March 01, 2020

ரஸ்ஸல் என்பவரின் வரலாறு


யார் இந்த  ரஸ்ஸல்?  கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய  வரலாற்றை எழுத வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். 
சாதனை படைத்தவர்கள், நெகிழ்ச்சியூட்டும்  வரலாற்று நாயகர்கள், அசகாய சூரர்கள், ஏன் அட்டகாசமான தில்லுமுல்லு செய்தவர்களைப் பற்றிய விவரங்கள் போன்ற பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், ரஸ்ஸலின் வரலாற்றை இங்கு தருகிறேன்.
ரஸ்ஸல் ஒரு ஹாலிவுட் நடிகர் என்று ஒரு வரி அறிமுகத்துடன் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.  ஹாலிவுட் வார்த்தைக்கு ஒரு காந்த சக்தி இருப்பதும் காரணம்.
ரஸ்ஸல் ஒரு ராணுவ வீரன். கனடா நாட்டில் 1914-ல் பிறந்தவர். இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாநிலத்தில் இருந்த ராணுவ முகாமில் பாரசூட் வீரர்களுக்குப் பயிற்சி   கொடுத்துக் கொண்டிருந்தான்.
 அவன்   டி. என். டி.  எனும் பயங்கர குண்டுகளைக் கையில் வைத்துக் கொண்டு பாடம் சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு டி.என். டி. குண்டு என்ன காரணத்தினாலோ  தானாக வெடித்துவிட்டது.  
 ஏதோ சின்ன தவறு நிகழ்ந்துவிட்டது   டி. என். டி. ஒரு பயங்கர குண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.   அடுத்த செகண்ட் நினைவிழந்தான்.  நினைவு திரும்பியபோது மருத்துவ மனையில் இருந்தான்.  மெதுவாக  சுதாரித்து சுற்றுமுற்றும் பார்த்தான். கைகள் இரண்டிலும் கட்டு போடப்பட்டிருந்தது.    இரண்டு கைகளிலும் மணிக்கட்டும் ஐந்து விரல்களும் போய் விட்டதை உணர்ந்தான். டி.என்.டி அவற்றை பலி வாங்கி இருந்தது.  
  முப்பதாவது வயதில் கைகளை இழந்த அவன், தன்னுடைய வாழ்க்கையே அதலபாதாளத்திற்குச் சென்று விட்டது போல் உணர்ந்தான்.   வாழ்க்கையே இருண்டுவிட்டது. வருத்தப்பட கூட அவனுக்குத்  திராணியில்லை. இனி உயிருடன் இருப்பதைவிட   செத்துப் போவதே மேல்  என்று எண்ணினான் ரஸ்ஸல்.

        அவனைப் பலர் மருத்துவமனைக்கு வந்து பார்த்தார்கள்; ஆறுதல் கூறினார்கள்; நம்பிக்கை ஊட்டினார்கள். அவையெல்லாம் வெறும் வார்த்தைகளாகத் தான் அவனுக்குத் தோன்றின.
 ஒருநாள் ரஸ்ஸலைப் பார்க்க சார்லி   (CHARLEY MCGONNEL) என்ற ராணுவ அதிகாரி வந்தார். அவர் முதல் உலக யுத்தத்தில் பங்கு பெற்றவர். அவரும் போரின் போது கைகளை இழந்தவர். அவனுக்கு சார்லி ஆறுதல் கூறினார்; நம்பிக்கை ஊட்டினார். ”மனம் தளர்ந்து போகாதிருக்க யோசனைகளையும் கூறினார். அதன் பிறகு அவன் மன உளைச்சலில் இருந்து மெல்ல மெல்ல வெளியே வரத் துவங்கினான். ரஸ்ஸலுக்கு  எமர்சனின் ஒரு பொன்மொழி எப்போதும் நினைவிலிருக்கும்; அது அவனுக்கு   மிகவும் பிடித்த பொன்மொழி. அதையும் அவ்வப்போது நினைவுபடுத்திக் கொள்வான். (அந்தப் பொன்மொழி இதுதான்” ”நீங்கள் இழந்த எல்லாவற்றிற்கும் ஈடாக வேறு   சிலவற்றை நீங்கள் சம்பாதித்துக் கொண்டு விடுவீர்கள்” என்று எமர்சன் கூறியதை எப்போதோ படித்தது அவன் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டிருந்தது.. கை போனாலும் வேறு ஏதாவது நமக்குக் கிடைக்கும் என்று அவன் மனம் சொல்லியது.  இந்த வாசகமும் சார்லஸின் அறிவுரையும்  ரஸ்ஸலை மெதுவாக தேற்றின.  
 அவனது கைவிரல்களுக்குப் பதில் ஸ்டீல் கம்பிகளால் ஆன விரல்களைப் பொருத்தினார்கள். அவற்றை அவன் உபயோகிக்கப் பழகினான்; தேர்ச்சியும் பெற்றான். வெறும்  தேர்ச்சி அல்ல. அபாரமான தேர்ச்சி!
இயற்கையான விரல்களால் செய்யக்கூடிய எல்லாவற்றையும் அவனால் செய்ய முடிந்தது. தீவிரப் பயிற்சி, முயற்சி மனோதிடம், அவனை இயக்கின.  
 “நீ ஒரு மாற்றுத் திறனாளி தான்.  நீ முடங்கிப் போக வேண்டிய தில்லை. உன்னால் எல்லாம் செய்ய முடியும். சற்று கடினமாக இருக்கும் செய்வதற்கு. போகப் போக எளிதாகிவிடும்” என்கிற ரீதியில் சார்லஸ் கூறியது அவன் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.
  கையை இழந்து விட்டோமே என்று மனம் உடைந்து போகவில்லை. தன்  விரல்களால் எல்லா வேலைகளையும்  எளிதில் செய்யப் பழகிக் கொண்டான்.  
 தன் துதிக்கையால் யானை ஊசியைக் கூட எடுக்கும் என்பார்கள் அது மாதிரி ரஸ்ஸல், தன் கம்பி விரல்களை அனாயசமாகவும் லாவகமாகவும் இயக்கப் பழகி விட்டான்.  
   “எதை வேண்டுமானாலும் என்னால் எடுக்க முடியும் - ஒரே ஒன்றைத் தவிர: நண்பர்களுடன் ரெஸ்டாரன்ட் போனால் சர்வர் கொடுக்கும் பில்லை மட்டும் என்னால் எடுக்க முடியாது!” என்று சொல்லிச் சிரிப்பான்!

 உடல் நலம் அடைந்ததுடன், ராணுவ வேலையை உதறி விட்டு பாஸ்டன் பிஸினஸ் கல்லூரியில்  சேர்ந்து படித்து பட்டம் பெற்றான்.
ரஸ்ஸலின் பல வருடக் காதலி ரீட்டா, அவனைத் திருமணம் செய்து கொண்டாள். (அந்த திருமண வீடியோவில், ரஸ்ஸல்  தன் கம்பி விரல்களால் மனைவியின் விரலில்  மோதிரம் போடுவதைப்  பார்க்கும்போது எவரும் உருகிப் போவார்கள் என்பது நிச்சயம்.     லாவகமாகப் போட்டது மட்டுமல்ல, நின்று நிதானமாக கனிவுடன் போட்டது  மெய்சிலிர்க்கச் செய்யும்!)

இந்த காலகட்டத்தில், அவனது செயற்கை விரல் வித்தைத் திறமையைக் காட்ட   ‘ஒரு சார்ஜென்டின் டைரி’ என்ற தலைப்பில் ஒரு டாக்குமென்டரி படம் எடுத்து, போரில் காயமடைந்த வர்களுக்குப் போட்டுக் காண்பிக்க ஆரம்பித்தார்கள்.    இதன் காரணமாக ரஸ்ஸல்  மிகவும் பிரபலம் அடைந்து விட்டான்.
 அதிபர் கென்னடியும், அதன் பின் வந்த அதிபர் லிண்டன் ஜான்சனும்  அவனை ராணுவ வீரர்களின் மறுவாழ்வு கமிட்டியின் தலைவராக நியமித்தனர்.  
சுமார் இருபது வருடம் இப்பதவியில் இருந்த போது வருடம் பூராவும் ஏராளமான உரைகளை நிகழ்த்தினார். (இனி ரஸ்ஸலை அவர் என்று குறிப்பிடுவதுதான்  சரி!)  
போரில் காயமுற்றவர்களுக்கு தைரியத்தையும் நம்பிக்கையை யும் ஊட்டினார். ரஸ்ஸல் பவுண்டேஷன் என்ற ஒரு அமைப்பையும்  நிறுவினார். 

  ‘வெற்றி என் கையில்’ என்ற தலைப்பில் 1949’ல் ஒரு சுயசரிதம் கூட எழுதி விட்டார். புத்தகம் அபாரமாக விற்பனை ஆயிற்று. அவருடைய ’ஒரு சார்ஜென்டின் டைரி’ என்ற படத்தை பார்த்த
 ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் வில்லியம் வைலர் 1946-ம் ஆண்டு   ஒரு திரைப் படம் எடுத்தார்.  போரில் காயமடைந்தவர்கள் பட்ட கஷ்டங்களையும் அவர்கள் மீண்டு வந்ததையும்   THE BEST YEARS OF OUR LIVES என்ற தலைப்பில் திரைப்படமாக எடுத்தார். இதில் பல ராணுவ வீரர்களின் சாகசங்களையும், போரில் ஏற்பட்ட காயங்களையும் அவற்றை திடமனதுடனும் விடாமுயற்சியுடனும் போராடி வெற்றி பெற்றதை, நெஞ்சையள்ளும் படமாக எடுத்தார். 1946’ம் ஆண்டு அந்தப் படம் ஆஸ்கர் பரிசை வென்றது. எத்தனை ஆஸ்கர்  தெரியுமா? ஒன்றல்ல, இரண்டல்ல. ஏழு ஆஸ்கர் பரிசுகள்! இது முக்கியமல்ல, இந்த படத்தில் நடித்த ரஸ்ஸலுக்கு  இரண்டு ஆஸ்கர் பரிசுகள் கிடைத்தன.  ஆஸ்கர் சரித்திரத்திலேயே ஒருவருக்கே, அதுவும் ஒரே படத்தில் நடித்த, தொழில் முறை அல்லாத நடிகருக்கு   இரண்டு ஆஸ்கர் பரிசுகள் தரப்பட்டது   இவர் ஒருவருக்கு மட்டுமே!
             ராணுவ போர்வீரர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் தரும் கேரக்டருக்காக, ஒரு மனிதாபிமான ஆஸ்கர் பரிசும், திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மற்றொரு ஆஸ்கர் பரிசும் பெற்று தனிப் பெருமை பெற்றவர் ரஸ்ஸல்.

  அவருடைய மனைவி நீட்டா 1978-ல் காலமாகிவிட்டார். அதன்பின் 1981’ல்  Betty Marshalsea - யைத்   திருமணம் செய்து கொண்டார்.

1992 ஆம் ஆண்டு.  அந்த இரண்டாம் மனைவிக்கு மருத்துவ சிகிச்சை செய்யவேண்டி இருந்தது. அதற்குத் தேவையான பணவசதி ரஸ்ஸலிடம்  இல்லை. என்ன செய்தார் தெரியுமா? ஆஸ்கர் பரிசை விற்க  முடிவு எடுத்தார். இதை அறிந்த ஹாலிவுட் ஆஸ்கர் கமிட்டி, ஆஸ்கர் பரிசை விற்க வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தார்கள்.  இவர் செவிசாய்க்கவில்லை.
 60,500  டாலருக்கு விற்று விட்டார். ( இந்த சம்பவத்திற்குப் பிறகு பரிசு பெறுபவர்களிடம் “பரிசை விற்க மாட்டோம்” என்ற பிரமாணப் பத்திரம் வாங்க ஆரம்பித்ததாம் ஆஸ்கர் கமிட்டி.)  

ரஸ்ஸல்  2002 -ம் வருஷம் தனது 88-வது வயதில்  மாரடைப்பால் காலமானார்.

 இவரைப் பற்றிய குறிப்பு  ‘என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா’ வில்  கூட வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1

9 comments:

  1. சுவையான குறிப்புகள்.   நம்பிக்கையூட்டும் வரலாறு.

    ReplyDelete
  2. நம்பிக்கை தரும் மனிதர்கள்....

    அவரைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. மதிப்பிர்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    படிக்கும்போது மனம் நெகிழ்கிறது. அவருடைய புகைப்படத்தில் அவரது கண்களில் தெரியும் ஒளி, அவரது தன்னம்பிக்கையைக் கூறுகிறது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  4. முதலில் பெர்ட்ரன்ட் ரஸ்ஸல் என நினைத்துப் படிக்க ஆரம்பித்தேன். இவரைப் பற்றி அறிந்ததில்லை. தன்னம்பிக்கை ஊட்டும் அருமையான கட்டுரையை அளித்ததுக்கு நன்றி.

    ReplyDelete
  5. நானும் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் பற்றிய கட்டுரை என்று நினைத்து படிக்க வந்தேன். ஸ்வாரஸ்யமான தகவல்கள். 

    ReplyDelete
  6. என்ன ஒரு அருமையான மனிதரைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். படிக்க மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. கூகிளில் எடுத்துப் போட்ட கட்டுரை மாதிரி இல்லாமல், அனுபவித்து ஒருவர் எழுதினால் எப்படி அது மனதைக் கிள்ளுமோ அப்படி இருந்தது.

    இந்த ஆஸ்கார் கமிட்டி, அந்தப் பணத்தை ரஸ்ஸலுக்குக் கொடுத்துப் பெருமை சேர்த்துக்கொண்டிருக்க முடியாதோ (சாதனை மனிதர் என்பதால்).

    என் தனிப்பட்ட கருத்து.. எப்படி அவ்வளவு சம்பாதிப்பவர்கள், தேவைக்கான பணம் இல்லாமல் இருந்துவிடுகிறார்கள்? பொதுவாக அமெரிக்கர்களே சேமிப்பை மேற்கொள்ளாமல் செலவழித்துவிடுகிறார்களா? 60% அமெரிக்கர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் ஆயிரம் டாலர்களுக்கும் குறைவாகவே வைத்திருக்கிறார்கள் என்று படித்தேன். அதனால் எழுந்தது இந்தச் சந்தேகம் (இன்னும் 20% ஒன்றும் இல்லாமல் இருக்கிறார்கள் என்றும்படித்தேன்)

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்கர்ள்கள் இப்போது மாறிவிட்டார்காள்...( இடுப்பு பகுதியில் 15 நாளாக பயங்கர வலி. பிஸியோ தெரபிக்குப் போகமுடியவில்லை. டாக்டர்கள் face time`ல் பார்க்கிறார்கள்.அதனால் தான்...- கடுகு

      Delete
  7. இரு வாரப் பயணத்தால் இப்போதுதான் இந்தக் கட்டுரையைப் படிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.

    ReplyDelete
  8. என்ன சார்... ரொம்ப நாளாச்சே..... பின்னூட்டத்துக்கும் பதிலைக் காணோமே...

    நலம்தானா? நலம்தானா? உடலும் உள்ளமும் நலம்தானா?

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!