January 13, 2010

அஞ்சாம் பிளாக் மாமி -- கடுகு

டில்லி கரோல்பக்கில் உள்ள தமிழ் குடும்பங்களில்  என்னென்ன நடக்கின்றன? யார் வீட்டுப் பையன் எந்த காலேஜில் படிக்கிறான்;  எந்த பெண்ணுக்குக் கல்யாணம் அல்லது பூச்சூட்டல், யார் வீட்டு மாமி புதிதாக நவரத்ன மாலை வாங்கிக் கொண்டாள்; எந்த வீட்டு "மாமா'விற்கு ஆபீசில் இன்க்ரிமென்ட் கிடைத்தது என்பது போன்ற தகவல்கள் மட்டுமின்றி வேறு "கிசுகிசு' செய்திகளும்,  ("ராஜலக்ஷ்மியின் பெரிய பெண் காந்தா இருக்கிறாளே, அதுதான் பாங்கில் வேலை பார்க் கிறதே, அந்தப் பெண் ஏதோ பஞ்சாபிப் பையனுடன் சுற்றிக்கொண்டிருக் கிறதாம்?'') மற்றும் மார்க்கெட் விவரங்கள் போன்ற தகவல்கள் - ஆகியவை களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?  "அஞ்சாம் பிளாக்' மாமி அமிர்தத்தைக் கேட்டால் போதும்!
பார்க்கப் போனால், நீங்கள் கேட்கக் கூட வேண்டாம்; அந்த மாமியிடம்."என்ன செüக்கியமா?' என்றாலே போதும்.  அவ்வளவுதான்.  "ரேடியோ கரோல்பாக், செய்திகள் அமிர்தம்' என்று சொல்லாத குறையாக ஆரம்பித்து விடுவாள்! 
"சௌக்கியத்திற்கு என்னடி குறைச்சல், லலிதா? மிஸஸ் ராமனின் பெண் பிரசவத்திற்கு பிறந்தகம் போகிறாள்.  அவளுக்குப் பாகற்காய் பிட்லை என்றால் மசக்கை.  மாமி கையால் பண்ணிக் கொடுக்கலாம் என்று பாகற்காய் வாங்க வந்தேன்.  நேற்று கால் கிலோ எட்டணா விற்றான்.  இன்றைக்கு அறுபது பைசா என்கிறான் முருகன்.  "ஏண்டா முருகா! யாருக்குடா சேர்த்து வைக்கப் போறே, இவ்வளவு லாபம் பண்ணி? உன் ஒரே பெண்ணையும் கட்டிக் கொடுத்துட்டே' என்று அவன் மனசில படறாப்போலே கேட்டுட்டேன்!

"கமலா டிவி செட் வாங்கி இருக்கிறாளாம்.  மாமி நீங்க வந்து பார்த்து ஒரு வார்த்தை சொன்னால்தான் திருப்தி என்கிறாள். மாமிக்கு எங்கே நேரம் இருக்கிறது? உனக்குத் தெரியும். லலிதா, மாமி ஒருத்தர் மாதிரி வீடு வீடாய்ப் போய் வம்பு பேசுகிறவளா? யாருக்கும்மா அப்படிப் போய் வர திராணி இருக்கு? பாரேன் விடிந்ததும் விடியாததுமாக எழுந்து சமையல் பண்ணி இபீஸøக்கு அனுப்பிவிட்டு வருகிறேன். வழியில் "ஸெவன் ஏ' பார்வதி வீட்டுக்குப் போனேன். டி.பி. யாக இருக்கும் என்று தோன்றுகிறதாம், அவள் பிள்ளைக்கு. அவள் மச்சினன் டில்லிக்கு மாற்றலாகி வருகிறானாம். ஓரகத்திகளுக்குள் என்றைக்குமே தகராறு....மத்தியானம் டிபனுக்கு ஓமப்பொடி பண்ணலாம் என்று பிழிகிற குழலை பத்மாவிடம் வாங்கி வரப் போனேன். அவள் ஆம்படயான் அப்படிக் குடிக்கிறானாம்! "மாமி நீங்க தான் அவருக்குப் புத்தி சொல்லணும்' என்கிறாள். சின்னப் பையனாக இருந்தால் நாலு அறை கொடுத்து சரிப்படுத்தலாம். பத்மா நல்ல பெண். மூணு மாசம் வேறு இந்த அழகில்! என்னமோம்மா, இதைப் பார்த்தால் சந்தானமே பரவாயில்லை. கார்ஆக்சிடென்ட்ஆச்சே, அப்போ சத்தியம் பண்ணானாம். அதற்கப்புறம் புட்டி கிட்டவே போறதில்லை. இப்போதுதான் அடகு வைச்ச நகைகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மிஸஸ் சந்தானம் மீட்கிறாள்.''
மாமிக்கு டைம் இருந்தால்  எவ்வளவு செய்திகள் இன்னும் தெரிந்து கொண்டிருப்பாள்!  அமிர்தம் ஒரு  விஷயத்தில் தன்னை மறந்தவள். நான் என்று தன்னைச்  சொல்லிக் கொள்ள மாட்டாள்.  எல்லாவற்றிற்கும் மாமிதான்!
"மாமிக்குத் தலைவலி', "மாமி சினிமா போகிறேன்', "மாமி இன்றைக்கு உபவாசம்' என்ற ரீதியில் தான் பேசுவாள்.  ஏன், சொந்தக் கணவனிடம் பேசும்போதுகூட, "உங்களைக் கல்யாணம் செய்து கொண்டதில் என்ன லாபம்?  மாமிக்கு ஒரு நகை உண்டா, நட்டு  உண்டா?  இல்லை, சினிமா தான் உண்டா? ' என்பாள்!
பளிச்சென்று களையான முகம்.  பெரிய குங்குமப் பொட்டு. இங்கும் அங்கும் நரை ஓடிய முடி.  சின்னாளம்பட்டுப் புடவை.  காலில் ஹவாய்ச் சப்பல்.  இது தான் மாமி.
மாமியின் பெயர் அமிர்தம் என்பது ரொம்பப் பேருக்குத் தெரியாது.  எல்லோருக்கும் "அஞ்சாம்  பிளாக் மாமி ' தான்.
நாள், கிழமை என்றால் மாமி வந்தால் தான் எல்லோருக்கும் திருப்தி.  மாமி ஆரத்தி எடுக்காத கல்யாணம் வெகு குறைவு.  ஓடியாடி வேலை செய்ய முடியாது மாமியால்.  ஆனால் உட்கார்ந்த இடத்திலேயே எல்லாவற்றையும் நிர்வகிப்பாள்.
அடுத்த வருஷம் கரோல்பாக் வந்தால் மாமியைப் பார்க்க முடியாது.
"மாமா ரிடையராகிறார்.  மாமி மதுராந்தகம் போய் விடுவேன்' என்று இப்போதே கூற ஆரம்பித்து விட்டாள் அஞ்சாம்  பிளாக் மாமி!

3 comments:

  1. பாகற்காய் எட்டணா விற்றதா?
    ம்ம்ம்...
    இப்போ பாகற்காய் மட்டும் இல்லை எந்த காயோட விலை கேட்டாலும் அப்படி ஒரு கசப்பு.

    ReplyDelete
  2. உண்மை. அதிருக்கட்டும்... ஜனவரியில் போட்ட பதிவை ஆகஸ்டில்தான் பார்க்கறீர்களே!

    ReplyDelete
  3. nice blog, just seen this in July 2019 :)

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!