April 15, 2016

கல்யாண மண்டபம்!

கடவுள் கை கொடுத்த கணங்கள்

  சில வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம். என் பெண்ணின் திருமணம் நிச்சயம் ஆயிற்று. டில்லியிலேயே கல்யாணத்தை நடத்தத் திட்டமிட்டோம். தேதி பிப்ரவரி 5. கல்யாணம் உறுதியான தேதி ஜனவரி 1. ஒரு மாதத்தில் எல்லா ஏற்பாடும் செய்துவிடலாம் என்று எண்ணினோம். துணி மணி, பூமாலைகள், வாழை மரங்கள், சமையல் கான்ட்ராக்டர், திருமண வாத்தியார்கள் எல்லாம் ஏற்பாடு பண்ணிவிட்டோம். கூடவே கல்யாண மண்டப வேட்டையையும் ஆரம்பித்தோம். அங்குதான் எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

  கல்யாண மண்டபங்கள் ஏழு, எட்டு மாதங்களுக்கு முன்பே ‘புக்’ பண்ண வேண்டுமாம். தினமும் ஐந்தாறு மணி நேரம், மண்டபம் மண்டபமாக அலைந்தோம். டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன்   (M C D) மற்றும் டில்லி நகராட்சி (N D M C) பல  கல்யாண மண்டபங்களை (Barat Ghar) கட்டி வாடகைக்குத் தருகின்றன. அவை வசதியானவை; வாடகையும் குறைவானவை. பட்டியல் போட்டுக் கொண்டு எங்கள் வீட்டிலிருந்து அதிக தூரத்தில் இல்லாத மண்டபங்களைத் தேர்ந்தெடுத்து போய் விசாரிக்க ஆரம்பித்தோம்;, எங்கு போனாலும் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
            நாங்கள் குடியிருந்த காலனியில் இருக்கும் குட்டி மைதானத்தில் ஷாமியானா போட்டுக் கல்யாணத்தை நடத்தலாம் என்று நினைத்தோம். சென்னையிலிருந்து வரும் உறவினர்கள் பிப்ரவரி மாதம் ஷாமியானாவில் குளிரை எப்படித் தாங்குவார்கள்? அதுவும் வயதில் மூத்தவர்கள்?
எங்களைக் கவலை பிடித்துக் கொண்டது. 

டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் உதவி கமிஷனர் (IAS ஆபீசர்) என் பெண்ணிற்குத் தெரிந்தவர். அவருடைய அலுவலகம் எங்கள் பகுதியிலேயே இருந்தது. அவருக்கு என் பெண் போன் செய்தாள். “உங்க அப்பாவை வந்து பார்க்கச் சொல்” என்றார்.
            போய்ப் பார்த்தேன். விஷயத்தைச் சொன்னேன். பி.ஏ.விடம் விசாரிக்கச் சொன்னார். NDMC செகரட்ரி (IAS ஆபீசர்) அவருடைய நண்பர். அவருக்குப் போன் பண்ணிக் கேட்டார். எல்லா மண்டபங்களும் ‘புக்’ ஆகி இருந்தன. “தனியார் மண்டபம் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். கவலைப்படாதீர்கள். நான் எப்படியாவது ஒரு இடத்தை ஒரு வாரத்திற்குள் செட்டில் பண்ணி விடுகிறேன்” என்றார்.
            லேசாக மன நிம்மதி ஏற்பட்டதே தவிர மண்டப வேட்டையை விடவில்லை.
            மூன்று நாள் கழித்து உதவி கமிஷனரின் பி.ஏ. போன் செய்து எங்களை வரச்சொன்னார்.  உதவி கமிஷனரைப்  போய் பார்த்தோம்.
            “கல்யாண மண்டபம் எதுவும் இன்னும் கிட்டவில்லை. நீங்கள் லோதி காலனியில் கன்னா மார்க்கெட்டில் இருக்கும் ‘பராத் கர்’ மண்டபத்தைப் பார்த்திருக்கிறீர்களா?..போய்ப் பார்த்துவிட்டு வந்து, பிடிக்கிறதா என்று சொல்லுங்கள்.” என்றார்.
            நேரே அந்தக் கல்யாண மண்டபத்திற்கு விரைந்தோம். நன்றாகத்தான் இருந்தது. அங்கிருந்த சௌக்கிதார் “எத்தனாம் தேதி கல்யாணம்?” என்று கேட்டார்.
            “பிப்ரவரி 5-ஆம் தேதி “ என்றேன்.

   “பிப்ரவரி மாதம் என்றால் நீங்கள் போன செப்டெம்பரில் வந்திருக்க வேண்டும். பாருங்கள், பிப்ரவரியில் எல்லா நாளும் புக் ஆகி விட்டன.” என்றார்.
            ஏமாற்றம் ஏற்பட்டாலும் மண்டபத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, நேரே உதவி கமிஷனரிடம் போனோம்.
            “போய்ப் பார்த்தோம்..நன்றாக இருக்கிறது. ஆனால் பிப்ரவரி 5-ஆம் தேதி காலி இல்லை என்று சௌக்கிதார் சொல்கிறார்.” என்றேன்.
            “அவருக்குத் தெரியாது. பிப்ரவரி 5-ஆம் தேதி மண்டபத்தை புக் செய்தவர் இப்போது அரை மணி நேரத்திற்கு முன்புதான் ‘கேன்ஸல்’ செய்திருக்கிறார். ‘கேன்ஸல்’ ஆன தகவலை வெளியே சொல்லக் கூடாது’ என்று  N D M C செகரட்டரி, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட்டு விட்டு, எனக்கு போன் செய்திருக்கிறார். உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதால், உடனே போய் புக் செய்து விடுங்கள். இன்று நேரமாகி விட்டது. நாளைக்குக் காலை சரியாக ஒன்பதரை மணிக்குப் போய் NDMC செக்ரட்டரியின் பி.ஏ.வைப் பாருங்கள். அவருக்கு நான் போன் பண்ணிச் சொல்லிவிடுகிறேன். அவர் புக்கிங் செய்து கொடுத்து விடுவார். பணத்தை எடுத்துக் கொண்டு போகவும்.” என்றார்.
            “நிச்சயமாகக் கிடைக்கும் இல்லையா?” என்று கேட்டேன்.
           
“நீங்கள் ‘வேண்டாம்’ என்று சொன்னால்தான் வேறு ஒருவருக்கு ’அல்லாட்’ செய்வார். கவலைப்படாதீர்கள். ‘ஜாம் ஜாம்’ என்று கல்யாணத்தை நடத்துங்கள்.” என்றார்.
 மறுநாள் காலை 9 மணிக்கே NDMC அலுவலகத்திற்குச் சென்று குறிப்பிட்ட ஆபீசரைப் பார்த்து, ‘பராத் கர்’ விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து,, பணத்தைச் செலுத்தி, மண்டபம் ஒதுக்கப்பட்ட கடிதத்தை வாங்கிக் கொண்டு.... நிம்மதியாக மூச்சு விட்டோம். அதன் பிறகுதான் இறைவனுக்கு நன்றி சொன்னோம்.

கல்யாணத்தையும்  ஜாம் ஜாம்’ என்று அவர் நடத்திக் கொடுத்தார்! .

A quotation: Some people believe things happen by coincidence, others believe  that God chooses to be anonymous! 

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது:
 சகோதரி திருமதி எஸ். ஷோபனா.  அவருக்கு என் நன்றி!

7 comments:

  1. There is a sense of deja-vu! Have you posted this one earlier?

    ReplyDelete
  2. ஞாபகம் இல்லை.
    என்னைப் பொறுத்தவரை எல்லாமே எனக்கு முன்னமேயே தெரிந்த விஷயங்கள்தான்!!:)

    ReplyDelete
  3. சிறந்த படைப்பு
    பயன்மிக்க பதிவு

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    ’வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார்’ என்று சொல்வார்கள்.

    கல்யாண மண்டபம் கிடைத்தது அதிர்ஷ்டம் என்றால், அதை நல்ல முறையில் கிடைக்க வைத்த நண்பர்கள் அமைந்தது கடவுள் அருள்தான்.

    வணக்கம்

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  5. Very Nice .To get Kalyana Mandapam is very difficult in any place in India.You are lucky and done the marriage very well. To get good friends you should have real luck.Nice Kalyanam.
    K.Ragavan.

    ReplyDelete
  6. கடவுள் உங்களுக்கு எப்போதும் துணையிருக்கிறார்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!