April 24, 2016

ஒரு ஹோட்டலின் கதை

முன் குறிப்பு: நான் டில்லியில் இருந்தபோது வாரத்தில் இரண்டு நாள் அமெரிக்கன் லைப்ரரிக்குப் போய் வருவேன். அங்கு பல புத்தகங்களையும், செய்தித்தாள்களையும் படிப்பேன். ரேடியோ காமெடி ஷோ முதலியவற்றின் விமர்சனங்கள், கதைக் குறிப்புகள் மட்டுமன்றி பல காமெடியன்களின் வாழ்க்கை வரலாறு, நடித்த படங்களின் கதைச் சுருக்கம் ஆகியவற்றையும் படிப்பேன். அதனால் அமெரிக்க நகரங்கள் - முக்கியமாக நியூயார்க் நகரைப் பற்றிய பல தகவல்கள் எனக்குத் தெரிந்தன.
 நியூயார்க் நகரத்தின் Fifth Avenue மிகப் பிரபலமான கடை வீதி.    (அந்த வீதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் காலாற நடந்து போவேன் என்று நான் கனவு கூடக் கண்டதில்லை.) 

WALDORF ASTORIA  என்ற  ஹோட்டல் அந்த பகுதியில்தான் இருக்கிறது.  பல காமெடியன்களின் ஆதர்ச ஹோட்டலாக இருந்தது. அதில் நிகழ்ச்சி நடத்துவதைப் பெரிய கௌரவமாகக் கருதினார்கள். அவர்களுடைய நிகழ்ச்சி நடக்கும் தினங்களில், ஹோட்டல் முகப்பில் மின்சார பல்புகளால் அவர்களின் பெயரைப் பளிச்சிட்டு இருப்பார்கள். காமெடியன்கள் தங்கள் பெயரைப் பார்த்துக் குதித்திருக்கிறார்கள்; மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மறக்காமல் தங்களது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
          சமீபத்தில், நியூயார்க் நகரில் உள்ள மேடம் டஸ்ஸாட் மெழுகுச்சிலை கண்காட்சிக்குப் போனேன். அப்போது என் பெண் “இங்கிருந்து வெகு அருகில்தான் Waldorf Astoria என்ற பிரம்மாண்டமான ஹோட்டல் இருக்கிறது. ரொம்பப் பழைய காலத்து ஹோட்டல். போய்ப் பார்த்துவிட்டு வரலாமா?” என்று கேட்டாள். “வெளியே இருந்துதான் பார்க்க முடியும். பரவாயில்லை. Waldorf Astoria பற்றி நிறையப் படித்திருக்கிறேன். டஸ்ஸாட் மியூசியத்தைப் பார்த்துவிட்டு, வீட்டுக்குப் போகும்போது அந்த ஹோட்டலைப் பார்த்துக் கொள்ளலாம்” என்று சொன்னேன்.
அப்போது Waldorf Astoria வைப் பற்றிய ஒரு அபாரமான சுவையான வரலாறை  படித்தது நினைவுக்கு வந்தது. அதை இங்கு தருகிறேன்.     
                        *                              *                     
பல வருடங்களுக்கு முன்பு  மழையும் காற்றும் ஊரையே புரட்டிப் போட்டுக்கொண்டிருந்த ஓர் இரவில், ஃபிலடெல்பியாவில் ஒரு வயதான தம்பதி, இரவு தங்குவதற்காக ஒரு சிறிய ஹோட்டலுக்குள் நுழைந்தனர். “இந்தப் பகுதியிலுள்ள எல்லா பெரிய ஹோட்டல்களிலும் இடம் கிடைக்கவில்லை. உங்கள் ஹோட்டலில் ரூம் கிடைக்குமா?” என்று கேட்டனர்.
  ஹோட்டல் பணியாள் “இங்கு மூன்று கம்பெனிகளின் கருத்தரங்கம், வருடாந்திரக் கூட்டம் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு ரூமும் காலியில்லை.... இருந்தாலும் வயது முதிர்ந்த உங்களைத் திருப்பி அனுப்ப, அதுவும் இந்தப் புயல் காற்று வீசும் இரவில், எனக்கு மனது வரவில்லை. ஒரு சின்ன வழி இருக்கிறது. சொல்லத் தயக்கமாக இருக்கிறது.”
    “தயக்கம் என்ன... எங்களுக்கு இடம் வேண்டும்...”
“இல்லை...எல்லா அறையும் ‘புக்’ ஆகியிருக்கிறது. இங்கு எனக்கு ஒரு அறை உள்ளது. அது நான் வசிக்கும் அறை. வேண்டுமானால் அந்த அறையை சுமாராக சரி பண்ணித் தருகிறேன் - அதில் தங்குவதற்கு உங்களுக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை என்றால்...” என்றான் அந்த இளைஞன். “என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். இன்று முழு இரவும் எனக்கு டியூட்டி” என்றான்,

அதெல்லாம் சரிப்பட்டு வராது” என்று முதியவர் சொன்னார். ஆனால் விடாப்பிடியாக அவர்களைத் தன் அறையில் தங்க வைத்துவிட்டான் அந்த இளைஞன்.
 மறுநாள் காலை, அறை வாடகையைச் செலுத்த வந்தார் முதியவர். அந்த இளைஞனிடம் “உன்னைப் போன்ற இளைஞன்தான் அமெரிக்காவின் மிகச் சிறந்த ஹோட்டலுக்கு மேனேஜராக இருக்க வேண்டும். என்றாவது ஒரு நாள் உனக்காக ஒரு பெரிய ஹோட்டலை நான் கட்டுவேன்.” என்றார்.
  அந்த இளைஞன் மெல்லிய புன்னகை புரிந்தான். மூவரும் ‘கல கல’ வென்று சிரித்து கை குலுக்கிக் கொண்டார்கள். அவர்களின் பெட்டி, பையைத் தூக்கிக்கொண்டு வாயில்வரை கொண்டு வந்து வழி அனுப்பினான்.
        அதற்குப்பின், இரண்டு வருடங்கள் கழிந்தன. அந்த இளைஞன் இந்த விஷயத்தை முற்றிலுமாக மறந்து போயிருந்தான். அந்த சமயம் அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த முதியவர் பழைய சம்பவத்தை நினைவுபடுத்தி எழுதியதுடன், அவன் நியூயார்க் வந்து போக விமான டிக்கெட் ஒன்றையும் இணைத்து, “நீங்கள் ஒரு தடவை என் வீட்டிற்கு வர வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் அன்புடன் அழைத்திருந்தார்,. சில நாட்கள் கழித்து அவனும் நியூயார்க் வந்து அந்த முதியவரைச் சந்தித்தான். அவனிடம் “தம்பி...கொஞ்சம் வெளியே போய்விட்டு வரலாம்” என்று கூறி, அவனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு நியூயார்க்கின் Fifth Avenue-வும் 34-வது வீதியும் சந்திக்கும் பகுதிக்குச் சென்றார். அங்கு பிரம்மாண்டமான ஒரு கல் கட்டடம் எழும்பிக் கொண்டிருந்தது. சிவப்புக்கல் அரண்மனையோ என்கிற மாதிரி காட்சி அளித்தது. நெடு நெடுவென்ற உயரமும்,  அதன் கம்பீரமும் அவனை அசத்தியது.
“தம்பி...இது ஒரு ஹோட்டல். இதை நீ நிர்வகிப்பதற்காக நான் கட்டியிருக்கிறேன்.” என்றார்.
 “சார்... நீங்கள் தமாஷ் பண்ணுகிறீர்கள் என்று நினைக்கிறேன்” என்றான் அவன், அவர் கூறியதை நம்ப முடியாமல் !
George C Boldt
 “இல்லை...நான் விளையாடவில்லை. நிஜமாகத்தான் சொல்கிறேன்” என்றார் அவர்.
   அந்த முதியவரின் பெயர் William Waldorf Astor. அந்த ஹோட்டல்தான் Waldorf Astoria. இது நடந்த ஆண்டு 1893.
  அந்த இளைஞன், George C Boldt.
கட்டடம் கட்டி முடிந்ததும் அவன் மானேஜர் வேலையில் சேர்ந்தான். அவன் தான் அந்த ஹோட்டலின் முதல் மேனேஜர். அடுத்த 23 வருடங்களுக்கு அந்த ஹோட்டலின் மேனேஜராக இருந்த Boldt, ஒரு ஹோட்டலைச் சிறப்பாக நிர்வகிப்பது எப்படி என்று அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஒரு வழிகாட்டி எனப் பெயர் பெற்றார்.
                           *                            *                       
இந்த விவரங்களைப் படித்திருந்த நான், அந்த ஹோட்டலை  வெறுமனே வெளியிலிருந்தாவது பார்த்து விட்டு வரவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் மேடம்  டஸ்ஸாட் நான்கு மாடி மியூசியத்தைப் பார்த்த களைப்பாலும், அங்கு ‘ஐன்ஸ்டீனின்’ தோளில் கையைப் போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்ட மகிழ்ச்சியாலும் அஸ்டோரியா ஹோட்டலைப் பார்க்க மறந்து போய் விட்டது!
          பின் குறிப்பு: இந்த சம்பவம் உண்மையானதுதான். ஆனால் சில சின்ன சின்ன ‘நகாசு’ தகவல்களுக்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை என்று  snopes.com என்ற தளம் தெரிவிக்கிறது.
முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது:
சகோதரி திருமதி எஸ். ஷோபனா.  அவருக்கு என் நன்றி!


அடுத்த பதிவு: கடவுள் கை கொடுத்த கணங்கள்!

5 comments:

 1. சுவாரஸ்யமான தகவல்கள்! நன்றி!

  ReplyDelete
 2. புல்லரிக்கவைக்கும் பதிவு. இதைப்போன்றதுதான் இன்னொரு யூனிவர்சிடி ஆரம்பித்தவிதமும்.

  ReplyDelete
 3. ஆச்சரியப்பட வைத்தன தகவல்கள்!
  இணைப்புப் படங்களும் கூடுதல் சுவாரஸ்யம் தந்தன!!

  ReplyDelete
 4. கதை அருமையாக இருந்தது.நல்ல நடை.

  ReplyDelete
 5. அருமையான தகவல். பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!