March 30, 2016

சென்ட்ரல் ரயில் நிலையத்தில்

கடவுள் கை கொடுத்த கணங்கள்!

ஒரு சமயம் புனேவில் பணிபுரிந்து கொண்டிருந்த என் சகோதரன் லீவில் சென்னைக்கு வந்திருந்தான். புனேக்குத் திரும்பிப் போக 3-டியர் டிக்கெட்டை வாங்கி ரிசர்வ் செய்யும்படி அவனுடைய நண்பனிடம் சொல்லியிருந்தான். அவனும் வாங்கி வைத்திருந்து என் சகோதரனிடம் கொடுத்தான்.
  குறிப்பிட்ட தினம் பெட்டி படுக்கையுடன் என் சகோதரனும் அவனை வழியனுப்ப நானும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஒரு மணி முன்னதாக காலை 10 மணி வாக்கில் சென்றோம்  சென்றோம்..
            அவனுடைய டிக்கெட்டில் G-பெட்டியில் 17வது பர்த்’ என்கிற மாதிரி எழுதப்பட்டு இருந்தது. (இது 50 வருஷத்திற்கு முந்திய கதை).
            புனா ரயில் பிளாட்ஃபாரத்துக்கு வந்து நின்றது. அதில், G-பெட்டியைத் தேடிப்போய் வெளியே ஒட்டப்பட்டிருந்த பட்டியலைப் பார்த்தோம். ஷாக். அதில் என் சகோதரனின் பெயர் இல்லை.
            பிளாட்ஃபாரத்த்தில் இருந்த ஒரு டி.டி.ஆரிடம் டிக்கெட்டைக் காட்டி, விஷயத்தைச் சொன்னோம்.
            அவர் டிக்கெட்டைப் பார்த்து “ என்ன சார்...இது இன்னிக்குக் காலைல புறப்பட்டுப்போன 7 மணி வண்டிக்கு ரிசர்வ் பண்ணியிருக்கிறது... அதைக் கோட்டை விட்டு விட்டீர்களே...” என்றார். அது மெயில்..இது எக்ஸ்பிரஸ் என்ற ரீதியில் ஏதோ சொன்னார். அது எங்கள் காதில் விழவில்லை.
            “சார்...பர்த் ஏதாவது கிடைக்குமா?” என்று கேட்டோம்.
Image result for no vacancy sign
            “இல்லை சார்...எல்லாம் FULL என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.என் தம்பியிடம், “நீ இங்கேயே பெட்டி படுக்கையுடன் இரு. நான் புக்கிங் ஆபீசில் போய்க் கேட்டுவிட்டு வருகிறேன்.” என்று சொல்லி ஓடினேன். ஒரு ரயில் பெட்டியில் R.M.S என்று போர்டு போட்டிருந்தது. நான் G.P.O -வில் பணியாற்றிக்கொண்டிருந்ததால் அதைச் சொல்லி R.M.S.காரரைக் கேட்கலாம் என்ற நம்பிக்கையில் அங்கே போனேன். 

இரண்டு, மூன்று பேர் தபால் பைகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் கேட்கத் தயக்கமாக இருந்தது. “சரி... புக்கிங் கவுண்டருக்குப் போய்க் கேட்டுவிட்டு வரலாம்” என்று மேலே நகர்ந்தேன்.
            இரண்டு பெட்டிகள் கடந்திருப்பேன். ஒரு டி.டி.ஆரும் வேறு ஒருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்த ரயில் பெட்டியில் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. டி.டி.ஆரிடம் மற்றவர் சொல்லிக் கொண்டிருந்தார். “இந்த நோட்டீசை எடுத்துடுங்க...எங்களுக்கு இந்த CUBICLE தேவையில்லை.” என்றார்.
            அந்த நோட்டீசில் என்ன அச்சடித்திருந்தது தெரியுமா? “RESERVED FOR R.M.S.” என்று.
            சர்ரென்று என்று என் உடலில் மின்சாரம் பாய்ந்தது. அந்தப் பெட்டியைப் பார்த்தேன். நாலே நாலு பர்த் பெட்டி. ஆர்.எம்.எஸ். ஊழியர்கள் ஓய்வெடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட குட்டிக் கம்பார்ட்மென்ட். ஆஹா..ஒரு UNRESERVED பெட்டி...!
            ஒரு நிமிஷம் எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. உடனே டி.டி.ஆருடன் பேசிக்கொண்டிருந்த R.M.S. அதிகாரியிடம் என்னை அறிமுகப்படுத்திக்  கொண்டேன்.
            “எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டேன்.
            “என்னால் முடியக்கூடியதாக இருந்தால் செய்கிறேன். என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
            என் தம்பி டிக்கெட்டில் ஏற்பட்ட குழப்பத்தைச் சொன்னேன்,
“.இந்த CUBICLE-ஐ நீங்கள் UNRESERVED ஆக்கச் சொன்னது காதில் விழுந்தது. என் தம்பி அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது. ரிசர்வேஷனில் டிக்கெட் வாங்கிய நண்பர் தவறு செய்துவிட்டார்.”
            “அடடா... எனக்கு ஒரு பிரச்னையுமில்லை. நீங்கள் உங்கள் பிரதரை இங்கு ஒரு பர்த்தில் உட்காரச் சொல்லுங்கள்....நம்ம சார்தான் புனாவிற்கு போகிறார். அவர் இந்தப் பெட்டியில்தான் ஓய்வெடுக்க வருவார். ஒரு பர்த் அவருடையது.” என்றார்.
            டி.டி.ஆரைப் பார்த்தேன். “சார்” என்று ஆரம்பித்தேன். அவர் “நாம் எல்லோரும் – ரயில்வே, போஸ்டல் டிபார்ட்மென்ட் ஒரே குடும்பம். உங்கள் தம்பியை வரச்சொல்லுங்கள்.” என்றார்.
            என் தம்பியை பெட்டி படுக்கையுடன் அழைத்து வந்து ரயில் ஏற்றினேன்.
            புனா போய் சேர்ந்ததும் கடிதம் போட்டான்.
” மிகவும் சௌகரியமா வந்து சேர்ந்தேன். கடவுள் அருளால் கடைசி நிமிஷத்தில் ஒரு ‘பர்த்’ கிடைத்து”  என்று எழுதி இருந்தான்!,


முக்கிய குறிப்பு:இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா.  அவருக்கு என் நன்றி!

4 comments:

 1. அந்தக் கடவுள் அண்ணா மூலமாக உதவி செய்தார்னு அவருக்குத் தெரியுமா கடுகு ஜி. மிக நல்ல சமயோஜிதம்.

  ReplyDelete
 2. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  வணக்கம்.

  ’தெய்வம் மனுஷ்ய ரூபேண’ என்று சொல்வார்கள்.

  கடவுள் கை கொடுக்கும் கணங்களை நீங்கள் சொல்லும்போது, ஒரு கணமேனும் கண் மூடி, கடவுளுக்கு நன்றி சொல்லத் தோன்றுகிறது.

  நன்றி, வணக்கம்.

  அன்புடன்

  சீதாலஷ்மி சுப்ரமணியம்

  ReplyDelete
 3. கடவுள் கைகொடுத்த இத் தருணம் நிச்சயம் மறக்கமுடியாததுதான். ஆனால் மனித யத்தனம் இல்லாமல் நடக்கும்போதுதான் இதை இன்னும் உணரமுடியும். சம்பந்தமே இல்லாத மனிதர்கள் அச் சமயத்தில் உதவும்போது "தெய்வம் மனுஷ ரூபேண" என்பது விளங்கும். இதில், உங்கள் முயற்சியும், பத்திரிகைக்கார ரத்தமான, காதை எப்போதும் கூர்மையாக வைத்துக்கொள்ளும் இயல்பும் மேலோங்கித் தெரிகிறது.

  ReplyDelete
 4. வித்தியாசமான
  அனுபவம்தான்...!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :