March 17, 2010

கமலாவும் (கார) கமெண்ட்ஸும்

என் அம்மாவிடமிருந்து கடிதம் வந்தாலே எனக்கு அலர்ஜி. அம்மாவின் கடிதத்தை கமலாவிற்கு உரக்கப் படிக்க வேண்டும். இது என் மனைவி கமலாவின் கட்டளை.  ஒரு நாள் நடந்ததைக் கேளுங்கள்.
(கையில் கைகுட்டைத் தயாராக  வைத்திருக்கிறீர்களா? )
               "கமலா, அம்மாவிடமிருந்து லெட்டர்'' என்றேன். "இப்படிக் கொடுங்கோ... பாவம் இந்த அம்மா எதுக்கு சாளேசுரக் கண்ணோடு கஷ்டப்பட்டு லெட்டர் எழுதறாளோ...? ஹும். பெத்த மனசு!'' என்று அவள் கூறும்போதே  இடைமறித்து, "உங்கம்மாகிட்டே இருந்து வரவில்லை... எங்கம்மாவின் லெட்டர்'' என்றேன்.
"அதை முதல்லேயே சொல்லக் கூடாதா? ஹூம், படியுங்கோ. ஆயிரம் கை நடுக்கல் இருந்தாலும் கரெக்டா வாரா வாரம் லெட்டர் எழுதிடுவாளே உங்கம்மா... எவ்வளவு பணம் வேணுமாம்?  இங்கே பிள்ளை இல்லா வீடு... படியுங்கோ...'' என்றாள்.
    "..... ஆசீர்வாதம். நீ சௌக்கியமா?''
    கமலாவின் கமெண்ட்: "பிள்ளை சௌக்கியமான்னு தான் கேட்கிறாள். நான் ஒருத்தி இருக்கேன்னு நினைவு இருக்கணுமே! தான், தன் பிள்ளை, தன் பேரன், தன் பேத்தி எல்லாரும் சௌக்கியமா இருந்தால் போதும். ஆயிரம் இருந்தாலும் நான் அசல்தானே... ஹும் (இனி கமலாவின் கமெண்டுகளை அடைப்புக் குறியில் கொடுக்கிறேன்.)

    "...கமலா சௌக்கியமா?'' (அதிசயமா இருக்கே?... கைதவறி எழுதிட்டாளா?)
    "நீ வாங்கி அனுப்பிய கம்பளி ஷால் நன்றாக இருக்கிறது.''
    (இருக்காதா என்ன? மாசா மாசம் அம்மாவுக்கு மணியார்டர் பண்றது போதாதுன்னு போனஸ் மாதிரி இப்படி ஏதாவது சாமான் அனுப்பினா, நல்லா இல்லாம எப்படி இருக்கும்?)
    "...உன் கம்பளியை உபயோகித்துக் கொண்டு வருகிறேன்...''
    (அட அநியாயமே! ஃப்ரீயாக வந்ததுன்னு இந்தக் கத்தரி வெய்யிலிலுமா கம்பளியைப் போர்த்திண்டு இருப்பா?)
    "கம்பளியைப் பார்க்கறவங்க எல்லாரும் ’ரொம்ப உசத்தியா இருக்கே’ன்னு சொல்றா''
    (நூத்து எழுபத்தி அஞ்சு ரூபாய் கொடுத்தால் எப்படி இருக்குமாம்?)
    "... இவ்வளவு நைஸா இருக்கே. நாள்பட உழைக்குமான்னு கேட்கறா...''
    (நாள்பட உழைக்கணும்னா, ஆயுசுக்கும் உழைக்கணும்னா கோணியிலேதான் ஷால் பண்ணணும். நாசூக்கா வெச்சுண்டா எல்லாம் உழைக்கும். பேரன் பேத்திங்க சரியான பிசாசுங்க. அதுங்க இழை இழையாப் பிய்ச்சுடுமே! அதுங்க இருக்கிற இடத்திலேயே ஷாலைக் கொண்டு வரக் கூடாது. ஸ்டீல் நூலில் ஷால் யாரும் இன்னும் பண்ணலையே!))
    "...எதிர் வீட்டு காமு மாமி கூட இதே மாதிரி ஒண்ணு வேணும்னு எழுதச் சொன்னாள்.  பணம் கொடுத்திடறாளாம்...''
    (அதுதானே கேட்டேன்! காமுவுக்கு, சரோஜாவுக்கு, மைதிலிக்கு, பத்மாவுக்கு, ருக்மணிக்கு என்று இனிமேல் ஆர்டர் குவியும்... பணம் கொடுத்திடறாளாம் ஆஹ்ஹாஹா. ஷாலை நீங்க வாங்கி அனுப்பினா, அங்கே பணம் கொடுத்திடுவா. ஆனால் பணம் நம்ப கைக்கு வராதே. உங்கம்மாவுக்கு இது ஊக்க போனஸ். ... நூதன் ஸ்டவ்வை  இப்படித் தான் டஜன் கணக்கிலே வாங்கி அனுப்பினீங்க... பணம் அங்கே, கடன் இங்கே.)
    "என் அக்கா பேத்தி ஜானாவுக்கு வருகிற வாரம் கல்யாணம். உனக்கு இன்விடேஷன் அனுப்பி இருக்கிறாள்... என்ன ஆசீர்வாதம் செய்யலாம்னு தெரியலை...''
    (எப்படித் தெரியும்? எப்படித் தெரியும்னேன்? ஆசீர்வாதம் பண்ண நீ எவ்வளவு பணம் அனுப்பறே  என்று நேரடியாகக் கேட்கிறது தானே? ’எனக்கெதுக்கு வங்கி, ஒட்டியாணம்"னு சொல்லித் தன் பொண் வயத்துப் பேத்திக்குக் கொடுத்தபோது உங்கம்மா கேட்டாளா? ஏன், எனக்குக் கொடுத்தால் அழிச்சி வளையல் பண்ணிப் போட்டுக்கொள்ள மாட்டேனா... முப்பது வருஷம் ஆனாலும், இதெல்லாம் மறக்குமா?)
    "...உன் உடம்பைப் பாத்துக்கோ...''
    இதற்குக் கமலா அடித்த கமெண்ட் ஒரு வாக்குவாதத்தைத் துவக்கியதால் கடிதம் மேலே படிக்கப்படவில்லை.
    புரிந்ததா, ஏன் என் அம்மாவின் கடிதம் என்றாலே எனக்கு அலர்ஜி என்று?
==============

5 comments:

  1. Dear Sir,

    This is too much... You are teasing your wife too much... :).... Do you get hot fileter coffee.... Hope your wife does not read your blog...

    Regards
    Rangarajan

    ReplyDelete
  2. ராஜ சுப்ரமணியன்March 17, 2010 at 11:48 AM

    நகைச்சுவையில் ஆழ்ந்து, முழுகி, இன்னும் எனக்கு நானே சிரித்துக் கொண்டிருந்தேன். பின்னாலிருந்து என் 3 1/2 வயசு பேத்தி அதிதி, “எதுக்குத் தாத்தா இப்பிடி சிரிக்கிறே?” எனக் கேட்கிறாள்

    ReplyDelete
  3. அன்புள்ள ஐயா

    உங்கள் பதிவை நான் தினமும் படிக்கிறேன். பக்கத்துக்கு flat பாலாஜிக்கும் ,முகுந்தனுக்கம் உங்கள் பதிவை அறிமுகம் செய்து வெச்சுருக்கேன் .எதோ என்னால் ஆன கைங்கர்யம் !பதிவு இட்டுக்கொண்டே இருக்கவும்

    நமஸ்காரம்

    ராஜூ-துபாய்

    ReplyDelete
  4. சில நாட்கள் கழிச்சு வந்தாலும் நச்சுன்னு வந்துருக்கு .சூப்பர்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!