June 17, 2012

ஐயோ வேண்டாம் ஆஸ்பத்திரி


 முன்குறிப்பு:  இந்த வார துக்ளக்கில் “சோ” தனது  ஆஸ்பத்திரி அனுபவத்தை அபாரமாக எழுதி இருக்கிறார். அதை படித்ததும்  நான் சுமார் 40 வருஷத்திற்கு முன்பு எழுதிய ஆஸ்பத்திரி கட்டுரை  ஞாபகத்திற்கு வந்தது.  அதை இங்கு போடுகிறேன்.
===========================\




 "விசுக்"கென்று பலமாகத் தும்மல் போட்டேன். அதைத் தொடர்ந்து மேலும் பல "விசுக்"குகள்.
                ""பொழுது விடியவில்லை. சுப்ரபாதம் மாதிரி தும்மல் போட ஆரம்பித்து விட்டீர்கள். எத்தனை வருஷமாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இதற்கு வைத்தியம் பண்ணிக் கொள்ளுங்கள் என்று. கேட்டால்தானே?'' என்று கேட்டாள் என் மனைவி கமலா.
              "ஆபரேஷன் பண்ணிக் கொள்ளணும். அப்போதுதான் சரியாகும். இந்த அடுக்குத் தும்மல்'' என்றேன் நான்.
               "பண்ணிக் கொள்ளுங்களேன். எல்லாவற்றிற்கும் ரேஷன் வந்துவிட்டது. ஆனால் ஆபரேஷனுக்கு, நல்ல காலம், இன்னும் ரேஷன் வரவில்லை'' என்றாள் என் இல்லாள்.
                இரண்டே இரண்டு நாள் தங்கி விட்டுப் போகலாம் என்று இரண்டு மாதத்துக்கு முன்பு வந்த என் மாமியார் அந்தச் சமயத்தில், "வீட்டிலே ஒரு கலியாணம், கார்த்தி என்று எதுவும் பேச முடிகிறதில்லை. இப்படி அபசகுனம் மாதிரி தும்மல் போட்டால் என்ன செய்கிறது? போதாதற்கு அப்பப்போ வயிற்று வலி பிலாக்கணம். அல்சரோ என்னவோ, அதையும் பார்த்துக்கச் சொல்லேன், கமலா'' என்றாள்.
                என் மாமியார் சாதாரணமாக என்னைப் பார்த்துப் பேசுவதில்லை. ஏதாவது மரம், மண், நாற்காலி ஆகியவற்றை "மாப்பிள்ளை"யாகக் கருதி, அதைப் பார்த்தே பேசுவாள்!
                என் மனைவி "நானும் எத்தனையோ தடவை படிச்சுப் படிச்சுச் சொல்லியாச்சு. பிடிவாதம். இவா மனுஷாளுக்கு எது இருக்கிறதோ இல்லையோ, அம்மா, பிடிவாதம் வேண்டிய மட்டும் இருக்கு'' என்றாள்.
                பேச்சுக் கொடுத்து மாட்டிக் கொள்ளாமல் நான் சும்மா இருந்து விட்டேன்.
                "அவ்வளவுதான், சுவாமி மெüனம் சாதிக்க ஆரம்பிச்சுட்டார்! யார் நல்லதுக்குச் சொல்கிறோம் என்று புரிந்து கொண்டால் தானே? அவராகப் போய் ஆபரேஷன் பண்ணிக் கொண்டால் தான் உண்டு. ஆபரேஷன் வேண்டாம் என்று தீர்மானம் பண்ணிவிட்டால், அந்தத் திரிவிக்கிரமனே வந்தாலும் நடக்காது'' என்று தன் தாயாரிடம் கூறினாள், என் அருமை மனைவி.
                பெண்ணுக்குப் பரிந்து பேசுகிற பாவனையில், "நீ கொடுத்து வைச்சது அவ்வளவு தான் என்று எழுதி இருக்கும் போது யார் மேலும் குற்றம் சொல்ல முடியாது. அரை மிளகாய் போட்டால், வயிறு எரிகிறது என்கிறார். தும்மல் போடும்போது கண்ணே வெளியே வந்துவிடும் போலிருக்கிறது'' என்று அலுத்துக் கொண்டாள்.
                பதிலுக்கு என் மனைவி ஆரம்பிக்கு முன், "கமலா, வருகிற வாரம் வெலிங்டன் ஆஸ்பத்திரிக்குப் போகிறேன். ஆளை விடு'' என்றேன்.
               தசரதன் மாதிரித் தெரியாத்தனமாக நான் வாக்குக் கொடுத்து விட்டேன். ஆனால் கைகேயி மாதிரி நிற்க வைத்து வாக்கைக் காப்பாற்றச் செய்வாள் என் மனைவி என்று நினைக்கவே இல்லை. அவளாவது விட்டிருப்பாள். ஆனால் அவளுடைய தாயார், என் மாமியார் இருக்கிறாளே, அவளிடம் யார் ஜம்பமும் சாயாது.
                ஏதோ ஒரு நாள் விடியற்காலை நான்கு தும்மல்கள் போட்டதும் என் மாமியார், கால் ஒடிந்து போயிருந்த நாற்காலியைப் பார்த்து, "முதல் காரியமாக இன்றைக்கு ஆஸ்பத்திரிக்குப் போய் மூக்கைக் காண்பிக்க வேண்டும்'' என்றாள், தீர்மானமாக.
                ஆஸ்பத்திரிக்குக் கிளம்பினேன். ஈ.என்.டி. டிபார்ட்மென்டைத் தேடிக் கண்டுபிடித்தேன். சாதாரணமாக ஆஸ்பத்திரிச் சேவகர்கள் ஈயென்று இளிப்பார்கள், ஈய வேண்டியது ஈயப்படும்பரைஇந்த ஈ.என்.டி. இலாக்கா சேவகனோ பெரிய "ஈ"யாக இளித்தான்.  பதிலுக்குப் பல்லைக் காட்டி விட்டு, அவனுக்குக் காசு கொடுத்து விட்டு டாக்டரிடம் போய் மூக்கைக் காட்டினேன்.
                ஆஸ்பத்திரிகளுக்கு என்று சில நெடிகள், பல கெடுபிடிகள் உண்டு. அவை அங்கேயும் இருந்தன.
              "மூக்குத் தண்டு வளைந்திருக்கிறது, ஆபரேஷன் செய்ய வேண்டும்'' என்று கூறி, டாக்டர் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டார்.

                "கமலா, உன் ஆத்துக்காரர் எதுலே நேர்? எல்லாம் கோணல் மாணல்தான். அப்படி இருக்கும்போது மூக்குத் தண்டு மட்டும் எப்படி நேராக இருக்கும்?'' என்று என் மாமியார் கிசுகிசுத்ததைக் கேட்ட நர்ஸ், "சைலன்ஸ். யாரங்கே கத்தறது? மெள்ளப் பேசுங்கள்'' என்று அதட்டல் போட்டாள்.
                இவற்றை நான் கண்டு கொள்ளாமல், வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.
                அப்போது என்னைப் பார்க்க என் மைத்துனன் தொச்சு வந்தான். இரண்டு சாத்துக்குடி பழங்களுடன்.
                "என்ன, ஆபரேஷனா? மூக்குத் தண்டு ரொம்ப டெலிகேட். பார்த்துப் பண்ணணும். சரியாகப் பண்ணவில்லை என்றால் வம்பிலே போய் முடியும். இப்படித்தான் நம்ப ராமசாமிக்கும் ஆபரேஷன் பண்ணிச் செப்டிக் ஆகி, பாவம், ஒரு வாரம் கூட இல்லை, போய்ட்டான். நேற்றுக் கூடப் பேப்பரில் படித்தேன். டான்ஸில் ஆபரேஷனுக்கு லேசாக மயக்க மருந்து கொடுத்தாங்களாம். ஆளே குளோஸ். மயக்க மருந்து ஜாஸ்தியாய்ப் போய் விட்டதால். ஏன், நங்கநல்லூர் நாராயணன் இருக்கானே... இல்லை இல்லை.. இருந்தானே....''  

அடுத்ததும் ஆள் குளோஸ் கதையாகத் தான் இருக்கும் என்று எனக்குத் தெரியும்.
                "ஆபரேஷன் நல்லபடியாக முடியணுமே என்று பயந்து கொண்டிருக்கிறோம். இவனானால் இப்படி, அவர் போய்ட்டார், இவர் குளோஸ் என்று அபசகுனம் மாதிரிப் பேசுகிறானே!'' என்று அக்காகாரி கவலைப்பட்டது முகத்தில் தெரிந்தது. அடுத்த கணமே அதை ரப்பரால் அழித்துவிட்டாள்!
                "என்ன அத்திம்பேரே, என்ன புஸ்தகம் படிக்கிறீங்க? திருக்குறளா? நல்ல புஸ்தகம்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.! ரொம்ப நாளாகவே படிக்க வேணும் என்று எண்ணம். இதை நான் எடுத்துக் கொண்டு போய்ப் படித்துவிட்டுத் தருகிறேன்'' என்றான். (திருக்குறளை எடுத்துக் கொண்டு போனவன் இதுவரை திருப்பித் தரவில்லை.)
                தொச்சு போனதும், பக்கத்துப் படுக்கையிலிருந்த ஒரு கிழவர் லொக், லொக் என்று இருமியபடியே,”என்ன டிரபிள்? டிஃப்ளக்டட் செப்டமா?'' என்று கேட்டார்.
                "இல்லை. மூக்குத் தண்டு வளைந்து இருக்கிறது'' என்றேன்.
               "அதற்குத் தான் அப்படிப் பெயர். அடுக்குத் தும்மல் வருகிறதா? ஆபரேஷனே தேவையில்லை....  நகம் என்று கடைச்சரக்கு இருக்கு. அதை நன்றாக விழுதா அரைச்சு... லேசிலே மசியாது...''
                கிழவர் சொன்னதை நான் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. நாட்டு மருந்து நிபுணர் இங்கு ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார், ஆங்கில வைத்தியம் பார்த்துக் கொள்ள!
                என் அலட்சியத்தைப் பார்த்த அவர், "நகத்தை விடுங்க. இயற்கை வைத்திய முறை இருக்கு. வட இந்தியாவில் இதற்கு மதிப்பு இருக்கு. ’நேத்தி' என்று பெயர். நல்ல முறுக்கேறிய நூல். அதைச் சூடான உப்பு ஜலத்தில் போட்டு, ஒரு நாசி வழியாக, உள்ளே ... விட்டு மத்த நாசி வழியா வெளியே விட்டுடணும். இப்படி ஒரு நாற்பது நாள்...''
                ஏதோ திருமண போட்டோ ஆல்பத்தைப் பார்ப்பது போல் ஆர்வமாக என் எக்ஸ்ரேப் படத்தைப் பார்க்கத் துவங்கினேன். கிழவர் பேச்சை மாற்றினார்.
                கிழவருக்கு ஆஸ்பத்திரியிலுள்ள டாக்டர்கள், நர்சுகள், பியூன்கள் எல்லார் பெயரும் தெரிந்திருந்தன. அவர் வாழ்க்கையில் பெரும் பகுதியை இங்கே கழித்திருக்க வேண்டும். அவர் வியாதியஸ்தர் மாதிரி காணவில்லை. ஆஸ்பத்திரிச் சாப்பாட்டுக்காகப் படுத்திருப்பவர் என்பது பின்னால் தெரிந்தது!
                அவர் தயவால் எனக்குச் சில சௌகரியங்கள் கிடைத்தன. இருந்தாலும் மனஷன் பேசிப் பேசி அறுத்து விட்டார்.
                நர்ஸ் வந்தார், ஊசி போட. "சின்ன ஆபரேஷன் என்கிறார்கள், ஊசி, கீசி எல்லாம் எதற்கு?'' என்று கேட்டேன்.
                "வைட்டமின் மருந்துதான். ஜுரம் எதுவும் வராது. சும்மா எறும்பு கடிக்கிற மாதிரி இருக்கும்'' என்று சொல்லிக் கொண்டே குத்திவிட்டுப் போய்விட்டார்.
                "ஐயோ அம்மா'' என்று லேசாக முனகினேன். நர்ஸ் போட்ட ஊசி பயங்கரமாக வலித்தது.
                ”இதுக்குப் போய் அலட்டிக் கொள்கிறீர்களே. பொறுத்துக் கொள்ளுங்கள். பொறுத்தார் பூமியாள்வார்'' என்றார் கிழவர்.
                ”பூமியாழ்வாராக ஆகவும் வேண்டாம், பூதத்தாழ்வாராக ஆகவும் வேண்டாம்'' என்று கூறிவிட்டு, "உம்மை மாதிரி ஓசிச் சாப்பாட்டுக்காக வந்த ஆசாமி அல்ல நான்'' என்று மனத்துக்குள் கூறிக் கொண்டேன்.

               ”நாளைக்குக் காலையில் ஆபரேஷன், நிம்மதியாகத் தூங்குங்கள்'' என்று நர்ஸ் சொல்லி விட்டுப் போனார்.
                வயிற்றைப் பிசைந்தது. மூக்குக்குள் கூரான கத்தி நெருடியது. சுவரின் மூலையில் மின்சாரப் போர்டின் மேல் மண்டை ஓடு வரைந்த அறிவிப்பு இந்தச் சமயத்திலா கண்ணில் பட வேண்டும்? கண் முன்னே சில எலும்புக் கூடுகள் களி நடம் புரிவது போல் தோன்றின. ஒரே பயங்கரம்.
                நூற்றியெட்டு திருப்பதித் தெய்வங்களை மறுநாள் ஆபரேஷன் அறைக்கு வரும்படி வேண்டிக் கொண்டே கண்ணயர்ந்தேன்.
           
”என்ன அகஸ்தியன் சார்? நாளைக்கு ஆபரேஷன். நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று  சொல்லிக் கொண்டே டியூடி டாக்டர் போனார்! தூங்கினவனை எழுப்பியது தான் அவர் செய்த காரியம்.
                மறுபடியும் தூங்கப் போகிறேனா என்று பார்த்துக் கொண்டிருந்தது போல், கண்களை மூடியதும், "ஸார், நான் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். ஏதாவது வேண்டுமானால் கூப்பிடுங்கள்'' என்று, வேறு ஒரு நர்ஸ் வந்து கூறினாள். "அவளை ஓங்கி அடிக்கலாமா?' என்று கோபம் வந்தது.
                மிகுந்த பிரயாசைப்பட்டுத் தூங்க ஆரம்பித்தேன். வார்டு பையன் வந்து எழுப்பினான். "சார், உங்களுக்கு டெலிபோன். யாரோ அவசரமாகக் கூப்பிடறாங்க'' என்றான்.
                என் மனைவி கூப்பிட்டிருக்க மாட்டாள் என்று தெரியும். இருந்தும் போனேன்.
                ""யார் பேசறது?'' என்று கேட்டேன்.
                ""நான் தான் ஜோசப். அந்தப் பம்பாய்ப் பார்ட்டி மூணு லட்ச ரூபாய் கேட்டான். ரெண்டு லட்சம்தான் இருக்கிறது. ஒரு லட்சம் நாளைக்கு வேண்டும். குந்தன்மல் கிட்டே கேட்கட்டுமா? மார்க்கெட் ஏறப் போகிறது. வாங்கிப் போட்டால் கொள்ளை லாபம் என்கிறான் சார்''
                "கொள்ளையோ கொலையோ எனக்குத் தெரியாது. நீங்க யாரு பேசறது?''
                ""நீங்க யாரு?''
                ""நான் அகஸ்தியன்.''
                ""அகஸ்தியனா? உன்னை எவனய்யா கூப்பிட்டான்? நான் எங்க முதலாளி ஜோசஃப் அகஸ்டியனைத் தான் கூப்பிட்டேன். ஊமைக் கோட்டான் மாதிரி எல்லாச் சமாசாரத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாயே!''
                டெலிபோன் ஆசாமியிடம் ’கேட்டு’க் கொண்டு விட்டு வந்து படுக்கையில் படுத்தேன்.

                ”எல்லாம் ரெடி. தியேட்டருக்குப் போகலாம்'' என்று புன்னகையுடன் கூறினாள் நர்ஸ்.
                ஏதோ சினிமா தியேட்டருக்கு நான் போகப் போவது போல் குஷியாகக் கூறினாள். நான் போகப் போவது ஆபரேஷன் தியேட்டர். என் பயம் எனக்கல்லவா தெரியும்? தொச்சு சொன்ன ’குளோஸ்', ’ஆள் அவுட்' கதைகள் எல்லாம் பிசாசுக் கதைகள் போல் பயமுறுத்திக் கொண்டிருந்தன.
                மயக்க மருந்து கொடுத்தார்கள்.
                ஆபரேஷனும் நடந்தது.
                வார்டில் கொண்டு விட்டார்கள். நினைவு திரும்பியதும் மூக்கு வலிப்பதை உணர்ந்தேன்.
                "ஐயோ, அம்மா'' என்று நான் முனகுவதைக் கேட்ட என் அருமை மனைவி கமலா, "என்ன முனகல், சின்னக் குழந்தை மாதிரி? இந்த மூக்கால் அழுகை, ஆபரேஷனுக்குப் பிறகாவது நின்று விடும் என்று பார்த்தேன். ஆபரேஷன் என்றால் வலிக்கத் தான் செய்யும்'' என்றாள்.
                உடனே என் மாமியார், "சில பேர் வலி இல்லாவிட்டாலும் முனகுவார்கள், கமலா'' என்று ஒரு பொன்மொழியை உதிர்த்தாள்.
                நர்ஸ் வந்து ஏதோ ஊசி போட்டாள். என்ன ஆச்சரியம். மூக்கு வலியே தெரியவில்லை. ஊசி போட்ட இடந்தான் பயங்கரமாக வலித்ததே! அந்த வலியில் மூக்கைப் பற்றி யார் நினைப்பார்கள்?
                ரொட்டி, வெண்ணெய், பால் என்று வந்தன. "இவை என் பசிக்கு எந்த மூலை?'' என்று கேட்டேன்.
                ""தலைவாழை இலை போட்டுச் சம்பிரமமாகக் கூட்டு, குழம்பு, பச்சடியோடு மூக்குப் பிடிக்கச் சாப்பிட வேண்டுமா? ஜலதோஷம் பிடித்துத் தும்ம ஆரம்பிச்சா ஆபரேஷன் ரணம் ஆறாது. உங்கள் பசி ஆறும்: ஆனால் ரணம் ஆறாது.'' என்று கேலியாகக் கூறினாள் நர்ஸ்.
                பக்கத்துப் படுக்கைக் கிழவர் சாவதானமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
                ""எப்படி இருக்கிறீங்க?'' என்று கேட்டுக் கொண்டே வந்த தொச்சு ”நான் வாங்கி வந்த சாத்துக்குடியைச் சாப்பிடவே இல்லையா? நல்ல பழமாக வாங்கி வந்தேனே! சரி, எப்படி இருக்கிறீங்க? யாரு ஆப்பிள் கொடுத்தாங்கா? உடம்புக்கு ஆகுமா என்று டாக்டரைக் கேட்டுவிட்டுச் சாப்பிடுங்க'' என்று கூறியபடி ஒரு பழத்தை எடுத்துக் கத்தியால் நறுக்கினான்.
                நான் ஆஸ்பத்திரி ரொட்டியை மாடு மெல்வது போல் கஷ்டப்பட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அவன் ஆப்பிள் துண்டுகளைத் தின்றான்.
                "அடே, பரவாயில்லையே! உள்ளூர் ஆப்பிளாக இருந்தாலும் சுமாராக இருக்கிறது'' என்று சொல்லிக் கொண்டே மூன்று பழத்தைக் காலி செய்து விட்டான்!
                மாலை நாலரை மணிக்கு டீயும் பிஸ்கட்டும் வந்தன. பிஸ்கட்டுகள் ஒருக்கால் தங்கப் பிஸ்கட்டுகளாக இருக்குமோ என்று சந்தேகம். அவ்வளவு கடினமாக இருந்தன!
                ஐந்து மணிக்கு வார்டுபாய் வந்தான், சாப்பாட்டு ட்ரேயுடன். "இவ்வளவு சீக்கிரமாகவா சாப்பாடு?'' என்று கேட்டேன்.
                "அதுக்கு நான் என்ன செய்கிறது? என் வேலை நேரம் ஐந்தரையோடு முடிந்துவிடுகிறது'' என்று சொன்னான். அதோடு, "சார், சீக்கிரம் சாப்பிடுங்க. தட்டுக் கணக்கு ஒப்பிச்சுட்டுப் போகணும்'' என்றான்.
                பக்கத்துப் படுக்கைக் கிழவர் இதற்குள் தட்டைக் காலி செய்து விட்டிருந்தார்!


                இரண்டு நாள் சென்றிருக்கும். முன்பின்தெரியாத ஆசாமி, "வணக்கங்க. சௌகரியமுங்களா?'' என்றார். யார் இவர் என்று புரியாமல், "பரவாயில்லை'' என்றேன்.
                சிறிது நேரம் கழித்து வேறு ஒருவர் வந்து, "சுகமாயிட்டதுங்களா உடம்பு?'' என்றார்.
                இப்படிப் பத்துப் பேர் வந்து விசாரித்தார்கள். யார் இவர்கள்?
                அன்று மாலையே பதில் கிடைத்து விட்டது. அன்று என்னை டிஸ்சார்ஜ் செய்தார்கள். எல்லாம் இலவசம் என்று முதலில் கூறியவர்கள் கடைசியில் பெரிய பில்லைக் கொடுத்தார்கள். சாதாரண சமயமாக இருந்தால் மூக்கால் அழுது கொண்டே கொடுத்திருப்பேன். ஆபரேஷன் ரணம் பூரணமாக ஆறாத காரணத்தால், பேசாமல் பணத்தைக் கட்டி விட்டுத் திரும்பினேன். என்ன ஆச்சரியம்! நான் பல் டிபார்ட்மெண்டுக்குள் நுழைந்து விட்டேனா? என்னை நோக்கி அத்தனை பல்களும் இளித்தன. எல்லாரும் காலையில் வந்து விசாரித்தவர்கள்தான். என் வார்டில் பணியாற்றி எனக்குச் சேவை செய்தவர்களாம்! இனாம் என்ற மூன்றெழுத்து, அந்தப் பற்களின் அணிவகுப்பில் பல இடங்களில் மின்னிக் கொண்டிருந்தது. சிவனே என்று பணத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்பினேன்.
               
                வீடு திரும்பி ஒரு வாரம் பத்து நாள் ஆகியிருக்கும் மூக்கில் வலி போய்விட்டது; தும்மல், ஜலதோஷம் என்ற பேச்சே இல்லை.
                வழக்கம் போல் என் மாமியார் ஓடாத கடிகாரத்தைப் பார்த்தபடி, "பயந்து கொண்டு இருந்தீங்களே. சின்ன ஆபரேஷன். தும்மல் தொல்லை போய்விட்டது, இல்லையா? வருகிற வாரம் போய் இந்த வயிற்று அல்சருக்கும் என்ன ஏது என்று பார்த்துவிட்டு வாருங்கள்'' என்றாள்.
              ”அம்மா, நீ சொல்கிறது அவர் காதிலே ஏறாது'' என்றாள் என் மனைவி கமலா.
                "என்னது? மறுபடியும், ஆஸ்பத்திரிக்கா? ஐயோ வேண்டாம் ஆஸ்பத்திரி!'' என்று பீதியுடன் நான் கூறினேன்.
                அடுத்த கணம் மூக்கில் ஏதோ குளுகுளு உணர்வு ஏற்பட்டது. ஆரம்பித்து விட்டது விசுக், விசுக்கென்று அடுக்குத் தும்மல்!
                என் வாழ்க்கையில் முதல் தடவையாக என் மனைவியும் மாமியாரும் அதிர்ச்சியால் வாயடைத்துப் போனதை அப்போது தான் பார்த்தேன்!
               

11 comments:

  1. அடடா... உங்களால அந்த ஆஸ்பத்திரிக்கும், அங்கிருந்தோருக்கும் நல்ல லாபம்... ஆனா உங்களை தும்மல் விட்ட பாடில்லையே... :(

    நல்ல கதை...

    ReplyDelete
  2. டிப்பிகல்!
    சுவாரஸ்யம்.
    கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா கூட ஒரு ஆஸ்பத்திரி அனுபவம் எழுதியிருந்தார். அதில் அவர் அந்தப் பச்சை உடை அணிந்து கொள்வதையே ஒரு இன்சல்டாகச் சொல்லியிருப்பார்!

    ReplyDelete
  3. ஆஹா..சூப்பர்..இதைப் போல் எனக்கும் ஒரு ஆஸ்பத்ரி அனுபவம் உண்டு..இதோ......
    http://aaranyanivasrramamurthy.blogspot.in/2011/06/blog-post.html

    ReplyDelete
  4. அப்புறம்..? 40 வருஷமா தும்மிக்கொண்டே இருக்கிறீர்களா? கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு அந்த ஆஸ்பத்திரியையும், டாக்டரையும் இழுக்கவில்லையா? அல்சர் சரியாகிவிட்டதா? (நீங்கள் ‘வெங்கடரமணா போலி ஸ்டாலில்’ கார போலியும், மிளகாய் பஜ்ஜியும் சாப்பிட்டு இருக்கிறீர்களா?! )

    இவ்வளவு நகைசுவையாக எழுதினால், உடல் நலம் விசாரிக்க மறந்துவிடும்!

    -ஜெ.

    ReplyDelete
  5. "கமலா, உன் ஆத்துக்காரர் எதுலே நேர்? எல்லாம் கோணல் மாணல்தான். அப்படி இருக்கும்போது மூக்குத் தண்டு மட்டும் எப்படி நேராக இருக்கும்?'' என்று என் மாமியார் கிசுகிசுத்ததைக் கேட்ட நர்ஸ், "சைலன்ஸ். யாரங்கே கத்தறது? மெள்ளப் பேசுங்கள்'' என்று அதட்டல் போட்டாள்.

    ஏதோ திருமண போட்டோ ஆல்பத்தைப் பார்ப்பது போல் ஆர்வமாக என் எக்ஸ்ரேப் படத்தைப் பார்க்கத் துவங்கினேன்.

    நகைச்சுவை சரவெடி..

    ReplyDelete
  6. நர்ஸ் வந்து ஏதோ ஊசி போட்டாள். என்ன ஆச்சரியம். மூக்கு வலியே தெரியவில்லை. ஊசி போட்ட இடந்தான் பயங்கரமாக வலித்ததே! அந்த வலியில் மூக்கைப் பற்றி யார் நினைப்பார்கள்?

    -வாய்விட்டு மனம்விட்டுச் சிரித்தேன். இதுபோலப் பல இடங்களில். ஆஸ்பத்திரி (அவஸ்தை) அனுபவத்தைக்கூட இப்படி சிரிக்கச் சிரிக்க சொல்வது... Only Possible to KADUGU SIR! HATS OFF!

    ReplyDelete
  7. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    ரசித்து ரசித்துப் படித்தேன், அதிலும் தொடர் தும்மல் போடும் அந்த க்ளைமாக்ஸ் பிரமாதம்!

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  8. பாராட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி.எதிர்காலத்தில் ஒரு நகைச்சுவை எழுத்தாளனாக வருவதற்கு நீங்கள் அளிக்கும் பாராட்டு வழி வகுக்கும்!!!:) -- கடுகு

    ReplyDelete
  9. கட்டுரை “சோ” good -- மணா

    ReplyDelete
  10. //...எதிர்காலத்தில் ஒரு நகைச்சுவை எழுத்தாளனாக வருவதற்கு// இதற்குமேல் உங்களாலேயே குனிய முடியாது, பார்த்து, பார்த்து... முதுகு வலி வந்துவிடப் போகிறது! - ஜெ.

    ReplyDelete
  11. இத்தனை சிரமம் பட்டும் தும்மல் நிற்கவில்லையே !

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!