March 26, 2010

அன்புள்ள டில்லி- 16

ஆவி உலகத் தொடர்பு பற்றிய விஷயங்களில் எனக்குப் பல
வருஷங்களாக ஆர்வம் உண்டு. பல புத்தகங்களைப் படித்தவுடன் சில பரிசோதனைகளையும் செய்துள்ளேன்.  (”ஆவிகளும் நானும்” கட்டுரை பின்னால் எழுதுகிறேன்.)டில்லிக்குச் சென்ற பிறகு இதற்கெல்லாம் அவகாசம் இல்லை. அங்கு வேறு பல விஷயங்களில் என் கவனம் சென்றது.
இந்தச் சமயத்தில் டில்லிப் பெண்மணி (தமிழர்தான்) ஒருவர் இந்த  ஈ.எஸ்.பி (EXTRA SENSORY PERCEPTION). சக்தி வாய்ந்தவராக இருப்பது தெரிந்தது     இதற்கிடையே பீட்டர் ஹர்க்கஸ் என்பவரது வாழ்க்கை வரலாற்றை தற்செயலாகப் படிக்க நேர்ந்தது. இவர் அபார ஈ.எஸ்.பி. சக்தி கொண்டவர். இந்த புத்தகத்தின் சுருக்கத்தை தினமணி கதிரில் எழுதினேன். அதனால் பழைய ஆர்வம் மறுபடியும் தொத்திக் கொண்டது.
 டில்லிப் பெண்மணி உண்மையிலேயே தாம் ஒரு அசாதாரண சக்தி கொண்டவர் என்பதைப் புலப்படுத்தினார்.இவருடைய ஈ.எஸ்.பி. சக்தி மூலமாகப் பலரது பிரச்னைகளுக்குப் பதில் கிடைத்தது. பரிகாரங்கள் சொல்லப்பட்டன. பலர் பலன் கண்டனர், பத்திரிகை வாசகர்களுக்கு ஏன் உதவி செய்யக் கூடாது என்ற எண்ணத்தில், தினமணி கதிரில் "மீடியம் பதில்கள்' என்ற பகுதியை எழுத ஆரம்பித்தேன். வாசகர்களின் பிரச்னைகளுக்கு மீடியத்திடமிருந்து பதில் பெற்றுப் பிரசுரிக்கப்பட்டது
   சில மாதங்களுக்குப் பிறகு அது நிறுத்தப்பட்டது.  இருந்தாலும் வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ( உண்மையிலேயே எராளமான வாசகர்கள் கேட்டிருந்தனர்)  மீடியம் பதில்களைத் திரும்பவும் ஆரம்பித்தோம். இந்த  சமயம், எல்லாக் கேள்விகளுக்கும் பதிலைப் பத்திரிகையில் வெளியிட இயலாது என்பதால், கூடியவரை நேரடியாகவே பதில்களை அனுப்பத் தீர்மானித்தோம். மீடியத்திற்கு வரும் கேள்விகளைப் பார்த்து, படித்து, அதை மீடியத்திடம் கேட்டு, பதிலைப் பெற்று எழுதி நேரடியாகத் தபால் மூலம் பதில் அனுப்ப முடிவெடுத்தோம். ஆகவே கூப்பனுடன் ஒரு ரூபாய்  - ஆம், ஒரே ஒரு ரூபாய்க்கு போஸ்டல் ஆர்டர் அனுப்பும்படி சொல்லியிருந்தோம். அதே சமயம் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தருவதற்கு உத்தரவாதம் கிடையாது என்றும் தெளிவாக எழுதியிருந்தோம்.வாசகர்களிடமிருந்து எராளமான கூப்பன்கள் வந்தன. சென்னையிலிருந்து டில்லி ஆபீஸிற்கு அனுப்பப்பட்ட இந்தக் கேள்விக்  கூப்பன் மூட்டைகளை ஒரு டெம்போவில் கொண்டு வந்து இறக்கினார்கள். அத்தனை கூப்பன்களையும் படித்து,  இரவு பகல் விடாது பதில்களை எழுதித் தபாலில் அனுப்பினார் அந்த மீடியம் பெண்மணி. இந்தப் பணியில் கரோல்பாக்கில் இருந்த,, சமூக சேவையில் நாட்டமுள்ள பல பெண்மணிகள்  இரவு பகலாக உதவினார்கள். பிரச்னைகளுக்கு மீடித்தின் மூலம் வந்த தீர்வுகளை எழுதி அனுப்பினார்கள். (“அடுத்தது ஆண் குழந்தையாக பிறக்குமா?, ஸ்கூட்டர் வாங்குவேனா?, அப்பா சொத்தில் எனக்கு பங்கு கிடைக்குமா? போன்ற  கேள்விகளை, இவை எல்லாம் பிரச்னைகள் அல்ல என்று ஒதுக்கிவிட்டார் அந்தப் பெண்மணி.)
    இந்த மீடியம் பதில்கள் காரணமாக தினமணி கதிருக்கு ஒரு பிரபலம் எற்பட்டது. சர்க்குலேஷனும் அதிகரித்திருக்க வேண்டும். பின்னால் நடந்த ஒரு சம்பவம் இதை ஊர்ஜிதப்படுத்தியது. 
போலீஸில் கம்ப்ளெயின்ட்
        இந்தச் சமயம் நான் சென்னை வந்திருந்தேன். ஆசிரியர் சாவியுடன் கதிர் அலுவலகத்தில் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது ஒரு போலீஸ் அதிகாரி அவரைப் பார்க்க வந்தார். நான் எழுந்து வெளியே வந்து உட்கார்ந்தேன்.
சில நிமிடங்கள் கழித்து ஆசிரியரும் போலீஸ் அதிகாரியும் வெளியே வந்தார்கள்.
        "இவர்தான் எல்லாத்துக்கும் பொறுப்பு. இவரை விசாரியுங்கள்'' என்று என்னைக் குறிப்பிட்டு போலீஸ் அதிகாரியிடம் சாவி சொன்னார்.
       எனக்கு உடனே நாக்கு உலர்ந்தது. ஜெயில்கள் என் முன்னே காட்சி அளித்தன. "பிரபல எழுத்தாளர் கைது' என்று மறுநாள் பத்திரிகையில் வருமே என்று பயம். (அல்லது மகிழ்ச்சி கலந்த பயம்!)  ‘பிரபல’ என்று போடும்படி சொல்லவேண்டும். சந்துருவிடம் சொன்னால் தினமணியில் போட்டுவிடுவார்.)
       இந்த போலீஸ் அதிகாரிக்கு நாம் மூன்றாம் வகுப்பில் பலப்பத் துண்டு திருடியது எப்படித் தெரிந்தது என்று ஒரு திடீர்க் கேள்வி.வேறு குடைந்தது!
"என்ன ஸார், என்ன?'' என்று கேட்டேன்.
"சார், எங்களுக்கு ஒரு கம்ப்ளெய்ன்ட் வந்திருக்கிறது. மீடியம் பதில்களுக்காகக் கூப்பனுடன் ஒரு ரூபாய் அனுப்பச் சொன்னீர்களாம். அப்படி அனுப்பிய ஒருத்தருக்கு இதுவரை பதில்  வரவில்லையாம். இப்படிப் பொய் சொல்லி ஏமாற்றிப் பணத்தைப் பெற்றுக் கொண்டதாக போலீஸ் கம்ப்ளெய்ன்ட் வந்திருக்கிறது'' என்றார்.
அவரிடம் எல்லாவற்றையும் விளக்கினேன். கூப்பன் வெளியிட்ட இதழைக் காட்டி அதில் எவ்வித உத்தரவாதமும் தரப்படவில்லை என்பதையும் சொன்னேன். பேச்சுவாக்கில் நான் டில்லியிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னேன்.
"டில்லியா? என் பிரதர் கூட டில்லியில்தான் இருக்கிறார். சந்தானம் என்று பெயர்.''
"அப்படியா?''
"அவன் டிராமாவெல்லாம் ஆக்ட் பண்ணுவான்.''
"சௌத் இந்தியன் தியேட்டரில் இருக்கிறார் சந்தானம். எனக்கு ரொம்ப நன்றாகத் தெரியும். நானும் அந்த டிராமா குரூப்பில்தான் இருக்கிறேன். நானும் அவரும் உயிர் நண்பர்கள் ( இதுபுருடா!)..'' என்றேன்.
அவ்வளவுதான். போலீஸ் ஆபீஸர் திடீரென்று நண்பராகிவிட்டார்.
"சார், இது யாரோ தூண்டிவிட்டு எழுதியிருக்கிற கம்ப்ளெய்ன்ட். நான் குளோஸ் பண்ணி விடுகிறேன். அப்புறம் டில்லி வெதர் எப்படி இருக்கிறது?'' என்று ஆரம்பித்தார்.
"யார் சார் கம்ப்ளெய்ன்ட் கொடுத்தது?'' என்று கேட்டேன்.
” இதோ ஃபைலைப் பாருங்கள்” என்று சொல்லி ஃபைலை எடுத்துக் காண்பித்தார்
அதிலிருந்து பெயரையும் விலாசத்தையும் குறித்துக் கொண்டேன்.
“ அந்த ஆசாமி இன்னொரு தரம் வரட்டும். நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று சொல்லிவிட்டுப் போனார்.

அடுத்த வாரமே அந்த ஆசாமியின் பெயரையும் விலாசத்தையும் அச்சில் பார்க்கப் போகிறேன் என்று நான் நினைக்கவில்லை. ஆமாம். வேறு ஒரு வாரப் பத்திரிகையில், அதன்  ஆசிரியர் எழுதியிருந்த கட்டுரையைத் தடபுடலாகப் பாராட்டி எழுதியிருந்தார். கம்ப்ளெய்ன்ட்டும் அந்த ஆசிரியர் சொன்னதன் பேரில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது உள்ளங்கை உருளைக்கிழங்காகத் தெரிந்தது. 
 நான் செய்த கச்சேரி
சுமார் பதினைந்து, இருபது தமிழ் எம்.பி.க்கள் முன்னிலையில் நான் செய்த சங்கீத உபன்யாசத்தைப் பற்றிக் கூறலாம் என்று நினைக்கிறேன். காரணம் ஐயா செய்த கச்சேரியால்தான் எம்.ஜி.ஆர். ஒரு திரைப்படத்தில் கதாகாலட்சேபம் செய்து பெயர் வாங்கினார்.
1967’ல் நிறைய தி.மு.க. எம்.பி.க்கள் வெற்றி வாகை சூடி டில்லிக்கு வந்திறங்கிய சூட்டோடு, எம்,பிகள் காலனியில் ஒட்டிக்கொண்டிருந்த தமிழர்கள் நாங்கள் ஒரு மன்றத்தைத் துவக்கினோம். பெயர் : வள்ளுவர் கலைமன்றம். "திரு. க. ராசாராம், தலைவர்' என்று நோட்டீஸில் அச்சடித்துவிட்டு அவரிடம் சொன்னோம். எங்கள் ஆர்வத்தைக் கண்டு பிகு எதுவும் செய்யாமல் ஒத்துக் கொண்டார். (அது சரி "நாங்கள்' என்பது யார் யாரைக் குறிக்கும் என்கிறீர்களா? சிண்டிகேட் வங்கியின் மானேஜராக  இருந்த திரு ரூஸ்வெல்ட்டும், நானும், மற்றவர்களும்!)
அந்த மன்றத்தில் ஒரு சமயம் ஒரு கதம்ப நிகழ்ச்சியை நடத்தத் தீர்மானித்தோம். அதில் நானும் ஒரு ஐட்டம் தர வேண்டும் என்று சொன்னார்கள். (உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நான் தான் "நான், நான்' என்று கத்தி சான்ஸ் வாங்கினேன்!)
அப்போது தான் அமெரிக்க விண்வெளி வீரர் சந்திரனில் இறங்கி விட்டு வந்திருந்தார். அதே மாதிரி "இந்திய வீரர் ஒருவர் சந்திரனுக்குப் போனால்?' என்று கற்பனைப் பண்ணி ஒரு நகைச்சுவை கதாகாலட்சேபத்தை நான் எழுதினேன். பிரமாதமாக இருந்தது. இதைத் தவிர, இரண்டாவது அபிப்பிராயம் கிடையாது. (காரணம் என்னைத் தவிர வேறு ஒருவரும் அதைப் படிக்கத் தயாராக இல்லை!)
இந்த நிகழ்ச்சியை நானே மேடையில் செய்தேன். எதிரே நல்ல கூட்டம். அதில் முதல் வரிசைகளில் பதினைந்து இருபது தமிழ் எம்.பி.க்கள் இருந்தனர். திரு அன்பழகன், திரு மனோகரன், திரு முரசொலி மாறன், திரு செழியன் (?) என்று பலர்))
சுருதி சேராத, தாளம் இல்லாத எந்த இசையிலும் சேர்த்தி இல்லாத ஒருவித சங்கீதத்தில், ஏழு சுவரங்களுக்கு அடுத்த எட்டாவது சுவரத்தில், 73-வது மேள கர்த்தா ராகத்தில்,தொண்டை கட்டிய தவளையின் குரலில் நானே பாடி, பேசி இந்தக் கதாகாலட்சேபத்தை நடத்தினேன். சொல்லக் கூடாது, எம்.பி.க்களும் மற்றவர்களும் நன்றாகவே ரசித்தார்கள். (அல்லது ரசிப்பது மாதிரி நடித்தார்கள்.)
பின்னால், "எங்கள் தங்கம்' படத்தை முரசொலி மாறன் அவர்கள் எடுத்த போது இந்த ஐடியாவை விரிவாக எழுதித் தரச்சொல்லி வாங்கி கொண்டார், அதை சினிமாவிற்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைத்துப் படத்தில் சேர்த்து விட்டார். திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். அதை அமர்க்களப்படுத்தி விட்டார்.

     அதில் ஒரு வசனம். "இன்று அமாவாசை என்பதால் இந்திய விண்வெளிப் பயணத்தை பதினைந்து தினம் தள்ளிப் போடுகிறேன்'' என்று அமைச்சர் அறிவிக்க நினைத்து,  தினம் என்பதைப் பேச்சுவாக்கில் வருஷம் என்று கூறிவிடுவதாக எழுதி இருந்தேன் . இந்தப் படம் 1969’ல் தயாரானது. முதல் இந்திய வீரர் விண்வெளிக்குச் சென்றது 1984’ல். அதாவது சினிமாவில் வந்த வசனத்தின்படி சரியாகப் பதினைந்து வருஷங்கள் கழித்து, (இதிலிருந்து என்னுடைய  தீர்க்க தரிசனத் திறமை வெளிப்படுகிறது என்று நான் பெருமை அடித்துக் கொள்ளலாம். அப்படிச் செய்யப் போவதில்லை!
   ஒரு வாரம் கழித்து இதே கதாகாலட்சேபத்தை டில்லி மேடையில் நான நிகழ்த்த வேண்டி இருந்தது.  அந்த நிகழ்ச்சியில்  என்னுடன் ஒரு நண்பர் சேர்ந்து கொண்டார்.. அதனால்தானோ என்னவோ, அவருக்கும் தமிழ் திரையில் ஒரு நல்ல இடம் கிடைத்து. முக்கியமான நடிகராகி விட்டார்.   இன்றும் அவரது கொடி பறந்து கொண்டிருக்கிறது.  அந்த சிஷ்யப் பிள்ளை - அதாவது கதாகாலட்சேப நிகழ்ச்சியில் பாகவதரான எனக்கு சிஷ்யனாக வந்த அவரைப் பற்றி,அடுத்தப் பகுதியில்.....( தொடரும்)

14 comments:

  1. நல்ல பகிர்வு .எங்கள் தங்கத்தில் எம் ஜி ஆர் அவர்கள் குடுமி வைத்திருப்பார்கள் .உங்களுக்கும் இருந்ததா?அது சரி உங்கள் பேத்தி வரைந்த படம் ஏன் காணவில்லை

    ReplyDelete
  2. ராஜ சுப்ரமணியன்March 26, 2010 at 10:09 AM

    உள்ளங்கை உருளைக்கிழங்கு? கேட்கவே நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  3. What are all the things you have done in delhi?????? I think you can make a cinema instead of blog!!!!! that much experience you are having!!!!

    Kothamalli

    ReplyDelete
  4. Dear Kothamalli,
    Thanks. I announced long back that this blog was only for "blowing my trumpet! I am writing things which will present me in better light!
    Kadugu

    ReplyDelete
  5. <<< padma said.....அது சரி உங்கள் பேத்தி வரைந்த படம் ஏன் காணவில்லை>>>
    அவள் வேறு படம் போட்டிருக்கிறாள். மாஸ்ட் ஹெட்டில் இருக்கிறது

    ReplyDelete
  6. Sir,
    You can post your thomson experience too in your blog!!!!! ( Post retirement you might have enjoyed your career there w/o tension!!!)

    Kothamalli

    ReplyDelete
  7. அந்த பத்திரிக்கை ஆசிரியரை நான் கெஸ் பண்ணிட்டேன். :-)

    ReplyDelete
  8. <<<<< Anonymous said.. You can post your thomson experience too in your blog Thompson experiences>>>>>

    I do not know how far they will be interesting.As it is I have good lot of matter in the pipe line.

    ReplyDelete
  9. <<<< அறிவிலி said...அந்த பத்திரிக்கை ஆசிரியரை நான் கெஸ் பண்ணிட்டேன். :-)>>>>
    No comments.

    ReplyDelete
  10. Kadugu Sir,

    Its great.. I think after Mr.Cho Ramaswamy, you are the multi talented personality.. Please write a book with all your experience.. So good and you have good memory power, if you dont have the habit of writing diary.

    ReplyDelete
  11. ராமுடு அவர்களுக்கு; நன்றி. சோ இமயமலை. நான் பரங்கிமலை. பார்க்கப்போனால் அது கூட இல்லை.

    நான் ஏன் டயரி எழுதுவதில்லை என்ற கட்டுரை எழுதி வைத்திருக்கிறேன். விரைவில் வரும்

    ReplyDelete
  12. வலைஞன்March 27, 2010 at 7:33 AM

    உங்கள் ப்ளாக் மிகவும் அருமையாக வளர்ந்து வருகிறது வாழ்த்துக்கள்.உங்களிடம் கல்கி,தேவன்,மற்றும் சாவியின் அற்புதமான ஒரு கலவையை பார்க்கிறேன்.இதை நான் பேசவில்லை என் "இதயம் பேசுகிறது"
    என்ன சரியா?

    ReplyDelete
  13. <<<>>>
    நமது பிளாக் என்று எழுதுங்கள். நீங்கள் படிக்கவில்லையென்றால் இது காட்டில் காய்ந்த நிலா மாதிரிதான்! மிக்க நன்றி. பாராட்டுகளைத் தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து முய்ற்சி செய்து கொண்டிருப்பேன்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!