June 30, 2010

கோளறு பதிகம்-2 - உருவளர்

பாடல்: 2
உருவளர் பவள மேனி ஒளிநீ றணிந்து
      உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென்
      உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி
      திசைதெய்வம் ஆன பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே.

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து - அழகில் சிறந்த சிவந்த மேனியின் மேல் ஒளிவீசும் திருநீற்றினை அணிந்து கொண்டு

உமையொடும் வெள்ளை விடை மேல் - உமையன்னையுடன் வெள்ளை எருதின் மேல் ஏறி

முருகலர் கொன்றை - தேன் நிறைந்து மலர்ந்த அழகிய கொன்றைப் பூவினையும்

திங்கள் - நிலவையும்

முடிமேல் அணிந்து - திருமுடியின் மேல் சூடி

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளத்தில் புகுந்து வீற்றிருப்பதால்

திருமகள் - செல்வத்திற்கு அதிபதியான திருமகள்

கலையதூர்தி - கலையாகிய வித்தைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள்

செயமாது - வெற்றிக்கு அதிபதியான மலைமகள்

பூமி - நிலமகள்

திசை தெய்வமான பலவும் - எல்லா திசைகளிலும் இருந்து மக்களைக் காக்கும் தெய்வங்கள் எல்லாம்

அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே - அடியவர்களுக்கு மிக நல்லவை. மிக மிக நல்லவை. நன்மையை அன்றி மற்றவற்றைத் தாரா. ( நெதி = செல்வம்)

6 comments:

  1. Superb !!!!!!!!! Keep it up!!!!!!

    Kothamalli

    ReplyDelete
  2. முன்னால் ஒரு தடவை சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் உங்களிடம் விளக்கம் பெற்றேன். இந்த தடவை அருமையாக பதம் பிரித்து எனக்கும் புரிய வைத்து அநுபவிக்க வைத்ததற்கு நன்றி. - ஜகன்னாதன்

    ReplyDelete
  3. அருமை. மிக்க நன்றி.

    ReplyDelete
  4. சுபத்ரா said...அருமை. மிக்க நன்றி.>>>

    ஆமாம்..சென்ற் ஜூன் மாதம் போட்ட பதிவை இப்போதுதான் பார்க்கிறீர்களா? பரவாயில்லை,

    உங்கள் இட்லி வடைப் ப்திவை இன்றே பார்த்துவிட்டேன்... நகைச்சுவை உஙகளுக்கு நன்றாக வருகிறது

    ReplyDelete
  5. முருகலர் - முருகு என்றால் அழகு என கேள்விப்பட்டுள்ளேன்.
    தேன் நிறைந்த என எப்படி விளக்கம் தந்துள்ளீர்கள்?
    ஏதேனும் உசாத்துணை தந்தால் தெளிந்திட உதவும்.

    ReplyDelete
  6. முருகுலர் கொன்றை:

    முருகு என்றால் அழகு என்று பொருள். நிறைய பேருக்கு அது தெரியும். முருகன் என்றால் அழகன்.

    ஆனால் முருகு என்றால் தேன் என்றும் ஒரு பொருள் இருக்கிறது. அதனால் தான் இதற்கு தேன் நிரம்பி அலர்ந்த அழகிய கொன்றை என்று பொருள் கொள்ளலாம்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!