January 20, 2010

அன்புள்ள டில்லி - 6

ஹேமமாலினிக்கு டைரக் ஷன்
ராஜ்கபூரின் படத்தில்ஹேமமாலினி  நடிக்க ஆரம்பித்திருந்த சமயம் ஹேமமாலினி டில்லி வாழ் மதராஸிப் பெண்மணி என்பதால் அவரைப் பற்றி எழுத நினைத்தேன்.  போட்டோ கட்டுரை எழுத , அவரை சந்திக்க ஏதாவது சந்தர்ப்பம் வர்ரதா என்று காத்திருந்தேன்  கரோல்பாக்கில்  அவர் வீடு இருந்ததால் அங்கு தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்தேன். அந்த சமயம் டில்லியில் ஒரு நடன நிகழ்ச்சியை நடத்த ஹேமா வந்திருந்தார்.
அவருடைய அம்மாவிடம் பேசினேன். மறு நாள் மாலை வரச் சொன்னார். அவர்கள் வீட்டிற்குச் சென்றேன்
      கரோல்பாக்கில் ஒரு சின்ன போர்ஷனில்,கயிற்றுக் கட்டில், தட்டுமுட்டுச்  சாமான்கள் நிறைந்த  அறையில் சந்தித்தேன். பொங்கல் சம்பந்தமாகப் புகைப்படத் தொகுப்பு ஒன்றுக்காகப் படங்கள் எடுக்க விரும்புவதாகச் சொன்னேன்.
ஹேமாவின் அம்மா, "அதற்கென்ன எடுத்துக் கொள்ளுங்கள். என்ன மாதிரி டிரஸ் வாங்கிக் கொள்ள வேண்டும்?'' என்று கேட்டார்.
"கிராமத்துப் பெண்மணியாக டிரஸ் பண்ணுங்கள். கட்டம் போட்ட புடவை, சற்று கணுக்காலுக்கு மேலே வரும்படி கொசுவம் வைத்துக் கட்டுங்கள்'' என்றேன்.
"ஓ! கட்டம் போட்ட புடவையா?'' என்று கேட்டு விட்டு ஒரு நிமிஷம் தயங்கினார். "சரி ஒரு மணி நேரத்தில் டிரஸ், மேக்கப் எல்லாம் தயார்
பண்ணுகிறேன்'' என்றார் ஹேமாவின் அம்மா.
நானும், "காமிராவிற்கு பிலிம் வாங்கிக் கொண்டு அரைமணியில் வருகிறேன்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
பிலிம் வாங்கிக் கொண்டு போன போது ஹேமாவை ஒரு அசல் கிராமத்துக் குடியானவப் பெண்ணாக அலங்கரித்து இருந்தார் அம்மா. இதற்கென்று புதிதாக ஒரு புடவை வாங்கியிருந்தார். ஹேமா பின்னால் பிரபல ஸ்டாராக உருவானார் என்றால், அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று அவரது தாயாரின் கவனிப்பு.. பாருங்களேன், நான் முன்பின் தெரியாத ஒரு எழுத்தாளனாக இருந்தும், அக்கறையுடன் படம் எடுக்க உதவி புரிந்தார். ஹேமா அவர்களும் மெல்லிய புன்னகை புரிந்தபடியே, பல்வேறு நடன‘போஸ்’ களை  மிகவும் அழகாகக் கொடுத்தார்
ஹேமாவின் தாயாரைப் பின்னால் பல வருடங்களுக்குப் பிறகு  நான் சந்தித்த போது, முன்பு எடுத்த படங்களைக் காண்பித்தேன். அதைப் பார்த்ததும் அவருக்கு ஏற்பட்ட  மகிழ்ச்சிக்கு அளவில்லை. ‘எப்படி இருக்கா?’ என்று வியந்தபடியே ரசித்துப் பார்த்த்தார். அந்த படங்களை த் தனக்குத் தர முடியுமா என்று கேட்டார்.. நான்மகிழ்ச்சியுடன் கொடுத்துவிட்டேன்!
நேருஜியின் அறையில்
நேருஜியின் இல்லத்தையும் அவரதுஆபீஸ் அறையையும் பார்த்து ஒரு கட்டுரை எழுத விரும்பினேன். இதற்கு அனுமதி கிடைப்பது கடினம் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் முயற்சி செய்தேன். கடைசியில் ஒரு நண்பர் அகப்பட்டார். "நேருஜியின்ஆபீஸ் அறையில் என்ன இருக்கப் போகிறது? ஃபைல்கள் தான் இருக்கும். வீட்டிற்குள் போய்ப் பார்ப்பதற்கு அனுமதி கிடைக்காது'' என்றார்.
"பரவாயில்லை. ஆபீஸ் அறையையாவது பார்க்கிறேன்'' என்றேன்.
ஒரு நாள் இடைவேளை சமயத்தில் வந்து பார்க்க அனுமதி கிடைத்தது. எனக்குத் தலைகால் புரியவில்லை.
"ஆ! நேருஜியின் ரூமிற்குள் போய்ப் பார்க்கப் போகிறேன். பிரைம் மினிஸ்டரின் ரூமிற்குப் போகப் போகிறார் ஐயா'' என்றேன் கமலாவிடம்.
"தப்பித் தவறி நேருஜியைப் பார்த்தால், உங்களுக்குப் பிரமோஷன் போடச் சொல்லுங்கோ'' என்று கமலா கேட்கவில்லை. காரணம், அன்றைய தினம்  ஏதோ கோபம் காரணமாக கமலா என்னுடன் பேசாமல் இருந்தது தான்!
ஒரு நாள், இடைவேளையின் போது, நேருஜி இல்லாத சமயம், தெற்கு பிளாக்கில் உள்ள அவரது அறைக்குள் நண்பர் அழைத்துச் சென்றார்.. அந்த பிரம்மாண்டமான அறையும், ஏர்கண்டிஷனர்களும், மேஜை மேல் இருந்த பைல்களும், டெலிபோன்களும் எனக்கு எவ்வித உணர்ச்சியையும் எற்படுத்தவில்லை. "அந்த நாற்காலியில் நேருஜி உட்கார்ந்து இந்த நாட்டை நிர்வகிக்கிறார்' என்பதை எண்ணியபோதுதான் உடல் சிலிர்த்தது. கோயில் கர்ப்பக்கிரகத்தில் இருப்பது போன்று உணர்ந்தேன். நானே பிரதமராக இருந்திருந்தாலும் இத்தகைய உணர்வு எனக்கு எற்பட்டிருக்காது. காந்திஜியின் வலது கரமும்,  சுத்ந்திர இந்தியாவை உருவாகிய சிற்பியுமான் நேருஜியின் அறையில் நான்!! கிடைத்தற்கரிய பேறு!
( நேருஜிக்குச் சமமாக  எதிரே நான் உட்கார்ந்து இருப்பது போல் கோபுலு வரைந்திருக்கிறார்.  கோபுலுவுக்கு கனவுகளையும் வரையும் அபார திறமை உண்டு!)
 பின்னால் குடியரசு தலைவர் டாக்ட்ர் ராதாகிருஷ்ணன்,லால்பகதூர் சாஸ்திரி,  பிரதமர் மொரார்ஜி தேசாய், ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது ஆகியவர்களை பத்திரிகையாளன் என்ற முறையில் பார்த்துப் பேசி இருக்கிறேன். அச்சமயங்களில் எனக்கு இந்த அளவுக்குச் சிலிர்ப்பும் எற்படவில்லை. (தொடரும்)

7 comments:

 1. நல்ல பகிர்வு சார்.. ரொம்ப நன்றி

  ReplyDelete
 2. தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. கோபுலுவின் கேரிகேச்சர் அருமை..ஜீனியஸ்!

  ReplyDelete
 3. Thank you for sharing your experience with us. Did you write the article on the First PM's room / your feelings and if so, can you post it now?
  I wonder why you were thrilled so much at the meetings of other greats as Sarvapalli Radhakrishnan and Lal Bahadur Sastri. Is it because they did not have the same charisma as Nehru had and the popularity with the masses?

  3D picture of hands in the mast head is Aahaa.. Oohoo. The flower was not coming out as much - though there was a differnce.

  - R. Jagannathan

  ReplyDelete
 4. Yes. You were right. The very name Nehru had a halo.
  Of course. I cherish the meeting with Dr Radhakrishnan and Sri Sastri albeit they lasted only for few minutes.

  ReplyDelete
 5. The word 'not'is missed in my comment; it should have read " I wonder why you were not thrilled so much at the meetings of other greats as Sarvapalli Radhakrishnan and Lal Bahadur Sastri. Thanks for your response. - R. Jagannathan

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :