May 10, 2014

வாயைத் திறந்தால் ஆபத்து!


அமெரிக்கக் காமெடியன் புகழ் பெற்ற Groucho Marx (1890-1977) நாடக, திரைப்பட நடிகர்   மட்டுமல்ல நல்ல நகைச்சுவை எழுத்தாளரும் கூட. டி..வி ஷோக்களிலும் கலக்கி இருக்கிறார்.
மார்க்ஸ் பிரதர்ஸ் என்ற பெயரில் அவரும், CHICO, ZEPPO, HARPO  என்ற அவரது மூன்று சகோதரர்களும் புகழ் பெற்று விளங்கினார்கள்.
 
Groucho எழுதும் கடிதங்கள் மிகுந்த நகைச்சுவையுடன் இருக்கும். 1965-ல் அமெரிக்க  LIBRARY OF CONGRESS  அவரது கடிதங்களைத் தொகுத்து வைக்க விரும்பியது. இது மிகப் பெரிய கௌரவம். GROUCHO LETTERS  என்ற பெயரில் வெளியான புத்தகத்தை, பின்னால் பிளாக் எழுதுவதற்கு உதவும் என்று அப்போதே 1970-ல் வாங்கி விட்டேன். ("பின்னால் பிளாக் எழுதுவதற்கு உதவும் என்று அப்போதே 1970-ல் வாங்கி விட்டேன்" என்பது  ரீல் தானே என்று கேட்பவர்களுக்கு என்னுடைய பதில்: ஆம்!)

சமீபத்தில் அவர் எழுதிய GROUCHO MARX AND OTHER SHORT AND LONG TALES என்ற புத்தகம் எனக்கு கிடைத்தது. நியூயார்க்கர்,  நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அதில் இருந்த WHY HARPO DOESN’T TALK என்ற கட்டுரையில் ஒரு சுவையான தகவல் இருந்தது. அந்தக் கட்டுரையைச் சுருக்கித் தருகிறேன்.

·                *                 *

ஒரு சமயம் ILLIONOIS மாநிலத்தில் ஒரு சிறிய ஊரில் எங்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.  எங்கள் குழுவில் நாங்கள்  நாலு பேர்,  துணை நடிகர்கள் நாலு பேர்,  நடிகைகள் எட்டு பேர் இருந்தோம். ஒரு புதன்கிழமை மாலை அந்த ஊருக்குப் போய் சேர்ந்தோம். ஹால் மிகவும் சிறியதாக இருந்தது.
மறுநாள் மியூசிக் ரிகர்சல் பார்க்கப் போனோம். இசையைப் பொறுத்தவரை நான் ஒரு பெரிய பூஜ்யம். இருந்தாலும் குழுவின் தலைவைனாயிற்றே நான்! அதனால் போனேன்!
ஸ்டேஜிற்குள் நுழைந்ததும். எங்கிருந்தோ ’தாதா’ மாதிரி ஒரு ஆசாமி வந்தார். “யாருப்பா நீ.. போர்டைப் பார்க்கலை? இங்கே சுருட்டு குடிக்கக் குடிக்கக்கூடாது. ஆமாம்.. உனக்கு ஐந்து டாலர் அபராதம் போடறேன்” என்றார்.  
“முதல்லே நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டேன்.
“ நானா?.. என்னையா கேட்கறே? நான் ஜான் வெல்ஸ். இந்த ஹாலின் மானேஜர்; சொந்தக்காரன். இங்கு சட்டவிதிகள் இருக்கின்றன. அந்த போர்டில் என்ன போட்டிருக்கிறது என்பதைப் பார்.
“போர்டா? .. அதோ அதுவா?.. அது என் கண்ணிலே படவில்லையே. கண்ணுக்குத் தெரியாத ஒரு மூலையிலே போட்டுவிட்டால் போதுமா? போர்டை ஏதாவது பாத்ரூமுக்குள்ளே மாட்டி வெச்சு, கதவை மூடி வெச்சிருக்கலாமே” என்றேன்.”
“ ஐயா.. நக்கல் புலியா? இப்படி சொன்னதுக்கு நீ ஐந்து டாலர் அபராதம் கட்டணும்” என்றார் அதிகாரமாக.

ஆம், நடிகர் யூனியன் என்பதெல்லாம் இல்லாத கால கட்டம். தியேட்டர் சொந்தக்காரர்கள் சிற்றரசர்கள் மாதிரி. அவர்கள் வைத்தது தான் சட்டம். அந்த மகாபாதகர்கள் அபராதம் போட்டால் கட்டித்தான் ஆகவேண்டும்.
ஓட்டல் அறைக்கு வந்ததும் மற்றவர்களிடம் இதைச் சொன்னேன். “ அபராதத்தை நீக்காவிட்டால் மேடை ஏறமுடியாது” என்று சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்தோம்..
இரண்டரை மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாக வேண்டும். மேக்கப் அறையில்இரண்டு மணிக்கு நாங்கள் தயாராகி விட்டோம்.வெல்ஸைக் கூப்பிட்டுக் கொண்டுவர எங்களில் மூத்தவரான CHICO- வை
அனுப்பினோம்.
CHICO அவரிடம் போய்” மிஸ்டர் வெல்ஸ். GROUCHO-விற்கு நீங்கள் போட்ட பத்து டாலர் அபராததை வாபஸ் வாங்காவிட்டால் நாங்கள் மேடை ஏறமாட்டோம்” என்றார்.
“ நீங்க என்ன சொல்றீங்க?.. இந்த தியேட்டருக்கு என்று சில சட்ட திட்டங்கள்  இருக்கு. புகைப் பிடிக்ககூடாது என்று ஒரு சட்டம். உங்கள் GROUCHO சுருட்டுப் பிடித்துக் கொண்டு உள்ளே வந்தார். ஐந்து டாலர் அபராதம் விதித்தேன்.  அதை வாபஸ் பெறமாட்டேன்” என்றார் கண்டிப்பாக.
அதற்குள் நிகழ்ச்சி ஆரம்ப நேரமாகிவிட்டது. 

அப்போது ஹார்போ, மானேஜரிடம் ” போகட்டும். நாங்கள் பத்து டாலர் தருகிறோம் நீங்களும் பத்து டாலர் தர வேண்டும். மொத்தம் இருபது டாலர். ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாகக் கொடுத்துவிடலாம்.” என்றான்.
“ நீங்கள் பத்து என்ன, இருபது கூட கொடுங்கள்.. நான் எதுவும் கொடுக்கமாட்டேன்: என்று வெல்ஸ் உறுமினார். அதற்குள் அரங்கத்திலிருந்த பர்வையாளர்கள் ஷோ தாமதம் ஆவதால் கத்த  ஆரம்பித்து விட்டார்கள்.”
”சரி..  சரி” என்று வேண்டா வெறுப்பாகச வெல்ஸ் சம்மதித்தார். நிகழ்ச்சியைத் தொடங்கினோம்.

சனிக்கிழமை இரவு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, பெட்டி படுக்கை எல்லாம் கட்டி எடுத்துக் கொண்டு, ரயிலை பிடிக்கக் கிளம்பினோம். அப்போது வெல்ஸின் இரண்டு பணியாட்கள் இரண்டு மூட்டைகளைக் கொண்டு வந்து ‘தொப்’ என்று போட்டார்கள்.
“என்ன மூட்டை” என்று கேட்டோம்.
“ இது உங்களுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளம். ஒவ்வொரு மூட்டையிலும்  நூற்றிப் பன்னிரண்டரை டாலர் இருக்கிறது. எல்லாம் பென்னி நாணயங்களாக” என்றார்கள்
எண்ணிப் பார்க்க அவகாசம் இல்லததால் இரண்டு மூட்டைகளையும் எடுத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு விரைந்தோம்.
ரயில் வந்ததும் ஏறினோம். ரயில் மெள்ள நகரத் துவங்கியது. அந்த சமயம், எங்களை வழியனுப்ப வந்து கொண்டிருந்த வெல்ஸைப் பார்த்து ஹார்ப்போ உரத்த குரலில், “ குட் பை, மிஸ்டர் வெல்ஸ்.. உன்னுடைய பாடாவதி தியேட்டர் நன்றாக எரிந்து போகட்டும். அதுதான் எங்கள் எதிர்பார்ப்பு” என்று கத்தினான்.
அபராதம் போட்ட காரணத்தால் அப்படி விளையாட்டாகச் சபித்தான் என்று
நாங்கள் நினைத்தோம்.

மறுநாள் காலை எங்களுக்கு வந்த செய்தி: முன்னாள் இரவு ஜான் வெல்ஸின் தியேட்டர் நெருப்புப்பற்றிக் கொண்டு எரிந்து போய்விட்டது!

அன்றிலிருந்து ஹார்ப்போவை வாயை திறக்கவே நாங்கள் விடுவதில்லை. அவன் பேசினால் ஆபத்து!

ஒரு COINCIDENCE:   

இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து கொண்டிருந்தபோது  GROUCHO  பிறந்த தேதியை சரிபார்க்க வலையில் தேடினேன். அப்போது ஒரு தகவல் கண்ணில் பட்டது: லண்டன் மே 7’ம் தேதி செய்தித்தாளில் வந்த தகவல்:
 “லாயிட்ஸ் வங்கி தங்கள்  CURRENT ACCOUNT  பற்றி ஒரு 10 செகண்ட் டி.வி. விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதில்  GROUCHO  இருக்கிறார். அதன் சுட்டியைத் தருகிறேன். : லாயிட்ஸ் விளம்பரம்

4 comments:

 1. ஆஹா,,, நம்ம ஊர்ல கரிநாக்குன்னு சொல்வாங்களே... அதைப்போலத் தான் நடந்திருக்குது போலருக்கு,

  ReplyDelete
 2. இதை படித்ததும் குற்றமில்லைன்னுபட்டது !

  ReplyDelete
 3. Zoo, Aqarium படத்தில் சிங்கம், chimp மட்டுமல்ல, மீன்களும் இருக்கின்றன!! நல்ல படம்! - ஜெ.

  ReplyDelete
 4. மரத்தில் சிங்கமும், chimpம் மட்டுமல்ல, மீன்களும் தெரிகின்றன! நல்ல படம்! - ஜெ.

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!