்து திரும்பும் எண்ணமே கிடையாது.
பஸ் வருகிற வழியாக இல்லை. சளசளவென்று முல்லி ஏதோ பேசிக் கொண்டே இருந்தாள்- சாதாரண பெண்களின் வழக்கப்படி. ஸாம் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் தலையை ஆட்டிக் கொண்டே இருந்தார்-சாதாரண ஆண்களின் வழக்கப்படி, ஆனால் அவர் மனது மட்டும் நம்பிக்கை, மலை, நகர்தல்- இவைகளை அசை போட்டுக்கொண்டே இருந்தது. நகர்த்துவது என்பது பெரிய விஷயம். சின்னதாக ஆரம்பித்துத்தான் பெரிய விஷயங்களுக்குப் போக வேண்டும். சரி, இப்போது நம்பிக்கையால் நமக்கு வேண்டிய டவுன் பஸ்ஸை வரவழைப்போம்.
கண்களை/ மூடிக்கொண்டு ஸாம் முணுமுணுத்தார்: "எனக்கு நம்பிக்கை இருக்கிறது; நான் கண்களைத் திறக்கும்போது ஒன்பதாம் நம்பர் பஸ் வந்திருக்கும்". அவர் இதைச் சொல்லி முடிப்பதற்கு முன்னால் முல்லி அவரை உலுக்கி, "பஸ் வந்து விட்டது, அதற்குள் என்ன தூக்கம்?" என்றாள்.
ஸாம் கண்களைத் திறந்தார். என்ன ஆச்சரியம், அதே பஸ் வந்து நின்று கொண்டிருந்தது! தற்செயலாக இது நிகழ்ந்திருக்கலாம். இருந்தாலும் ஸாமுக்கு அந்த சக்தியின்மேல் பலத்த நம்பிக்கை விழுந்துவிட்டது. பஸ் அவர்கள் இறங்க வேண்டிய இடத்துக்கு வந்து நின்றது. முல்லியும் ஸாமும் வீட்டை நோக்கி நடந்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரத்திலிருந்த கடல், அலை வீசிக்கொண்டிருந்தது. அந்தக் கடலுக்கு வெகு தூரத்தில் ஹாலிவுட் நட்சத்திரங்களின் மாளிகைகள்: கடல் பறவைகள் அங்குமிங்குமாகப் பறந்து கொண்டிருந்தன.
இந்தச் சமயத்தில்தான் ஸாமுக்குத் திடீரென்று தோன்றியது, மனிதன் பறக்க முடியும் என்று!
9-ம் நம்பர் பஸ் வந்தது காக்கை பனம்பழம்" கதையாக இருக்கலாம். ஆனலும் மனிதனுக்கு தம்பிக்கை இருந்தால்?.
அன்றிரவு அவர் தூக்கம் வராமல் புரண்டார். "நம்பிக்கை இருக்கிறது, எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, என்னால் பறக்க முடியும்.... அவர் இப்படி நம்பினாரோ இல்லையோ, தாம் படுக்கையிலிருந்து இரண்டடி உயரத்தில் இருப்பதை உணர்ந்தார். மெதுவாக உடம்புக்குக் கீழே கைகளை வீசிப் பார்த்தார். தொப்பென்று படுக்கையில் விழுந்தார்; மெத்தை கிரீச்சிட்டது!
'அடாடா! நிம்மதியாகத் தூங்க விட மாட்டீர்கள் போலிருக்கிறதே?' என்று அலுத்துக்கொண்டே முல்லி புரண்டு படுத்தாள்.
அவள் நன்றாகத் தூங்கின பிறகு இன்னொரு தரம் முயற்சி செய்யலாம் என்று ஸாம் நினைத்தார். ஆனால் அதற்குள் அவரே நன்றாகத் தூங்கி விட்டார்!
பொழுது விடிந்தது. முல்லியிடம் தம் அனுபவத்தைச் சொல்லலாம் என்று எண்ணினார்; ஆனல் தைரியம் வரவில்லை. அவருக்கே சந்தேகம், தாம் பறந்தோமா? இல்லையா? என்று, இருந்தாலும், “முல்லி, நேற்று நான் பறப்பதுபோல் கனவு கண்டேன்!" என்றார் மெல்ல.
அவளோ அதைக் காதில் வாங்காமல், “லாவினியா, மேக்-அப் போட்டுக் கொள்; சினிமா டைரக்டரைப் பார்க்க வேண்டுமே இன்று' என்றாள்!
ஸாம்  தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். டைரக்டரைப் பார்ப்பதற்காகத் தாயும் மகளும் சென்றவுடன் அவர் நிதானமாகச் சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டு ஸோபாவில் அமர்ந்தார். பிறகு, நம்பத் தொடங்கினர். ஆழமாக நம்பினார், தம்மால் பறக்க முடியும் என்று! -
அந்த நம்பிக்கையின் பலனாக "காஸ் பலூன்" போல் அவர் உயர எழும்புவதை உணர்ந்தார். *மல்லாந்து பறப்பதை விட, பறவையைப்போல் கவிழ்ந்து பறக்க வேண்டும்" என்று அவருக்குத் தோன்றிற்று. மெதுவாகப் புரண்டார்.
அவ்வளவுதான்; அந்த அறையைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டார் அவர். மேலே ஏற, இறங்க, வளைய, திரும்ப எல்லாம் செய்ய முடிந்தது அவரால்・・・
உலகம் சின்னதாகச் சுருங்கி, அந்த அறையே அவருக்குப் புது மாதிரியாகக் காட்சி அளித்தது. கதவு, மேஜை, அலமாரி எல்லாமே புதுவிதமாகக் காட்சி தந்தன. பீரோவின்மேல் ஏகப்பட்ட தூசும் தும்பும் இருப்பது தெரிந்தது.
சர், சர்' என்று அவர் மேலும் கீழுமாகப் பறந்தார் தரையில் பஞ்சுபோல் இறங்கினார்: விமானத்தைப் போல தரையோடு சென்று மேலே எழும்பினார். ஒரு பீரோவின் மேல் போய் உட்கார்ந்தார். அந்தச் சமயம் பார்த்து முல்லியும் லாவினியாவும் உள்ளே நுழைந்தார்கள். 'ஸாம்மி, தென்ன கூத்து? என்று முல்லி இரைந்தாள். அந்த இரைச்சலில் தம்மால் பறக்க முடியும் என்பதை மறந்து, அவர் தொபீரென்று கீழே குதித்தார்; உடம்பில் ஊமைக் காயம்!
"ஐயோ, பைத்தியத்தையும் பண்டாரத்தையும் என் தலையில் கட்டி விட்டார்களே!" என்று பொரிந்து தள்ளினாள் முல்லி. அதிலிருந்து அவள் ஸாமை அரை வினாடிகூடத் தனியாக விடுவதில்லை!
ஒரு நாள் இரவு; முல்லி நன்றாகத் தூங்கிய பிறகு ஸாம் எழுந்தார். ஆசை தீர இரண்டு மணி நேரம் பறந்துவிட்டு வந்து படுத்துக் கொண்டார். அதன் பிறகு அவர் அதையே வழக்கமாக வைத்துக்கொண்டார்.
அதன்படி இன்னுமொரு நாள் இரவு அவர் ஹாலில் பறந்துகொண்டிருந்த போது பல வித்தைகளைச் செய்தார். நடுவே அவர் ஒரு குட்டிக்கரணம் அடித்தபோது, ஹாலில் தொங்கிக் கொண்டிருந்த ல்ஸ்தர் விளக்குகளின் மேல் மோதினார். அது அறுந்து விழுந்து, அதன்மேல் அவர் விழுந்து, உடம்பெல்லாம் கண்ணுடிச் சில்லுகள் கீறி, ஒரே காயமாகப் போய்விட்டது.
சத்தம் கேட்டு எழுந்து வந்த முல்லி, ஸாமுக்கு மருந்து போட்டுக் கட்டுக் கட்டினாள், இரண்டு மூன்று நாட்கள் அவள் வாயைத் திறக்கவே இல்லை. ஏதோ பெரிய பிரளயமாக வரப்போகிறது என்று ஸாமுவின் உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது.

ஒரு வாரம் கழித்து முல்லி வெடித்தாள், சீறினாள். 'காடு வாவா" என்னும் காலத்தில் நடுராத்திரியில் எழுந்து போய் லஸ்தர் விளக்கிலே உராங் - உடான் மாதிரி தொங்கி ஊஞ்சலாடவில்லை என்று யார் அழுதது?" என்றாள்
ஸாம் என்னவோ நல்லபடியாக இருக்கத்தான் எண்ணினார். ஆனால் கடற்காற்று வீசும்போதும், பறவைகள் வானத்தில் மிதந்து பறக்கும் போதும், விமானங்கள் சர்ரென்று விரைந்து செல்லும்போதும் பறக்கும் ஆவல் வந்து அவரைப் பாடாய்ப் படுத்தும். இருந்தாலும் முல்லிக்குப் பயந்து சிவனே! என்று இருப்பார்!. ஒரு நாள் கடலுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பாறையின் விளிம்பில் அவர் நின்றார்,
கடற்காற்று இதமாக வீசியது. ஒரு சுற்றுப் பறந்துவிட்டு வர அவர் நெஞ்சம் துடித்தது, அதற்கேற்றாற்போல் காற்று வேறு அவர் உடம்பை லேசாக வருடிவிட, அவரது ஆசை கட்டுக் கடங்காமல் போயிற்று.
கைகளை விரித்துப் பாறை முனையிலிருந்து ‘டேக் ஆப்’ கொடுக்கும் சமயம், பின் சட்டையை யாரோ பிடித்திழுப்பதை உணர்ந்தார். திரும்பினால், போலீஸ்காரர்.
என்ன சொல்லி என்ன பயன்? தற்கொலை செய்துகொள்ள முயன்ற குற்றத்துக்காகப் போலீஸ்காரர் அவரைக் கொண்டுபோய் லாக்-அப்பில் போட்டுவிட்டார். முல்லிக்குச் சேதி தெரிந்து, அவள் வந்து வாதாடி, கெஞ்சிக் கூத்தாடி விடுதலை வாங்கித் தந்தாள். அன்றிருந்து அவளுக்கு உள்ளூரப் பயம் ஏற்பட்டுவிட்டது. எந்நேரமும் ஸாமை இமை கொட்டாமல் கண்காணித்து வந்தாள். ஸாம் என்ன செய்வார் பாவம், கிடந்து திணறினார்.
லாவினியாவுக்காக வீட்டைப் பெரிய பங்களாவிற்கு மாற்றினாள் முல்லி. சினிமா உலகப் பிரமுகர்கள் வந்து போகச் செளகரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பெரிய வீட்டில் ஒரு பெரிய பார்ட்டி ஏற்பாடு செய்தாள் லாவினியா. அன்று மாலை ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி இருந்தது. ஆகவே பேச்சு அதைப் பற்றித் திரும்பியது.
"ஏன் விபத்து ஏற்பட்டது? என்பதற்குப் புது விளக்கம் தந்து கொண்டிருந்தார் ஸாம். விமானங்கள், பறவைகள் ஆகியவற்றைப் பற்றித் தமக்கு எவ்வளவு தூரம் தெரியும் என்பதை அவர்களிடம் அவர் சாங்கோபாங்கமாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அதைக் கேட்கக் கேட்க முல்லிக்கும் லாவினியாவுக்கும் கோபம்- வேண்டாத அபத்தங்களையெல்லாம் கொட்டி, வந்த விருந்தாளிகளிடம் போர் அடிக்கிறாரே என்று. அந்த போரை நிறுத்தும்படி முல்லி முணுமுணுக்க, லாவினியா பற்களை நற நறவென்று கடிக்க, ஸாமுக்குத் தாங்கவில்லை; விர்ரென்று வீட்டை விட்டு வெளியே போனார், குளுகுளு'வென்றிருந்த கடற்காற்றைக் குளுகுளுவென்று அனுபவித்தார். தொப்பியைக் கழற்றி ஓரிடத்தில் வைத்துவிட்டு இலாகவமாகப் பறக்கத் தொடங்கினார். சர். சர் என்று சுழன்று சுழன்று வந்தார், பரந்து விரிந்து கிடந்த இடத்தில் முதன் முதலாக, அதுவும் வெகுநாட்களுக்குப் பிறகு பறப்பது படு குஷியாக இருந்தது அவருக்கு,
வெகு தூரத்தில் சென்று கொண்டிருந்த கார்கள், ஏதோ புள்ளிகள் ஊர்வது மாதிரி அவருக்குக் காட்சியளித்தன. பாவம், மனிதர்கள்!" என்று மனித இனத்தின் மேலேயே அவருக்குப் பச்சாத்தாபம் ஏற்பட்டது. நன்றாக ஆசை தீரப் பறந்து விட்டுக் கீழே இறங்கினர்.
ஸாம் ஒரு நாள் உலாவப் போன போது, ஒரு நாய் வியாபாரியைச் சத்தித்தார். அவரிடம் நாய்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, அவரும் தம் ஊரைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது ஸாமுக்கு, இருவரும் நண்பர்களானார்கள். ஸாம் அடிக்கடி வந்து நாய்க்கார டிக்குக்கு வேண்டிய உதவிகள் செய்து வந்தார்.
ஒரு நாள் ஒரு பெகனீஸ் நாயைக் குளிப்பாட்டிக்கொண் டிருந்தபோது,
அந்த நாய்க்காரரிடமிருந்து அது திமிறி, வேலி வழியே புகுந்து வெளியே ஓடிவிட்டது. டிக் வாயில் வழியாக வெளியே ஒடினார், நாயைப் பிடித்து வர. ஸாமோ சட்டென்று வேலிக்கு மேல் விமானம் போல் பறந்து, வேறு பக்கம் இறங்கி, நாயைப் பிடித்துவிட்டார்: இவ்வளவு சீக்கிரம் எப்படி இந்தப் பக்கம் வந்தீர்கள்?' என்று டிக் ஆச்சரியத்துடன் கேட்டார்.

"சும்மா இப்படி ஒரு தாண்டுத் தாண்டினேன்!" என்று சொல்லிக் கொண்டே, அங்கிருந்த ஏழு அடி உயர வேலியை அனாயாசமாகத் தாண்டிப் பறந்து காட்டினார் அவர்.
டிக்குக்கு ஆச்சரியம் தாங்கவில்லை; சமீபத்தில் நடக்கலிருந்த விளையாட்டுப் போட்டியில் ஸாமையும் பங்கெடுத்துக் கொள்ளச் சொன்னார்.
அந்தப் போட்டியில் ஹை ஜம்ப், லாங் ஜம்ப், போல் வால்ட் ஆகிய மூன்றிலும் உலக ரிகார்டை முறியடித்தார் ஸாம். ஐம்பது வயதைத் தாண்டிய ஒரு கிழவர், "ஹை-ஜம்ப்"பில் அனாயாசமாக எட்டு அடி தாண்டிய செய்தி, மறுநாள் காலை வெளியான எல்லா தினசரிப் பத்திரிகைகளிலும் கொட்டை எழுத்துக்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அத்தச் செய்தியுடன் ஸாமின் படம் வேறு பெரிய அளவில் வெளியாகியிருந்தது.
அதற்கு அடுத்த நாளே ஸாமைப் பார்க்க 20, 30 பத்திரிகை நிருபர்கள் அவருடைய பங்களாவிற்கு வந்து விட்டார்கள். ஸாமுக்கு அவர்களிடமிருந்து எப்படித் தப்புவது என்று புரியவில்லை.
இந்த நிலையில் முல்லி வேறு வந்து அவர் மேல் வள், வள்' என்று விழுந்தாள் என்ன இது உண்மையைச் சொல்லுங்கள்?' என்று மிரட்டினாள்.
"ஒன்றுமில்லை முல்லி, நான் பறக்கக் கற்றுக் கொண்டு விட்டேன்!'
"என்ன!..... பறக்கக் கற்றுக் கொண்டு விட்டீரா!'
"ஆமாம் முல்லி, இதோ பாரேன்?" என்று அவளுக்கு முன்னால் நாலைந்து தரம் பறந்து காட்டிவிட்டு, "எல்லாவற்றிற்கும் நம்பிக்கைதான் காரணம்: எப்படியாவது இந்த நிருபர்களை இங்கிருந்து அனுப்பிவிடு. எனக்கு ஹை ஜம்போ, லாங் ஜம்போ தெரியாது; சும்மா பறப்பேன்; அவ்வளவு தான்!" என்று சொல்லி, இவர்களை உடனே இங்கிருந்து அனுப்பிவிடு' என்று கெஞ்சினர் அவர்.
*சரி, சரி' என்று முணுமுணுத்துக் கொண்டே முல்லி வரவேற்பறையில் காத்துக் கொண்டிருந்த நிருபர்களிடம் வந்தாள். "ஸாம் யாரையும் பார்க்க மாட்டார்.  நீங்கள் போகலாம்!" என்று கூறி, எல்லோரையும் துரத்தி விட்டாள்.

"அப்பாடா!' என்று பெருமூச்சு விட்ட ஸாம், சிறிது தூரம் காலாற நடந்துவிட்டு வரலாமென்று கிளம்பினார். சற்றுத் தூரத்தில் மரத்தடியில் நின்று கொண்டிருந்த ஓர் இளைஞன் அவரிடம் வந்து, 'ஹி..ஹி. நான் ஒரு ரிப்போர்டர் பெயர் ஜிம்... உங்களைப் பார்க்காமல் போனால் என்னை வேலையை விட்டு நீக்கி விடுவார்கள். அதனால்தான். ' என்று குழைந்தான். *சரி சரி, என்ன வேண்டுமோ, கேள்”
" எப்படி உங்களால் இந்தப் புதிய ரிகார்டை இந்த வயதில் ஏற்படுத்த முடிந்தது?"
ரிகார்டாவது. மண்ணாவது. அதெல்லாம் ஒண்ணுமில்லை, எனக்குப் பறக்கத் தெரியும்...”
"என்னது........ பறக்கத்...... தெரியுமா?.....?’ பரபரப்புடன் ஜிம் கேட்டான்.
"ஆமாம்.'
"எதைச் சொல்கிறீர்கள் நீங்கள்? ஏரோப்ளேனில் பறப்பதைப் பற்றிச் சொல்கிறீர்களா?"
இல்லை. நானே சொந்தமாகப் பறப்பேன் என்று சொல்கிறேன்!"
ஜிம்முக்கு ஒன்றும் புரியவில்லை. ஸாமின் பின்னால் பேசாமல் நடந்து சென்றான். கடைசியில் தயங்கித் தயங்கி, 'வந்து.... உங்களுக்கு ஆட்சேபணை இல்லாவிட்டால்... அதாவது செளகரியமிருந்தால்..... ஒரே ஒரு ரவுண்ட் பறந்து காட்ட முடியுமா?" என்று கேட்டான்.
'.கே."
ஸாம் அருகிலிருந்த ஒரு பாறையின் ஒரத்தில் நின்று "டேக் ஆஃப் கொடுத்தார்: இளைஞனைச் சுற்றி நாலைந்து முறை வட்டம் அடித்து விட்டுத் தரையில் இறங்கினர்.
*ரொம்ப தாங்க்ஸ்... ரொம்ப தாங்க்ஸ்...!'
அடுத்த கணம் சிட்டாய்ப் பறந்தான் ஜிம்,
பாவம், சின்ன பையன்!" என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டே வீடு திரும்பினார் ஸாம். அவருக்குப் பின்னலேயே ஜிம் வந்து நின்று, “போச்சு, என் வேலையே போச்சு!" என்றான் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க.
'ஏன், நான்தான் உனக்கு ஸ்பெஷல் பேட்டி கொடுத்தேனே!"
'அதனால் வந்த வினைதான்! நான் போய் ஆசிரியரிடம் விஷயத்தைச் சொன்னேன். குடித்துவிட்டு ஏதோ உளறுவதாக எண்ணி, அவர் என்னே வேலையிலிருந்து நீக்கி விட்டார்!"
ஸாம் வருத்தத்துடன் தலையை ஆட்டினார்.  ( தொடரும்)


3 comments:

  1. ரொம்ப ரொம்ப லேசாக இந்தக் கதையைப் படித்த நினைவு வருது. என்றாலும் அடுத்தது என்ன என்பது நினைவில் இல்லை. ஆகவே ஆவலுடன் காத்திருக்கேன்.

    ReplyDelete
  2. செம இன்டெரெஸ்டிங் கதை. பாதியிலேயே தொடரும்னு போட்டுட்டீங்களே. இந்தப் பறக்கும் திறமை ஸாமை எதிலோ கொண்டு மாட்டப்போகிறதுன்னு தோணுது. இல்லை, மாட்டிக்கொண்டு, நம்பிக்கையின்மூலம் தப்பிவிடுகிறாரா? ரொம்ப இன்டெரெஸ்டிங் ப்ளாட்.

    சொன்னாச் சிரிப்பா இருக்கும். எனக்கும் 'பறக்கணும்னு' ரொம்ப ஆசை. அதுமட்டுமல்ல, நிறைய தடவை கனவும் கண்டிருக்கிறேன். நிறைய தடவை என்னால் பறக்க முடியும் என்ற நம்பிக்கையும் உண்டு (இப்போதும்). சொன்னால் சிரிப்பாத்தான் இருக்கும். 7வது படித்துக்கொண்டிருக்கும்போது (தாளவாடி என்ற ஊர், சந்தன வீரப்பன் ராஜ்குமாரைக் கடத்திய இடத்திலிருந்து 1 கி.மி), தாளவாடிக்கும், தொட்ட காஜனூர் (ராஜ்குமார்-கன்னட நடிகர் பிறந்த இடம், அங்கு அவரது ஏகப்பட்ட ஏக்கர் பண்ணைவீடும் உண்டு) இடையே இருக்கின்ற காட்டாற்றின் மேல் உள்ள பாலத்திலிருந்து, உள்பகுதியில் நின்றுகொண்டு, பறப்பதுபோல் கையை ஆட்டி முயற்சிக்கலாமா (கீழே மணல் உண்டு) என்று நினைக்கும்போது, பாலத்தில் வந்துகொண்டிருந்த எனக்குத் தெரிந்தவரைப் பார்த்து, பயந்து முயற்சியைக் கைவிட்டேன். அப்போது, இரண்டு கைகளிலும் சுளகை (முறம்) கட்டிக்கொண்டு கையை ஆட்டினால் பறக்கமுடியும் என்று தீவிரமாக நம்பினேன்.

    சீக்கிரம் இரண்டாம் பகுதியை வெளியிடுங்கள்.

    ReplyDelete
  3. நன்றி. அடுத்த பகுதியை 3,4 நாளுக்குள் போடுகிறேன்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!