May 04, 2016

டில்லி நார்த் அவென்யூவில்

என் வாழ்க்கையில் நடந்த சம்பவம். (1964ல் நடந்தது.) டில்லியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வீட்டில் குடியிருந்தோம். குடி என்றால் தனியாக இல்லை. எம்.பி யின்  நார்த் அவென்யூவில் இருந்த அபார்ட்மெண்டில் இருந்தோம்.    எம். பி. நிரம்பப் படித்தவர். டாக்டர் பட்டம் பெற்றவர். மொழிகளில் ஆர்வம் உடையவர். என்னை விட மூத்தவர். பெண்மணி. திருமணம் ஆகாதவர். (பின்னால் அவர் ராஜாங்க மந்திரியும் ஆனார்.) எம்.பி.  ஒரு அறையைத்    தனக்கு என்று வைத்துக் கொண்டு வீடு முழுவதையும் எங்களுக்குக் கொடுத்து விட்டார். ஒரு குடும்பமாக இருந்தோம் என்று சொல்லலாம்அவருக்குத் தமிழ் மொழியைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராகத் தான் அவருடைய அறிமுகமும், தொடர்பும் எனக்கு ஏற்பட்டது. பின்னால் அவர் எங்களைத் தன் வீட்டிற்கே குடிவந்து விடும்படி சொன்னார். நாங்களும் அதன்படியே அவரது வீட்டிற்குக் குடி போனோம். 
இந்தப் பதிவு அவரைப் பற்றி அல்ல. என் வாழ்க்கையில் கடவுள் கை கொடுத்த சம்பவத்தைப் பற்றியது.

அந்த எம்.பி.யின் பிளாட்டில் ஒரு வருடத்திற்கு மேல் இருந்திருப்போம். ஒரு நாள் அவர் என்னிடம் “என் பெற்றோர் என்னுடன் தங்க வருகிறார்கள். அதனால் நீங்கள் ஒரு இடம் பார்த்து காலி செய்து விடுங்கள்” என்றார். தேதியும் சொல்லிவிட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் தன் ஊருக்குப் புறப்பட்டு விட்டார். “நான் இன்ன தேதிக்கு அப்பா அம்மாவுடன் வருகிறேன். ஆகவே அதற்குள் நீங்கள் காலி செய்து விடுங்கள்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
அதையடுத்து, வீடு வேட்டையாடத் துவங்கினோம். வீடு அவ்வளவு சுலபமாகக் கிடைக்கிறதா? கரோல் பாகில்தான் கிடைக்கும். வாடகை நமக்குக் கட்டுபடி ஆகாது.நாங்கள் இருந்த அபார்ட்மென்ட்டின் மேலே இருந்த ஒரு பெரிய அறையை (பர்சாதி என்று டில்லியில் சொல்வார்கள்) சென்னை G P O-வில் என்னுடன் பணியாற்றிய நண்பர் டில்லிக்கு மாற்றலாகி வந்த போது, எம்.பி. யிடம் சொல்லி அவருக்கு  இடம் வாங்கிக் கொடுத்தேன். அவர் என்னிடம் “இடம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, நம் ரூமிலேயே வந்து இருங்கள். சாமான்களை இப்படியே மாடிப்படி landing மற்றும் மொட்டை மாடியிலும் வைத்துக் கொள்ளலாம்” என்றார். 
அவர்கள் 3 பேர், நாங்கள் 3 பேர். ஆறு பேர் இருக்க இடம் போதாது “நாளைக்கு எம்.பி. வந்து விடுவார். இன்னும் இடம் கிடைக்க வில்லையே” என்று கவலைப்பட்டுக் கொண்டே முடிந்தவரை சாமான்களை மொட்டை மாடியில் கொண்டு வைத்தோம். மனதிலும் உடலிலும் அயர்ச்சி. “ஆண்டவா” என்று கடவுளிடம் முறையிடக் கூடத் தெம்பில்லை.இரவு, கதவை மூடி, பாயில் தலையணை போட்டுப் படுக்கலாம் என்று நினைத்து, விளக்கை அணைத்தோம். அப்போது காலிங் பெல் ஒலித்தது. தப்பித்தவறி எம்.பி.தான் முன்னதாகவே வந்து விட்டாரோ என்ற திகிலுடன் கதவைத் திறந்தேன். எதிர் ஃப்ளாட்டின் பர்சாதியில் இருந்தவர் – {அதிகம் பழக்கமில்லாதவர்.  வெறும் “ஹலோ.....ஹலோ” பழக்கம்தான்!) “வாங்க சார். என்ன வேண்டும்?” என்று கேட்டேன்.“ஒன்றுமில்லை. நாளைக்கு நான் பர்சாதியைக் காலி பண்ணுகிறேன். எனக்கு ஆர். கே. புரத்தில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. மாடிப்படியில் இருப்பது உங்கள் சாமான்களா? அதை கவனக் குறைவாக எடுத்து டெம்போவில் வைத்துவிடப் போகிறார்கள். லோட் பண்ணும்போது கவனித்துக் கொள்ளுங்கள்.” என்றார், அவர் சொன்ன முதல் வாக்கியத்திற்குப் பிறகு என் காதில் எதுவும் விழவில்லை. “அடடா...இதோ எதிர் ஃப்ளாட் எம்.பி.யின் மாடி பர்சாதி  காலியாகிறது  அந்த எம்.பி,யைக் கேட்டுப்பார்த்து அவரும் சரியென்று சம்மதித்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என்று மகிழ்ச்சி ஏற்பட்டது. ஒரே சின்ன பிரச்னை. அந்த எம்.பி.யை மாடி ஏறும்போது, இறங்கும்போது எதிரே வந்தால் “குட்மார்னிங்” சொல்லியிருக்கிறேன் அவ்வளவுதான் பரிச்சயம். பேசியது இல்லை.எதிர் பர்சாதிகாரரிடம் “சார். நாளைக்கு நாங்கள் வீட்டைக் காலி செய்ய வேண்டும். எம்.பி.யின் பெற்றோர்கள் வருகிறார்கள். இடம் எங்கும் கிடைக்கவில்லை. உங்கள் பர்சாதி காலியாகிறதே? அது எங்களுக்குக் கிடைக்குமா?” என்றேன். “நான் ஒன்றும் சொல்ல முடியாது. எம்.பி. என்ன மனதில் வைத்திருக்கிறாரோ? யாருக்காவது வாக்கு கொடுத்திருக்கலாம். அவரைக் கேளுங்கள். சரியென்றால் சந்தோஷமாக குடி போய்விடுங்கள். இந்த விஷயத்தில்  நான் ஒன்றும் செய்ய முடியாது.”“அப்படியா? எம்.பி. எப்போது டில்லி வருவார்? இப்போது பார்லிமென்ட் செஷன் கூட இல்லையே?” என்றேன். என் குரலே எனக்குப் பரிதாபமாகக் கேட்டது.  “கவலைப்படாதீர்கள். அவர் நாளைக் காலையில் வருகிறார். வந்தவுடன் கேட்டுப் பாருங்கள்” என்றார்.  “அப்பா... பழம் நழுவியுள்ளது. அது பாலில் விழ வேண்டுமே” என்று இர்வின் ரோடு ஹனுமாரை வேண்டிக் கொண்டோம். "இவ்வளவு தூரம் ஏற்பாடு செய்த ஹனுமான் நம்மைக் கைவிட மாட்டார்” என்றாள் என் மனைவி.

காலையில் அவர் வந்துவிட்டார் என்று தெரிந்துகொண்டோம். தயங்கியபடி மெதுவாக அவர் வீட்டுக் காலிங் பெல்லை அழுத்தினோம். அது மெதுவாகத்தான் ஒலித்தது. ஆனால் எங்களுக்கு அது கோவில் மணி  ஓசை போல் உரக்கக் கேட்டது. அவரே வந்து கதவைத் திறந்தார். “யெஸ்” என்றார்.“நமஸ்காரம். குட்மார்னிங். ஒரு ஹெல்ப் வேண்டும்” என்று சொன்னேன். சற்றுத்தள்ளி பின்னால் நின்றுகொண்டிருந்த என் மனைவியைப் பார்த்து “நமஸ்காரம்” என்றார். பிறகு “என்ன ஹெல்ப் வேண்டும்? ....முதலில் உள்ளே வாருங்கள்” என்று அழைத்துப்போனார்.போய் சோபாவில் உட்கார்ந்ததும் என் பிரச்னையைச் சொன்னேன்.“ஓ...அப்படியா...பர்சாதி வேண்டுமா? ஓகே...தருகிறேன். அந்த பர்சாதி என் உபயோகத்திற்கு தேவைப்படுகிறது. இருந்தாலும் தருகிறேன். Stopgap ஆக வந்து இருங்கள். எவ்வளவு நாளுக்குத் தேவைப்படும்?” என்று கேட்டார். இந்த மாதிரி கேள்வி கேட்பார் என்று நான் எதிர்பார்க்காததால் என்ன பதில் சொல்வது என்று யோசித்தேன். மென்று முழுங்கி “மூன்று நாலு மாதம் போதும். அதற்குள் வேறு இடம் பார்த்துவிடுகிறேன்.” என்றேன். 

“ஓகே...நீங்கள் என் பர்சாதிக்கு வந்து விடலாம். மூன்று மாசம்தான் டைம். வாடகை எதுவும் வேண்டாம்.” என்றார். “சரி சார். ரொம்ப தேங்க்ஸ்.” என்று சொல்லி விடைபெற்றோம்.  அடுத்த இரண்டு மணிக்குள் அந்த பர்சாதிக்காரர் சாமான்களை ஏற்றிக்கொண்டு போனதும், எங்கள் தட்டுமுட்டுச் சாமான் களுடன் அதில் குடி பெயர்ந்தோம்.
           அங்கு போனதும்தான் ஹனுமானுக்கு ஒரு பெரிய தேங்க்ஸ் சொன்னோம்.
எங்கள் எம். பியும் பகல் விமானத்தில் பெற்றோருடன் வந்தார். வீட்டைக் காலி பண்ணியதைப் பார்த்து  அவருக்கும்  சந்தோஷம்.,“அப்பாடி..இருக்க ஒரு இடம் கிடைத்ததே” என்று நாலைந்து நாள் புது இடத்தில் அசாத்திய மகிழ்ச்சியுடன் இருந்தோம். நாலைந்து நாள் தான்!  இன்னும் மூன்று மாதத்திற்குள் வேறு இடம் பார்க்க வேண்டுமே...வேறு எங்காவது கிடைத்தாலும் குழந்தை பள்ளிக்குப் போய்வருவது பிரச்னையாகி விடுமே என்ற கவலை தொற்றிக்கொண்டது. ஒரு வாரம் சென்றிருக்கும். எம்.பி. கிளப்பில் ஏதோ ஒரு நிகழ்ச்சி இருந்தது. அதற்குப் போய்விட்டு வெளியே வந்தேன். அப்போது சில எம்.பி.க்கள் வெளியே பேசிக்கொண்டிருந்தார்கள். யாரும் எனக்குப் பரிச்சயமானவர்கள் இல்லை. அந்த எம்.பி.க்களுடன், என்னைப்போல் ஒட்டிக்கொண்டு ஒரு எம்.பி.யின் வீட்டிலிருக்கும் ஒருவரும் இருந்தார். அவர் என்னைப் பார்த்து “ஹலோ” என்றார். (அந்தக் கால கட்டத்தில் நான் குமுதத்தில் தொடர்ந்து எழுதி வந்து கொண்டிருந்தேன்.)அவர் என்னைப் பார்த்து “ஒன் மினிட்” என்றார். போனேன். அங்கிருந்த ஒரு தமிழ் எம்.பி.யிடம் “இவர்தான்...நான் சொன்னேனே... குமுதத்தில் எழுதுகிறவர்” என்று அறிமுகப்படுத்தினார்.அவர் “ஓ...அப்படியா... நான் குமுதத்தைப் பார்க்கிறேன்.... ஆமாம். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.. நான் நம்பரைச் சொன்னேன்., அந்த எம்.பி என்னிடம் “என் வீட்டுக்கு சௌகரியப்பட்டபோது வாங்க.. நானும் வருகிறேன்.” என்றார்.“வருகிறேன், சார்” என்றேன். ஆனால் மறுநாள் மாலை அவரே என் வீட்டிற்கு வந்து விட்டார். அவர் மெத்தப் படித்தவர்.  பல்வேறு விஷயங்களைப் பேசினோம். அவர் பயங்கர புத்தகப் பிரியர். அதன்பிறகு அவ்வப்போது அவர் வீட்டிற்கு நான் போய் பேசிவிட்டு வருவேன் சர்வன்ட் குவார்ட்டர் எதற்கும் அவர் விண்ணப்பிக்கவில்லை என்று மெள்ளத் தெரிந்து கொண்டேன். கேட்பதா வேண்டாமா என்று தயக்கம். ஆனால் என் பிரச்னை என்னைக் ‘ கேள் கேள்’ என்று பின்னாலிருந்து நெம்பிக் கொண்டே இருந்தது.ஒரு நாள் மாலை அவர் என் வீட்டிற்கு வந்தார். பேசிக் கொண்டிருக்கும்போது அவரே என்னிடம் “வந்து..ஒரு விஷயம்... எனக்காக சரி என்று சம்மதிக்க வேண்டும். நான் இதுவரை எனக்கு சர்வன்ட் குவார்ட்டருக்காக அப்ளை பண்ணவில்லை. நீங்கள் வருவதாக இருந்தால் அப்ளை பண்ணுகிறேன். எனக்கு என்னவோ நீங்கள் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். இல்லாவிட்டால், சக எம்.பி. யாராவது தங்களுக்கு வேண்டியவர்களுக்காக நிர்பந்தப் படுத்தினால் தவிர்க்க முடியாது. நீங்கள் வந்தால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று ஆகி விடும்” என்று சொன்னார்,
அப்படியே சொல்லியபடியே நட்போடு கையைக் கூப்பிவிட்டுக்  கை குலுக்கினார்,
கடவுளை நம்பினேன். ஆனால் ஒருவர் இப்படி கை கூப்பி “வெள்ளித் தட்டில் பிரசாதம்” தருவார் என்று எதிர்பார்க்க வில்லை.
இர்வின் ரோடு ஹனுமான், என் கவலைக்கு மருந்தாக, சஞ்சீவி மலையையே கொண்டு வந்து தந்துவிட்டார்! 
அடுத்த வாரமே அந்த எம்.பி.யின் ‘குவார்ட்டருக்கு’க்  குடி போனேன்!கடவுளின் கருணையே கருணை!

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா. அவருக்கு என் நன்றி!

7 comments:

  1. asadhya sadhaka swamin asadhya thava kim vadha.
    subbu thatha

    ReplyDelete
  2. it is surprising to note MPs were so accessible and friendly those days!

    ReplyDelete
  3. கடவுளை நம்பினால் கைவிட மாட்டார் என்று புரிகிறது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    வழக்கம் போலவே படித்தேன், ரசித்தேன்.

    நன்றி.

    அன்புடன்

    திருமதி சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  5. நல்லா இருந்தது. ஒரு வழியும் புலப்படாது, இனி சமயம் இல்லை என்று எண்ணி அயர்ச்சியடையும்போது கிடைக்கும் உதவிக்கு ஈடு இணை இல்லை.

    ReplyDelete
  6. ஆஞ்சநேயர் சமய சஞ்சீவியாக உங்களுக்கு உதவியிருக்கிறார்...

    ReplyDelete
  7. amazing sir!! கடவுளை நம்பினோர் கைவிடப்படார்!!

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!