1. புகைப்படம்
அனுராதாவின் மேஜை டிராயரைத் தற்செயலாக திறந்த போது, ஒரு டயரியிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த புகைப்படத்தைப் பார்த்த பிறகுதான் சந்தேகம் என்னை அரிக்கத் தொடங்கியது.
ஒரு இளைஞன் அவளை அணைத்தபடி இருக்கிறான். கொடைக்கானல் பகுதி மாதிரியான இடத்தில், அனு ஒரே உற்சாகமாகவும் சற்று நாணமாகவும் காட்சி அளிக்கிறாள். படம் தெளிவாக இல்லை. பாக்ஸ் காமிராவில் எடுத்ததாக இருக்குமோ? அல்லது என் கண்களில் சதை வளர்ந்திருப்பதால் தெளிவாக இல்லையோ?
அனுவைச் சமர்த்துப் பெண் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்! காலேஜில் படிக்கிறாள். கூடவே காதலும் படிக்கிறாள். என் தலையைத் தடவிக் கொண்டேன். முழு வழுக்கையாக இருந்த தலையில் மயிரைப் பிய்த்துக் கொள்ள முடியுமா.. கவலைப்படுவதற்கு? ..சரி.. இந்தப் போட்டோ விவகாரத்தைக் கமலாவிடம் சொல்லலாமா? அவள் வெலவெலத்துப் போய்விடுவாள்.
2. அனுவுக்குக் காதல்?
அனு என் பேத்தி. நல்ல அழகு. அனு எங்கள் பெண் வயிற்றுப்பேத்தி. எங்கள் பெண்ணும் மாப்பிள்ளையும் மூன்று மாதம் ஆஸ்திரேலியா போயிருக்கிறார்கள். காலேஜில் படிக்கும் பேத்தியைப் பார்த்துக் கொள்ள நாங்கள் இருவரும் ஊரிலிருந்து வந்து இருக்கிறோம்.
அனு, அவள் அம்மா அதாவது எங்கள் பெண் பத்மா மாதிரியே மூக்கும் முழியுமாக அழகாக இருப்பாள். பத்மா, என் மனைவி கமலாவை அந்த காலத்தில் உரித்து வைத்திருந்தாள்.
கான்வெண்டில் படித்த பெண் அனு, கிடார் கற்றுக் கொள்கிறாள். அரை அடி உயர ச்போட்டுக் கொள்கிறாள். அறை முழுவதும் ஏதோ பாப் பாடகர்களின் படங்கள் ஒட்டி வைத்திருக்கிறாள். ஸ்டீரியோ பிளேயரில் காட்டுக் கத்தல் இசை போட்டுக் கேட்கிறாள்.
இதெல்லாம் ஒன்றும் தப்பில்லை.. ஒரு பையனுடன் சுற்றி வருகிறாளே.. நிச்சயமாக அவளது பெற்றோர்களுக்குத் தெரியாது.
விவரம் தெரியாத வயதுக் குழந்தை. அவளிடம் எப்படிக் கேட்பது? என் மேஜை டிராயரை ஏன் குடைந்தாய் என்று கேட்பாள். பேனாவிற்கு "இங்க்' போடத்தான் திறந்தேன் என்றால் நம்புவாளா?
சந்தேகம் என் தேகத்தையும் மனசையும் அரித்துக் கொண்டிருக்கிறது! கமலாவிடம் சொல்லலாமா, வேண்டாமா? மூன்று மாதம் பொறுத்திருந்து பெண், மாப்பிள்ளையிடம் சொல்லி விடலாம்! அது "ரொம்ப லேட்' என்றாகிவிட்டால்..?
3. கச்சேரிக்கு வர்றீங்களா?
"தாத்தா.. யுனிவர்சிடி ஹாலில் "மியூசிக் 78' நிகழ்ச்சி. நான் பாடுகிறேன். நீங்க கட்டாயம் வரணும்'' என்றாள் அனு.
"குழந்தை.. அந்தப் பாட்டெல்லாம் எங்களுக்கு எங்கேம்மா புரியப் போகிறது..''
"போங்கோ.. தாத்தா.. நீங்க வந்துதான் ஆகணும்'' கெஞ்சலாகவும், கொஞ்சலாகவும் அனு சொன்னாள். (சீ! இந்தக் குழந்தையா காதல் விவகாரத்தில் ஈடுபட்டிருக்கும்... சொல்ல முடியாது. போன வெகேஷனுக்கு கொடைக்கானல்தானே இவர்கள் போயிருந்தார்கள்!)
"பாட்டி.. நீங்க சொல்லுங்க தாத்தாவிடம்.''
"ஏன்னா, நம்ம குழந்தை ஆசைப்படறது. போய்ட்டு வந்தால் என்ன?''
"அதில்லை. கண் பார்வை சரியில்லையே என்று பார்க்கிறேன்.''
"காரில் போய் காரில் வரப்போகிறோம்.''
"ஏண்டி குழந்தை. நீ பாடறபாட்டுக்களை எல்லாம் தினம் வீட்டிலே கேட்கிறோமே.''
"தாத்தா.. இன்னிக்கு நான் யாருடன் சேர்ந்து பாடப் போகிறேன் தெரியுமா? ஷியாமுடன்.. இன்னிக்கு பாப் பாடகர்களில் அவர்தான் "டாப்!' ''
"அப்படியா?''
"வென் ஐ ஹோல்ட் யூ இன் மை ஹாண்ட்' என்ற பாட்டைப் பாடுவார்.. அப்படியே உடம்பு ஒரு "இது'வா ஆயிடும்.''
"பேரு என்ன சொன்னே. ஷியாமா?... சரி.... சரி.... நான் சாயங்காலம் வரேன்.''
4. ஷியாம்தான் காதலனா?
சந்தேகம் அலை மோதிக் கொண்டே இருந்தது. போட்டோவில் இருந்த பையன் மாதிரிதான் ஷியாமும் இருந்தான்; அல்லது இருந்தது போல் இருந்தது. சரியாகத் தெரியவில்லை. அனுவிற்குத் தெரியாமல் போட்டோவை எடுத்துப் பார்த்தேன். வேஷ்டிக் கட்டிக் கொண்டிருந்தான் பையன். வேஷ்டியாக இருக்காது. பைஜாமாவாக இருக்கும். படத்தில் வித்தியாசம் தெரியவில்லை.
சந்தேக அலைகள் அரித்துக் கொண்டிருந்தன. இவளுக்காக டாக்டர் படித்துக் கொண்டிருக்கும் ஒரு பையனை நாங்கள் பார்த்து வைத்திருக்கிறோம்.
கமலாவிடம் சொல்லிவிடத் தீர்மானித்தேன். அவளுக்கு என்னைவிட அதிகம் ஷாக் ஏற்படும் என்பது தெரியும். அதற்காகச் சொல்லாமல் இருக்க முடியுமா?
அனு காலேஜ் போனபிறகு, கமலாவிடம் மெதுவாக விஷயத்தைச் சொன்னேன்.
"அடப்பாவமே.. இந்தக் காலத்துப் பெண்கள் பார்த்தால் பரமசாதுவாக இருக்கின்றன.. ஹூம்...''
”ஆமாம்... இதற்கு என்ன செய்வது... நாசூக்காக நீ கேட்டுப் பாரேன்.''
”எப்படி கேட்கிறது? யார் சொன்னது, எது என்று கேட்பாள்; கத்தினாலும் கத்துவாள்... அல்லது "ஆமாம்; அவனைத்தான் கலியாணம் பண்ணிக்கப் போகிறேன்' என்று பிடிவாதமாகக் கூறுவாள்.... இதென்னடா வம்பாப் போச்சு....''
"எங்கே, அந்தப் போட்டோவை எடுத்துக் காட்டுங்கள். நானும் பார்க்கிறேன்.''
5. அடப்பாவமே
வாயிற்கதவைப் போட்டுவிட்டு, அனுவின் அறைக்குப் போனோம்... சத்தம் போடாமல்.. சப்தம் போட்டால் கல்லூரியில் இருக்கும் அனுவின் காதுக்கா எட்டிவிடும்? பயம் ஸ்வாமி பயம்! மெதுவாகப் போட்டோவை எடுத்துக் கமலாவிடம் கொடுத்தேன்.
கண்ணாடியை துடைத்து போட்டுக் கொண்டு பார்த்த அவள்
ஓவென்று...
வாய்விட்டுச் சிரித்தாள்!
"என்ன இப்படி சிரிக்கிறே?''
"ஐயோ, ராமா.. ஐய்யய்யோ... சிரிப்பு தாங்கலையே.''
""சிரித்தது போதும். விஷயத்தைச் சொல்லு'' என்றேன் கடுமையாக.
==============================
இப்போது உங்களுக்கு ஒரு போட்டி” கதை எப்படி முடிந்திருக்கும்.?
--------------------------------------------
--------------------------------------------
--------------------------------------------
--------------------------------------------
--------------------------------------------
--------------------------------------------
-------------------------------------------
"இந்த போட்டோவில் இருக்கிறது யார் தெரியுமா? நீங்களும் நானும்தான்.. கலியாணம் ஆன புதுசில் நம்ப கிராமத் தோப்பில் எடுத்த போட்டோ இது.. ஞாபகமில்லையா?''
"ஆமாம்.. ஆமாம்.. இது நம்ப கிட்டன் எடுத்த போட்டோ... அடேடே... இவ்வளவு சின்னப் பொண்ணாவா, அனு மாதிரியா நீ இருந்தே!''
"போதும். கொஞ்சாதீங்க!''
ஹும்! முடிவு எப்படியிருக்கும் என்று கேட்டு விட்டு விடையையும் கீழே வெளியிடலாமா? நான் சரியாக யூகித்தேன். அதை எழுதி உங்களிடம் பரிசு பெற்றிருப்பேனே... அச்சச்சோ! வடை போச்சே!
ReplyDeleteநல்ல சஸ்பென்ஸ். (ஆனால், எந்த வயதில் எடுக்கப்பட்டிருந்தாலும், நம்முடைய போட்டோ நமக்கு மறந்துபோக வாய்ப்பு இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது!)
ReplyDeleteபடம் 50 வருஷத்திற்கு முன்பு பாகஸ் காமிராவில் எடுத்ததாம், தெளிவாக இல்லை. பார்த்தவருக்கு கண்ணில் சாளேசுவரமாம். மனதில் சந்தேகம். ஆகவே தப்பான முடிவுக்கு வந்துவிட்டேன் என்கிறார்!:)
ReplyDeleteபிள்ளை பிராக்ரஸ் ரிப்போர்ட்டை நீட்ட் என்ன குறைவான மார்க்குக வாங்கியிருக்கிறாய் என அப்பா சத்தம் போட, பிறகுதான் தெரிய வருகிறது அது அப்பாவின் பழைய பிராக்ரஸ் ரிப்போர்ட் என நான் ஒரு கதையில் படித்த்து நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
I guessed it.. b4 reaching the end !
ReplyDeleteநான் நிஜம்மாவே பயந்து போய்ட்டேன்..இதென்னடா புதுக்கூத்து என்று!
ReplyDelete”உங்களுக்கு ஒரு போட்டி ....” என்று படித்ததும், பதிலை (அதான், நீங்கள் எழுதிய முடிவுதான்!) எழுதி அனுப்பலாம் என்று பார்த்தால், அவசரப்பட்டு இந்த பதிவிலேயே நீங்கள் விளக்கிவிட்டீர்கள்! - ஜெ.
ReplyDeleteசணலைப் பாம்பாக நினைப்பதற்கு நம் மனப் பிராந்தியும் காரணம் என்பது போல வயசுப் பெண் இருக்கும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அவர்களை எப்போதும் ஒரு சந்தேகக் கண்ணிலேயே பார்ப்பதும் சகஜம்தானே.... அதனால் ஏற்பட்ட மயக்கமாக இருக்கலாம்! ஆனாலும் பழைய ஃபோட்டோவுக்கும் புது ஃபோட்டோவுக்கும் வித்தியாசம் தெரியாதா என்ன?
ReplyDelete<>
ReplyDeleteஅனுவின் அப்பாவை நானும் கேட்டேன்: ஐயோ, வித்தியாசம் தெரியலையே. அதிர்ச்சியால!” என்றார்!!!!:)