March 21, 2016

மீண்டும் சர்மாஜி

 சர்மாஜியும் விமான விபத்தும்
பல வருஷங்களுக்கு முன்பு டில்லியில் நடந்த விமான விபத்தைப் பலர் மறந்திருப்பார்கள். தில்லி ராமகிருஷ்ண புரத்தில் ஏற்பட்ட விபத்து. அந்த விபத்தில் மரணமடைந்தவர்களில் ஒருவர் பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் திரு மோகன் குமாரமங்கலம்.
  விமான விபத்துக்கும் சர்மாஜிக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.
   சர்மாஜி அந்த கால கட்டத்தில் ராமகிருஷ்ணபுரம் அரசு குடியிருப்பில் இருந்தார். விபத்து நடந்த தகவல் மள மளவென்று பரவியது. அதுவும் சர்மாஜியின் வீட்டிற்கு சற்று அருகில்தான் நடந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விமானம் விழுந்ததை ‘வேடிக்கை’ப் பார்க்க ஓடினார்கள்.
  சர்மாஜி முன்யோசனைக்காரர். ஒரு நிமிஷம்தான் யோசித்தார். கீழ் வீட்டிலுள்ள பையன் மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தது அவருக்கு நினைவு வந்தது. அவனிடம் ஸ்டெதஸ்கோப்பையும் டாக்டர் கோட்டையும் கேட்டு வாங்கிக் கொண்டார்.  ஸ்டெத்தைக் கழுத்தில் மாலையாக மாட்டிக் கொண்டார். ஸ்கூட்டரை எடுத்து விபத்து நடந்த பகுதிக்குச் சென்றார்.

அங்கு ஏகப்பட்ட கூட்டம். போலீஸ் யாரையும் வரவிடாமல் விரட்டிக்  கொண்டிருந்தது. உயர் அதிகாரிகள் பலர் வந்திருந்ததால் பாதுகாப்பு கெடுபிடி அதிகம். மேலும் விபத்துப் பகுதியில் ஜனங்களை விட்டால் விபத்தில் உயிரிழந்தவர்களைக் காப்பாற்றுகிற சாக்கில் பணம், நகை என்று எடுத்துக் கொண்டுவிடுவார்கள்.
ஆனால் சர்மாஜி போனதும் ஒரு போலீஸ்காரர் அவரைப் பார்த்து சல்யூட் அடித்தார். அவர் சர்மாஜியிடம் “வண்டியை இங்கேயே விட்டு விட்டுப் போங்கள். எங்கேயும் போகாது. ....ஏய்...கூட்டம் போடாதீங்க...வழி விடுங்க...சார்...நீங்க போங்க...” என்று குரல் கொடுத்தார். வேறு ஒரு போலீஸ்காரர் லேசாகத் தடியை வீசி வழியை ஏற்படுத்திக் கொடுத்தார் சர்மாஜிக்கு. சர்மாஜி விபத்து நடந்த இடத்துக்குச் சென்று பலரைத் தூக்கி விட ஆரம்பித்தார். ஆம்புலன்ஸ் வண்டியைக் கூப்பிட்டு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லச் சொன்னார். யாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டுமென்ற விவரங்களைக் குறித்துக்கொண்டார். இவரைப் போல வேறு பலரும் அருகிலிருந்த சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர்களும் மற்ற மீட்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.
சுமார் ஒரு மணி நேரம் விபத்துப் பகுதியிலிருந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பக் கிளம்பினார். பல போலீஸ்காரர்கள் சல்யூட் அடித்து அவருக்கு கூட்டத்தை விலக்கி வழியை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
 சேவை செய்த திருப்தியுடன் சர்மாஜி வீட்டிற்கு வந்தார். (இதுதான் சர்மாஜி!)

சர்மாஜியும் போலீஸ்காரரும்
ஒரு நாள் சர்மாஜி ஆபீசுக்கு வர பஸ் ஸ்டாண்டிற்குப் போய்க் கொண்டிருந்தார். அப்போது மோட்வானி என்ற நண்பர் மோட்டார் சைக்கிளில் அதே தெருவில் போய்க் கொண்டிருந்தார்.  சர்மாஜியைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தி “வாங்க சர்மாஜி..பின்னால் உட்காருங்க..” என்றார். இவரும் ஏறி உட்கார்ந்தார். வண்டி புறப்பட்டது.
 “மோட்வானி... நீ எப்படி இந்தப் பக்கம் வந்தே?...நீ கரோல் பாகில்தானே இருக்கிறாய்?” என்றார். “இல்லை சர்மாஜி... இந்தப் பக்கம் ஒரு வேலை இருந்தது.” என்றார் மோட்வானி. (மோட்வானி ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்து ஆறு மாதங்கள் கூட ஆகியிருக்காது.)
 “மோட்வானி...கொஞ்சம் வேகமாகப் போ.. லேட்டாகப் போனால் குப்தா கத்துவார்” என்று அவனை துரிதப்படுத்தினார்.
 வழியில் ஒரு சிக்னல் வந்தது. சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சீக்கிரம் போக வேண்டும் என்ற காரணத்தினாலும் மோட்டார் சைக்கிள் புதிதாக வாங்கிய இளைஞன் என்பதாலும் வேகமாகச் சென்றான் மோட்வானி. துரதிர்ஷ்டம் தெரு வளைவில் போலீஸ் நின்று கொண்டிருந்தது. ஒரு போலீஸ்காரர் மோட்வானியை நிறுத்தி ஓரங்கட்டினார்.
“க்யா யார்... லைட்டைப் பார்க்கலையா? டிரைவிங் லைசென்சை எடுங்க...” என்றார்.
 மோட்வானிக்கு வெலவெலத்து விட்டது. லைசென்சை எடுத்துக் கொடுத்தான்.
 “எங்கே வேலை செய்யறீங்க?” என்று கேட்டார் போலீஸ்காரர்.
 பின்னால் உட்கார்ந்திருந்த சர்மாஜி உடனே போலீஸ்காரரிடம் “சாப், ஒரு கேஸ் விஷயமாக அவசரமாகப் போறார். அதனால்தான் சிக்னலைக் கவனிக்கலை..” என்றார்.
            “எங்க இருக்கிறார்...நீங்க யாரு?”
            “இவர் விஜிலன்ஸில் இருக்கிறார். நான் அக்கௌண்ட்ஸ்..”
 விஜிலன்ஸ் என்ற வார்த்தையைக் கேட்டதும் போலீஸ்காரருக்கு லேசான பயம் வந்துவிட்டது. பாவம் அவர் 50, 100 ருபாய் வசூல் பண்ணிவிட்டு விட்டு விடலாம் என்று எண்ணி இருந்திருப்பார்!
 “ஓ...விஜிலன்ஸா?...ஓ.கே..சார்...போங்க” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
 மோட்வானி, பி அண்ட் டி டைரக்டரேட் விஜிலன்ஸ் செக்ஷனில் டைப்பிஸ்ட்...!.   சர்மாஜி சொன்னது பொய்யில்லை.

சர்மாஜியும் நோட்டரியும்
சர்மாஜி ஊருக்கு உழைப்பவர். சின்னச் சின்ன சாமர்த்தியமான உதாரணங்களைத் தருகிறேன்.
 நான் டில்லி போன புதிது. மொழி மட்டுமல்ல. பல்வேறு அலுவலகங்களும் எங்கு உள்ளன என்பது புரியாத புதிராக இருந்தது. டில்லி போக்குவரத்துக் கழக பஸ்களின் ஒரு தனிச்சிறப்பு, பெரும்பாலான பஸ்களில் ரூட் நம்பரோ செல்லுமிடமோ இருக்காது.
 (1962’ல் டில்லி சென்ற முதல் நாள், பேப்பரைப் புரட்டினேன். அதில்  வந்திருந்த கடிதம்: “இந்த டில்லி டிரான்ஸ்போர்ட் பஸ்களில் ரூட் பலகை ஏன் போடுவதில்லை? சில சமயம் எண் இருக்கும். சரி. அந்த எண் பஸ் எங்கு போகும் என்று எல்லாருக்கும் தெரியுமா?”
நம்ப மாட்டீர்கள். 1982ல் டில்லியை விட்டுச் சென்னை வந்தேன். சென்னைக்குக் கிளம்பின தினத்தன்று வந்த பேப்பரில் இதே ரீதியில் கடிதம் வெளியாகி இருந்தது!)
அந்த சமயம் என் மகளைப் பள்ளியில் சேர்க்க ஒரு டாக்குமெண்டில் நோட்டரியிடம் கையெழுத்து வாங்க வேண்டியிருந்தது. நோட்டரி எங்கிருக்கிறார்கள், கையெழுத்துப் போட எவ்வளவு பணம் கேட்பார்கள் என்று தெரியாமல் தத்தளித்தேன். சர்மாஜியிடம் சொன்னேன்.
            “வாங்க...எதிரே பார்லிமென்ட் ஸ்ட்ரீட் போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறதே..அதற்குப் பக்கத்தில் மாஜிஸ்திரேட் கோர்ட் இருக்கிறது. அங்கு ரொம்ப பேர் நோட்டரிகள் இருப்பார்கள். வாங்க என்னோட..” என்று அழைத்துப் போனார்.
அவருடன் போனேன். நேரே போலீஸ் ஸ்டேஷன் கேட் வழியாகச் சென்றார். “சர்மாஜி..அடுத்த கட்டடம்தானே மாஜிஸ்திரேட் கோர்ட்....எதற்கு இந்த கேட் வழியாக நுழைகிறீர்கள்?” என்று கேட்டேன்.
 “எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது. சர்மாஜி காரணத்தோடுதான் எதையும் செய்வான்.” என்றார்.
ஒன்றும் பேசாமல் அவர் பின்னால் போனேன். மாஜிஸ்திரேட் கோர்ட்டின் மைதானப் பகுதியில் பல பொடியன்கள் “அஃபிடவிட், நோட்டரி” என்று கத்திக்கொண்டு ஆள் பிடித்துக் கொண்டி ருந்தார்கள். ஒரு பையன் சாமர்த்தியசாலி. ரொம்ப நாள் பரிச்சயம் உள்ளவன் போல “வாங்க சாப்....பார்த்து ரொம்ப நாளாச்சு..க்யா சேவா கர்னா....போலியே” என்று சொன்னான்.
சர்மாஜி “எப்படி இருக்கே? பால் பச்சா கைசே ஹை“ என்று ஒப்புக்குக் கேட்டுவிட்டு  “ஹமாரா சாப் இவர்.. இவருக்கு ஒரு நோட்டரி கையெழுத்து வேண்டும்” என்றார்.
“இங்க வாங்க” என்று சொல்லியப்டியே, கசமுச என்றிருந்த ஜனத்திரளில்   ஒரு கருப்புக்கோட்டு ஆசாமியிடம் அழைத்துச் சென்றான். பத்திரத்தைக் கொடுத்தேன். அவர் கையெழுத்துப் போட்டார். இவன், அவரருடைய சைக்கிளில் மாட்டியிருந்த பையில் கையை விட்டு ரப்பர் ஸ்டாம்ப், பேட் இரண்டையும் எடுத்து முத்திரை போட்டுக் கொடுத்தான்.
“எவ்வளவு?” என்று கேட்டார்.
“ட்வென்டி ஃபைவ்” என்றான்.
“என்ன தம்பி...சார் யாரு தெரியுமா? எங்கிருந்து வந்தார் பார்த்தியா...இந்தா ஐந்து ருபாய்..கப்சிப்னு வாங்கிக்கோ. ஏதாவது பேசினால் நடக்கறதே வேற..” என்றார். அவனும் “அச்சாஜி” என்று சல்யூட் அடித்தான்.
நாங்கள் அலுவலகம் திரும்பினோம்.
“சர்மாஜி....அநியாயமாகக் குறைச்சிட்டீங்களே” என்றேன்.
“இல்லை...இதுதான் நிர்ணயிக்கப்பட்ட சார்ஜ். இப்படி டிராமா போடாவிட்டால் இஷ்டப்பட்டதைக் கேட்டு பணத்தை விழுங்கி விடுவார்கள்” என்றார்.

முக்கிய குறிப்பு:இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா.
அவருக்கு என் நன்றி!


அடுத்த பதிவு:கடவுள் கை கொடுத்த  கணங்கள்!-3

8 comments:

 1. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  வணக்கம்.

  சர்மாஜி போல ஒரு நண்பர் இருந்தால் ஆலோசனைகளும் கிடைக்கும். அவசர உதவியும் கிடைக்கும்

  எதிலும் அலட்டிக் கொள்ளாமல், எதையும் சமாளிப்பது எப்படி என்று சர்மாஜியிடம் கற்றுக் கொள்ள வேண்டும் போல.

  சகோதரி ஷோபனாவுக்கு நன்றி.

  அன்புடன்

  சீதாலஷ்மி சுப்ரமணியம்

  ReplyDelete
 2. இது நிஜ சர்மாஜியா? செம ஆள்தான் போலிருக்கிறது. இப்படி ஆட்கள் கிடைத்தால் எல்லா வேலைகளையும் சுலபமாகச் செய்துவிடலாம் போலிருக்கிறதே.... விரைவில் நீங்களே தட்டச்சு செய்து, எங்கள் கருத்துக்குப் பதில் கருத்து எழுதவேண்டும். அன்புடன்.....

  ReplyDelete
 3. அன்புள்ள நெல்லைத்தமிழன் அவர்களுக்கு,
  சர்மாஜி நிஜம்.அவ்வளவு கற்பனை பண்ணி எழுத எனக்குத் திறமை கிடையாது.. எனக்கு ஒரு சகோதரி கிடைத்திருக்கிறார். அன்புடன் தட்டச்சு செய்து தருகிறார். அவர் வேகத்திற்கு என்னால் எழுதி அனுப்ப முடியவில்லை. என்னாலும் தட்டச்சு செய்ய முடிகிறது. ஆனால் வேகமாகத் தட்டச்சு செய்ய முடியவில்லை. -கடுகு

  ReplyDelete
 4. வணக்கம்
  அருமையாக சொல்லியுள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. சர்மா ஜி! தில்லியில் இப்போது இப்படி பல சர்மாஜி இருக்கிறார்கள்! ரசித்தேன்.

  ReplyDelete
 6. Sarmaji - an interesting and helpful character!

  ReplyDelete
 7. நல்ல பகிர்வு அகஸ்தியன் சார்.
  ஜெய் ஷர்மாஜி!!

  http://concurrentmusingsofahumanbeing.blogspot.com

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!