March 28, 2010

கமலாவும் கின்னஸ் புத்தகமும்

கின்னஸ் புத்தகம் எத்தனையோ வருடங்களாகப் பல உலக சாதனைகளைப் போட்டு வந்தாலும், சமீப காலமாகத் தான் தமிழ் நாட்டில் கின்னஸ் வெறி பிடித்திருக்கிறது. அதில் தங்கள் பெயர் இடம் பெற வேண்டுமென்று யார் யாரோ என்னவென்னமோ செய்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இப்படி ஒரு குறிப்பு வந்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றவர்களில் அதிகம் பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என்று ஒரு புதிய சாதனையும் அதில் இடம் பெறக் கூடும்!
போகட்டும். ஆனால் அதில் கட்டாயம் இடம் பெற வேண்டிய ஒரு முக்கிய பெயர் இருக்காது. அது என் அருமை மனைவி கமலாவின் பெயர்தான்.
கமலா எத்தனையோ சாதனைகளைப் புரிந்திருக்கிறாள் புரிந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கிருக்கும் திறமையில், பிற்காலத்திலும் புரிவாள் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. "ஆமாம் நிறையச்
சாதனைகளைச் செய்திருக்கிறார் என்கிறீர்களே ஏன் இதுவரை கமலாவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில், இடம் பெறவில்லை' என்று தானே கேட்கிறீர்கள்.
அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று: கமலாவின் தன்னடக்கம், இரண்டு: எனக்கு என் மானத்தைக் கப்பலேற்ற விருப்பமில்லை.
இருந்தாலும் இத்தனை சாதனைகளைச் செய்திருக்கும் கமலாவைப் பற்றியும் அவளது சாதனைகளைப் பற்றியும் வெளி உலகத்துக்குத் தெரியாமல் மறைத்து வைப்பது அவளுக்கு நான் இழைக்கும் கொடுமை, அநீதி, என்ற காரணத்தால் இப்போது தெரிவிக்க முன் வந்துள்ளேன்.

"உங்களைப் போல அசமஞ்சம் கிடையாது. எத்தனை தடவை படிச்சுச் சொன்னாலும் உங்களுக்குத் தெரியாது. எவ்வளவுதான் நான் கழுதையாகக் கத்தினாலும் உங்கள் மண்டையில் ஏறாது. என் தலையெழுத்து அனுபவிக்கிறேன். உங்களைச் சொல்லிக் குத்தமில்லை, உங்களை என் தலையிலே கட்டினாளே உங்கம்மா, அவளைத்தான் சொல்லணும். ஹும்' என்று இதுவரை ஒரு லட்சம் தடவை கமலா சொல்லியிருக்கிறாள். (இதை நீங்கள் அச்சில் படிப்பதற்குள் இன்னும் நூறு ஏறிவிடும்!)
இத்தனை தடவை சொன்னபோதும், ஒரு தடவை கூட ஒரு வார்த்தை மாற்றிச் சொன்னதில்லை. தவறிப் போய் கூட "கழுதையாகக் கத்தினாலும்' என்பதை "உங்கள் களிமண் மண்டையில் ஏறாது' என்று சொன்னதில்லை. எவ்வளவு கோபமாகக் கத்தினாலும், "என் தலைல கட்டினாளே உங்கம்மா, அவளைத்தான் சொல்லணும்' என்று தான் சொல்வாளே தவிர, "அவளைத்தான் கொல்லணும்'' என்று சொன்னதில்லை. (மாமியாரின் மீது அவளுக்கு ஒரு மரியாதை உண்டு!)
இப்படித் தொடர்ந்து "லட்சார்ச்சனை' செய்ததற்கு நிச்சயம் கமலாவின் பெயர் கின்னஸில் இடம் பெற வேண்டும்.
இதை யாரும் அவர்களுக்குத் தெரிவிக்காதீர்கள். லாபமில்லை. ஏனென்றால் கின்னஸில் எல்லாவற்றிற்கும் போலீஸ் ஐ.ஜி. போன்ற உயர் அதிகாரிகளின் சாட்சிகள் வேண்டும். கமலா என்னைத் திட்டும் போது, ஐ.ஜி. தன் வேலையை விட்டு வந்து கணக்கெடுத்துக் கொண்டிருக்க முடியுமா? அல்லது இதற்கென்று ஒரு தனி ஐ.ஜி.யை நியமிக்குமா அரசாங்கம்? அப்புறம், கமலாவிற்கு நாலு பேர் எதிரே இருந்தால் என்னைத் திட்ட வராது!

இருபத்தைந்து வருட காலம் முகத்தை "உம்"மென்று வைத்துக் கொண்டு கோபமாகவே இருக்க முடியுமா? உங்களால் முடியாது. ஆனால் கமலாவால் முடியும். முடிந்திருக்கிறது. இருபத்தைந்து வருஷத்திற்கு முன்பு என் அக்காவிற்குப் பொங்கல் சமயத்தில் ஒரு ஐம்பது ரூபாய் மணியார்டர் பண்ணினேன். "இப்படிப் பணத்தை வாரி இறையுங்கோ. இதுவரை உங்க அக்கா எச்சில் கையால் காக்கா ஓட்டியிருப்பாளா? இந்தாடி கமலா என்று ஒரு இரண்டு ரூபாய் கொடுத்திருப்பாளா? ஆமாம்... என்னவோ ஒரு இரட்டை வடம் செயின் கொடுத்துட்டா... ஊர்ல உலகத்திலே கிடைக்காத சாமான் மாதிரி. துட்டை வீசி எறிஞ்சா இரட்டை வடம் செயினைக் குப்பையாகக் கொண்டு வந்து கொட்றதுக்கு நகைக் கடைங்க இருக்கு' என்று சொல்லிவிட்டு முகத்தை "உம்"மென்று வைத்துக் கொண்டவள், இதுவரை அந்தக் கோபத்தை அப்படியே காப்பாற்றி வருகிறாள். அதிக நாள்  அக்காமீது  கோபத்தின் அளவு குறையாமல் வைத்துக் கொண்டவர் என்ற முறையில் கமலாவின் பெயர் கின்னஸில் இடம் பெற வேண்டும்!

ஒரு சமயம் நானே கின்னஸுக்கு எழுதிப் போட்டேன். அவர்கள் என்ன பதில் போட்டார்கள் தெரியுமா? "இது ஒரு சாதனை என்று நாங்கள் ஏற்கத்தான் விரும்புகிறோம். ஒரே அளவில் கோபத்தை வைத்திருந்தார் என்கிறீர்கள். இதுவரை கோபத்தின் அளவைத் துல்லியமாகக் கண்டு பிடிக்கும் கோபமானி கருவி கண்டுபிடிக்கப்படவில்லை. அடுத்த நூற்றாண்டில் கண்டு பிடிப்பார்கள் என்று நம்புகிறோம். அதன் பிறகுதான் இத்தகைய சாதனைகளைப் பரிசீலிக்க முடியும், உங்கள் அருமை மனைவி ஒரு நூற்றாண்டு முன்னதாகவே பிறந்து விட்டார் என்று எழுதியிருந்தார்கள். ஹும், என்ன விஞ்ஞானிகள்! இதற்கு ஒரு கருவி கண்டுபிடிப்பதை விட்டு கம்ப்யூட்டர்களைக் கண்டுபிடிப்பதில் காலத்தை விரயம் செய்து கொண்டிருக்கிறார்களே!

மூன்று லட்சம் புடவைகளுக்கு "நற்சாட்சி"ப் பத்திரம் கொடுத்திருக்கிறாள் கமலா. நற்சாட்சி என்ற வார்த்தைக்குத் தப்பான அர்த்தம் எடுத்துக் கொள்ளாதீர்கள். "இந்தப் புடவை சாயம் போய்விடும். இது என்ன அசிங்கமான தலைப்பு? இந்த பார்டரில் இழை சரியாகக் கோத்து வாங்கவில்லை. உடல்ல இவ்வளவு பெரிய பூவா போடறது? கலர் காம்பினேஷனா இது? துணி ரொம்ப வெலவெலன்னு இருக்கு, தூளி கட்டறதுக்குத்தான் லாயக்கு. இதைப் போட்டால் ஒரு எவர்சில்வர் ஸ்பூன் கூட எவனும் கொடுக்க மாட்டான்' என்று பல்வேறு விதமாகப் புடவைகளைப் பற்றி அபிப்பிராயம் கூறியிருக்கிறாள். மூன்று லட்சம் புடவைகளை எடுத்துப் போட்டுக் காட்டிய புடவைக் கடைக்காரர்களுக்கு இது தொழில். ஆனால் கமலாவிற்கு அது ஒரு பொழுதுபோக்கு. பொழுது போக்கிற்காக மெய்வருத்தம் பாராது, நாக்கு வலியையும் பொருட்படுத்தாது இத்தனை புடவைகளைப் பற்றி அபிப்பிராயங்களைக் கூறியது சாதாரண சாதனையா? பட்டம், பதவி, பெயர், புகழ் எதையும் விரும்பாமல் கமலா பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்து செய்து வருகிறாள். காரணம் அவள் ஒரு கர்மயோகி!

16 comments:

  1. இத விட பெரிய சாதனை அவர்கள் உங்கள் லொள்ளை எல்லாம் பொறுத்துக்கொண்டு குப்பை கொட்டுவது தான் .
    டீ டெஸ்ட்டர் என்று ஒரு வேலை உண்டு .அது போல் கமலா மாமி சாரி டெஸ்ட்டர் .அவங்க அட்வைச எடுத்துக்கொண்டிருந்தால் புடவை காரங்கெல்லாம் இன்னைக்கு கோடீஸ்வரரா போயிருப்பாங்க .
    அவங்க அருமை உங்களுக்கு தெரில சார் .

    ReplyDelete
  2. இவ்வளவு செய்தும் மாமியின் பெயர் இடம் பெறாத அந்த கின்னஸ் புத்தகத்தை நான் புறக்கணிக்கிறேன்.

    (உஸ்ஸ்ஸ்...உலகத்துலயே அதிகமான முறை உப்புமா கிண்டினதுக்கு கின்னஸுக்கு பரிந்துரை செய்தால் போடுவார்களான்னு கொஞ்சம் நைஸா விசாரியுங்களேன்... ராஜி பெயரை பரிந்துரை செய்யலாம்னு பாக்கறேன்.)

    ReplyDelete
  3. <<< padma said...
    அவங்க அருமை உங்களுக்கு தெரில சார்.>>
    உங்ளுக்காவது தெரிஞ்சதே.. ரொம்ப சந்தோஷம். :)

    ReplyDelete
  4. Dear Sir,
    உங்களைப் போல அசமஞ்சம் கிடையாது.

    Even my wife also told me like this... So, I am not left alone. There are lot of people sailing in the same boat... ooppps... ship... ooopps..... ships....

    Regards
    Ranga

    ReplyDelete
  5. உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்து கொள்கிறேன் வந்து பெற்றுகொள்ளவும்

    ReplyDelete
  6. Sir,
    Behalf of mami, i am going to file a case against you for insulting mami in public....Be ready to face the music. (Special thanks to mami for tolerating you!!!!(request mami to start a new blog against you (knew that she is more competent than you...definitely i will get a coffee if i visit your home)

    -Kothamalli

    ReplyDelete
  7. Dear Kothamalli,
    Plese await an article by Mami: "என் கட்சியைக் கேளுங்கள்"

    ReplyDelete
  8. கடுகு....... said...

    அறிவிலி அவர்களுக்கு, நான் கமலாவின் பெருமையை அனுமார் வாலாக நீட்டிக் கொண்டு போகவேண்டாம் என்று சிலவற்றை விட்டு விட்டேன் என்பதால் ‘சைக்கிள் கேப்’பில் புகுந்து போகப் பார்க்கிறீர்களே. ராஜியின் பெயர் கின்னஸில் வந்தாலும் கமலாவின் சாதனைகளை போடும்போது ராஜி, மாஜி ஆகிவிடுவார்! (அதிருக்கட்டும்.. ராஜி உண்மையான் பெயரா, வீட்டில் ஏதாவது தகராறு வந்தால், ராஜி, ராஜி என்று நீங்கள் அலறி கன்னத்தில் போட்டுக்கொண்டு ராஜியாகப் போவதால் வந்த காரணப் பெயரா? :)

    ReplyDelete
  9. Sir,
    Egarly waiting for mami's comments!!!! Please post it tomorrow morning...Changed to mami's party.(Even before it starts)

    -Kothamalli

    ReplyDelete
  10. <<<>>>

    அவசரப்படாதீர்கள்...தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக வந்தாலும் வரும்.

    ReplyDelete
  11. அச்சச்சோ , மாமி பாவம். நீங்க மாமியை மாட்டி விட்டே பெரிய எழுத்தாளர் ஆயிட்டீன்களோ நு தோணுது. மாமி,
    please come out of hibernation

    http://www.virutcham.com

    ReplyDelete
  12. ஆமாம் டைரியும் நானும் எங்கே உருவீட்டிங்க. நான் படிச்சிட்டேன். பின்னூட்டம் இடும் போது பார்த்தா காணலை. நல்லா தானே இருந்தது.

    அப்புறம் நான் உங்கே பதிவு படிக்கிறதையே பொழப்பா வச்ட்டிருக்கேன்னு நினைக்க வேணாம். நானும் தான் எழுதறேனாக்கும்

    http://www.virutcham.com

    ReplyDelete
  13. Sir,
    மாமியும் ப்ளோகில் உங்களை பற்றி எழுத சொல்லுங்கள்?

    ReplyDelete
  14. <<< Anonymous said...
    மாமியும் ப்ளோகில் உங்களை பற்றி எழுத சொல்லுங்கள்?>>
    என்னை பற்றி எழுதினால் ராமாயணமாக நீண்டு போய் பாரதப் போரில் முடியக்கூடும். அதில் ஒரு சின்ன பிரச்சினை: குருட்சேத்திரம் என் வீட்டுக்கே வந்துவிடும். இதில் என்ன உங்களுக்கு ஒரு வில்லத்தன்மான் சந்தோஷமோ! :)

    ReplyDelete
  15. <<< ஆமாம் டைரியும் நானும் எங்கே உருவீட்டிங்க. நான் படிச்சிட்டேன்.>> அது பின்னால் வரும். தவறாக போஸ்ட் ஆகிவிட்டது. எடிட் பண்ண வேண்டிய வேலை இருக்கிறது.பின்னால் வரும்.
    விருட்சம் பார்க்கிறேன்.

    ReplyDelete
  16. Mama,
    Mami's name should be entered in guniess book . Padmini has just started she is just three years mami is far expereinced than her . Probably i will not leave my me . I bet she will beat mami ( myself like how mami does for you )in the future

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!