June 22, 2012

தொச்சுவுக்கு அல்சர்

 முன்குறிப்பு:
வீட்டுக்குள்  நுழையும்போதே கமாலாவின் முகத்தில் எள் ப்ளஸ் கொள் மட்டுமல்ல நவதானியங்களும் வெடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். கையில் சிலம்பு வைத்திருக்கும் கண்ணகி  போஸில் ஒரு கடிதத்துடன் தலை விரித்தபடி (அன்று வெள்ளிக்கிழமையாதலால்  எண்ணை தேய்த்துக் குளித்து தலைமுடியை ஆற விட்டபடி.)  நின்று கொண்டிருந்தாள்.
”அப்பா.. என்ன வெய்யில்?”என்றேன்,   ஏதோ பேச வேண்டுமே!
“ ஒவ்வொரு வருஷமும் வர்ற வெய்யில் தான்.."
 " ஆமாம். கையில என்ன லெட்டர்?”
“ தொச்சு எழுதிஇருக்கிறான்..”
“ மணி ஆர்டர் அனுப்பணுமா. செக் அனுப்பணுமா?”
“ மணி ஆர்டரும் இல்லை,. சுப்பிரமணி ஆர்டரும்  இல்லை. கோபமா எழுதி இருக்கிறான்!”
“ கோபம் பாபம்னு  அவன்கிட்ட சொல்லு.. என்னவாம் கோபத்துக்கு காரணம்?”
“ உங்கள் “ பிளாக்:கில் நீங்க ஆஸ்பத்திரியில் இருந்ததை எழுதியிருக்கிறீங்களாமே.. அவனுக்கு அல்சர் வந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்தானே அதைப் பத்தி எழுதினால் என்ன, அதுக்குக்கூட நான் தகுதி இல்லாதவனான்னு கேட்டிருக்கிறான்.”
“ என் பிளாக் என்னஆஸ்பத்திரி  அனுபவ பிளக்கா? ..  அப்புறம் கால் சுளுக்குன்னு மூணு நிமிஷம் ஆஸ்பத்திரியில் அங்கச்சி இருந்தாளே, அதைப் பத்தியும் எழுதச் சொல்வான்.”
” வேண்டாம் .. வேண்டாம்..எதைப் பத்தியும் எழுத வேண்டாம்..தொச்சுன்னு சொன்னாலே  உங்களுக்குப் பத்தி எரியறது.” என்று கோபமாக உள்ளே போனாள் கமலா,
நம் பிளாக்கில் எத்தனையோ குப்பையைப் போடும்போது, தொச்சுவைப் பற்றி எழுதினால் ஒன்றும் மோசமாகி விடாது என்று எண்ணி ” தொச்சுவுக்கு அல்சர்”
கட்டுரையைப் போடுகிறேன்.( நமக்குள் இருக்கட்டும்:  வருகிற வாரம் ஊரிலிருந்து என் அம்மா வரப்போகிறாள்!)

யாராவது பாராட்டி எழுதினால்  கமாலாவின் கோபம்  ஆறும். இல்லாவிட்டால்   நானே பத்து  புனைபெயரில் எழுதவேண்டும்! ( கஷ்டமடா சாமி!)

================================
தொச்சுவுக்கு அல்சர்
                ஒரு இலக்கியக் .கூட்டத்தில் கலந்து கொண்டு வீட்டிற்கு வந்தேன். வீட்டிற்கு   தொச்சு வந்திருப்பதை அவனுடைய  (கர்ண கடூரமான) குரல் அறிவித்தது. அவனது புத்திர சிகாமணிகள் என் வீட்டை ஒரு குருக்ஷேத்திர மைதானமாகக் கருதிப் பாரதப் போர் நடத்திக் கொண்டிருந்தன.
                “டேய் தொச்சு, இன்னும் ஒரு அடை போடறேண்டா'' என்று என் அருமை மனைவி கமலா, ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்துக் கெஞ்சுவது போல் தொச்சுவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
                தொச்சுவின் மனைவி அங்கச்சி, “அக்கா... நீங்க போட்டுண்டே இருந்தால் உங்க மனசு கஷ்டப்படக் கூடாதே என்று இவர் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். ஆறு அடைக்கு மேலே நான் கொடுக்கவே மாட்டேன்... வயிறு நிறைய சாப்பிடணும்னு நாட்டிலே ஒரு சட்டமும் இல்லையே, அக்கா. அரை வயிறு சாப்பிட்டால் போதும்'' என்றாள்.
                “தொச்சு என்னிக்கும் அரை வயிறுதான் சாப்பிடுவான்'' என்று என் மாமியார் அறிவித்தாள்.
                வீட்டிற்குள் நுழைந்ததும் நான்.... “கமலா தண்ணி கொண்டு வா'' என்று கத்தினேன்.
                “அடாடா... வீட்டுக்குள் வரும் போதே எரிஞ்சு விழ வேண்டுமா... இந்தாங்க தண்ணி'' என்று சொல்லி "டங்"கென்று டம்ளரை வைத்தாள் கமலா.
                டைனிங் ஹாலில் அடை சம்ஹாரம் பண்ணிக் கொண்டிருந்த தொச்சு, “ஐயோ அம்மா'' என்று சோகக் குரல் கொடுத்தான்.
                “என்னடா தொச்சு... என்ன ஆச்சு? என்ன... என்ன...?'' என்று கே.பி. சுந்தராம்பாள் பாணியில் கமலா பதறினாள்.
                “என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் துடிக்கிறேள்...? அப்பா ஏழுமலையானே. எனக்குக் கையும் ஆடலை. காலும் ஆடலை... ஏழுமலையானே... அங்கப் பிரதட்சிணம் பண்றேன். இவருக்கு ஒண்ணுமில்லாமே இருக்கணுமே... அம்மா, இப்படித் துடிக்கிறாரே'' என்று அழ ஆரம்பித்தாள் அங்கச்சி.
                “ஐயோ... வயிறு அம்மா... வயத்தைப் பிடிச்சுண்டுடுத்தே... வலி தாங்க முடியலையே'' என்று அலறினான் தொச்சு.
                பின்னால் வரப் போகும் அத்தியாயங்களுக்கு இது ஒரு முன்னுரை என்று எனக்குத் தெரியும். ஆகவே... “என்ன தொச்சு என்ன பண்றது? டாக்டரைக் கூப்பிட்டுமா?'' என்று கேட்டேன்.
                “என்ன வேணுமா? அத்திம்பேரே, வலி பிராணன் போறது. தாங்க முடியலை. கொஞ்சம் விஷம் கொடுங்கோ!''
                “அது வேண்டாம். நான் போய் டாக்டர் நஞ்சுண்டராவை அழைச்சிண்டு வரேன்...'' என்று கூறிக் கிளம்பினேன்.
                “அய்யோ... அவரைக் கூப்பிடறதும் ஒண்ணுதான். யமதூதனைக் கூப்பிடறதும் ஒண்ணுதான்'' என்று என் மனைவி சொன்னதும் --
                வழக்கம் போல் என் மாமியார் தொடர்ந்தார். “நஞ்சுண்டராவ் ஒரு வீட்டில் நுழைஞ்சால் அடுத்த ஐந்தாவது நிமிஷம் அழுகை ஓசைதான் வரும் அந்த வீட்டிலிருந்து. ஹøம்! உங்காத்துக்காரருக்குத் தொச்சு மேலே அவ்வளவு கரிசனம்!'' என்றாள்.
                அங்கச்சி, “அத்திம்பேர்... ஒரு டாக்ஸி வெச்சுண்டு போய் டாக்டர் மணியை அழைச்சுண்டு வாங்கோ'' என்றாள்.
                டாக்டர் மணி கருவிலே திருவுடையவர். அவரைப் பார்த்து, "குட்மார்னிங்', என்றாலே பத்து ரூபாய் கேட்பார். மணி என்பதற்குப் பதில், "மணி பர்ஸ்' என்று அவருக்குப் பெயர் வைத்திருக்கலாம்.
                நான் வெளியே பறந்தேன்.

                தொச்சுவை டெஸ்ட் பண்ணிவிட்டு என்னைத் தனியாக அழைத்துச் சென்று முகத்தைச் சற்று சீரியஸாக வைத்துக் கொண்டு உதட்டைப் பிதுக்கினார். சஸ்பென்ஸ்! எனக்குத் தெரியும் இந்த சஸ்பென்ஸ், பின்னால் அவர் வைக்கப் போகும் எக்ஸ்பென்ஸுக்கு முன்னோட்டம் என்று!
                “என்ன டாக்டர்... என்ன தொச்சுவுக்கு?'' என்று கேட்டேன்.
                “கொஞ்சம் ஸீரியஸ், ஆபரேஷன் பண்ண வேண்டியிருக்கும்'' என்றார்.
                ஆபரேஷன் என்ற வார்த்தையைக் கேட்டதும், கதவின் பின்னாலிருந்த தொச்சுவின் மனைவி அங்கச்சி, ஓவென்று அழ ஆரம்பித்தாள்.
                நஞ்சுண்டராவ் வந்தால் தான் வீட்டில் அழுகை ஒலி வரும் என்றால் மணி வந்தால் கூடவா?
                “என்னடி அங்கச்சி... மனத்தை தேத்திக்கோ... வராத கஷ்டம் வந்துடுத்து. ஆபரேஷன் பண்ணிட்டா சரியாப் போய்விடும். முப்பதாயிரம் செலவானாலும் பரவாயில்லை. பணம் சம்பாதிச்சுக்கலாம்... உடம்பு முக்கியமில்லையா...?'' என்றாள் என் மாமியார்.
                சரிதான், இரண்டு நாளைக்கு முன்பு என் இன்ஷூரன்ஸ் பாலிஸி முதிர்வடைந்து முப்பதாயிரத்து நூறு ரூபாய் வந்த விஷயத்தை, அருமை அம்மாவிடம் கமலா சொல்லி விட்டிருக்க வேண்டும்!
                இதை எல்லாம் எண்ணி நான் கவலைப்பட்டதும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று.
                “அத்திம்பேரே... ஏன் இப்படி இடிஞ்சு போய்ட்டீங்க... ஆபரேஷன் பண்ணால் சரியாய் போய்டும்னு டாக்டர் சொல்றார்... நானே கவலைப்படலை... நீங்க இவ்வளவு கவலைப்படலாமா...?''
                “டாக்டர் ஆபரேஷனுக்கு ஒரு தேதி கொடுத்தீங்கன்னா...'' என்று நான் கேட்டதும், சடாரென்று அவர் முகம் மலர்ந்தது.
                “அடுத்த மாசம் இரண்டாம் தேதி வைத்துக் கொள்ளலாம்'' என்றார். மணி எப்பவும் சம்பளத் தேதிக்கு அடுத்த நாள் தான் ஆபரேஷனை வைத்துக் கொள்வார்!
                டாக்டர் மணியின் நர்சிங் ஹோம் என் வீட்டிற்கும் தொச்சுவின் வீட்டிற்கும் சரிபாதி தூரத்தில் இருந்தது. இருந்தாலும் என் மாமியார், “அடியே... அங்கச்சி, பசங்களை அழைச்சிண்டு இங்கேயே வந்துடுங்க. நர்சிங்ஹோம் பக்கத்திலேயே இருக்கிறதாலே போய்வரச் சௌகரியமாக இருக்கும்'' என்று சொல்ல, என் அருமை மனைவி... “ஆமாம், அங்கச்சி, அத்திம்பேருக்கு டயமே கிடையாது. அவரைத் தொந்தரவு பண்ணக் கூடாது. அதனால் நீ தான் எல்லாம் பார்த்துக் கொள்ளணும்'' என்றாள். கணவன் மேல் இத்தனை கரிசனம் கொண்ட மனைவி உலகிலேயே இருக்க முடியாது!
               
                தொச்சுவை அட்மிட் பண்ணுவதற்காக டாக்டர் மணியிடம் அழைத்துப் போனேன்.
                ஒப்புக்காக, “டாக்டர் இப்பவே வெயில் ஆரம்பிச்சுடுத்தே!'' என்றேன்.
                “ஆமாம்... நானும் ஒரு ஏர் கண்டிஷனர் போடணும்னு பார்க்கிறேன். கை வரவில்லை... போகட்டும்.. தொச்சுவை அட்மிட் பண்ணிடறேன். நாலைஞ்சு நாள் அப்ஸர்வேஷனில் வெச்சிட்டு ஆபரேஷன் பண்ணிடலாம்... துரைக்கண்ணு, சாரோட பேஷண்டிற்கு நல்ல ரூமா கொடு... பெரிய எழுத்தாளர்... அதனால் சார்ஜிலே 10% குறைச்சு போடு... ஓகே சார்'' என்று கை குலுக்கி வெளியே அனுப்பினார்.
                துரைக்கண்ணு முற்பிறவியில் நட்சத்திரேயனாக இருந்திருக்க வேண்டும். ரூம் அட்வான்ஸ், சிஸ்டர் ஃபீஸ், மார்னிங் காப்பி என்று நிறைய "ஐடம்"களைப் போட்டு “2985 ரூபாய்'' என்றார்.
                தொச்சு மயக்கம் வந்தவனைப் போல் ஒதுங்கினான்.
                நான் ரூபாயை எண்ணிக் கொடுத்தேன். அந்த ரூபாய் நோட்டுகளை மைக்கிராஸ்கோப்பின் கீழ் வைத்துப் பார்த்தால் என் கண்களிலிருந்து வந்த ரத்தம் அதன் மேல் சொட்டியிருப்பதைப் பார்க்க முடியும்.
                அடுத்த ஒரு வாரம் தொச்சுவுக்கு ராஜோபாசாரம் நடந்தது. என்னவோ வாழ்க்கையின் கடைசி நேரத்தில் இருப்பது போல் அவனும் ஆசைப்பட்டு ஏதேதோ கேட்டான். அங்கச்சியும், கமலாவும், என் மாமியாரும் கஷ்டத்தை பாராது (அதாவது என் பணக் கஷ்டத்தை!) பழம், பால், காம்பளான் என்று அவனுக்குக் கொண்டு போய்க் கொடுத்தார்கள்.
               
                தீபாவளி மாதிரி வீடு அல்லோல கல்லோலப்பட்டது. எல்லோரும் சீக்கிரமே எழுந்து குளிக்கத் தயாரானோம்.
                “டேய் சனியன்களா! சண்டை போடாமல் இருங்கள், பசித்தால் இட்லி வெச்சிருக்கேன். சாப்பிடுங்க... ஆபரேஷன் ஆனதும் வந்துடறேன்'' என்று அங்கச்சி தன் பிரஜைகளுக்குச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
               

                டாக்டர் மணி அரை மணி தாமதித்து வந்தார். வரும்போதே சிடு சிடு என்று எரிந்து விழுந்து கொண்டே வந்தார்... “யூஸ்லெஸ் பசங்க... ஏர்கண்டிஷனை ரிப்பேர் பண்ண வராமல் ஏமாத்தறாங்க. ரிப்பேருக்கு 3000, 4000 என்று அழறதை விடப் புதுசாவே வாங்கிடலாம்...'' என்றார். அவர் சூடாக இருந்ததன் காரணம் ஏர்கண்டிஷனர் வேலை செய்யாதது தான் என்று புரிந்தது.
                “ஸிஸ்டர்... எல்லாம் ரெடியா...'' என்று இரைந்தார்.
                சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியே வந்தார். அப்போதும் எங்களை பார்க்காமலேயே தம் ரூமிற்குப் போய்விட்டார்.
                வார்டுக்கு வந்த தொச்சு அரை மயக்கத்திலிருந்தான். அங்கச்சி, “அம்மா... இப்படி இருக்காரே... ஆபரேஷன்லே நிறைய ரத்தம் போய்ட்டுதே.. அம்மா... இவர் உடம்பு எப்படித் தேறும்? என்ன செய்யப் போறேனோ?...'' என்று அழ ஆரம்பித்தாள்.
                உடனே என் மாமியார்... “அசடே... ஏண்டி... அழறே... எல்லாம் சரியாயிடுவான். தொச்சுவுக்கு மனசு திடம்... நம்மாத்திலேயே ஒரு மாசமோ, இரண்டு மாசமோ இருந்து உடம்பைக் கொஞ்சம் தேற்றிக் கொண்டு போகட்டும்...'' என்றாள்.
                என் மனைவி என்னைப் பார்க்க, புதுமுக நடிகன் மாதிரி முகபாவமில்லாத போûஸக் கொடுத்தேன்!
               
                சுமார் ஒரு வாரம் கழித்து தொச்சு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தான். அந்த சமயத்தில் தான் மணியின் பார்வைக்கு என்னைத் தெரிந்தது. பணம் கொடுக்க வேண்டியவனாயிற்றே. கொடுத்தேன். அதை வாங்கிக் கொண்டே, யாருக்கோ டெலிபோன் செய்து பேசினார். “சரி போ... உன் ரேட்டையே கொடுத்துடறேன். கொள்ளையாக இருக்கு. ஐயாயிரம் ரூபாய் வாய் கூசாமல் கேட்கறே. சரி... சரி... தர்றேன். ரிப்பேர் பண்ணிடு'' என்றார்.

                அந்த ஏர்கண்டிஷன் ரிப்பேர்காரருக்கு மனத்திற்குள் நன்றி செலுத்தினேன். ரிப்பேருக்கு அவர் ஏழாயிரம், எட்டாயிரம் என்று கேட்டிருந்தால், நான்தானே ஆபரேஷன் பீஸ் என்ற பெயரில் அதைக் கொடுக்க வேண்டி இருந்திருக்கும்!

                தொச்சு என் வீட்டிற்கு வந்து ஒரு மாசம் இருந்து உடம்பைத் தேற்றிக் கொண்டு போனான்.
                அவன் சென்ற பிறகு எல்லாச் செலவுகளையும் கணக்குப் பண்ண இப்போது உட்காருகிறேன். லிஸ்ட் அனுமார் வாலாக இருக்கிறது. மொத்தம் கூட்டுகிறேன்...
                ஆ... அம்மாடி... இதென்ன வயிற்றில் இவ்வளவு வலி... ஆமாம்... இப்போது எனக்கு அல்சர் வந்துவிட்டது!

11 comments:

  1. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்,

    என்னதான் சொன்னாலும், தொச்சு வந்து விட்டால், ப்ளாக்குக்கே ஒரு தனி களை வந்து விடுகிறது.

    படிக்கும்போது, எத்தனை முறை வாய் விட்டு சிரித்தேன் என்று கணக்கு வைத்துக் கொள்ள முடியவில்லை.

    அல்சருக்கு மருந்து - இந்தக் கதையை 3 தடவை படித்தால் போதும்.

    வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் அல்லவா

    நன்றி.

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  2. Dr. Money என்று கூடப் பெயர் வைக்கலாம்!

    ReplyDelete
  3. மணி என்பதற்குப் பதில், "மணி பர்ஸ்' என்று அவருக்குப் பெயர் வைத்திருக்கலாம்.

    அந்த ரூபாய் நோட்டுகளை மைக்கிராஸ்கோப்பின் கீழ் வைத்துப் பார்த்தால் என் கண்களிலிருந்து வந்த ரத்தம் அதன் மேல் சொட்டியிருப்பதைப் பார்க்க முடியும்.

    அவர் சூடாக இருந்ததன் காரணம் ஏர்கண்டிஷனர் வேலை செய்யாதது தான் என்று புரிந்தது.

    ரசித்ததை சொல்ல ஆரம்பித்தால் முழுசும் கட் அண்ட் பேஸ்ட் தான் !

    ReplyDelete
  4. Ditto Rishaban's comments! We have to repeat the entire article if we have to list what was enjoyable! We have to thank Sreeman Thochu - poor man, he had to suffer and undergo an operation. And you are making fun of him! To escape from Kamala mami, now you are pretending like the politicians on the verge of going to jail! - R. J.

    ReplyDelete
  5. இதைப் படித்த போது என் மச்சினன், அவன் புத்திர சிகாமணிகள், என் மாமியார் ஆகியோர் நியாபகம் வந்து

    தொலைத்தது !

    சார்...சார்.... கடுகு சார் ..தெரியாமப் போட்டுட்டேன்....ப்ளீஸ் ..தயவு பண்ணி பப்ளிஷ் பண்ணிடாதிங்க ப்ளிஸ் !!

    ReplyDelete
  6. அட...பண்ணிட்டீங்களா?
    எல்...............................................................................லா............................................................................மே........................................................................................................................................போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  7. உங்கள் கமலா டியர் கமலா புத்தகத்தினை நண்பர் கணேஷ் எழும்பூர் ரயில் நிலையத்தில் சந்தித்து கொடுக்க, நான் திருச்சி செல்லும் பல்லவனிலேயே படித்து சிரித்த அதிரடி சிரிப்பில் பல் சுளுக்கிக் கொண்டது மட்டுமில்லாது, சகபயணிகள் என்னை விசித்திரமாய் பார்த்தனர். :)))

    நல்ல வேளை இந்த இடுகை வீட்டிலிருந்தபடியே படித்ததால் சிரித்த சிரிப்பிற்கு அளவில்லை...

    ரிஷபன் சார் சொன்னது போல, சிலவற்றை மற்றும் மேற்கோள் காட்டி பாராட்ட முடியாது... முழுவதையும் போட வேண்டும்.... :))

    நல்ல பகிர்விற்கு நன்றி....

    ReplyDelete
  8. நன்றி....நன்றி....

    ReplyDelete
  9. தொச்சுவிற்கு அல்சர் கதைக்கு இவ்வளவு அழகாக முன்னுரை கொடுத்திருந்ததை மிகமிக ரசித்துச் சிரித்தேன். கஷ்டத்தைப் பாராமல் (என் பணக்கஷ்டத்தை) -போன்ற வரிகளெல்லாம் எப்போது படித்தாலும் தன்னை மறந்து சிரிக்க வைக்கின்றன. கடுகு, கடுகுதான் ஸார்!

    ReplyDelete
  10. சஸ்பென்ஸ்! எனக்குத் தெரியும் இந்த சஸ்பென்ஸ், பின்னால் அவர் வைக்கப் போகும் எக்ஸ்பென்ஸுக்கு முன்னோட்டம் என்று!

    எக்ஸலண்ட் கதை ! பாராட்டுக்கள்..

    ReplyDelete
  11. அவரைக் கூப்பிடறதும் ஒண்ணுதான். யமதூதனைக் கூப்பிடறதும் ஒண்ணுதான் - Its a typical Devan style. Recollect Ms.Kalyani Novel

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!