March 03, 2016

ரஜனிஹாசனும் ராசம்மாவும்

பாரதிராஜா பார்த்திருந்தால் கொத்திக் கொண்டிருப்பார்.  
பாக்யராஜ் சபலப்பட்டிருப்பார். பாலசந்தரும் கிறங்கியிருப்பார். மணிரத்னம் மயங்கியிருப்பார்.
 அவ்வளவு அழகான, சினிமாவுக்கு ஏற்ற முகவெட்டு உடைய
கிராமம் அது!
ஊருக்கு நடுவே இருக்கும் தெருவில், மங்களூர் ஓடு போட்ட சின்ன வீட்டு வாசலில், நன்றாக மெழுகப்பட்ட மண் தரையில் உட்கார்ந்து கொண்டு அரிசி நோம்பிக் கொண்டிருக்கிறார் ஒரு வயதான மூதாட்டி.
அன்புள்ள வாசகர்களே, மூதாட்டி என்று அலட்சியமாகக் கவனிக்காமல் இருந்துவிடாதீர்கள்.
இந்தப் பெண்மணி  ராசம்மா தான்  நமது ஹீரோயின்!

ஏழு அபஸ்வரங்களையும் கலந்து அவள் பாடிக் கொண்டே அரிசியில் கல்லைப்பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவள் பாட்டை சினிமா இசை அமைப்பாளர் கேட்டிருந்தால், இத்தனை நாள் ஏதாவது ஒரு திரைப் படத்தில் போட்டிருப்பார்.
ராசம்மாவுக்கு அறுபது வயதிருக்கும். நடுத்தரக் குடும்பப் பாங்கு அவளுடைய நூல் புடவையிலும் கழுத்தில் உள்ள காப்பிக் கொட்டைச் சங்கிலியிலும், காது கம்மலிலும், நெற்றியில் உள்ள கம்பீரமான பொட்டிலும் வெளிப்படுகிறது.
பாட்டுப் பாடிக் கொண்டிருந்தாலும் கல்லைப் பொறுக்கிக் கொண்டிருந்தாலும் அவள் பார்வை மட்டும் அவ்வப்போது தெருக்கோடிக்கே போய்க் கொண்டிருந்தது.
“என்ன ராசம்மா... இன்னும் தபால்காரன் வரலியா?” என்று வீட்டினுள்ளிருந்து ஒரு குரல் வந்தது.
“அதுதானே குந்திக்கினு பார்த்துக்கிட்டு இருக்கேன். புதன்கிழமைன்னா நம்ம குமார் லெட்டர் வருமே... அதோ தெருக் கோடியிலே தபால்காரர் சைக்கிள் தெரியுது...”
அடுத்த இரண்டு நிமிடத்துக்குள் தபால்காரர் ராசம்மாவிடம் ஒரு கவரைக் கொடுத்து விட்டுப் போய்விட்டார்.
“ஒன்னைத்தானே... லெட்டர் வந்திருக்கு. வந்து படியுங்க. கவரிலே என்னமோ பொம்மையெல்லாம் அச்சடிச்சிருக்குது.”
வயதானதால் ஏறியிருந்த உடல் மினுமினுப்புடனும், நரைத்த மீசையுடனும் இருந்த கிழவர் வெளியே வந்து,  மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டு கவரை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார்.
“நம்ப குமார் எளுதின லெட்டர் இல்லே, ராசம்மா... ஏதோ ‘சினிமா ஜோதி‘ங்கிற பத்திரிகைக்காரங்க எழுதியிருக்காங்க... அட... உன் பேருக்குத் தான் எழுதியிருக்காங்க... இன்னாது... இன்னா... மெட்ராஸக்குப் போய் வரப் பணம் தர்றாங்களாம்...”
“எதுக்கு?”
“சினிமாவிலே ஆக்ட் கொடுக்கலை, ரஜனிஹாசன்னு ஒருத்தரு... அவரைப் பார்த்துப் பேசற அதிர்ஷ்டப் பரிசு உனக்கு அடிச்சிருக்காம். அவரோட உட்கார்ந்து சாப்பாடு கூடச் சாப்பிடலாம்...”
“இது என்ன கூத்து? யாரு அந்த ஆக்டரு... நான் சினிமாவைப் பார்த்தனா? நாடகத்தைப் பார்த்தனா? அரிதாரம் பூசறவங்களை நான் ஏன் போய்ப் பார்க்கணுமாம்? இது இன்னா வேடிக்கை?” என்று கேட்டாள் ராசம்மா.
ஃப்ளாஷ் பேக்!
“இது என்னய்யா வேடிக்கை” என்று கேட்டார் ஆசிரியர்.
“வேடிக்கையாகத் தான் இருக்கப் போவுது... ராசம்மா, இரும்புலியூர் கிராமம்னு பேர் வந்திருக்குது... பாரேன், ரஜினிஹாசனைப் பேட்டி காண ஒரு கிழவி வந்து நிக்கப் போவுது... முதல்லேயே சொன்னே இது நல்ல ஐடியா இல்லேன்னு... பத்திரிகையிலே கூப்பனைப் போடறதாம்... அதில் பேர் எழுதி வாசகர்களை அனுப்பச் சொல்றதாம். ரஜினிஹாசன் ஏதாவது ஒண்ணை எடுப்பாராம். அந்த வாசகர் ரஜினிஹாசனைப் பேட்டி காண்பாராம். அதைப் படம் எடுத்துப் பத்திரிகையில் போடறதாம். சரியான பேத்தல்.”
“ஹாசன் கொடுத்த ஐடியாதான்  இது. டாப் ஹீரோவை வெச்சு ஏதாவது பண்ணணும்னு நீங்க தானே சொன்னீங்க.”
சினிமா ஜோதி ஆசிரியர், “ஹும் போவட்டும். அதுவரைக்கும் ஒரு பொம்பளை பேர் வந்ததே. சந்தோஷம்... ஏன்யா... யாராவது காலேஜ் ஸ்டூடண்ட்டைப் பிடிச்சுப் போட்டு, குலுக்கல்லே இவங்க பேர்தான் வந்ததுன்னு சொல்லிப் பேட்டியைப் பண்ணச் சொல்லிடலாமே...”
“முடியாது ஸார். ரஜினிஹாசனுக்கு இந்தத் தில்லு முல்லு எல்லாம் பிடிக்காது. அவரோட ராஜ பார்வையைக் கோபப் பார்வையா மாத்திப்புடுவாரு.”
“சரி... சரி... அந்த ராசம்மாவுக்கு லெட்டர் அனுப்பு. ஆவறது ஆவட்டும்...
                            *                               *
அன்புள்ள பாட்டிக்கும் தாத்தாவுக்கும் குமார் எழுதிக் கொண்டது. நீங்கள் அனுப்பிய ரூபாய் வந்து சேர்ந்தது. ஹாஸ்டல் பணம் கட்டிவிட்டேன். நீங்கள் நலம்தானே?
‘சினிமா ஜோதி’ என்ற பத்திரிகையில் ஒரு பேட்டி வந்திருந்தது. தமாஷுக்காகப் பாட்டியின் பெயரில் அந்தப் பேட்டிக் கூப்பனை அனுப்பி வைத்திருந்தேன். இந்த வார இதழில் அதிருஷ்டசாலியாக உன் பெயர் வந்திருப்பதாகப் போட்டிருக்கிறார்கள். சினிமா நடிகர் ரஜினிஹாசனை நீ சந்திக்கவும், அவரைப் பேட்டி காணவும் போட்டோ எடுத்துக் கொள்ளவும் உனக்கு நல்ல சான்ஸ்... இதற்கு நீ மறுக்கக் கூடாது... ஏனென்றால் உன்னோடு அவரைப் பார்த்துப் பேச எனக்கும் சான்ஸ் கிடைக்கும். ரஜினிஹாசன் உலகிலேயே பெரிய ஆக்டர். என் உயிருக்கு உயிரான நடிகர். அவருக்காக உயிரையும் விடத் தயார்... பாட்டி ப்ளீஸ்... தயவு செய்து... சரி என்று சொல்லு... இப்படிக்கு, குமார்.”
*     *    *            *
முதலில் உதவிஆசிரியர் ‘சினிமா தும்பி‘க்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ராசம்மாவைப் பார்த்ததும், ’அடப் பாவமே, ஒரு கிழவியையா ரஜினிஹாசனைச் சந்திக்க அழைத்துச் செல்ல வேண்டும்? இந்தக் கிழவி என்ன கேள்வி கேட்கப் போகிறாள், என்ன சுவையாக இருக்கப் போகிறது! இலக்கிய மலர் சுத்த பேத்தலாகத்தான் அமையும்’ என்று  எண்ணினார்.
ராசம்மாவைக் காரில் ஏற்றிக் கொண்டு ஸ்டூடியோவுக்குப் புறப்பட்டார். கூட ஒரு போட்டோகிராபர். பேரன் குமாரும் பாட்டியுடன் வந்தான்.
கோடம்பாக்கம் ரோடில் போய்க் கொண்டிருக்கும் போது பாட்டி, “ஏண்டாப்பா... உன் பேர் இன்னா சொன்னே? சினிமா தும்பியா? சினிமாத் தம்பியா...? இந்தப் பக்கம் தானே வடபழனி கோயில் இருக்கு... போய்ச் சாமி கும்பிட்டுப் போவலாம்...” என்றாள்.
“இல்லேங்க.. ரஜினிஹாசனுக்கு டைம் சொல்லியிருக்கோம்... அதனாலே...”
“தும்பி, நீ சொல்றது,நல்லாயிருக்குதுப்பா . போனால் போவுதுன்னு அவரைப் பார்க்க நான் வரேன். நான் பார்க்காத நாடகமா, கூத்தா! அந்தக் காலத்திலே நானே சந்திரமதியா வேஷம் கட்டியிருக்கேன்... கோவிலுக்குப் போவலாம் முதலில்” என்று கண்டிப்புடன் சொல்லவே, தும்பியால் மறுக்க முடியவில்லை.
கோவிலில் சூடம் கொளுத்திவிட்டுப் புறப்பட அரை மணி ஆயிற்று.

“இன்னாப்பா பெரிய ஆக்டரைப் பார்க்கப் போறோம்னு சொன்னியே... அல்லாம் தகரக் கொட்டகையா இருக்குது? பங்களா கிங்களா மாதிரி இல்லே...”
“பாட்டி இதுதான் ஸ்டூடியோ... இங்கே தான் படம் எடுக்கிறாங்க. ரஜினிஹாசனின் வீடு இது இல்லே.”
“படம் எடுக்க இம்மாம் எடம் எதுக்கு? நம்ப ஊர்த் திருவிழாவிலே மரத்தடியிலே கறுப்புத் துணி போர்த்திக்கிட்டு எடுத்துக் கொடுப்பான். இந்த மெட்ராஸ்காரங்களுக்கு ஒண்ணும் தெரியலை!” என்றாள் பாட்டி.
ஷூட்டிங் ஃப்ளோருக்குள் பாட்டியையும் குமாரையும் அழைத்துச் சென்றார் தும்பி. உள்ளே ஷூட்டிங் நடந்து கொண்டிருந்ததால், கதவுக்கு வெளியே நிற்கச் சொன்னார்கள்.
“வேலை மெனக் கெட்டு நான் வந்திருக்கேன். வெளியே நிக்கச் சொல்றாங்களே. அரிசியைப் புழுக்கணும். கேவுரு அரைக்கணும், புளியை ஆயணும். அல்லா வேலையையும் விட்டுப் போட்டு, கிழவனையும் தனியா வுட்டுப்பிட்டு நான் வந்திருக்கேன். போப்பா குமார். உனக்காக வந்தேன்.”
“இல்லை பாட்டி... உள்ளே போட்டோ பிடிக்கறாங்க.”
“போட்டோ பிடிச்சா இன்னா? நாலு பேர் பார்த்தாக் கெட்டா போயிடும்? போடா எனக்குக் கதை சொல்றே. நான் பார்க்காத போட்டாவா?”
இதற்குள் ஷூட்டிங் முடிந்துவிடவே, பாட்டியை உள்ளே அழைத்துக் கொண்டு போனார் தும்பி.
உடனே அடுத்த ஷூட்டிங் ஆரம்பித்து விடவே, எல்லாரும் ‘சைலன்ஸ்... சைலேன், சைலே என்று பலவித ஸ்தாயிகளில் கத்த, விளக்குகள் எல்லாம் உயிர் பெற்றன.மின்விசிறிகள் நின்றன.
ரஜினிஹாசன் ஒரு காபரே பெண்ணுடன் மேடையில் ஆடுவதைப் படம் பிடித்தார்கள்.
“என்னப்பா, தும்பி... பெரிய ஆளுங்களா இருக்காங்க... அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் உடம்பை மூடற டிரஸ்ஸாகக் கொடுக்கக் கூடாதா? ... ஏம்மா கொழந்தை இப்படி ஆடறயே நல்லா இருக்கா...” என்று கேட்டுவிட்டாள்.
“யாரு இந்தக் கெயவி...? கண்டவங்களை உள்ளே உட்டுடறாங்க...”
“என்னைய்யா கெயவின்னு சொன்னே? நான் நாலு படி அவல் இடிப்பேன். நீ இடிப்பியா? கண்டவங்கள்னா சொன்னே?... யாருப்பா சினிமா தும்பி... சொல்லு... என்னையும் போட்டோ பிடிக்கத்தான் இட்டாந்திருக்குதுன்ன சொல்லு... போம்மா கொழந்தை, போய் உடம்பை மூடிக்கோ” என்றாள்.
தும்பி ஒரு மாதிரியாக விஷயத்தை விளக்கி ‘காபரே‘யை அனுப்பி வைத்தார்.
இதற்குள் அங்கு வந்த ரஜினிஹாசன் “ஹல்லோ... தும்பி... இவங்கதான் ராசம்மாவா... வாங்க அம்மா... வணக்கம்மா... இவ்வளவு தூரம் என்னைப் பார்க்க வந்ததுக்கு மகிழ்ச்சி” என்றார்.
“நன்னா யிருடாப்பா... பதினாறும் பெத்து நல்லா இருக்கணும்... நீ தான் ஆக்டரா... நானும் வேஷம் கட்டியிருக்கேன்.”
“அப்படியா?”
“என்ன இழுத்த மாதிரி கேக்கறே? ராவிக்கெல்லாம் வேஷம் கட்டிப் பாட்டுப் பாடி கூத்துப் போட்டிருக்கேன். .. ஆமாம்... அந்தப் பொண்ணுதான் வெக்கமில்லாமல் உன் மேலே விழுதுன்னா,நீ கூடவா அப்பிடிக் கட்டிப் பிடிக்கணும். உன்னைப் பார்த்தா பெரிய வூட்டுப் புள்ள மாதிரி இருக்குது...”

தும்பி கையைப் பிசைந்து கொண்டார். ரஜினிஹாசன் ஒரு டைப். திடீர் என்று முரண்டுக் குணம் வந்துவிடும். நல்ல காலம் அப்போது வரவில்லை. குமாருக்கு ஒரே குஷி. பெரிய ஹீரோவுக்கு அரை அடி தூரத்திலே நின்று கொண்டிருக்கிறானே!
ஹீரோவோ பாட்டியுடன் பேசிக் கொண்டிருப்பதில் உற்சாகம் காட்டினார்.
“இல்லை பாட்டி... இதெல்லாம் சும்மா நடிப்பு... ஆமாம், நீங்க என் படம் எதெது பார்த்து இருக்கீங்க?”
“உன் படத்தைக் கண்டேனா, உன்னைக் கண்டேனா? இந்தத் தம்பி இட்டாந்துடுத்து. ஆமாம்... உன் கலியாணம் ஆயிடுச்சா?...”
“ஆயிடுச்சு பாட்டி...  ஏன் கேக்கறீங்க?”
“அது இருக்குதே, அது ஒண்ணும் சொல்லாதா, உன்னை? பாவம், நல்ல பொண்ணாக இருக்கும்.”
“பாட்டீ... இதெல்லாம் சும்மா பொழைப்புக்காக ஆடற ஆட்டம்...”
“ஆமாம், உன் பேர் இன்னா? மறந்துட்டேன்... ரஜினிஹாசா... உனக்கு எத்தினி பசங்க?...”
“இப்பத்தான் கல்யாணம் ஆச்சு.”
“குளைந்தங்க இருக்கா?”
“ இல்லே..இப்பதான் இரண்டு மாசம்..இன்னும் ஏழு மாசம் இருக்கு.”

இந்தச் செய்தி தும்பிக்கே நியூஸ். இலக்கிய மலரில் வருவதற்குள் வேறு ஏதாவது பத்திரிகையில் வந்துவிடப் போகிறதே என்று யோசித்துக் கொண்டே சுற்று முற்றும் பார்த்தார். அவர் பயந்தபடி ஒரு சினிமா நிருபர் இருந்தார்.
“இந்தாப்பா, பூபாலன்... நீ இந்த நியூஸை ஃப்ளாஷ் பண்ணிடாதே...” என்றார்.
பாட்டியோ சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.
“ஆமாம், இப்படி வேஷம் கட்டி ஆடறியே, இன்னா சம்பளம் கொடுப்பாங்க? எத்தனை மரக்கால் நெல்லு கொடுப்பாங்க?” என்று கேட்டாள். குமார், “பாட்டீ...” என்று ஆரம்பித்ததும், “தம்பி குமார், நீங்க பாட்டியைச் சும்மா விட்டுடுங்க... அவங்க கேட்கிறபடி கேட்கட்டும்” என்றார் தும்பி.
அப்போது டைரக்டர், “ஹாஸ்.. வர்றியாப்பா  ஷாட் ரெடி” என்றார்.
“நீ யாருப்பா வெள்ளைத் தொப்பி... அவரைக் கூப்பிடறே?..”
“பாட்டி, அவர் டைரக்டரு. அவர் சொல்றபடிதான் நாங்க நடிக்கணும்...” என்றார் ரஜினிஹாசன்.
“அப்படியா சமாசாரம்... அப்பா, வெள்ளைத் தொப்பி... இப்படியெல்லாமா பொம்பளையோட கூத்தாடச் சொல்றது, ஒனக்குப் பொண்டாட்டி, பிள்ளை கிடையாதா? ” என்று கேட்டாள்.
டைரக்டர் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் காரியத்தில் முழுகிவிட்டார்.
“பாட்டி... ரெண்டு நிமிஷம்... வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு ரஜினிஹாசன் ஷாட்டுக்குப் போய்விட்டார்.
காமிரா முன் அவர் நிற்க, டேப்பிலிருந்து “கண்ணில் விளையாடும் கன்னியே... என் கனியே... என் கனவே...” என்று பாட்டு வர ஹீரோ உதட்டசைக்க, அந்த வரி படமாக்கப்பட்டது.
“இன்னா வந்துட்டே?... அவ்வளவுதானா? மூச்சு வாங்கிடுத்தா? விடிய விடிய மூச்சு விடாம அந்தக் காலத்திலே பொன்னுசாமி பாடுவாரு... இந்தக் காலத்திலே ஒரு வரி பாட்டுப் பாடறத்துக்குள்ளாற ’தம்’ பூடுது... போவட்டும். உன் சம்பளம் இன்னான்னு சொல்லலையே?”
போட்டோகிராபர், “பாட்டி, கொஞ்சம் இப்படித் திரும்பிப் பாருங்க... படம் எடுத்துடறேன்.” என்றார்.
“எடேன்.. சொல்லியிருந்தா கிழவரைஅழைச்சாந்திருப்பேன் இல்லே!.. சரி, குமாரு, இங்கேவா.. இது என் எர்ப் புள்ளை.  ஆமாம், இந்த புள்ளயை உன் கூடச் சேத்துக்கோயேன். ஒன்னை மதிரி அதுவும் பொழைச்சுகிட்டு போவுது”  என்றாள் பாட்டி.
பாட்டியின் பேச்சைக் கேட்டு ரஜினிஹாசன் சிரிக்கவில்லை.  :
‘செய்துட்டா போச்சு, பாட்டி. அவனையும் இப்படி ஆடச் சொல்வாங்களே, பரவாயில்லயா?
” சும்மவா  ஆடப்போறான்?.. சம்பளம் கொடுப்பாங்க இல்லை?”
டைரக்டர்  “ பிரேக்”: என்று சொல்ல இரண்டு, மூன்று பேர் அதை எதிரொலித்தனர்.
 “ இன்னாப்பா சொல்றங்க. தும்பி?”
“ சாப்பாட்டுக்கு பாவறதுக்கு டயமாஆயிடுச்சு. வாங்க பாட்டி வாங்க. அவரோட் சாப்படுட உங்களுக்கு..: என்று சொல்லியபடி காரில் அழைத்துக் கொண்டார் தும்பி.. குமாருக்குத் தலைகால் புரியவில்ல. அவனது அபிமான ஹீரோவுடன் காரில் போவதே அவனுக்குக் கனவு போல் இருந்தது.
ஒருஐந்து நடத்திர ஓட்டலுக்க்குப் போய் நின்றது.


"குமாரு.. இன்னா தும்பி.. அரண்மனை மாதிரி கீது.?”.. :  “இல்லை பாட்டி..இதுதான் ஓட்டல்” என்றார் ரஜினி ஹாசன். அவருக்கு பாட்டியின் மேல்  பரிவும் பிரியமும் ஏற்பட்டது.
*   *    *
 ‘ இது இன்னாப்பா தட்டு தட்டாக் கொண்டாந்து வெக்கறங்க. . வடை பாயசம் இன்னு.. கடிசிக்க ஒரு மொளகாவை காணோம்..  நானு வெறும் கேவுறு கூழு  தான் சாபிடுவேன். கண்டதை துன்னா வவுருக்கு  ஆவாது. சரி, இது என்னாப்பா கத்தி எல்ல்லாம் வெக்கிறங்க.அலல்லாம் வெள்ளி போல கீது.” : பாட்டி.. ரவை நேரம் சும்ம இரு: என்று பாட்டியின் காதில் குமாரு கிசுகிசுத்தான்..

பாட்டி அதன்பின் பேசாமல் சாப்பிட்டாள்.  அப்போது டைரக்டர் வந்தார். அவர் ரஜினிஹாசனிடம்  “ஒன் மினிட் .. வர்றறீங்களா”
என்றார்.
 “யெஸ்: என்று சொல்லியபடியே டைரக்டர் சென்றார். வெளியே லௌஞ்சில் உட்கார்ந்தார்கள்.:
               *                      *                   *
 “ ரஜினிஹாஸ்.. அந்த டீச்சரம்மாவோவோட சீனை எடிட் பண்ணிப்போட்டு  பார்த்தேன்பா... என்னமோ கையை ஆட்டறது. தலயை ஆட்டறது.. ஒண்ணும் சுகமில்லை.  கிராமத்துப் பாட்டி மாதிரி இமேஜ் இல்லை.. நடிப்பில் ஜீவனே இல்லை. ...”

‘அப்படித்தான் நெனச்சேன் ... இப்ப என்ன செய்யலாம்னனு நினக்கிறே?
அந்த கேரச்டரை மாத்திடலாம்னு நினைக்கிறேன். இந்தப் பாட்டி பேசற விதம் முகத்திலே இருக்கற  கம்பீரம் எல்லாம் என்னை இம்ப்ரஸ் பண்ணிட்டுது . ரெண்டு நாள் ஷூட் பண்ணால் போதும்.”
 “படம்  பொங்கலுக்கு ரிலீஸ் ஆவணுமே?”
“ ஆயிடும். வேலை ஒண்ணும் பாக்கியில்லை. இது சின்ன பேட்ச் வேலைதான்”
: ஓ. கே. ஜமாய்.  எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை. நான் இரண்டு நாள் கால் ஷீட் தரேன்”  என்றார் ரஜினிஹாசன்.
               *                                              *                            *
 “இன்னாப்பா இது. அநியாமா கீது.  படம் ஒரு தலை ராகம்,, முந்தானைமுடிச்சி, அல்லாத்தையும் தூக்கிச் சாப்பிட்டுச்சி, ஒரு பாட்டியை வெச்சுகிட்டு கபால் வேலை பண்ணி இருக்காங்க. .. அந்த கெய்வி,  ரஜனிஹாஸனை இன்ன கேலி கேட்குது.. டபாய்க்குது. தூக்கிசாப்பிடறது.. அல்லாரையும் வெளுத்து பிச்சு உதறி கட்டி இருக்குது.”
“ ஆனா , கிழவி இவ்வாளவு பூந்து விளையாடும்னு அவங்களே நெனைச்சுக்கூட பார்த்திருக்கமாட்டாங்க! :
“தமாசுக்குத் தமாசு.. அதே சமயம் கடைசி சீன்லே ரஜினிஹாஸனை கட்டிக்கிட்டு நாலு டயலாக் பேசுதே ... நானே அழுதிட்டேன்.:
“ பாரேன்..இன்மேல் நீ, நான்  என்று பாட்டியைப் பிடிச்சுப் போட்டுடுவாங்க அல்லா புரொட்யூஸருங்களும்..:
“ஆறு படம் புக் ஆயிருக்காம்பா!”
"டைரக்டர்  சந்திரபாலன் கில்லாடிப்பா.”
“இந்த வாரம் எல்லா  சினிமா பத்திரிகைங்களும் அட்டைபடத்திலே ராசம்மா பாட்டிதான்!”
“நடுவுலே கூத்துப் பாட்டு வேறே பாடி கலாய்ச்சிருக்குப்பா!”
 *                              *                   *
சினிமா ஜோதியின் இலக்கிய மலர் பற்றி,  அந்த பத்திரிகையில் வந்த இரண்டு பக்க விளம்பரம்:
காதல் பாடல்களில் கவர்ச்சி!
இரட்டை வசனங்கள் எழுதுவதில் யார் சிறந்தவர் - வாசகர் போட்டி
பாட்டியர் திலகம் ராசம்மா பாட்டி - சிறப்புப் பேட்டி
பேட்டி காண்பவர்: ரஜினிஹாசன்
 இன்னும் பல!
 -------------------------------------
குறிப்பு: 
அடுத்த பதிவு: கடவுள் கை கொடுத்த கணங்கள் -2

6 comments:

  1. அருமையான தொகுப்பு
    பயனுள்ள பதிவு

    ReplyDelete
  2. கலக்கல் பஞ்ச்.
    நேரம் அமையும் போது வரவும்

    https://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/1-3-2-1.html

    ReplyDelete
  3. அருமையான பதிப்பு .கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் உங்கள் நகைச்சுவை பிரமாதம் .தங்கள் கற்பனை திறனை எப்படிபாரடினாலும் தகும். அருமையான ரஜனி ஹாசன்.உங்களுக்கு வாழ்த்துகள்.
    கே.ராகவன்
    பெங்களுரு

    ReplyDelete
  4. திரு ராகவன் அவர்களுக்கு, மிக்க நன்றி.
    சோர்ந்திருந்தேன். பெனிசிலின் போட்டீர்கள்!
    -கடுகு

    ReplyDelete
  5. திரு ராகவன் அவர்களுக்கு, மிக்க நன்றி.
    சோர்ந்திருந்தேன். பெனிசிலின் போட்டீர்கள்!
    -கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!