December 31, 2010

பரணி - கேரக்டர்

கணக்கு வழக்கு இல்லாத அளவுக்கு புகையிலைத் தோட்டம், எலுமிச்சம்பழத் தோப்பு, திராட்சைக்காடு என்று பணத்தைச் சாகுபடி செய்யும் தோட்டங்களை ஆந்திராவில் வைத்திருக்கும் மிகப் பெரிய செல்வந்தரின் ஒரே மகன் பரணி. சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் "குழந்தை'! நூறு ரூபாய்க்குக் குறைந்த நோட்டைக் கையால் தொடுவதே பாவம் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளும் அளவுக்கு அவனுக்கு "பாக்கெட் மணி' பக்கெட் பக்கெட் டாக "நாயினா' அனுப்பிக் கொண்டிருக்க, சென்னையில் ஒரு கோஷ்டியையே சேர்த்துக் கொண்டு அட்டகாசமாக இருப்பவன் பரணி.
இருபத்திரண்டு வயதில் பி.யூ.சி. பரீட்சையின்மேல் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் பரணியைச் சுற்றி நாலைந்து நண்பர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். "டேய் பசங்களா, இன்னிக்குக் கிளாஸ் "கட்'டுடா'' என்றால் எல்லா நண்பர்களும் "கட்'டிடுவார்கள். காரணம், அன்று பரணி சினிமா, ஓட்டல் என்று முழு தின புரோகிராம் போட்டிருப்பான்.
"டேய், பரணி, இன்னிக்கு கெமிஸ்ட்ரி பிராக்டிகல். நான் லீவு போடலைடா'' என்று நண்பன் முரளி சொல்வான்.
"டேய்... சுந்தர்... ராஜா... கமலக்கண்ணா... துரை... ரவி... நாராயணசாமி... பாத்தீங்களாடா, முரளி பண்ற புரளியை. கெமிஸ்ட்ரியாம்... மிஸ் பண்ண முடியாதாம். பிரமாதமான கெமிஸ்ட்ரி. பெரிய மிஸ்டரியா?... மிஸ் பண்ணாட்டா மிஸஸ் பண்ணேண்டா... அந்தப் பொண்ணு மீனாட்சிதான் உன் பின்னாலேயே சுத்தி வராளே...  மேக்ஸி போட்ட அசல் உசிலைமணி!... ஏடு கொண்டலவாடா!... நம்ப முரளியைக் காப்பாத்தப்பா'' என்று அட்டகாசமாகச் சொல்ல, ஜால்ராக்கள் பலமாகச் சிரிக்கும்!
"இல்லேடா பரணி...'' என்று முரளி இழுப்பான். "போய் வா... நாளைக்கு பரீட்சையில் காப்பி அடிக்கணும் என்றால் யாராவது ஒருத்தருக்காவது பாடம் தெரிஞ்சிருக்கணும்... டேய்... இவனுக்காக நாமே எக்ஸ்ட்ரா சோலா-பட்டூரா அடிக்கலாம். டேய் முரளி... டைட்டானிக் படம் போறோண்டா... வரலைங்கறே... போ... போ... பாவப்பட்ட ஜென்மம்... அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை!'' என்பான்.

பளபளக்கும் பூ போட்ட "இம்போர்ட்டட்'  சிங்கப்பூர்  ஷர்ட், அகல பட்டை பெல்ட், ஷர்ட் கலருக்குப் பொருத்தமில்லாத "லீ வைஸ்' ஜீன்ஸ், உயரமான ஹீல்ஸ் வைத்த ஷு, கழுத்தில் கனமான செயின், வலது கையில் கடிகாரம், இடது கையில் 555, லைட்டர், சட்டைப் பட்டனின் ஆதரவில் அனாயசமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் தங்க ஃப்ரேம் கருப்புக் கண்ணாடி, அலைபாயும் கிராப், கிருதா, அரை பர்லாங் தூரம் வரை தூக்கியடிக்கும் கோயா சென்ட் மணம். இடது ஜேபியில் பார்க்கர் பேனா (இந்தப் பேனா, பணம் கேட்டு அப்பாவுக்குக்  கடிதம் எழுதுவத்ற்கு மட்டும்தான். ஐயாயிரத்திற்குக் குறைந்து எழுதத் தெரியாது இந்தப் பேனாவிற்கு!)
-இவைகள் எல்லாவற்றையும் விட பரணிக்கு தனி டிரேட் மார்க் தருவது அவனது ஹோண்டா மோட்டார் சைக்கிள். அதில் இவனாகவே ஏகப்பட்ட விளக்குகள், கண்ணாடிகள், அலங்காரங்கள் என்று செய்து வைத்திருப்பான்.
"டேய், தோஸ்துங்களா... ஒரு டாக்சியைப் புடியுங்கடா... மூணு பேரு நம்ப மோட்டார் சைக்கிளில் குந்துங்க. ஏமிடா... ஏமி... நாலு பேர் மோட்டார் சைக்கிளில் போனால் புடிச்சுடுவானா?... அவன் எவன்டா அப்படிப்பட்ட போலீஸ்காரன்... இனிமேல் பொறந்துதான். வரணும் பரணியைப் புடிக்க! அவனோட ஒரு மாசம் சம்பளத்தையே "ஊரிக பெட்டுக்கோ'ன்னு சொல்லி அழுத்தினா, ஆள் நம்ப மோட்டார் சைக்கிளைத் தொடச்சிக்கூட விடுவான்...
முதல்லே போய் ரெண்டு ஐஸ்கிரீம் வெட்டிட்டு படம் போவணும்... ஏண்டா சுந்தரு... மண்ணடியில் யாரோ ஃபாரின் கேஸட்டுங்க வெச்சிருக்கான்னு சொன்னியே... போய் பீராய்ஞ்சுகிட்டு வரலாமாடா?... டேய்... ஸ்டீரியோஃபோனிக் போய் குவாட்ராஃபோனிக் வந்திருக்குது. பாட்டு போட்டால் இன்னமா அலர்றது தெரியுமா?...ஆளைத் தூக்கிக்கிட்டுப் போவுது! இப்பவே சொல்லிடுங்கடா... டெஸ்ட் மாட்சுக்கு எத்தனை பேருக்கு டிக்கட் வாங்கணும்?. துரை கிட்டே சொன்னால் வாங்கிட்டு வருவான் - போய் வர காபி செலவும், சாந்தா கேப் ரவா இட்லியும் கொடுத்தா போதும் அவனுக்கு! "...ஆமாம்... கமலக்கண்ணா... நம்ப கிளாஸ்லே புதுசா ஒரு இரட்டைப் பின்னல் வந்திருக்குதே, அத்தோட பேர் என்னடா? ஏண்டா, அது பாவாடை சட்டை போட்டுக்கிட்டு வருதே! நம்ப சார்பாக நாலு லாலிபாப் வாங்கிக் கொடுத்துட்டு வாடா பாப்பாவுக்கு!
"....நாராணசாமி... சைக்கிளில் ஒரு மிதி மிதிச்சு பனகல் பார்க் மூலை வெத்தலை பாக்குக் கடையிலே போய் ஆறு பீடா வாங்கிக்கிட்டு வாடா... ஜர்தா போடச் சொல்லு. பரணிக்குன்னு சொல்லு. ஸ்பெஷலாப் போட்டுக் கொடுப்பான்...எனக்கு ஒரு ஐடியா... வருகிற சம்மர் லீவில் சிங்கப்பூர் போய் வரலாம்.  ஊரையே சுருட்டிக்கிட்டு வரணும்... செலவுக்கு ஏண்டா கவலைப்படறீங்க... எனக்கு ஒரு முறைப்பொண்ணு இருக்குது... அதை நான் கட்டிக்கப் போறேன்னு நெனைச்சிக்கிட்டிருக்காங்க... மூச்சு விட்டால் போதும் ஐம்பதாயிரம்கூடக் கொடுப்பாங்கடா...''

5 comments:

  1. PUC KALATHIL HONDA BILEKUM TITANICKUM ILLAY

    ReplyDelete
  2. அப்படியா? பி யூ சி என்பதை எப்படி மாற்றினால் சரியாக இருக்கும்? ( ஆமாம், கேரக்டர் கட்டுரைகளைப் ப்ற்றி Ph.D.க்கு ஆராய்ச்சி பண்றீங்களா என்ன? ஹி.. ஹி :)

    ReplyDelete
  3. Plus2 Under Conflict/Consideration (PUC) என்பது பொருந்துமோ? :-)

    ReplyDelete
  4. இப்போது ஒரு ‘உண்மை’யைச் சொல்கிறேன். நான் வேண்டுமென்றுதான் தவறாக எழுதினேன் எவ்வளவு பேர் படிக்கிறார்கள். தப்பைக் கண்டு பிடிக்கிறார்கள் என்று பார்க்க!!! :)

    ReplyDelete
  5. எண்பதுகளின் கதை இங்கு எங்கே ஹோண்டா பைக்கும் டைடானிக் படமும்...

    "பளபளக்கும் பூ போட்ட "இம்போர்ட்டட்' சிங்கப்பூர் ஷர்ட், அகல பட்டை பெல்ட், ஷர்ட் கலருக்குப் பொருத்தமில்லாத "லீ வைஸ்' ஜீன்ஸ், உயரமான ஹீல்ஸ் வைத்த ஷு, கழுத்தில் கனமான செயின், வலது கையில் கடிகாரம், இடது கையில் 555, லைட்டர், சட்டைப் பட்டனின் ஆதரவில் அனாயசமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் தங்க ஃப்ரேம் கருப்புக் கண்ணாடி, அலைபாயும் கிராப், கிருதா," - அப்படியே நடிகர் ராஜீவ் நியாபகத்திற்கு வருகிறார்....

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!