March 22, 2010

எஸ். ஏ. பி. யும் (நன்றியுடன்) நானும் - கடுகு

 நினைவு தெரிந்த நாள் முதலாக குமுதம் பத்திரிகையை ஆர்வத்துடன் படித்து வந்த நான், அதன் ஆசிரியர் எஸ். ஏ. பி. அவர்களைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. 1954’ம் ஆண்டு சென்னை ஹந்தி பிரசார சபா மைதானத்தில் ’பாரதியார் விழா’ மூன்று தினம் நடந்தது. கல்கி, ஆக்கூர் அனந்தாச்சாரி, பித்துக்குளி முருகதாஸ். நீதிபதி. எஸ். ஏ. பி. ஐயர், திரிலோக (திருலோக என்பது தான் சரி)   சீதாராம். பேராசிரியர் ஆ.சீனிவாசராகவன். எஸ். ஏ. பி. போன்றவர்கள் (இன்னும் பலரின் பெயர் இப்போது நினைவுக்கு வரவில்லை. பாரதியாரைப் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.) அடடா, என்ன அற்புதமான இலக்கிய விருந்து. அந்த விழாவில்தான் குமுதம் ஆசிரியரை முதல் முதலாகப் பார்த்தேன். மெலிதான குரலில் ஒரு கல்லூரி பேராசிரியரைப் போல பேச ஆரம்பித்தார்.
"உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஒரு கவிஞன்தான். இதை யாரோ பெயர் தெரியாத குப்பனோ சுப்பனோ சொல்லவில்லை. இது எமர்ஸன் என்ற மேதை கூறியது." என்று ஆரம்பித்து, கோர்வையாக தங்கு தடையில்லாமல் பேசினார். அவர் பேசியதில் மேலும் சில வரிகள் நினைவில் இருந்தாலும் பெரும்பாலான கருத்துகள் மறந்து போய் விட்டது. அவர் பேசி முடிக்கும் வரை மகுடியில் மயங்கிய பாம்பைப் போல் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் பேசி முடித்ததும் மேடைக்குப் போய் அவரிடம் கையெழுத்து வாங்கினேன்.
1954 ல் கல்கி அவர்கள் காலமான பிறகு எஸ். ஏ. பி. யின் எழுத்தைதான் விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன்
1962’ல் டில்லி சென்றேன். டில்லியில் எல்லாம் புதிதாக, புதிய அனுபவமாக இருந்தது. மொழி, உணவு முறை, டிசம்பர் குளிர். புது டில்லியின் அகன்ற தெருக்கள், ராஷ்டிரபதி பவன், அமைச்சகங்களின் பிரும்மாண்டமான கட்டிடங்கள், ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி நள்ளிரவு நேரு உரை நிகழ்த்திய செங்கோட்டை எல்லாம் திக்குமுக்காடச் செய்தன. இந்த சமயத்தில் குமுதத்தில் வாசகர்களுக்கு ஒரு போட்டியை வைத்தார்கள். அதைப் பார்த்த நான் டில்லியில் எனக்குப்  புதுமைகளாகத் தோன்றியவகளைப் பற்றி எழுதி குமுதத்திற்கு அனுப்பினேன். ஓரிருவாரங்கள் கழித்து கட்டுரைக்குச் சன்மானமாக ரூ35.க்கு செக் வந்தது. குமுதம் இதழ் கரோல்பாக்கில் தான் கிடைக்கும் என்றார்கள். கஷ்டப்பட்டு கரோல்பாக் போய் குமுதத்தை வாங்கி வந்தேன். "அரே டில்லிவாலா" என்ற தலைப்பில் என் கட்டுரை வெளியாகியிருந்தது.
வார்த்தை வார்த்தையாகப் படித்தேன். எழுத்து எழுத்தாகப் படித்தேன் மீண்டும் மீண்டும் படித்தேன். சந்தோஷம் பிடிபடவில்லை. "ஆஹா, குமுதம் இதழில் என் பெயர்!" இனி தொடர்ந்து கட்டுரைகள் எழுதவேண்டும். என்று தீர்மானித்துக் கொண்டேன். அதன் பிறகு நிறைய எழுதி அனுப்பினேன். துணுக்குகளின் பொற்காலம் அது. ஆகவே என் துணுக்குகள் நிறைய வெளியாயின. பேட்டிக் கட்டுரைகள் எழுதி அனுப்பினேன். அவைகளும் பிரசுரமாயின. அவற்றை எப்படியெல்லாம் எடிட் செய்திருக்கிறார்கள் என்று கவனமாகப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.
    ரா. கி. ரங்கராஜன் அவர்களிடமிருந்து எக்ஸ்பிரஸ் வேகத்தில் எழுதப்பட்ட வெள்ளை நிறக் கார்டுகள் வரும் சில விஷயங்களைக் குறிப்பிட்டு கட்டுரை எழுதி அனுப்பச் சொல்லுவார். அந்த வெள்ளை நிறக் கார்டுகள் வந்தால் உடலில்  புது ரத்தம் பாய்ச்சிய மாதிரி இருக்கும்.
ஆறு ஏழு மாதங்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்தேன். குமுதம் ஆபீஸுக்குச் சென்றேன் எஸ். ஏ. பி. யைப் பார்க்கப் போகிறேன். குமுதம் மும்மூர்த்திகளான ரா. கி. ர., , பாக்கியம் ராமசாமி. மற்றும் புனிதனைப் பார்க்கப் போகிறேன். நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது. குமுதம் ஆசிரியருக்குக் கொடுக்க ஒரு பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு போயிருந்தேன். இப்போது கூட அந்த குறிப்பிட்டப் பரிசுப் பொருளை வாங்கிக்கொண்டு போனதை எண்ணி வெட்கப்படுகிறேன். இதைப் பற்றிய விவரங்களைப் பின்னால் சொல்லுகிறேன்.
ஹாலில் ரா. கி. ர.வின் மேஜைக்கு முன்னால் உட்கார்ந்தேன். அவர் மற்ற இருவரையும் கூப்பிட்டார். மூவரையும் முதல் தடவையாக அப்போதுதான் பார்க்கிறேன் என்றாலும் ஆறேழு மாதங்களாகக கட்டுரைகளை எழுதி வந்ததால் அவர்களுக்கு நான் பரிச்சயமானவன் என்று நானே நினைத்துக்கொண்டேன்!
எங்கும் பேப்பர். ப்ரூஃப்கள். அச்சு மையின் வாசனை. உலகின் மிக விலை உயர்ந்த சென்ட் மணத்தை விட உயர்ந்த வாசனை!
“ வாங்க.. எடிட்டரைப் பார்க்கலாம்.” என்று சொல்லி என்னை அழைத்துப் போனார்.
எடிட்டருக்குப் பெரிதாக வணக்கம் சொல்லிவிட்டு, நான் வாங்கி வந்தப் பரிசுப் பொருளை அவரிடம் கொடுத்தேன். அதைப் பிரித்து பார்த்தார். “ ஆஹா, நனறாக இருக்கிறதே!” என்று
சொல்லி விட்டு, பின்னலிருந்த மேஜையில் வைத்து  விட்டார்.
காந்தீயக் கொள்கைகள் மீதும், ஆன்மீகத்திலும், பகவத் கீதையிலும் ஈடுபாடு கொண்ட, எளிமையும் உயர்ந்த கொள்கைகளையும் உடைய எடிட்டருக்கு நான் கொடுத்த பரிசுப் பொருள்"
கீரிப்பிள்ளையும் பாம்பும். ( கீரியின் உடலில் பஞ்சு அடைத்து செய்யப்பட்டிருந்தது.) டில்லி சாந்தினி சௌக்கில் வாங்கியது. எனக்குப் புதுமையாக இருந்தது. எடிட்டருக்கு அதைப் போய் கொடுத்தது மன்னிக்க முடியாத .குற்றம்: அபசாரம். அவரோ சர்வ சாதாரணமாக, மிகவும் நட்புடனும் அன்புடனும் என்னைப் பற்றியும்  என் டில்லி வாழ்க்கையைப் பற்றியும் விசாரித்தார்.
     அதன் பிறகு எப்போது சென்னை வந்தாலும் அவரை ஐந்து நிமிஷமாவது பார்க்காமல் போகமாட்டேன்.
*     *          *           *        *
   குமுதத்தில் நான் தொடர்ந்து 6,7 வருஷங்கள் எழுதி இருப்பேன். அந்த சமயத்தில் தினமணி கதிரின் ஆசிரியர் பொறுப்பை சாவி ஏற்றுக்கொண்டார், முன்பின் அறிமுகம் ஆகாத எனக்கு அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. “கதிருக்கு நீங்கள்  ஏதாவது எழுதவேண்டும்” என்று எழுதி இருந்தார்.
 கதிரில் கதை எழுதலாம் என்று நினைத்தேன்.  அதாவது எனக்குக் கதை எழுத வரும் என்று  நானே தீர்மானித்துக் கொண்டேன்!  அதுவும் நகைச்சுவைக் கதைகள். ‘அகஸ்தியன்’ என்ற புனைப் பெயரைச் சூட்டிக் கொண்டேன்.  ஒரு பஞ்சு கதையை எழுதி அனுப்பினேன். யார் எழுதுவது என்பது யாருக்கும் தெரியக்கூடாது என்று சாவிக்கு எழுதியிருந்தேன். தொடர்ந்து வாரா வாரம் பஞ்சு கதைகள் கதிரில் வந்து கொண்டிருந்தன. ஆனால் என் மனதில் ஒரு குற்ற உணர்வு உறுத்திக் கொண்டே இருந்தது. சில வாரங்கள் கழித்து சென்னைக்கு வந்தேன், எஸ். ஏ. பி.   அவர்களைப்போய்ப் பார்த்தேன். ஏதேதோ பேசிவிட்டு, மெதுவாக “ கதிரில் வரும் பஞ்சு கதைகளைப் பார்க்கிறீர்களா? என்று கேட்டேன். “ பார்க்கிறேன். அதற்கு என்ன?” என்று கேட்டார். ”இல்லை.. வந்து.. அதாவது “ என்று ஆரம்பித்தேன்...பிறகு ”பஞ்சு கதைகளை நான்தான் எழுதி வருகிறேன். என்னை பற்றி மூச்சு விடக்கூடாது என்று அவர்களிடம் சொல்லி இருக்கிறேன். நானே உங்களிடம் நேரே சொல்லி உங்கள் ஆசீர்வாதங்களைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் ” என்றேன்.
“அப்படியா.. ரொம்ப சந்தோஷம். எழுதுங்கள். பேட்டி போன்றவைகளை நமக்கு எழுதுங்கள். அகஸ்தியன் நீங்கள் என்பதறிய மிக்க சந்தோஷம். இந்த ‘பஞ்சு’ கதை’களை எழுதுவது யார் என்று ஊகிக்கப் பார்த்தோம். அவராக இருக்குமோ இவராக இருக்குமோ என்று அலசிப் பார்த்தோம். கண்டுபிடிக்க முடியவில்லை. டில்லியில் இருப்பவர் எழுதி இருப்பார் என்று  எங்களுக்குச் சந்தேகமே வரவில்லை. காரணம் சமீபத்தில் வந்த கதையில் ஒரு சர்க்கஸ் யானையைப் பற்றி வந்திருந்தது. அந்த சமயம் சென்னையில் சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. ஆகவே சென்னையில் இருக்கிறவர் ஒருவர்தான் அகஸ்தியனாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.... அது நீங்கள்தான் என்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி” என்றார்.
அப்புறம்தான் எனக்கு மூச்சே வந்தது. ‘ரொம்ப தாங்க்ஸ், சார்” என்றேன்.
அவர் என்றும் என் நனறிக்கு உரியவர்.
*         *            *
ஒரு சமயம் - 1985 அல்லது 86 இருக்கும் -- பெங்களூரில் திரு பாக்கியம் ராமசாமி அவர்களின் மகனின் திருமணத்திற்குப் போயிருந்தேன். எடிட்டரும் வந்திருந்தார். கலியாண மண்டபத்தில் எல்லாரும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம் அப்போது .பெங்களூர் எழுத்தாளர் ஒருவர் வந்தார். அந்த இளைஞர் என்னைப் பார்க்கத்தான் வந்தார். எஸ். ஏ. பி. அவர்கள் அங்கு இருப்பார் என்று அவர் எதிர் பார்க்கவில்லை. அவரை எடிட்டருக்கு அறிமுகம் செய்து
வைத்தேன். அந்த இளைஞர் என்ன செய்தார் தெரியுமா? சில வாரங்களுக்கு முன்பு எஸ். ஏ. பி. அவர்கள் முடித்திருந்த தொடர்கதையைப் பற்றிக் குறிப்பிட்டு "கடைசி அத்தியாயத்தில் இப்படி எழுதியிருக்கிறீர்களே, கதையை இப்படி முடித்திருக்கலாமே" என்கிற ரீதியில் பேச ஆரம்பித்தார். எல்லோருக்கும் அதிர்ச்சி. எனக்கு அதிர்ச்சிமட்டுமல்ல குற்ற உணர்வும் ஏற்பட்டது.
ஆனால் எடிட்டர் அவர்களோ அவரது வழக்கமான சாந்த பாவனையுடன் தொடர்கதையைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்.
  ஆஹா, எவ்வளவு பக்குவப்பட்ட மனிதர்.
*            *             *           *
ஒரு சமயம் குமுதத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். நிட்டிங் வேலையை ஆண்கள் செய்ய முடியுமா என்பதைப் பற்றி எழுதி அனுப்பச் சொல்லியிருந்தார்கள் அதைப் பார்த்த நான் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பி இருந்தேன். "ஊசி முனையில் ஒரு போராட்டம்" என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்தக் கட்டுரையைப் படித்த எஸ். ஏ. பி. அவர்களின் மனைவியார் மிகவும் ரசித்துச் சிரித்துப் பாராட்டினாராம். ஆச்சி தன் பாராட்டை எஸ். ஏ. பி. க்குத் தெரிவிக்க. அதை அவர்  ரா. கி. ர. விடம் சொல்ல, ரா. கி. ர. எனக்குக் கடிதம் எழுதி தெரிவித்தார். இதனால் மேலும் ஊக்கமடைந்த நான் நிறைய பேட்டிகள், துணுக்குகள் என்று வாரா வாரம் அனுப்பி வந்தேன். டில்லியிலிருந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மொபைல் போஸ்ட் ஆபீஸில் ஒரு கவரை குமுதத்திற்கு அனுப்புவேன்.  அந்தக் கவரை நான் வீட்டிலேயே தயார் செய்வது வழக்கம். நீள அகலமெல்லாம் வித்தியாசமாக இருக்கும். அது மட்டுமல்ல அதன் நிறமும் ஒரு வித நீலக்கலரில் இருக்கும்.
    கவர் புதன் கிழமை குமுதம் ஆபீஸுக்குப் போய்விடும். நீலக் கவர் வந்திருக்கா, பாரு, என்று கேட்டுக்கொண்டே உதவி ஆசிரியர்கள் மும்மூர்த்திகளும் தபால் குவியலில் தேடுவார்களாம். வித்தியாசமான சைஸ் கவர் என்பதால் முந்திரிக்கொட்டை மாதிரி (அதாவது என்னை மாதிரி?) துருத்திக் கொண்டிருக்கும் அதை எடுத்துப் பிரித்து எடிட்டரிடம் காட்டுவார்களாம்., அவர் பார்த்து ஓ. கே. சொன்ன மேட்டர்கள் உடனே கம்போஸுக்குப் போய் விடுமாம். வியாழக்கிழமை இதழ் தயாராகி வெளி ஊர்களுக்கு அனுப்பி விடுவார்கள். சனிக்கிழமை ஜி. டி. எக்ஸ்பிரஸ்ஸில் குமுதம் பார்சல் வந்து விடும் பகல் பதினோரு மணி வாக்கில் டில்லி ஏஜன்ட்டான சௌத் இண்டியா போர்டிங் ஹவுஸிற்கு நான் போவேன். பத்து பதினைந்து துணை ஏஜன்டுகள் சைக்கிளில் வந்து காத்திருப்பார்கள். பார்சல் கட்டைப் பிரித்ததும் ஒரு காப்பியை வாங்கி ஆர்வத்துடன் என் கட்டுரை வந்திருக்கிறதா என்று புரட்டிப் பார்ப்பேன். சில வாரங்கள் நான் எழுதிய நாலைந்து கட்டுரைகள், துணுக்குகள் வந்திருக்கும். அன்று எனக்குத் தலைகால் புரியாது. அவற்றை குமுதம் ஆசிரியர் குழு எனக்கு வெவ்வேறு பெயர்களைச் சூட்டி போட்டிருப்பார்கள்.   
 ஒரு சமயம் எடிட்டரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது நான் சொன்னேன் "குமுதம் இதழில் சென்னை நகர நிகழ்ச்சிகளுக்கும் பிரமுகர்களுக்கும்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிற மாதிரி தோன்றுகிறது. தமிழ் நாட்டில் எத்தனையோ நல்ல நிகழ்ச்சிகள் நடக்கின்றன, பாராட்டப்படவேண்டிய பணிகளைப் பலர் செய்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை." (அதிகப்பிரசங்கித்தனம்தான். அப்போது தெரியவில்லை!)
  பேசிவிட்டு நான் செங்கற்பட்டு (என் ஊர்)  சென்றுவிட்டேன். மறு நாள் ரா.கி.ர-விடமிருந்து  செங்கற்பட்டுக்குக் கடிதம் வந்தது. ”எடிட்டரை வந்து சந்திக்கவும். பத்து நாள் தென்னிந்திய டூர் போக பிளான் போட்டுக் கொண்டு வரவும்” என்று எழுதி இருந்தார். உடனே சென்னை வந்து எடிட்டரைச் சந்தித்தேன். "உங்களுக்கு இஷ்டமான ஊர்களுக்கெல்லாம் போய் அங்குள்ள சிறப்புச் செய்திகளை கடிதம் டைப்பில் கட்டுரைகளாக எழுதி அனுப்புங்கள். எல்லா செலவுகளையும் குமுதம் ஏற்றுக்கொள்ளும்" என்றார். அரிய வாய்ப்புத்தான். ஆனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இரண்டு நாளில் டில்லி திரும்ப வேண்டியிருந்தது.
என் கருத்துக்கு அவர் கொடுத்த மதிப்பை இன்றைக்கு எண்ணும் போதும் அவர் மீது எனக்குள்ள மதிப்பு மேலும் அதிகரிக்கிறது.

   வேறு ஒரு சமயம் ஒரு வித்தியாசமான அறிவிப்பு குமுதத்தில்  வெளியாயிற்று. ஐந்து ஓவியர்களிடமிருந்து ஓவியங்களை வாங்கிப் போட்டு ஒவ்வொரு படத்தின் அருகில் ஒரு எழுத்தாளர் பெயர் போட்டிருந்தது. ஒரு படத்திற்கு ((இங்குள்ள படம்) என் பெயரும் அச்சாகி இருந்தது. "வாசகர்களுக்கு ஒரு அறிவிப்பு. இங்குள்ள படங்களை ஒட்டி எழுத்தாளர்களின் பெயர்கள் உள்ளன. உங்களில் யார் குறிப்பிட்ட எழுத்தாளரை முதல் முதல் அணுகி அவர் பெயர் போட்ட படத்திற்கு ஏற்ற ஒரு கதையை குமுதத்திற்கு எழுதி அனுப்பும்படி சொல்கிறார்களோ, அவர்களுக்கு ரூ 100 பரிசளிக்கப்படும்" என்று ஒரு குறிப்பும் இருந்தது.
    என் நண்பரின் பெண் விடிகாலை வந்து இதைச் சொன்னாள். நான் குமுதத்துக்குக் கதை எழுதி அனுப்பினேன். அவளுக்கு ரூ 100 பரிசு கிடைத்தது. என் கதையும் குமுதத்தில் வெளியாகியது.

எஸ். ஏ. பி.அவர்களின் அபிமானத்தைப் பெறுவது சாதாரண விஷயமா? எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் கல்கி விதைத்தார். அதைச் செடியாக வளர்த்தவர் எஸ். ஏ. பி. அவர்கள் தான்!
           நிச்சயம் நான் பாக்கியசாலி.                   

25 comments:

  1. Not only you are lucky sir, we too...we are Privileged to read these information...God and ASP sir are watching!

    Essex Siva

    ReplyDelete
  2. தன்னை எப்போதும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாத, எளிமையான, அருமையான மனிதர், எஸ்.ஏ.பி. அவருடைய தெய்வ பக்தியும், பகவத் கீதை மற்றும் சுவாமி சின்மயானந்தா மீது அவருக்கு இருந்த ஈடுபாடும் மிகப் பிரசித்தம். அவருடனான உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  3. Sir,
    Your writing is simply superb !!!!!!! Those days were the golden era of weekly magazines. But today?????

    ReplyDelete
  4. ராஜ சுப்ரமணியன்March 22, 2010 at 10:07 AM

    நிச்சயம் நாங்களும் பாக்கியசாலிகள்தான். ஒரு மாபெரும் மனிதரைப் பற்றி எழுதியதற்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. vankkam.. appo neenga thaan bharathi Maniya?

    ReplyDelete
  6. Saar, your article proved one more time that SAP sir was a socially responisible person which is much required for media owner. You are fortunate that you were in good books of SAP sir and same social responsibity can be felt when reading your articles too.

    - Sri :)

    ReplyDelete
  7. << vanakkam.. appo neenga thaan bharathi Maniya?>>
    இல்லை.
    அதிருக்கட்டும். அவர் மாதிரி அற்புதமாக நான் எழுதுகிறேனா? இப்படி நீங்கள் கேட்பது அவரை INSULT பண்ணுகிறீர்கள் என்று அவர் நினைத்துவிடப் போகிறார்!!!!:)

    ReplyDelete
  8. >>>> Your article proved one more time that SAP sir was a socially responisible person .......... same social responsibity can be felt when reading your articles too.- Sri :)>>>>
    Thank you for your comments. These noble souls like rain shower their goodness on all. The lesst we should do is just to throw away our raincoats...

    ReplyDelete
  9. திரு எஸ்.ஏ.பி. அவர்களின் “மிலாட்” போன்ற நாவல்கள் இன்னும் நினைவில் நிற்பவை.அவருடைய கதைகள் பெரும்பாலும் “ஆர்தர் ஹெய்லி” யின் கதைகளைப்போன்றே குறிப்பிட்ட த்ள்த்தில்
    சுற்றிவரும்.
    மேலும் ஒன்று, இனிமேல் நான்"Ananymous" ஆக
    இல்லாமல் எனது பெயரிலேயே கடித்ம் அனுப்புகிறேன்.
    அன்புடன்
    மதி

    ReplyDelete
  10. >>>>> mathileo said... இனிமேல் நான்"Ananymous" ஆக
    இல்லாமல் எனது பெயரிலேயே கடித்ம் அனுப்புகிறேன்.அன்புடன் மதி>>>>>
    என் யோசனைக்கு நீங்கள் சம்’மதி’த்தற்கு நன்றி.-கடுகு

    ReplyDelete
  11. மதி அவர்களுக்கு: உங்கள் பிளாக்கில் ஒரு பழைய பதிவிற்கு பின்னூட்ட்ம் போட்டிருக்கிறேன். பாருங்கள்.
    - கடுகு

    ReplyDelete
  12. //அதிருக்கட்டும். அவர் மாதிரி அற்புதமாக நான் எழுதுகிறேனா? இப்படி நீங்கள் கேட்பது அவரை INSULT பண்ணுகிறீர்கள் என்று அவர் நினைத்துவிடப் போகிறார்!!!!:)//

    இல்ல இட்லிவடையில பாரதி மணி , முகேஷ் அம்பானியின் சென்னை வருகை பத்தி ஒரு புதிர்ல விடை அளித்து இருந்தார்.. ஒருவேள தானிக்கி தீணியோனு நெனச்சேன்

    ~நாரத முனி

    ReplyDelete
  13. //திரு எஸ்.ஏ.பி. அவர்களின் “மிலாட்” போன்ற நாவல்கள் இன்னும் நினைவில் நிற்பவை.//

    மதி அவர்களே “மிலாட்” நாவல் திரு ஆர்வி எழுதி குமுதத்தில் தொடராக வந்தது. திரு எஸ்.ஏ.பி எழுதியதல்ல! :)

    ReplyDelete
  14. ஆர்வியா? இல்லை பி.வி. ஆர்?

    ReplyDelete
  15. //ஆர்வியா? இல்லை பி.வி. ஆர்?//

    நீங்கள் சொன்னது சரிதான்!. பெயர் ஞாபகம் இருந்தும் தடுமாறித் தவறாகவே எழுதினேன்.

    இதற்கு முன்பும் எந்த வலைப்பூவிலோ இதே விஷயத்தில் குழப்பம் எனக்கு நேர்ந்தது. கண்ணன் சிறுவர் இதழ் ஆசிரியர் ஆர்விக்கும் பி.வி.ஆருக்கும்! :)

    ReplyDelete
  16. எனக்கு எஸஏபி என்றுதான் ஞாபகம். ஏனென்றால்
    அந்தக்காலத்தில் நான் குமுத்தில் வந்த சாண்டில்யன், எஸஏபி,சுஜாதா ஆகியோருடைய கதைகளை கத்த்ரித்து பைண்டிங் செய்து பொக்கிசம்போல் வைத்திருந்தேன்.
    மேலும் அவரது கதைகள் குறிப்பிட்ட த்ளத்தில் சுற்றிவரும்.
    ஏன் நீங்களே விசாரித்து தெளிவுபடுத்துங்கள்.
    உங்களின் பின்னூட்டம் பார்த்தேன்.
    எங்கு கிடைத்தது என்று தெரியவில்லை. நல்ல செய்தி, எல்லோருக்கும் தெரிய்ட்டும் என்றுதான்..
    மதி

    ReplyDelete
  17. http://www.geotamil.com/pathivukal/tkirushnan_on_pvr.htm
    திருப்பூர் கிருஷ்னணன் எழுதிய கட்டுரையைப் பார்க்கவும். மிலாட் பற்றி அதில் வருகிறது.

    ReplyDelete
  18. மிலாட் எழுதியவர் பி.வி.ஆர்

    http://books.dinamalar.com/BookView.aspx?id=11169

    ReplyDelete
  19. Dear Sir - The incident you have written about 'writing a story for a given picture' - I think I still remember it. The story had nothing to do with the picture. It is actually discussion between all of the charaters (kamala, thochu and his wife) and you would have finally said that you have sent what was discussed. Am I correct?

    ReplyDelete
  20. Yes. The story was the discussions we had for writing a story!
    Are you a new visitor. SAP matter was posted long time back!

    ReplyDelete
  21. Yessir, I am new to your blog. I am quite happy to see your blogs. Thanks

    ReplyDelete
  22. எஸ்.ஏ.பி. பற்றிய தங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. மூன்று தினங்களுக்கு நடந்த ’பாரதியார் விழா’வில் திரிலோக சீதாராம் அவர்களும் கலந்துகொண்டதாக எழுதியுள்ளீர்கள். திரிலோக சீதாராம் / திருலோக சீதாராம் எது சரி என்று அறிய விரும்புகிறேன். ஏனெனில் திரிசக்தி தீபாவளி மலரில் (2009), திருலோக சீதாராம் அவர்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.

    ரவிபிரகாஷ் அவர்களின் அன்னை தொடர்பதிவையும் தங்கள் பதிவில் கொடுத்திருந்த லிங்க் மூலமாகவே சென்று படித்தேன். அதற்கும் என் தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  23. <<< சைதை முரளி said... >>>
    திரிலோகவா திருலோகவா என்று எனக்குச் சரியாக தெரியாது. கூகுளில் இப்பொது கண்டுபிடித்தத் தகவல்”
    ”பெயர் திருலோக சீதாராம் (திருவையாறு லோகநாத சீதாராம்). .”

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!