பட்டாபிக்கு தெரியாதது சிரிப்பு. தெரிந்தது, முணுமுணுப்பு!
ஏழெட்டுக் கப்பல்கள் ஒரே சமயத்தில் கவிழ்ந்து போனவன் கூட சிறிது முக மலர்ச்சியுடன் இருப்பான். நம் பட்டாபியைப் பார்த்தால் எட்டுக் கப்பல்கள் கவிழ்ந்ததுடன், இன்கம்டக்ஸ் ரெய்டும் நடந்து, வீடும் ஏலத்திற்கு வந்து விட்டது போன்று படு சோகத்துடன் காட்சியளிப்பார்!
இவருக்கு என்ன கவலை? ஒன்றுமில்லை. ஒரு கவலையுமில்லையே என்று நினைத்துக் கவலைப்படும் ஆத்மா!
மண்ணடி இரும்புக் கடை ஒன்றில் நாற்பத்தியேழு வருஷம் பணியாற்றி விட்டு ரிடையர் ஆனவர் பட்டாபி. முழு வழுக்கை. நீண்ட அரைக்கை சட்டை (காமராஜர் மாடல்), கச்சம் வைத்த வேட்டி, இடது கையில் பொடி டப்பா, வலது கையில் நியூஸ் பேப்பர்.. ஒரே சமயத்தில் பாகற்காய், எட்டிக்காய், இஞ்சி, கொய்னா ஆகியவற்றை அரைத்துச் சாப்பிட்ட மாதிரி முக விலாசம்.
இவரது பையன்கள், பெண்கள் எல்லாருக்கும் கலியாணம் ஆகி குழந்தை குட்டிகளுடன் இருக்கிறார்கள். இருந்தாலும் பட்டாபி சதா முணுமுணுத்துக் கொண்டிருப்பார். சரி பட்டாபியின் முணுமுணுப்பை டேப் ரிகார்ட் செய்து போட்டுப் பார்க்கலாமா?
"என்ன அரிசி கொடுக்கறான்? மாடு கூட சாப்பிடாது. இந்த அழகில் விலை ஏறிக்கொண்டு போகிறது. இப்படியே போனால், எல்லாரும் தூக்குப் போட்டுக் கொண்டுதான் சாக வேண்டும். ஒரு விதத்தில் இதுவும் நல்லதுதான். இந்த அறிவு கெட்ட ஜனங்க அரிசியைக் கட்டிக் கொண்டுதானே அழறதுகள். அந்தக் காலத்திலே கேழ்வரகு சாப்பிடலையா? செத்தா போய்விட்டார்கள்? அரிசியையும் விடமாட்டார்கள். சினிமாவையும் விடமாட்டார்கள். 'எந்த சினிமாக்காரன் எந்த சினிமாக்காரியை இழுத்துக் கோண்டு போனான்?' என்பதே இவங்களுக்கு விசாரம்.
"வியட்நாமில் ராத்திரி படுக்கிறவன் காலையில் எழுந்துக்கறது நிச்சயமில்லை. அங்கோலாவில் வெள்ளத்தில் நூறு பேர் சாகிறார்கள். சைனாவில் ரயில் விபத்து. எல்லாரும் கூண்டோடு கைலாசம். ஹெல்சிங்கியில் நெருப்புப் பிடிச்சு கிராமமே பஸ்மமாகி விட்டது. காஸ்டரீகாவில் காலரா தலை விரித்தாடுகிறது. ஹும். இதெல்லாம் பற்றி அவங்களுக்கு எங்கே அக்கறை? யாரவன், அமிதாப் பட்சணமாம் , ஒரு ஆக்டர், அவர் தினமும் என்ன செய்கிறர்,, யாரோ சல்மான் கண்ணனாம் அவனுக்கு அடுத்ததாஎன்ன படம் பண்றான்-- இது மாதிரி விஷயங்களில் தான் கவலைப்படுகிறார்கள். "பெரிய பிள்ளை இருக்கிறானே, அடையாரில் வீடு வாங்கியிருக்கிறான். அதில் வாடகை சரியா வருகிறதா, எவ்வளவு பாக்கி என்று ஒரு கவலையும் கிடையாது. வீட்டை விற்றவன், உடைஞ்சு போன ஜன்னல் கண்ணாடியை ரிஜிஸ்டிரேஷனுக்கு முன்னேயே புதுசாப் போட்டுத் தருகிறேன் என்றான். கடைசியிலே போடாமல் இருந்து விட்டான். அப்புறம் ஐம்பதது மூன்று ரூபாய் செலவு பண்ணி இவன் தானே போட்டான்.... நான் சொல்கிறேன், காலம் ரொம்ப கெட்டுப் போய்விட்டது. பசங்களுக்கும் சாமர்த்தியம் இல்லை. இரண்டாவது பிள்ளை இருக்கிறான், மாசம் சுளையா நாற்பத்திரண்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறான். ஆனால், ஒரு கறிவேப்பிலைக்காரியிடம் பேரம் பேசத் தெரியாது. பாருங்களேன், இரண்டு ரூபா கொடுத்துக் கொத்தமல்லி வாங்கியிருக்கிறான். அவன் ஒரு கட்டு கொடுத்துவிட்டுப் போகிறான். இவனும் வாங்கிக் கொள்கிறான். நான் அதைப் பார்த்து ”என்ன,ஒண்ணுதானா? இரண்டு கொடு', என்றேன். ... அப்புறம் கொடுத்து விட்டுப் போகிறான். எல்லாரும் ஏமாற்றுவதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். உலகம் சீக்கிரம் அழியப்போவதற்கு அறிகுறி.
"கலி முற்றிப் போச்சு. இப்போது கதா காலக்ஷேபத்துக்கு நிறைய கூட்டம் வருகிறது. பக்தியுமில்லை, கத்தரிக்காயுமில்லை.. இது ஒரு பாஷனாகப் போச்சு. இதெல்லாம் கலி பண்ணுகிற கோலம். கோவில் கட்டறான். இவன் கட்டலை என்று தான் கடவுள் ஏங்கிக் கொண்டிருந்தானாக்கும்! பாண்டி பஜாரில் இவன் நகைக் கடை வைத்திருக்கிறான். ஒரு வைர நெக்லஸ் இவன் கடையில் என் பொண்ணு வாங்கினாள். அன்பளிப்பாக, ஒரு காலண்டர் கொடுத்தான். "அட இன்னும் ஒண்ணு கொடுடா' என்று கேட்டேன். "இல்லைங்க ஒண்ணு தான் தர முடியும்' என்றான். மகா அல்பம்! இவன் இப்படி மிச்சம் பிடித்து கோவில் கட்டினால் அதில் கடவுளா வந்து இருப்பான்? இவன் பணத்துக்குச் சாமிகூடக் குலாம் போடுவாரா? போய்யா, அப்புறம் ஏதாவது சொல்லப்போறேன்........
"டி.வி. ஒண்ணுதான் இல்லை என்று அழுது கொண்டிருந்தோம், அதுவும் வந்து விட்டது. என்னைக் கேட்டால், . கண்ட கண்ட பொண்ணுங்களை டிவியில் பார்த்துப் பசங்க கெட்டுப் போய் விடப்போகுது. பாஷன் இன்னும் தலை விரித்தாடும்.
”இதையெல்லாம் பற்றி எவன் கவலைப்படுகிறான்?.. ஐயோ, குழாயிலே தண்ணீர் வரவில்லையே என்று கவலைப்படுகிறான். குழாயை நம்பியா நாம் பிறந்தோம்? இது ஒரு பிரச்சனையா? இதுக்காக முணுமுணுப்பாங்களா? பொடி விலை ஏறிக் கொண்டே போகிறது. நியூஸ் பேப்பர் பக்கம் குறையுது. இது யாருக்குத் தெரிகிறது? ஹூம்...”
பட்டாபியின் மறுபெயர் மெகா முணுமுணுப்பு!
Well, the story exhibits typical British Behaviour. I have been to many places in the world (at least about 7-8 countries) working there for at least about 6-9 months, and it is only the British who complains all the time and about everything....
ReplyDeleteயாரவன், அமிதாப் பட்சணமாம் , ஒரு ஆக்டர், அவர் தினமும் என்ன செய்கிறர்,, யாரோ சல்மான் கண்ணனாம்
ReplyDeleteஎப்படி சார்... சிரிச்சுகிட்டே இருக்கேன்