June 17, 2010

நாலு பேரு சொன்னாங்க!

ரவி பிரகாஷ் ---சுரேஷ் கண்ணன் -டோண்டு ராகவன் எழுதியவை 

1.ரவி பிரகாஷ் எழுதியது:  ” நகைச்சுவையும் நானும்” பதிவிற்கு வந்த பின்னூட்டம்

          கட்டுரை அபாரம்! ரா.கி.ரா-வின் எ.க.எ. போன்று எ.ந.க.எ. என்று நீங்கள் ஒரு புத்தகமே போடலாம்! நிற்க. மறைந்த மகரம் அவர்களும், அவரின் புதல்வர் மார்க்கபந்து அவர்களும் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். மகரம் சொன்ன ஒரு தமாஷை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 
         தீண்டாமை ஒழிப்பு, கள்ளுண்ணாமை போன்ற காந்தியின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு பிரபல எழுத்தாளர்களிடம் சிறுகதை கேட்டு ஒரு புத்தகமாகத் தொகுத்தார் மகரம். காந்தி கொள்கைகளுக்குப் பொருத்தமாக, மறைந்த எழுத்தாளர்கள் சிலர் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த சிறுகதைகளையும் இந்தத் தொகுப்பில் சேர்த்துக் கொண்டார். புதிதாகக் கதை எழுதித் தந்தவர்களில் ராஜாஜியும் ஒருவர்.
          புத்தகம் தயாரானதும், மரியாதை நிமித்தமாக ஒரு பிரதியுடன் சென்று ராஜாஜியைச் சந்தித்தார் மகரம். ராஜாஜி புத்தகத்தை வாங்கி, முதல் சில பக்கங்களைப் புரட்டி, முதல் கதையை மட்டும் பார்த்துவிட்டுத் திருப்பிக் கொடுத்துவிட்டார். "ஐயா! உங்கள் கதை வந்திருக்கிறதே... பார்க்கவில்லையா?" என்று மகரம் கேட்க, "என் கதையா? இதில் இல்லையே?" என்று சொல்லியிருக்கிறார் ராஜாஜி. அவருக்குத் தன் கதையைத்தான் முதல் கதையாக வெளியிட்டிருப்பார்கள் என்கிற எண்ணம்.
      மகரம் அந்தப் புத்தகத்தில் ஐந்தாவதாகவோ, ஆறாவதாகவோ வெளியாகியிருந்த ராஜாஜியின் கதைப் பக்கத்தைப் பிரித்துக் காண்பிக்க, "நடுவுல போட்டுட்டீங்களா என் கதையை?" என்று ஒருவித சலிப்புக் குரலில் கேட்டிருக்கிறார் ராஜாஜி.

     அதற்கு விளக்கம் சொல்ல நினைத்து, "ஐயா! மறைந்த எழுத்தாளர்கள் கதைகளையெல்லாம் முன்னால போட்டுட்டோம். அடுத்ததா நீங்கதான்..!" என்றாராம் மகரம்.
 ராஜாஜி குறுகுறுவெனப் பார்க்க, தான் சொன்னதில் உள்ள அனர்த்தத்தைப் புரிந்துகொண்டு, ஏதோ சொல்லிச் சமாளித்ததாகச் சொன்னார் மகரம்.

 2. சுரேஷ் கண்ணன் எழுதியது: உள்ளே இருக்கும் பொன் 
( சில வருடங்களுக்கு முன் படித்த, பிடித்த ஜென் கதையொன்று. (நினைவிலிருப்பதை எழுதுகிறேன்) அந்த இளம் புத்த துறவி நீண்ட தூரம் நடந்த களைப்புடன் அந்த மடாலாயத்தை அடைகிறார். ஏற்கெனவே நிறைய துறவிகளுடன் இடம் போதாத நிலையில் இருக்கும் நிலையில் மடத்தின் தலைமை குரு, இவருக்கு வேண்டாவெறுப்பாக வெளியே ஓரமாக இளைப்பாற இடம் தருகிறார். இரவு. கடும் குளிர்.
ஒரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தர் வடிவிலான மரச்சிலைகளை எரித்து குளிரைப் போக்கிக் கொள்கிறார் இளம் துறவி.
நடுநிசியில் வெளியே வரும் தலைமை குரு இதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். கோபத்துடன் அவரைத் திட்டி நெருப்பை அணைக்க முனைகிறார். 'தான் செய்ததில் தவறொன்றுமில்லை' என்பது இளம் துறவியின் வாதம்.


எரிச்சலைடையும் தலைமை குரு, தலைமைப் பீடத்திற்கு அந்த இளம் குருவைப் பற்றின புகாரை அனுப்புகிறார்.


சில நாட்களில் அதற்கான பதில் வருகிறது. தற்போதைய தலைமை குருவை அந்த நிலையிலிருந்து நீக்கியும், இளம் துறவியை தலைமைப் பொறுப்பில் அமர்த்துவதற்குமான அறிவிப்பே அது.
=======================================
3. டோண்டு ராகவன் எழுதியது: சர்ச்சிலின் நோபல் பரிசு

சர்ச்சிலின் சார்பில் அவர் மனைவி  க்ளெமெண்டைன் சென்றிருந்தார். அரச
குடும்பத்தினருடன் அவரும் மேடையில் அமர்ந்திருக்கிறார். அது பற்றி ரீடர்ஸ்  டைஜஸ்டில் வந்த கட்டுரையிலிருந்து சிலவரிகள்
(தமிழாக்கம் எனது நினைவிலிருந்து):
பார்வையாளர்களுக்காக நடன/பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. திடீரென ஒரு பாடல் ஆங்கிலத்தில் எழுந்தது:
Oh my darling, Oh my darling Clementine.
அப்பாடலைக் கேட்டதுமே க்ளெமெண்டைன் நெகிழ்ச்சியோடு தன்னையறியாமலே எழுந்து நிற்க, எங்கும் கரகோஷம் எழுந்தது.

நோபல் பரிசு அவள் கணவருக்கு, ஆனால் இப்பாடல் அக்கணவரின் மனைவிக்கு.
4. டோண்டு ராகவன் எழுதியது: மசியாத அதிகாரி
Yes Minister" "Yes Prime Minister" ஆகிய  ஆங்கில சீரியல்களை பதிவர்களில் பலர் பார்த்திருப்பார்கள். அதில் மந்திரிகளுக்கும் சிவில் சர்வீசஸுக்கும் இடையில் நடக்கும் கயிறு இழுக்கும் போட்டி சுவையாகக் காட்டப் பட்டிருக்கும். உதாரணத்துக்கு மந்திரி ஒரு முற்போக்கு திட்டத்தை பிரேரேபித்தால் சிவில் சர்வீஸ் கொடுக்கும் பின்னூட்டங்கள் அவற்றின்
உள்ளர்த்ததோடு:
"It is quite a novel idea, Mr. Minister" (ஏன் சார்
இது மத்தவங்களுக்கும் தோணியிருக்காதா, அது சாத்தியம் இல்லைன்னுதானே உங்களுக்கு முன்னால் இருந்தவங்க விட்டு வச்சிருக்காங்க!
"It is quite a courageous step, Mr. Minister"
(உங்கள் கட்சிக்கு இதனால் குறைந்தபட்சமாக ஆயிரம் ஓட்டு இழப்புகள், அதிலும் உங்கள் தொகுதியில் நிச்சயம் டோமரு!)
"That was really brave of you Mr. Minister" (உனக்கு சங்குதாண்டி. ராஜினாமா கடிதம்தான்   எழுத வேண்டியிருக்கும், அதற்கான வரைவை எழுத டோண்டு ராகவனை வேணும்னா கேக்கட்டுமா?)


அதுவும் சர். ஹென்றி இவற்றில் ஒவ்வொன்றாகக் கூற மந்திரி/பிரதம மந்திரியாக நடித்த பால் எட்டிங்டனின் முகபாவங்கள் இப்போதும் குபீர்
சிரிப்பை விளைவிப்பவை.
பார்க்க: http://dondu.blogspot.com/2008/07/blog-post_07.htmlpost_07.html

5 comments:

  1. என் பின்னூட்டங்களுக்கு உங்கள் தனிப்பதிவில் குறிப்பு + இடம் தந்ததை நான் மிகப்பெரிய கௌரவமாகப் பார்க்கிறேன்.

    மிக்க நன்றி கடுகு சார்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. இப்படிப் போடுவது சுய நலம் காரணமாகத்தான்!.. இதெல்லாம் என் பதிவுகளுக்கு VAT ( Value Added Text!!!)

    --கடுகு

    ReplyDelete
  3. வழக்கம்போல் தங்கள் பதிவை ஆவலோடு படிக்க வந்த எனக்கு இன்ப அதிர்ச்சி! என் பின்னூட்டத்துக்கும் பதிவு அந்தஸ்து கொடுத்து தங்கள் 'சங்கப் பலகை'யில் இடம் தந்து என்னைப் பெருமைப்படுத்திவிட்டீர்கள்!

    ReplyDelete
  4. <<< ரவிபிரகாஷ் said...வழக்கம்போல் தங்கள் பதிவை ஆவலோடு ......>>>>

    அவலோடு என்பது ஆவலோடு என்பது தவறாக டைப் ஆகிவிட்டதா?
    உமி பஞ்சமில்லாமல் இருக்கும். அவல் தான் இருக்காது என்று அவலொடு வருபவர்களில் நீங்களும் ஒருவரோ! :):) ( சிரிப்பது நான்தான். என் ஜோக்கிற்கு நான் சிரிக்காவிட்டால் எப்படி?

    ReplyDelete
  5. மூன்று நிறைகுடங்கள் நீர் தலும்பாமல் இருப்பது பிரமிப்பாக இருக்கிறது ;-)

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!