January 30, 2010

ஆர். கே. நாராயணனும் நானும் -- கடுகு

  முதலில் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆர். கே. நாராயணனை நான் சந்தித்தது இல்லை. நான் அவருடைய பெரிய விசிறி. அவருடைய நாவல்களும் கதைக் கட்டுரைகளும் என் மீது நிறைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவரது பேச்சலர் ஆஃப் ஆர்ட்ஸ் நாவலைப் .படித்ததும்
அவரது கதாபாத்திரம் போன்று நானும் ஒரு துறவியாக ஆகவேண்டும் என்ற ஒரு பித்து என்னைப் பிடித்துக் கொண்டது. காவிநிறக் கதர் துணி வாங்கி சட்டைகள் தைத்துக் கொண்டு அவற்றையே அணிய ஆரம்பித்தேன்.
 இங்கிலீஷ் டீச்சர் படித்ததும் எனக்கும் ஈ. எஸ். பி. என்னும் ஆவி உலக தொடர்புகள் மேல் திடீர் ஆர்வத்தை உண்டாக்கின. சுமார் ஒரு வருடம் மிகத் தீவிரமாக ஈடுபட்டேன். இரவு பகல் என்று பாராமல், சென்னைக் கிருஸ்தவக் கல்லூரிப் பேராசிரியராக இருந்த திரு. பி. டி. நரசிம்மன் என்பவருடன் சேர்ந்துகொண்டு தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்.
  அந்த ஆவி உலக அனுபவங்களை பின்னால் ஒரு முழு நீள கட்டுரையாக எழுதுகிறேன். அந்த காலகட்டத்தில் ஆர். கே. நாராயணன் இல்லஸ்ட்ரேடட் வீக்லியில் மேன் ஈட்டர் ஆஃப் மால்குடி, ஸ்வீட் வெண்டார் தொடர் கதைகளை எழுதி வந்தார். வீக்லியில் அவற்றைப் படிப்பதற்காக.  எங்கள் குடும்ப டாக்டரின் கன்ஸல்டிங் அறைக்கு வாரா வாரம் நான் செல்வேன். அவர் மேஜையில் வீக்லியை வைத்திருப்பார். நான் வாரம் தவறாமல் போய்ப் படித்துவிட்டு வருவேன். நான் வீக்லி படிக்க வருவதற்கு அவர் எந்த வித தடையும் சொல்லியதில்லை.(இந்தக் கட்டுரையை எழுதும் இச் சமயத்தில் டாக்டர் வரதராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.) என் பிற்கால வாழ்க்கையின் அஸ்திவாரத்தை நான் நன்கு அமைத்துக்கொள்ள அவரும் சில கற்களை எனக்குத் தந்துள்ளார்
இந்த சமயத்தில் எனக்கு எழுதும் ஆர்வம் வந்தது. கல்கி, தேவன், ஆர். கே. நாரயணன். நாடோடி, தி.ஜ.ர. மஞ்சேரி. ஈஸ்வரன் ஆகியவர்களைப் படித்ததால் எழுதுவது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல என்று எண்ணிக் கொண்டேன்!. முதல் காரியமாக ஆர். கே. நாராயணன் எழுதிய ஒரு நாவலை தமிழில் மொழி பெயர்க்க விரும்பினேன். சரி, மொழிப் பெயர்த்து அதை என்ன செய்யப்போகிறேன். இந்த மாதிரி எண்ணமெல்லாம் என் மனதில் தோன்றவில்லை. அப்படிப்பட்ட கேள்விகள் இருக்கின்றன என்பதே எனக்குத் தெரியாது. அந்த அளவுக்கு ஞானசூன்யம் மொழிபெயர்ப்பதற்கு. அவருடைய
 அனுமதியைக் கேட்டு ஆர்.கே. நாராயணனுக்கு  ஒரு கடிதம் எழுதிப் போட்டேன்  அவருடைய முகவரி தெரியாததால் அவருடைய புத்தகங்களை வெளியிட்ட இண்டியன் தாட் பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தின் முகவரிக்கு எழுதிப் போட்டேன். சில நாட்கள் கழித்து ஆர். கே. நாராயணன் அவர்களிடமிருந்து எனக்குக் கடிதம் வந்தது.  “உங்கள் கடிதம் கிடைத்தது புத்தகத்தின் உரிமை பிசுரகர்த்தர்களிடம் உள்ளதாலும் வேறு சில காரணங்களாலும் உங்களுக்கு அனுமதி தர இயலாதவனாக உள்ளேன்” என்று எழுதி இருந்தார். அதைப் பார்த்து நான் மனம் தளரவில்லை. இண்டியன் தாட் பப்ளிகேஷன்ஸ் தலைமை நிர்வாகிக்கு நான் ஒரு கடிதம் எழுதிப் போட்டேன். ஒரு வாரம் கழித்து எனக்கு I. T. P. லோகோ போட்ட கவர் வந்தது. ஆவலுடன் கவரைப் பிரித்தேன்.  கடிதத்தில் எழுதி இருந்தது. "அன்புடையீர், உங்கள் கடிதம் கிடைத்தது.   இண்டியன் தாட் பப்ளிகேஷன்ஸ் உரிமையாளனும் நான்தான்! என் புத்தகத்தை மொழி பெயர்க்க விரும்பும் உங்கள் ஆர்வத்திற்கு என் பாராட்டுகள். ஒரு சில காரணங்களால் அனுமதி வழங்க முடியாத நிலையில் உள்ளேன். - அன்புடன் ஆர். கே. நாராயணன்.
ஆம்! அவரேதான் எழுதி இருந்தார். அவரே ஒரு புன்சிரிப்புடன் என் முதுகில் லேசாகத் தட்டிவிட்டுப் பேசுவது மாதிரி இருந்தது!
  பின்னால் சில வருடங்கள் கழித்து அவரது நாவலை தமிழில் மொழி பெயர்த்து பிரசுரித்தார்கள். மொழி பெயர்த்தவர் "மெரீனா" நிச்சயமாக என்னால் மெரீனா அளவிற்குச் சிறப்பாக மொழி பெயர்த்திருக்க முடியாது என்று அப்போது உணர்ந்தேன். ஏன், இப்போதும் உணர்கிறேன். ஏனென்றால் ஆர். கே. நாரயணனின் அனுமதி கிடைக்காததால் நான் மனம் உடைந்து போய் விடவில்லை. அவர் புத்தகம் ஒன்றை எடுத்துக்கொண்டு சில பக்கங்களை மொழி பெயர்த்தேன். நன்றாகத் தான் வந்திருந்தது. இது அன்றைய என் கணிப்பு. நான் மொழி பெயர்த்தது இன்று என்னிடம் இருந்திருந்தால் "எவன்டா இவன், நன்றாகத்தான் மொழிபெயர்த்திருக்கிறான், ஆனால் ஜீவன் இல்லையே" என்று உதட்டைப் பிதுக்கி இருப்பேன். பின்னால் நான் நிறைய புத்தகங்களையும் கட்டுரைகளையும்  மொழிபெயர்த்து இருக்கிறேன். குமுதம், தினமணி கதிர் ஆகியவற்றில் அவை பிரசுரமாயுள்ளன. என் மொழிபெயர்ப்பு  ஆர்வத்திற்கு வித்திட்டவர் ஆர். கே. நாராயணன்தான்.
அவரைச் சந்திக்காமல் போனது பெரிய குறைதான். ஆனால் அவரது சகோதரர் ஆர். கே. லட்சுமணனைப் பேட்டி கண்டிருக்கிறேன். அத்துடன் அவ்ர் கார்ட்டூன் போடுவதைப் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கும் அரிய அனுபவமும் பெற்றிருக்கிறேன்..
ஆர், கே, நாராயணனின் மற்றொரு சகோதரர் ராமசந்திரனை (இசை அமைப்பாளர்)  புனா திரைப்படக் கல்லூரியில் பார்த்துப் பேசி இருக்கிறேன். இவற்றை எண்ணி ஓரளவு நான் திருப்தி அடையலாம்
பின் குறிப்புகள்:
1.ஆர். கே. நாராயணன் பிறந்து, வளர்ந்து  பள்ளியில் படித்தது எல்லாம் சென்னையில் புரசைவாக்கத்தில் வெள்ளாள தெருவில்தான்.தான். என் மனைவி்யும் அதே தெருவில் அவர் வீட்டுக்கு சுமார் நாலு வீடு தள்ளிதான் இருந்தாள்.! என்ன, ஒரு 25 வருஷம் லேட்டாகப் பிறந்தாள்! அவ்வளவுதான்!
2. ஆர். கே. நாராயணனின் பெயர் நோபல் பரிசுக்கு 2,3 தடவை சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறதாம்.
3. அவருக்கு 1964-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது அளிக்கப்பட்டது.

7 comments:

  1. யதிராஜ சம்பத் குமார்January 30, 2010 at 7:56 AM

    மும்பையில் வசித்த போது ஆர்.கே.லக்‌ஷ்மண் அவர்களின் கேலிச் சித்திரத்திற்காகவே டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டை வாங்குவோம். அந்த வயதில் எனக்கு அரசியல் கேலிச் சித்திரங்கள் புரியாவிடினும், ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்தது என்பது வாஸ்தவம்.

    ReplyDelete
  2. முகமூடிJanuary 30, 2010 at 8:55 AM

    மால்குடி என்பது உண்மையாகவே இருக்கிறது என்று நெடுநாள் நினைத்துக்கொண்டிருந்தேன். அது கற்பனை என்று ஆர்.கே. நாரயணன் ஒரு பேட்டியில் சொன்னபொழுது நம்பமுடியவில்லை. அவர் எல்டாம்ஸ் ரோட் குடியிருப்பில் (கடைசியாக) வசித்த சமயத்தில் அந்த இடத்தை கடந்து செல்லும்பொழுதெல்லாம் மனசு பட படக்கும். போய் பார்க்கத்தான் தைரியம் வரவில்லை.

    ReplyDelete
  3. 'சாமியும் நண்பர்களும்' என்ற மொழிபெயர்ப்பை சிறு வயதிலேயே படித்து அனுபவித்திருக்கறேன்.
    உங்கள் எழுத்தையும் பல காலமாக படித்து ரசித்துள்ளேன். நான்தான் பதிவுலகிலேயே சீனியர் என்ற பெருமையை நீங்கள் தட்டிச்சென்று விட்டீர்கள். என் பிறந்த தேதி; 15-6-1934.

    ReplyDelete
  4. கட்டுரை நன்றாக இருந்தது சார். நானும் மிக நாட்களாக நாராயனனை படிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அனால் ஆங்கிலம் படிப்பதற்கு இருக்கும் தயக்கத்தினால் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்து வந்தேன். இப்பொழுது நீங்கள் எழுதி விட்ட பிறகு படிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுகிறது. நிச்சயம் படிக்கிறேன்.

    ReplyDelete
  5. ஆர்.கே.நாராயணனைப் படிதத பிறகு, உங்களுக்கு என் கட்டுரைகளைப் படிக்கப் பிடிக்காமல் போய் விடுமோ என்று லேசான பயம் ஏற்படுகிறது..- கடுகு

    ReplyDelete
  6. Now, you can write about any person in '....Naanum' since this 'RKNum Naanum' is very intersting despite the fact you haven't met each other! (Ofcourse you have proof of having been in touch with him!). Believe me, when I was in the school, I tried translating 'Swamy and friends' as I was very impressed but didn't complete it! I didn't have the courage to show it to anyone and I realised a little latter that it was the bestthing to lose the note book! Naanum matravargalum pizhaiththom! - R. Jagannathan

    ReplyDelete
  7. I am also a fan of RKN's simple and straight English.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!