December 22, 2010

பழமொழி ஆராய்ச்சி -கடுகு

சமீபத்தில் தமிழ்நாட்டில் நாட்டுப் பாடல்களுக்கு மவுஸ் ஏற்பட்டு இருக்கிறது. நாமும் ஒரு நாட்டுப் பாடல் புத்தகத்தைத் தொகுக்கலாம் என்று எழுத்தாளர் ஏகாம்பரம் நினைத்தார். ஆனால் பலர்  அவரை முந்திக் கொண்டு விட்டதால், சரி நம்முடைய பழந்தமிழ் நாட்டின் பழந்தமிழ் பழமொழிகளைத் தொகுத்து அவைகளுக்கு ஆராய்ச்சி உரைகளை எழுதி வெளியிடலாம் என்று எண்ணினார். எழுதியும் முடித்தார். சினிமா ட்ரெய்லர் மாதிரி சில சுவையான பகுதிகளை அளிக்கிறோம்.

மாமியார் உடைத்தால் மண்கலம்  மருமகள் உடைத்தால் பொன்குடம்.
அருமையான, உயர்வான, மாமியாருக்கு மதிப்பு அளிக்கும் இந்தப் பழமொழிக்கு,  யாரோ ஒரு மாமியார் விரோதி தவறான விளக்கத்தைத் தந்துள்ளார். அதை மக்கள் உண்மையென்று நம்பியும் வருகிறார்கள்.
 ஆழ்ந்து ஆராயுமிடத்து, ஒரு மாமியாரின் உயர்ந்த பண்பையும், மருமகள் பேரில் அவள் கொண்டுள்ள பாசத்தையும் நேசத்தையும் இந்தப் பழமொழியைப் போல் எதுவும் தெரியப்படுத்தவில்லை என்பது விளங்கும். பொன்குடம் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? வெள்ளிக்குடமே அபூர்வம். ஆகவே மருமகளிடம் பொன் குடம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தாலும் அது மாமியாரின் பெருந்தன்மையைத்தான் காட்டும், ’மருமகள், இளம் பெண்ணாயிற்றே! பெருமையாகப் பொன் குடத்தை எடுத்துக் கொண்டு போகட்டும், நாம் சாதாரண மண் குடத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற தாராள குணத்தைத் தான் வெளிப்படுத்துகிறது.
      அடுத்தது, பொன் குடம் எங்காவது உடையுமா? கீழே விழுந்தால் நசுங்கும். சரி, அது உண்மையிலேயே பொன்குடம் அல்ல என்று வைத்துக் கொண்டாலும் மாமியாரின் பெருமையைத்தான் எடுத்துக்காட்டும்.. மாமியாரைப் பொறுத்தவரை, மருமகளின் ஒவ்வொரு பொருளும் பொன் போன்றது. அவைகளுக்கு அவ்வளவு மதிப்பு தருவாள். அதே சமயம் தன் பொருள்களை வெறும் மண்ணாகக் கருதுவாள்.

மயிலே மயிலே என்றால் இறகு போடுமா?
இந்தப் பழமொழியின் உண்மை உருவத்தைப் பற்றி அறியப் பல காடுகளுக்குச் சென்று மயில்களின் நடை, உடை பாவனைகளை ஆராய்ந்தேன். மயிலாப்பூர் வாசிகளுக்கு ஏதாவது தெரிந்திருக்குமோ என்று அங்கும் விசாரித்தேன். தமிழ்நாட்டில் பல மைல்கள் பயணம் செய்தேன். மயிலைப் பற்றிய உண்மைத் தகவலை அறிய. கடைசியில் குயிலம்பட்டியில் காக்கைப் பாடினியாரின் வம்சத்தில் வந்த கூகைப் புலவர் இதற்குச் சரியான விளக்கம் கூறினார். "இந்தப் பழமொழியின் உண்மையான ரூபம்: "மயிலே மயிலே என் மேல் இரக்கப்படு, அம்மா!''
      கந்த பெருமானின் வாகனமான மயிலின் காலின் கீழ் உள்ள பாம்பு இப்படிக் கூறுகிறது: "என்னை உன் காலில் மிதித்து அழுத்தாதே. என் கஷ்டகாலம் உன் காலின்கீழ் அகப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். தாய் போன்ற அன்பு கொண்டு என் மேல் இரக்கப்பட்டு என் கஷ்டத்தைத் தவிர்ப்பாய். உன் தலைவனின் தந்தையின் தலையில் என் சகோதரன் தான் இருக்கிறான். அவன் ஜாதகம் அப்படி.  அதனால்தான் என் மேல் இரக்கப்படு என்கிறேன்.''
      "நேற்று உச்சியிலிருந்த குடும்பம் இன்று தரையில் இருக்கக் கூடும். இன்று தரை மட்டத்தில் இருப்பவர்கள் நாளைக்குக் கோபுரத்தில் இருக்க வாய்ப்புண்டு. ஆகவே, மனிதா! காலின் கீழ் உள்ளவனை மிதிக்காதே. மதி. அது தான் ஆத்ம நிம்மதி அளிக்கும்.'' எனபதுதான் இதில் பொதிந்து கிடக்கும் உண்மைத் தத்துவம்!

அடி உதவுகிறாற் போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள். 
யாரோ வன்முறையாளர் எழுதி வைத்த விளக்கத்தை மறந்து விடுங்கள். காந்தி பிறந்த நாட்டில் அடியாவது உதையாவது. ’அடியே’ என்று யாரைக் கூப்பிடுகிறீர்கள்? ’அடி' என்பது உங்கள் மனைவியைத்தானே குறிக்கும்? மனைவி உதவுகிறது போல் உடன் பிறந்தவர்கள் உதவ மாட்டார்கள். மனைவிதான் உங்களுக்கு உறுதுணை. ஆகவே அவளுக்கு உற்ற மதிப்பையும் அந்தஸ்தையும் அளியுங்கள். என்ற அறிவுரையே  இதில் கூறப்பட்டுள்ளது. அந்த காலத்திலேயே பவுடர், லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளாமலேயே பெண்ணியம் பேசி இருக்கிறர்கள் என்பது கண்கூடு! 
(மேலும் பல பழமொழிகளுக்கு புத்தகத்தில் விளக்கம் இருக்கிறது. புத்தக சந்தையில் கிடைக்கக்கூடும்!) 
===========

6 comments:

 1. An old post from my site - http://koottanchoru.wordpress.com/2010/06/07/பழமொழி-விளக்கம்-அடி-உதவு/

  ReplyDelete
 2. RV அவர்களுக்கு
  படித்தேன்.. நனறி

  ReplyDelete
 3. //நேற்று உச்சியிலிருந்த குடும்பம் இன்று தரையில் இருக்கக் கூடும். இன்று தரை மட்டத்தில் இருப்பவர்கள் நாளைக்குக் கோபுரத்தில் இருக்க வாய்ப்புண்டு. ஆகவே, மனிதா! காலின் கீழ் உள்ளவனை மிதிக்காதே. மதி. அது தான் ஆத்ம நிம்மதி அளிக்கும்.'' எனபதுதான் இதில் பொதிந்து கிடக்கும் உண்மைத் தத்துவம்!
  //

  -பாம்பின் புலம்பல் ஒரு வேளை இப்படி சொல்கிறதோ? "நான் உன் காலடியில் அவதி படுகிறேன் , ஆனால் உன் தந்தையின் தலையில் சிகரமாய் இருக்கிறேன்"

  ReplyDelete
 4. Dear Sir,

  அடி உதவுகிறாற் போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.

  One more meaning for this - When Rama about to leave to forest he gave his "pathuga" to Barathan. For barathan, rama did not help in ruling the Govt. Only his "paduga".. We mis understood many of the good slogans and using it wherever not applicable.

  Thanks for your information.. Its excellent.

  ReplyDelete
 5. ராமுடு said... அவர்களுக்கு,
  இந்த விளக்கம் மிகவும் நன்றக உள்ளது.இப்படி பல நல்ல விஷயங்கள் வெளியே தெரியாமல் உள்ளன.

  ReplyDelete
 6. Maami never scolds hereafter. Atleast a single line in your blog is praising her

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :