April 07, 2016

உயரங்களைத் தொடட்டும் உங்கள் பார்வை

முதலில் சில வார்த்தைகள்.
சமீப ஆண்டுகளில் பொன்மொழிப் புத்தகங்களாகவே படித்து வருகிறேன். அவற்றில் என்னைக் கவர்ந்த பொன்மொழிகளையும் சிலவற்றின் பின்னணியையும் நிறைய நோட்டுப் புத்தகங்களில் எழுதி வருகிறேன். எத்தனை நோட்டுப் புத்தகங்கள் என்ற கணக்கெல்லாம் கூறி ஜம்பமடித்துக் கொள்ளப்போவதில்லை.
 ஒவ்வொரு பொன்மொழியைப் படிக்கும்போதும் ஏராளமான சிந்தனை அலைகளை அது எழுப்பி விடுகிறது. யோசிக்கச் செய்கிறது. ‘பொன்மொழியும் என் மொழியும்’ என்கிற மாதிரி தலைப்பில், சில பொன்மொழிகளைத் தேர்ந்தெடுத்து அவை தொடர்பான சில கருத்துகளை, வாழ்க்கை அனுபவங்களை, வேறு புத்தகங்களில் படித்த தகவல்களை எழுத வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
  சமீபத்தில் WORDS TO LIVE BY என்ற பழைய புத்தகம் - 1959ல் பிரசுரிக்கப்பட்டது – எனக்குக் கிடைத்தது. WILLIAM NICHOLS என்பவர் தொகுத்தது. 99 பிரபலங்கள் எழுதிய, ஒரு பக்கம், ஒன்றரை பக்கக் கட்டுரைகள். அவர்களுக்குப் பிடித்தப் பொன்மொழிகளைத் தேர்ந்தெடுத்து அதை ஒட்டி சில கருத்துகளை எழுதியுள்ளார்கள்.
  அதில் ROGER BANNISTER எழுதிய ஒரு கட்டுரையைத் தமிழ்ப்படுத்தித் தருகிறேன். யார் இந்த ரோஜர்?
உலக சாதனை படைத்தவர். இருந்தாலும் பலர் இவரைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள்; அல்லது மறந்து போயிருப்பார்கள்.


  ஓட்டப்பந்தயத்தில் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடத்திற்குள் ஓடி சாதனை படைத்தவர் ரோஜர். லண்டன்வாசி. இவர் மருத்துவ மாணவராக இருந்தபோது 1954’ம் ஆண்டு இந்த சாதனையைச் செய்தார். சமீபத்தில் அவரது பெயர் பத்திரிகைகளில் இடம் பெற்றது. அது ஒரு சுவையான தகவல். அதைக் கடைசியில் தருகிறேன். முதலில் ரோஜருக்குப் பிடித்த பொன்மொழிக் கட்டுரையைத் தருகிறேன்.


உங்கள் பார்வைகளை உயர்த்துங்கள்
பொன்மொழி: ஒரு விஷயத்தை நன்கு புரிந்துகொள்ளுங்கள். வெற்றியை அடைய ஒவ்வொரு செயலிலும் – அது எப்படிப்பட்டதாக இருப்பினும் – மேலும் புதிதாக முயற்சி புரிய வேண்டிய அவசியம் தோன்றுகிறது. – வால்ட் விட்மென்
சமீபத்தில் லண்டனில் ஒயிட் சிடி ஸ்டேடியத்தில் (முப்பதாயிரம் பார்வையாளர்கள் முன்), நான் பார்த்தேன் – உலகின் மிகச்சிறந்த நான்கு ஓட்டப்பந்தய வீரர்கள! அன்றைய நிகழ்ச்சியை ஒளிபரப்பும் ஒரு டி.வி. நிறுவனம் என்னை வர்ணனையாளராகப் பணித்திருந்தது, அங்கு நடைபெறும் விறுவிறுப்பான காட்சிகளை விவரிக்க வந்திருந்தேன். இந்தத் தடவை அந்த மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான காட்சிகள் சாதாரண விளையாட்டுப் பந்தயங்களை யெல்லாம் தாண்டிச் சென்றது.
  ஒரு மைல் தூரத்தை குறைந்த நேரத்தில் ஓடுவது ஒரு நாடக நிகழ்ச்சி போன்றது. மற்ற பந்தயங்களைப்போல் அல்லாமல், இதில் நேரம், இடம் தவிர தீவிர செயல்பாடு ஆகியவைகளின் கலவை உள்ளது . அடிப்படை செயல்பாடு உடலைச் சார்ந்தது என்றாலும் உண்மையில் வீரர்களின் personality-களின் போட்டி என்று கூறலாம்.
 பார்வையாளர்களில் சிலர் ஒரு வீரரின் பக்கம் ஆதரவாக இருப்பார்கள்.
வெவ்வேறு சிலர் வேறொரு வீரரின் பக்கம் இருப்பார்கள். இப்படி ஒவ்வொருவரும் வெவ்வேறு வீரரின் ரசிகராக இருப்பார்கள். இந்தப் பந்தய வீரர்களுக்கு வில்லனாக அமைவது weather-ம் ஓடுதளம் தரும் ஒத்துழைப்பின் அளவும்தான்.
  அன்றைய தினம் காற்று அதிகமாக வீசவில்லை; வானிலையும் பிரமாதமாக இருந்தது. ஓடுபாதையும் நன்றாக இருந்தது.
 அன்றைய பந்தயக் கதாநாயகர்கள்: Ron Delany (ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றவர்), Stanislav Jungwirth (1500 மீட்டர் ஓட்டப்பந்தய சூரர்; மற்றும் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடத்தில் ஓடிய Derek Ibbotson மற்றும் KENWOOD (இருவரும் பிரிட்டிஷ் பிரஜைகள்)
Ibbotson பிரமாதமாக ஓடினார். சற்றும் அப்பழுக்கற்ற ஓட்டம். முடிவை நெருங்கும் சமயத்தில் அவரது ஓட்டத்தின் திறமையால் கவரப்பட்ட மற்ற மூவரையும் தன்னுடன் நாலு நிமிடத்திற்குள் ஒரு மைல் தூரத்தை ஓச் செய்து அவர்களியும் சாதனை புரிய வைத்து விட்டார். இப்படி நாலு பேர் ஒரே பந்தயத்தில் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடியது பெரிய சாதனை. ஓட்டப்பந்தய சரித்திரத்தில் இந்த நான்கு பேர்தான் முதன் முதலில் செய்தவர்கள் !
   Walter George என்பவர் 1886-ல் முழங்கால் வரை நீண்ட அரை நிஜார் அணிந்துகொண்டு ஒரு மைல் தூரத்தை ஓடிய சாதனை படைத்தார். அவரது அலைபாயும் மீசையை எதிர்காற்று  பறக்கவிட்ட போதும், ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடம் பன்னிரண்டே முக்கால் வினாடிகளில் ஓடினார். அடுத்த 37 வருடங்கள் இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. 1923-ம் ஆண்டு Paavo Nurmi என்பவர் இரண்டு வினாடி வித்தியாசத்தில் சாதனை படைத்தார்.
  அதற்குப் பிறகு 31 ஆண்டுகள் கழித்து ஒரு பந்தயத்தில் நான்கு நிமிஷத்திற்கு குறைவான நேரத்தில் ஓடிய சாதனை நிகழ்ந்தது. அதைச் செய்த அதிர்ஷ்டசாலி நான்! அடுத்த மூன்று ஆண்டுகளில் என்னுடைய சாதனை 23 தடவை 16 வீரர்களால் எளிதாக முறியடிக்கப்பட்டது. இதற்குக் காரணம் என்ன?
  சமீப காலங்களில் கிடைக்கும் மேம்பட்ட பயிற்சி முறைகள் என்று கூறிவிட முடியாது. புதிய பயிற்சி முறையில் Sprint, Jog, Walk, Sprint என்று மாறி மாறி ஓடும் முறையால் சிறந்த பலன் கிடைத்துள்ளதை மறுக்க முடியாது. நாலு நிமிஷம் என்பது நமக்கு நாமே வைத்துக்கொண்ட கால அளவு. எந்த அடிப்படையிலும் அது நிர்ணயிக்கப்படவில்லை. பார்வையாளர்களுக்கும் பந்தய வீரர்களுக்கும் இந்த நான்கு நிமிஷ இலக்கு சும்மா மனதளவில் வைக்கப்பட்ட இலக்கு. நம் உடலால் இந்த இலக்கைப் பிடிக்க முடியுமா என்று யாரும் யோசிக்கவில்லை. அது வரை.அவர்கள் தேவையான அளவு உயரமாகத் தங்கள் பார்வையைச் செலுத்தவில்லை. இப்போது நான்கு நிமிஷ மாயம் தன் வசீகரத்தை இழந்துவிட்டது,
  அடுத்து என்ன சாதனையைப் படைப்பார்கள் என்பதை ஊகிக்க முடியாது. ஆனால் அன்று லண்டனில் நிகழ்ந்த சாதனை, நம்மாலும் செய்ய முடியுமா என்ற மனக்குழப்பத்தால் பிரமையடைந்து தளர்ந்துவிடக்கூடாது. அதிக உயரங்களைத் தொட நம் பார்வையை எப்போது வேண்டுமானாலும் உயர்த்திவிடலாம்.


சரி, திடீரென்று ரோஜர் பேனிஸ்டரைப் பற்றி எழுதத் தூண்டியது எது? இரண்டு செய்திகள்: டாக்டர் ரோஜர் 

(1975--ல் ‘சர்’ பட்டம் பெற்றவர்) சமீபத்தில் காலமானார்.
அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு அவரது ஒரு ஜோடி ‘ஷூ’க்களை (சாதனை படைத்த ஓட்டத்தின்போது அவர் போட்டுக்  கொண்டிருந்தவை) லண்டனின் பிரபல ஏலக் கம்பெனியான கிரிஸ்டி ஏலத்தில் விட்டது.
ஏலம் துவங்கிய மூன்று நிமிஷத்திற்குள் ஒருவர் ஆன்-லைனில் அதை வாங்கிவிட்டார். எவ்வளவு தொகைக்கு?
2 லட்சத்து 66 ஆயிரத்து 500 பவுண்டுகளுக்கு!
இந்தத் தொகையைத் தொண்டு நிறுவனங்களுக்கு அவர் கொடுக்கக்கூடும் என்று அப்போது கூறப்பட்டது.
முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா.  அவருக்கு என் நன்றி!


குறிப்பு

அடுத்த பதிவு: கடவுள் கை கொடுத்த கணங்கள்  

3 comments:

  1. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    ஒரு கால கட்டத்தில் சாதனை என்று கருதப் படும் விஷயம் அல்லது அளவு கோல், தொடர்ந்து வருபவர்களால் எளிதாக கடந்து விட முடிகிறது.

    ஆனாலும் முதலில் சாதித்த முன்னோடிகள் என்றும் மறக்க முடியாதவர்கள்தான்.

    சுவாரசியமான பதிவுக்கு நன்றி.

    சகோதரி ஷோபனாவுக்கும் எங்கள் நன்றி.

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  2. Some player had said that 'Records are meant to be beaten / bettered' - that's the life's challenge. And they become roll models. Nice to read the article.

    ReplyDelete
  3. கட்டுரை அருமை. இந்தப் புத்தகத்தை 5 ஆண்டுகளுக்கு முன்பே படித்திருந்தால் எத்தனை கட்டுரைகள் நீங்கள் கொடுத்திருக்கலாம்..

    முதலில் அடையமுடியாது என்று நினைக்கும் milestoneஐ அடைவது பெரிய சாதனையாகக் கருதப்படும். இது, 10 வினாடிகளுக்குள் 100 மீட்டர் ஓடுவதாகட்டும், 10000 ரன்'களை கிரிக்கெட்டில் கடப்பதாகட்டும். இதுதான் மிக உயர்ந்தது என்று ஒரு சாதனையும் கிடையாது. எல்லாம் உடைக்கப்படக்கூடியவைகளே. ஒரு காலத்தில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் 8 வினாடிகளுக்குள் முடிக்கப்படலாம். சமீபத்தில் ஒருவர் 1000 ரன்'களை ஒரு இன்னிங்க்ஸில் எடுத்த மாதிரி.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!