March 02, 2010

கமலாவும் கதைச் சுருக்கமும் -- கடுகு

  "உங்களுக்கு ஒரு சின்ன விஷயத்தைக் கூடக் கோவையாகக் குழப்பாமல் சொல்லத் தெரியாது. நீங்கள சரியான் அசமஞ்சம்!'' என்று எனக்கு சர்ட்டிபிகேட் கொடுத்தாள் என் அருமை மனைவி கமலா. ஏன் இப்படிச் சொன்னாள் என்பதற்கு எங்களுக்குள் நடந்த ஒரு பழைய  உரையாடலை  எடுத்துச் சொன்னால் போதும். உங்களுக்கு விளங்கிவிடும்.'' ( ஏன்.   பழைய  உரையாடல் என்றா  கேட்கிறீர்கள்? இந்த சர்ட்டிபிகேட் கொடுத்த பிறகு இந்த மாதிரி உரையாடலுக்கு அவள் முற்றுப்புள்ளி வைத்து  விட்டாளே!)
ஒரு நாள் ----
    "ஆமாம், மூன்றாம் பிறை படம் போய்ட்டு வந்தீங்களே, என்ன கதை, சொல்லுங்கோ?''
    "ஸ்ரீதேவிதான் ஹீரோயின்... ஸ்ரீதேவி  வந்து........''
    "மூக்கு ஆபரேஷனுக்கு அப்புறம் எடுத்த படமா இது? ஸ்ரீதேவியின் மூக்குலே ஏதாவது வித்தியாசம் தெரியுதா?''
    "மூக்கு ஆபரேஷனும் இல்லை. நாக்கு ஆபரேஷனும் இல்லைன்னு அறிக்கை கொடுத்திருக்காங்களே... படிக்கலையா?' பண்ணிக்கலைன்னு சொல்றதை ஏத்துக்கணும்.”
    “ஸ்ரீதேவியை பத்தி ஒரு வார்த்தை தப்பா சொல்லக்கூடாதுடாப்பா!! ”
     “சரி.. சரி... கதையைக் கேளு  ஸ்ரீதேவிக்கு அம்னீஷியா...''
    "உங்க பெரிய மாமாவுக்கு வந்ததே அதுவா?''

    "சீ... அவருக்கு அம்னீஷியாவும் இல்லை. மலேசியாவும் இல்லை... பிளட் பிரஷர்... உங்க சித்தப்பாவுக்குத்தான் அம்னீஷியா இருந்தது.''
    "உளறாதீங்கோ... எங்க சித்தப்பாவுக்கு ஒரு வியாதியும் கிடையாது. எங்காத்து மனுஷாள்னா எது வேண்டுமானாலும் சொல்றது. கலியாணத்தப்போ உங்கம்மா சொன்னாளே, "ஏண்டி கமலா உனக்கு ஓரப் பார்வை மாதிரி இருக்குதே"ன்னு....''
    "ஓரப் பார்வைன்னு சொல்லியிருக்க மாட்டாள்... கோரப் பார்வைன்னு சொல்லி இருப்பா...''
    "இருக்கும். உங்க மனுஷாளுக்கு வேறு எது இருக்குதோ இல்லையோ, நாக்கு நீளமா இருக்கு.''
    "நாக்கு நீளமா இருந்தால் தப்பில்லை. கை நீளமாக இருக்காத வரை.''
    "தெரியும்... என் தம்பி தொச்சுவை மனசுலே வெச்சுண்டு இடிச்சுக் காட்டறீங்க...''
    "விடு கமலா... கதையைக் கேளு. ஸ்ரீப்ரியாவுக்கு அம்னீஷியா...''
    "என்னது... ஸ்ரீதேவின்னு சொன்னீங்க, இப்போ ஸ்ரீப்ரியான்னு சொல்றீங்க... அது என்ன ஸ்ரீப்ரியா பித்தோ...''
    "வாய் தவறிச் சொல்லிட்டால் அது ஒரு தப்பா?....''
    "தப்புன்னு சொல்லலை. பித்துன்னு சொன்னேன்.''
    "எனக்குப் பித்து ஒண்ணும் இல்லை. நான் சினிமாவுக்குத் தனியாகப் போய் பார்த்துட்டு வந்தது உனக்குக் கோபம்... எரிச்சல்.''
    "ஆமாம்... "கிளிஞ்சல்கள்: படத்துக்கு என்னை அழைச்சுண்டு போனீங்க.... "வாழ்வே மாயம்’ படத்துக்கு அழைச்சுண்டு போனீங்க... "போக்கிரி ராஜா”வுக்கு அழைச்சிண்டு போனீங்க. உம்.. வேளா வேளைக்குப் பொங்கிப் போடறதுக்குத் தான் நான் லாயக்கு... "மூன்றாம் பிறை' கதையைச் சொல்லுங்கோன்னா ஊர்க் கதை எல்லாம் சொல்றீங்க. ஒரு சின்ன விஷயத்தைக் கூடக் கோவையாக, குழப்பாமல் சொல்லத் தெரியாது. இனிமேல் என்னை வெட்டிப் போட்டால் கூட ஒரு சினிமாக் கதையை உங்கள் கிட்டே கேட்கமாட்டேன். நீங்க சரியான அசமஞ்சம்'' என்று சர்ட்டிபிகேட் கொடுத்தாள் கமலா!
              எனக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்!

11 comments:

  1. எப்போது எழுதினீர்கள் இதை? Time line-க்கு சற்றும் ஒத்துவரவில்லை!

    ReplyDelete
  2. Ha..ha..haa! Oru vishayaththil Kamala mamiyai praise pannanum - Thaan Azhudhu/ Ungalaiyum Azha vaikkaamal, ungalodu argue panni, ungal yezhuthhu thiramaikku help pannugiraargalae! Engaloda nandri avargalukku! - R. J.

    ReplyDelete
  3. இது பழைய உரையாடல் என்று முதலிலேயே சொல்லி இருக்கிறேனே!

    ReplyDelete
  4. ரவிஷா அவர்களுக்கு: இது பழைய கட்டுரைதான். லேட்டஸ்ட் திரைப்படங்களின் பெயர்களைப் போட்டிருக்கலாம். ( உ.ம்.: தசாவதாரம், சந்திரமுகி) நான் போட விரும்பவில்லை. காரணம், இந்த கட்டுரையில் உள்ள நகைச்சுவை dated ஆகாதவை (அல்லது ஊசிப்போகாதவை) என்று நான் கருதுவதால். ஹரிதாஸ், சந்திரலேகா என்று போட்டிருந்தாலும் கூட ஊசி இருக்காது! (ரொம்ப ஜமபம் அடித்துக் கொள்கிறேனோ!?)

    ReplyDelete
  5. Moondram pirai came in 1982. Mundhanai mudichchu came in 1983. Vedham pudhidhu came in 1988. Therefore, when you were trying to tell the story of Moondram pirai, other pictures were not even under production.

    But, as usual, excellent write up. Enjoyed.

    ReplyDelete
  6. Kadugu sir.. Is kamala mami from Tanjore Dt? Her way of talk / speech exactly match with local people of Tanjore. BTW I am from Tanjore.. he he

    ReplyDelete
  7. திரு னநாகராஜன் அவர்களுக்கு: இந்த கட்டுரை 1982-ல் எழுதியது, அப்போது நான் போட்டிருந்த சில திரைப்படங்கள் இப்போது யாருக்கும் (ஏன் எனக்கே மறந்து போய்விட்டது.) ஆகவே ஏதோ இரண்டு படங்களின் பெயரைப இப்போது போட்டேன். படம் ஏ, படம் பி என்று வைத்துக்கொள்ளுங்கள். மிகவும் ஆராய்ச்சி செய்தால் நகைச்சுவை அடிபட்டு போகும்...
    பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  8. திரு ராமுடுஅவர்களுக்கு:
    கமலா மாமி புரசைவாக்கம் -- ஆர். கே. நாராயணானிருந்த வீட்டுக்கு அருகில் என்று எழுதி இருக்கிறேன்.

    ReplyDelete
  9. திரு நாகராஜன் அவர்களுக்கு: 1982-க்கு முன்பு வந்த 2,3 திரைப்படங்களின் பெயரை எழுதி அனுப்புங்களேன். கட்டுரையைத் திருத்தி விடுகிறேன்!

    ReplyDelete
  10. Dear Kadugu Sir,

    Kilinjalgal (1981), POkkiri Raja (1982), ValzvE Mayam (1982) - then came moondram pirai (1982)

    ReplyDelete
  11. திரு நாகராஜன் அவர்களுக்கு: நன்றி. இனி எந்த சினிமாப் புலியாலும் தப்பு கண்டு பிடிக்க முடியாது.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!