May 23, 2016

லட்ச தீபம்


சென்னை ஜி.பி.ஓ.வில் நான் பணியாற்றிக்கொண்டிருந்த வருடங்களில் செங்கல்பட்டிலிருந்து தினமும் போய் வந்து கொண்டிருந்தேன்.
ஒருநாள் வேலை முடித்துவிட்டு வழக்கம்போல் பீச் ஸ்டேஷனி லிருந்து புறப்படும் காஞ்சிபுரம் பாசஞ்சரில் ஏறப் போனேன். எல்லாப் பெட்டியும் கிட்டத்தட்ட நிரம்பி விட்டிருந்தது. கல்யாண சீசன்களில் இப்படி கூட்டம் அதிகமாக இருப்பது சகஜம். ஏதோ ஒரு மூலையில், கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டேன். ரயில் கோட்டை ஸ்டேஷன் போயிற்று. அங்கு அலைமோதுகிற மாதிரி கூட்டம் பெட்டிகளில் ஏறியது. பூங்கா,  எழும்பூர் ஸ்டேஷன்களில் மேலும் பயணிகள் ஏறினார்கள். பெரும்பாலும் குடும்பப் பெண்கள்.
“என்ன இவ்வளவு கூட்டமாக இருக்கிறதே...  நிறைய முகூர்த்தங்களா?” என்று கேட்டேன், ஒரு பெண்மணியிடம்.

“கல்யாணமுமில்லை, ஒண்ணுமில்லை. இன்னிக்கு ராத்திரி திருக்கழுக் குன்றத்தில் கோவிலில் லட்சதீபத் திருவிழா...ரொம்ப விசேஷம். 12 வருஷத்து ஒரு தபா வர்ற விழாவாச்சே! அதுக்குத்தான் அல்லாரும் போய்க்கிட்டு இருக்கோம்” என்றார்.


“என்னடா...இவ்வளவு முக்கியமான திருவிழா நம் ஊருக்கு அருகில் நடக்கிறது.  நமக்கு இப்படி ஒரு விழா நடப்பதே தெரியாமல் இருக்கிறோமே?” என்று எண்ணிக் கொண்டேன்.  ‘நாம் போய்ப் பார்க்க வேண்டும்? ...சரி...வீட்டுக்குப் போய், சாப்பிட்டுவிட்டு, ஏதாவது பஸ்ஸைப் பிடித்து, போய்விட்டு வரலாம்’ என்று தீர்மானித்தேன்

செங்கல்பட்டு போனதும், ஸ்டேஷனில் இருந்த திருக்கழுக்குன்றம் போகும் பஸ்களில் புளிமூட்டைகளாகப் பயணிகளை அடைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.. ஆட்டோ இல்லாத காலம். ஜட்கா வண்டிகளிலும்  திருக்கழுக்குன்ற சவாரிகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

வீட்டிற்குப் போய் சாப்பிட்டு விட்டு  பஸ் ஸ்டாண்டுக்கு வந்தேன். திருக்கழுக்குன்றத்திற்குப் போகும்  பஸ்கள் ஒன்றிரண்டு இருந்தன. இடம் கொஞ்சம் கூட இல்லை. ஜட்கா வண்டிகளும் இல்லை. சிறிது நேரம் அலைந்துவிட்டு, ஏமாற்றத்துடன் வீட்டுக்குத் திரும்பிப் போக, பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டேன்.
கிட்டத்தட்ட என் வீட்டை நெருங்கியிருப்பேன். அந்த சமயம் எனக்கு, வெகு அருகில், உராய்கிற மாதிரி ஒரு கார் சர்ரென்று வந்து நின்றது. எனக்கு ஒரு கணம் தூக்கி வாரிப்போட்டது.

நின்ற காரிலிருந்து ஒரு குரல் என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டது. “ஏய்...எங்கே இப்படி ஆடி அசைஞ்சுண்டு போறே?...வா... ஏறு காரில்...” என்று சற்று அதிகாரமாகச் சொன்னது.
பரிச்சயமான குரல். ஆனாலும் சட்டென்று யாரென்று ஊகிக்க முடியவில்லை. காரைத் திறந்து வெளியே வந்தார் அதை ஓட்டி வந்த நபர். அவர்:  என் நண்பர் (இயக்குனர்) ஸ்ரீதர்!

“அடப்பாவி...நீயா?. .பயந்தே போய்விட்டேன். இப்படியா மோதுவதைப்போல் காரை ஓட்டி வந்து நிறுத்துவே?.. அது சரி. எங்கே இந்த ராத்திரி  வேளையில் தனியாக மெட்ராஸிலிருந்து வந்திருக்கே.? சித்தாமூர் போகிறாயா?” என்று கேட்டேன்.
“இல்லை...உன் வீட்டிற்குத்தான் வந்து கொண்டிருக்கிறேன்....நீ எங்கே காலாற, பராக்குப் பார்த்துக்கொண்டு போய் வருகிறாய்?” என்று கேட்டார்.
“இல்லை  ஸ்ரீதர்.. திருக்கழுக்குன்றத்தில் லட்ச தீபம். போய்விட்டு வரலாம் என்று பஸ் ஸ்டாண்டுக்குப் போனால் ஒரு பஸ்ஸும் கிடைக்கவில்லை. சரி என்று வீட்டிற்குப் போய்க் கொண்டிருக் கிறேன்.” என்றேன்.
“அப்படியா... இதப் பார்றா.  நான் திருக்கழுக்குன்றம் போகத்தான் வந்திருக்கிறேன். உன்னையும், (சித்ராலயா) கோபுவையும் அழைச்சுண்டு போற பிளானோடு வந்திருக்கிறேன்... ஏறு வண்டியிலே” என்றார்.
ஏறி உட்கார்ந்தேன்.
வீட்டுக்குப்போய் என் பெற்றோரிடம் சொல்லிவிட்டு, பிறகு கோபுவின் வீட்டிற்குப் போய் அவரை(னை)யும் ஏற்றிக் கொண்டு, மிகுந்த மகிழ்ச்சியுடன் திருக்கழுக்குன்றம் போனோம்.  லட்ச தீப தரிசனம் எல்லாம் பார்த்துவிட்டு, இரவு ஒரு மணி வாக்கில் செங்கல்பட்டு திரும்பினோம்.
“ஸ்ரீதர்... ரொம்ப தாங்க்ஸ். ” என்று சொன்னேன்.  அதே சமயம் என் மனதிற்குள் ஆண்டவனுக்கும் நன்றி சொன்னேன்!

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா.  அவருக்கு என் நன்றி!

4 comments:

 1. அருமை ஐயா! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 2. கடவுள், அவன் தரிசனம் தர, அவனே பக்தர்களைக் கூப்பிடுகிறான் என்பது உண்மைதான்.

  சிறிய வயதில் பழகும்போது இருக்கும் நேசமும், அன்யோன்யமும், அவர்கள் புகழடைந்தபிறகும் தொடருமா? அல்லது அவர்கள், பிறர் தனக்குத் தருவதுபோல, தனிப்பட்ட மரியாதைகளை எதிர்பார்ப்பார்களா? புகழும் காசும் குணத்தை மாற்றியிருக்கிறதா? உங்கள் ஸ்ரீதர், கோபு அவர்களுடனான இந்த அனுபவம் என்ன?

  ReplyDelete
 3. எந்த விதமான மாறுதலும் இல்லை. 60,70 வருஷ நட்பு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நட்பாக இருக்கும்போது அதில் எந்த வித மாறுதலும் இருக்காது.

  ReplyDelete
 4. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  எதிர்பார்ப்பு இல்லாத நட்பு - கடவுளின் பரிசு.

  அருமையான பதிவு, நன்றி.

  அன்புடன்

  திருமதி சீதாலஷ்மி சுப்ரமணியம்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :