" எங்கேடா உன்னை ஆளையே காணோம்? டில்லிக்குப் போய் விட்டால் பெரிய மனுஷன் என்று எண்ணமோ? மாமியை வந்து பார்க்கக்கூட நேரமில்லாமல் போய்விட்டதா? நேற்று வரைக்கும் இந்தச் சாக்கடையில் கோலி விளையாடின சோம்பேறி தானேடா நீ....?'' சரமாரியாகப் பொரிந்துத் தள்ளுபவள் பட்டு மாமி என்னும் பட்டம்மாள்!
பட்டு மாமி மனதில் கல்மிஷம் எதுவும் இல்லாமல்தான் வசை பாடுவாள். எல்லாரையும் இப்படி பேசுவது அல்லது ஏசுவது என்பது அவள் வழக்கம். இப்படி அவள் திட்டுவதைக் கண்டு யாரும் கோபப்படமாட்டார்கள்.
பட்டு மாமி ஒரு தனிக்கட்டை. ஊரில் நன்றாக வாழ்ந்தவள்தான். பார்க்கப் போனால் இப்போதும் அவளுக்கு ஒரு குறையும் கிடையாது. மூன்று பிள்ளைகள். டில்லி, பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஒருத்தன் கூட தாயாருக்குச் சல்லிக் காசு அனுப்புவதில்லை.
"போகிறாங்க, பெத்தேன், வளர்த்தேன். அவனவன், தடிப் பசங்க, தன் பெண்டாட்டி, குழந்தை குட்டி என்று இருக்கிறாங்க, எனக்கென்னடா, மாமா விட்டுப் போன பணத்திலே வட்டி வருகிறது, மார்க்கெட்டில் உள்ள கடையிலிருந்து வாடகை வருகிறது,. ஒருத்தன் சோத்துக்கு நான் காத்துக்கொண்டிருக்கவில்லை நாள், கிழமை என்றால் . நானே ஐ ந்து பத்து என்று அவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.''அவள் குரலில் கசப்பே இருக்காது. இப்படித்தான் நமது வாழ்க்கை என்று நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது என்று நம்பினாள். பட்டம்மாள். எதற்கும் என்றும் வருத்தப்பட்டதே கிடையாது. ஏன், கணவர் இறந்து போன போது கூட. "நன்னா வாழ்ந்தார், எனக்கு ஒரு குறையும் வைக்காமல், எல்லாம் செட்டில் பண்ணிட்டுப் போய் விட்டார். மஞ்சள் குங்குமம் மட்டும் எடுத்துக்கொண்டு போய் விட்டார். உம்,போ கட்டும்.... பசங்களுக்குத் தந்தி அடிக்க வேண்டாம். அவனவன் அலறியடித்துக்கொண்டு எதற்கு வரவேண்டும்? மேலே ஆகவேண்டியதைப் பாருங்கள்'' என்றாள்.
ஊருக்கு உபகாரியாக இருப்பதில் பட்டு மாமிக்கு ஒரு மகிழ்ச்சி. ஆனால் உபகாரம் செய்யும் போதும் ஏதாவது வசை பாடிக்கொண்டுதான் செய்வாள்.
''உன்னைக் கட்டால வைக்க, ஏண்டி லட்சுமி. உன் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் சொல்லியனுப்பக்கூடாதா? நான் வந்து சமையல் செய்து வைத்திருக்கமாட்டேனா? உனக்கு அப்படி என்ன கொழுப்பு'' என்று கத்துவாள். நேரே சமையலறைக்குள் சென்று பத்துப் பாத்திரங்களைத் தேய்ப்பாள்.
"ஏண்டாப்பா முனுசாமி படுபாவி, திடீர் என்று உனக்கு என்ன வந்தது? பொங்கல் இனாம் வாங்க இந்த வருஷம் வரவேயில்லையே? இந்தா, இரண்டு ரூபாய், உன் பொஞ்சாதியை நாளைக்கு அனுப்புடா கடன்காரா. பழைய புடவை கொடுக்கிறேன்.'' என்று திட்டிவிட்டே இனாம் கொடுப்பாள்.
"உன் தலையிலே இடிவிழ! நீ காலரா வந்து போய்விட!'' என்பது போன்ற வசவுகள் இல்லாமல் பட்டு மாமி சாதாரணமாகப் பேசமாட்டாள். எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் திட்டுகிறாளோ அவ்வளவுக்கவ்வளவு அதிகம் உதவி செய்வாள். ஏழை, பணக்காரன், ஜாதி, மதம் என்ற வித்தியாசம் எதுவும் பட்டுவிற்குக் கிடையாது. சுளுக்கு, தேள் கடி ஆகியவைகளுக்கு பட்டு மாமி மந்திரிப்பாள். "பயந்து' கொண்டிருக்கும் குழந்தைகளை மந்திரித்து சரி செய்வாள். எந்தக் குழந்தையானாலும் தன் மடியில் போட்டுக் கொண்டுதான் மந்திரித்து விடுவாள் பட்டு மாமி. இந்த சமயங்களில் சாதாரண வேலைக்காரி குழந்தையானாலும் தன் மடியில் விட்டுக் கொள்வாள். பொய்யான ஆசாரங்களுக்கு அவளிடம் இடமில்லை. அதே மாதிரி அமாவாசை, கார்த்திகை, ஏகாதசி என்று விரதம் இருக்க மாட்டாள். ஆனால் திடீரென்று இரண்டு நாள் பச்சைத் தண்ணீர்கூட வாயில் படாமல் விரதம் இருப்பாள்.
சினிமா, டிராமா என்று அடிக்கடி போவாள். ஆனால் சில சமயம் தொடர்ந்து ஒரு மாதம் கூட சினிமாவுக்குப் போகாமல் இருப்பாள். "என் மனசுக்கு நான் அடிமையாக மாட்டேன். என் நாக்கிற்கும் நான் அடிமையாக மாட்டேன்,'' என்று அவள் சொல்லுவாள். அது ஜம்பப் பேச்சில்லை. நூற்றுக்கு நூறு உண்மை.
"ஏன், பட்டு மாமி, நாலு நாளா உங்க சாபம் இந்தப் பக்கம் கேட்கவே இல்லையே?'' என்றால், "ஊரிலிருந்து உங்க தாத்தா அனுப்புகிறார் அரிசி. அதுதான் உனக்கு வாய் வளர்ந்திருக்கிறதுடி. என்னை மாதிரி கல்லும் மணலும் சேர்ந்த அரிசி நாலு ரூபாய் லிட்டர் வாங்கிச் சாப்பிட்டால் இப்படிப் பேசுவியா? நாலு நாளா ஜுரம். இருக்கியா, செத்தாயா என்று கேட்டாயா? போகட்டும், நான் போக வேண்டிய ஜன்மம். நீங்கள் எல்லாரும் நன்னா இருந்தால் அதுவே போதும். தவலை அடை பண்ணினேன். உங்க அகத்துக்காரருக்குக் கொடு. அவனுக்கு தவலை அடை என்றால் பித்து. அந்தக் கர்வம் பிடிச்ச பயல்தான் எனக்கு வேற மூக்குக் கண்ணாடி வாங்கிக் கொண்டு வரமாட்டேன் என்கிறான்.... பெரிய துரை! டயம் இல்லை.. சரி.. நான் வரேண்டி. காத்தாயிக்குத் தேள் கடிச்சிதுன்னு மந்திரிச்சேன். எப்படி இருக்கா என்று பார்த்துவிட்டு வரேன்....''
பழைய நினைவுகளைக் கிளறும் கட்டுரை! இன்று பட்டுமாமியைப் போன்றோர்களின் சாயல்களை சிலரது எழுத்துக்களிலாவது காண முடிகிறதே என்ற அளவில் மகிழ்ச்சியே!!
ReplyDeleteகடுகிற்கு நன்றிகள் பல.
வழக்கம் போல் பட்டு மாமியையும் கண் முன் நிறுத்தி விட்டீர்கள். அருமை.. தொடருங்கள்.
ReplyDeleteஎங்கள் ஊரிலும் ஒரு ஆச்சி உண்டு. அவர்கள் பெயர் முறுக்கு ஆச்சி. எல்லா வீட்டுக்கும் முறுக்கு வீட்டிற்கு வந்து செய்து கொடுப்பார்கள். என்ன கொடுத்தாலும் வாங்கி கொள்வார்கள். இரண்டு முறுக்கு கொடுத்தால் கூட. அவர்கள் பெயரே நிறைய பேருக்கு தெரியாது. அவர்களை பார்த்து நிறைய வருஷம் ஆகி விட்டது. நான் பள்ளிகூடத்தில் படித்த பொது பார்த்தது. இப்போ கிட்டத்தட்ட 20 வருஷம் ஓடிவிட்டது. இதை படித்ததும் அவர்கள் நினைவு வந்து விட்டது. ரொம்ப நன்றி கடுகு சார்...
ReplyDeleteயதி, அறி,சாதா ஆகிய மூவருக்கும்:
ReplyDeleteThanks. ரொம்ப THANKS. -- கடுகு
அப்படியே கேரக்டரை கண் முன் நிறுத்துவது பிரமிப்பாக இருக்கிறது. மேலும் இது போன்ற எளிமையான எழுத்து நடையில் சுவாரஸ்யமான சங்கதிகளை நாங்கள் எந்தவித சிரமமும் படாமல் எங்கள் Desk Top ப்பிலேய படிப்பதற்கு அருள் செய்த கடுகு சாரை எவ்வளளவு பாராட்டினாலும் தகும். எனக்கு வயதில்லை சார் வணங்குகிறேன் அய்யா.
ReplyDeleteமிக்க நன்றி.எல்லாம் அவன் அருள்தான். நான் ஒரு அற்ப கருவி. ஆகவே உங்களோடு சேர்ந்து அவனை நானும் அவனை வணங்குகிறேன்.-- கடுகு
ReplyDeleteம்ம் என்னத்தை சொல்ல.இது எல்லாம் அப்பிடியே வர்ரது இல்ல.கொஞ்சம் சொல்லி கொடு தலைவா எப்படி இப்படி எழுத வருதுன்னு
ReplyDeleteIt is great to read your pen sketches again and again without getting bored. - R. Jagannathan
ReplyDeleteSaar...
ReplyDeleteIts fantastic to read... all your articles take us back to the good old age.
Why dont you try writing about the new characters who are around us like - Software Prof... Ciriket commentator... bus driver... air hostess... etc...
நன்றி.. பின்னால் புதிய கேரக்டர்களை எழுதப் பார்க்கிறேன்,
ReplyDeleteஉங்கள் பெயரைப் போட்டு எழுதலாமே!.. சைக்கிள் செயினோடு யாரும் வரமாட்டார்கள்!!!-கடுகு
I want to write my comments in Tamil so as to have close touch. I don't know how to do. Please guide me.
ReplyDeleteI think you have found out the way to tupe in Tamil You may download NHM writer. It is free and it is easy. You can type both in English and if type say Alt+2, you can type in Tamil - phonetic unicode. There are five choices of keyboard layout. You can chose whichever keyboard you are familaiar with. - Kadugu
ReplyDeleteபட்டு மாமி காரக்டர் பிரமாதம், கண் முன்னாலே கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள் - ஒரு இடத்தில் “நாலு நாளா ஜுரம், இருக்கியா செத்தாயா என்று கேட்டாயா? போகட்டும் ...” - கண்ணில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டேன்.
ReplyDeleteகடுகு சார், நன்றிகள் !