March 05, 2010

வேம்பு. - கடுகு

தெருவை ஒட்டியிருக்கும் அந்தக் கார்ஷெட்டில் நாலு டேபிளைப் போட்டுச் சுடச்சுட இட்லி, தோசையையும் சுவையான காபியையும் சப்ளை செய்பவர்தான் அந்த அம்பாள் கஃபேயின் முதலாளி கம் சர்வரான திருவாளர் வேம்பு.
நல்ல சிவப்பு. சுத்தமாக ஷேவ் செய்யப்பட்ட கன்னம். அழகான குடுமி. (தேவன் எழுதிய `மிஸ்டர் வேதாந்தம்' கதை படிச்சிருக்கேளா? கோபுலு சார் என்னை பார்த்துத்தான் வேதாந்தத்தைப் படம் போட்டிருப்பாரோன்னு தோண்றது!') ஜொலிக்கும் கடுக்கன். தும்பைப் பூவைப் பழிக்கும் வெள்ளை அரைக்கை சட்டை; மடித்துக கட்டப்பட்ட வேட்டி. இதுதான் வேம்பு.
சுத்தம் என்பதுதான் அவர் ஓட்டலின் முதல் சிறப்பு. சின்ன காரேஜ் பளிச்சென்று வெள்ளை அடிக்கப்பட்ட சுவர்கள் இரண்டு ட்யூப்லைட். ஸ்டூல் மேஜை நாற்காலிகள். காரேஜின் பின்பக்கம் உள்ள சமையல் அறைக்குச் செல்லும் வழியை மறைக்கும். அழுக்குப் படியாத கர்ட்டன் எல்லாம் அவர் சுத்தத்திற்கும் தரும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும்.
“நம்ப ஓட்டலில் சாமி படம், அது, இது எதுவும் கிடையாது. ஏன்னா, இங்கிலீஷ்லே சொல்லுவா, ’க்ளென்லினெஸ் ஈஸ் காட்லினெஸ்’ என்று. அதனாலே நம்ம கேஃபைச் சுத்தமாக வெச்சுண்டு இருக்கேன். தெய்வம் இங்கேயே இருக்கும். படம் எதுக்கு? பூமாலை, ஊதுவத்தி எதுக்கு? ....சார். வாங்க..மெடிகல் ரெப்ரசென்டேட்வ் மாதிரி இருக்கு. ஊரில் எவ்வளவு நாள் கேம்ப்? நம்ப கேஃபில் காலை ஆறு மணியிலிருந்து எட்டரை வரை டிபன் கிடைக்கும். திரும்பவும் சாயங்காலம் ஃபோர் டு ஸிக்ஸ்.. அண்ணா, இன்னும் ஒரு தோசை போடச் சொல்லட்டுமா? ஜகதா, வக்கீல் சாருக்கு, நிறைய எண்ணெய் விடாமல் ஒரு தோசை..'' என்பார்.
ஜகதா அவர் மனைவி. கணவன் மனைவி டீம். மேஜை துடைக்க, கழுவ ஓர் ஆள். அவ்வளவுதான் அம்பாள் கஃபேயின் ஸ்டாஃப். வேம்பு நிறையக் கொள்கைகள் உள்ளவர். தேசியவாதி. பக்திமான். கலா ரசிகர்.
"அம்பாள் எங்களுக்கு எவ்வளவோ அனுக்கிரகம் பண்ணிண்டிருக்காள். ஒரு குழந்தையை மட்டும் கொடுக்கலை. அந்தக் கவலையும் இப்போ ஆறிப்போயிடுத்து, இப்படிப் பல தம்பதிகள் இருக்கிறதும் தேசநலனுக்குத்தான். எல்லாம் அவள் அருள்'' என்பார்.
காலை எட்டரை மணி ஆகிவிட்டால், கடையை மூடிவிடுவார். அதற்கு மேல் ஒரு  நிமிஷம் கூட வியாபாரம் செய்யமாட்டார். அதேபோல மாலையிலும் ஆறு மணிக்குக் கடையை மூடிவிடுவார். ஆறரை மணிக்கு கோர்ட் ஆஞ்சநேயர் கோவிலில் இவரைக் கட்டாயம் பார்க்கலாம். அல்லது ஊரில் நடக்கும் இசைக் கச்சேரியில் முதல் வரிசை ஸீட்டில் பார்க்கலாம். "இட்லி, தோசையில் மட்டும் ருசி இல்லை; வாழ்க்கையிலும் இருக்கு. அதையும் ருசிக்கணும். இரண்டு மணி நேரம் காதாரப் பாட்டுக் கச்சேரி கேட்டால் எவ்வளவு ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. பணம் சம்பாதிக்கிறவன் எல்லாரும் வாழ்க்கையை ருசித்துப் பார்ப்பதில்லை. அவனுக்கு நேரம் இல்லை. இருந்தால், அந்த டயத்தையும் பணம் சம்பாதிப்பதில்தான் செலவழிப்பான்'' என்பார்!
   அம்பாள் கஃபேயில் கடன் உண்டு. அவரவர்களே நோட்டுப் புத்தகத்தில் எழுதிவிட்டுப் போகவேண்டும். பாக்கியை வசூலிப்பதில் வேம்பு அசகாய சூரர். பேசியே கறந்துவிடுவார்.         "ராமலிங்கம் சாரா... வாங்கோ... முனிசிபல் வரி வசூலிக்கிற மாசமில்லியோ... அதுதான் பிஸி போல இருக்கு... ஒரு வாரமா ஆளையே காணோம்.... நான் கூட ஜகதா கிட்டே சொன்னேன். நம்ப கேஃப் பாக்கி வசூலிக்க ஆள் வைக்க தேவையில்லைன்னு. அவாள் அவாள் தானாகக் கொடுக்கறா.. உங்க பாக்கியைப் பற்றி மறைமுகமாகச் சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க, பிசாத்து இருபத்தியொரு ரூபாய் முப்பது காசு. கொடுக்காமல் இருக்கப்போறீங்களா?... வாங்க ட்ரில் மாஸ்டர் சார், உங்களை மாதிரி நாலு பேர் நம்ம ஓட்டலில் சாப்பிட்டால் அதுவே பெரிய பப்ளிசிட்டி... பயில்வான்கள் சாப்பிடும் கேஃப் என்றால் மதிப்பில்லையா? பார்க்கப்போனால், உங்கள் மாதிரி கஸ்டமர்களிடம் பாக்கியே வசூல் பண்ணக்கூடாது. அடேடே... எதுக்கு பர்ஸை எடுக்கறீங்க... பாக்கியா? ஜாஸ்தியில்லை, இருபத்திரண்டு ரூபாய்தான். போன மாசம் ஒரு மூன்று ரூபாய் பத்து காசு நின்னுடுத்து... அவசரம் இல்லை. நிதானமாகக் கொடுங்கள்...”
         'தண்ணீர்ப் பந்தல் போன்ற ஓட்டலை நடத்தினாலும் வேம்புவிற்கும் அவர் மனைவி ஜகதாம்பாளுக்கும் ஊரில் நல்ல மதிப்பு உண்டு. ஊரில் எந்த நன்கொடைப் பட்டியலிலும் வேம்புவின் பெயர் இல்லாமல் இருக்காது. எந்தக் கலியாணத்திலும் `வேம்பு மாமி'யின் நலங்குப் பாட்டு, இழை கோலம்  இல்லாமல் இருக்காது!

8 comments:

  1. படிக்க எதனை சுகமாய் இருக்கிறது .அந்த இட்லி தோசைக்கு ஏங்குகிறது

    ReplyDelete
  2. ராஜ சுப்ரமணியன்March 5, 2010 at 4:21 PM

    "இட்லி, தோசையில் மட்டும் ருசி இல்லை; வாழ்க்கையிலும் இருக்கு. அதையும் ருசிக்கணும். இரண்டு மணி நேரம் காதாரப் பாட்டுக் கச்சேரி கேட்டால் எவ்வளவு ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. பணம் சம்பாதிக்கிறவன் எல்லாரும் வாழ்க்கையை ருசித்துப் பார்ப்பதில்லை. அவனுக்கு நேரம் இல்லை. இருந்தால், அந்த டயத்தையும் பணம் சம்பாதிப்பதில்தான் செலவழிப்பான்'' என்பார்!

    சத்தியமான வார்த்தைகள். இன்றைக்கு இது பல பேருக்கு பொருந்துகிறது. அம்பாள் கஃபே போன்ற சுத்தமான ஹோட்டலில், வேம்பு மாமா பரிமாற, சுடச்சுட 4 இட்லிகள் சாப்பிட மனசு துடிக்கிறது. மாலை 4-15 ஆகிவிட்டது; ஓட வேண்டும் அம்பாள் கஃபேக்கு !

    ReplyDelete
  3. அட, இவரின் வசூல் பாணி வித்தியாசமாக இருக்கிறதே!!

    ReplyDelete
  4. Yengae ponaargal ivar maadhiri hoteliers yellaam? Pazhaiya kaalaththukku manasu yengugirathu. Romba rasiththu yezhuthi irukkireergal, naanum rasiththup padiththaen matravargalaip pola. - R. J.

    ReplyDelete
  5. பிட்ஸா, பர்கர்,மெக்டனால்ட் என்றெல்லாம வந்து விட்ட பிறகு, மார்கழி மாதத்தில் கோவில்களில் கூட பொங்கல் கிடைக்குமா என்பது சந்தேகம்!

    ReplyDelete
  6. If you have read articles by our TN tourists to any part of the World, their first mission is to look for a Madrasi hotel or host who can feed them with Idly, Saambar etc.! Remember Maniyan's Idhayam Paesukirathu? I think he toured the World only for eating our type of cuisines in foreign lands! - R. J.

    ReplyDelete
  7. வேம்பு சாம்புவோட வய்ப் இல்லையா?

    ReplyDelete
  8. Altruist said...வேம்பு சாம்புவோட வய்ப் இல்லையா?

    ஆமாம்.
    வேம்பு, பட்டு, ராஜாமணி, செல்லம்,ராஜம் - ஆண்கள், பெண்கள் இரு பாலருக்கும் பொதுவான பெயர்கள்!

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!