January 20, 2010

தியாகு -- கடுகு

எந்தப் போரில் வென்றாலும், தியாகுவைச் சொற்போரில் மட்டும் ஜெயிக்க முடியாது. அடிப்படையோ தர்க்கரீதியோ இல்லாமல்கூட அவன் வாதம் செய்வான்.  இவனுடன் வாதம் செய்வதைவிடத் தோல்வியை ஒப்புக் கொள்வதே நல்லது என்று தோன்றி விடும். எந்த விஷயத்தைப் பற்றிச் சொன்னாலும் அதற்கு நேர் எதிரிடையாகச் சொன்னால்தான் அவனுக்குத் திருப்தி.  எல்லாவற்றிலும் குற்றம் கண்டு பிடிக்காமல் இருக்க மாட்டான்!
நல்ல பளபளப்பான சிவப்பு. ஷேவ் பண்ணிய அடையாளமே இல்லாத மழுமழுப்பான கன்னம்,  இழைய இழைய வாரி விடப்பட்டிருக்கும் கிராப்பு. பளிச்சென்ற வெள்ளை ஸ்லாக் சட்டை. பார்ப்பதற்கு 25 வயது இளைஞனைப் போல் காட்சி அளிக்கும் இந்த நக்கீரன் எப்படிப்பட்ட மனைவியைத் தேர்ந்தெடுத்தான் தெரியுமா?  இவனைவிட ஐந்து வயது மூத்தவள் மாதிரி இருக்கும், ஒரு கறுப்பான, குண்டு சரீரப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டான்! வாழ்க்கையில் குற்றம் கண்டுபிடிப்பவர்கள் பலர் இம்மாதிரிதான் செய்து விடுகிறார்கள்.
"ஏண்டா, தியாகு உங்க ஆபீஸ் ராமசந்திரனை ’கம்பல்ஸரி’யாக ரிடையர் பண்ணி விட்டாங்களாமே, இது அநியாயமில்லையா?''
"என்ன அநியாயம்? கண்ணும் சரியாக இல்லை, காதும் கேட்கவில்லை.  இது மாதிரி ஆட்களால் கவர்ன்மென்டுக்கு என்ன வாபம்?  வீண் செலவுதான்!''--தியாகு.
"பாவம்டா, குழந்தை குட்டிக்காரன்.''
"கவர்ன்மென்டுதான் இவனைக் குழந்தை பெத்துக்கச் சொல்லித்தா?  ’மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்' என்றான் அப்போது.''
"இருந்தாலும் பரிதாபமாக இருக்கிறது.''
"பரிதாபமாக இருந்தால் "ராமசந்திரன் குடும்ப நிதி' என்று வசூல் செய்து கொடேன்.''
"வேறு வேலை இல்லை.  இவனுக்கு உண்டி தூக்கச் சொல்கிறாயா?''
"இதில் என்ன தப்பு?  மனுஷக்கு மனுஷன் ஹெல்ப் பண்ணினால் ஒரு தப்பும் இல்லையப்பா.''---இதுவும் தியாகுதான்.
"சரிதான், அவன் வேலையில் மந்தமாக இருந்தான். கண், காது சரியில்லை.  வீட்டுக்கு அனுப்பினால் அதற்கு நான் கப்பரை தூக்கணுமா?''
"நாளைக்கே உனக்குப் பார்வை மங்காது என்பது என்ன நிச்சயம்?  இது நம்மிடமா இருக்கிறது?  அவனவன் தலை எழுத்து.  குழந்தையையும் குட்டியையும் வைத்துக்கொண்டு அவன் என்னப்பா செய்வான்?''
"குடும்ப நலத் திட்டம் என்றெல்லாம் சர்க்கார் வைத்திருக்கிறார்களே?''
"எப்போய்யா வைத்தாங்க!  இவனுக்கு கலியாணம் ஆச்சு 25 வருஷத்திற்கு முந்தி. அப்போது ஏதய்யா இதெல்லாம்?''
"சரி...தியாகு, பாட்னாவில்  வெள்ளம்.  நம் ஆபீசில் நிதி திரட்டி அனுப்பலாமா?''
"கேளுங்கய்யா! அங்கே அம்மி உரலே அடிச்சிகிட்டுப் போகிறது.  இவரு அனுப்புற ஒண்ணேகால் ரூபாயில் என்னய்யா ரிலீஃப் கிடைக்கும்?  எல்லாரும் வெள்ளம் வருகிற வரைக்கும் தூங்கிக் கொண்டிருந்துவிட்டு இப்போ ஏனய்யா மடிப்பிச்சை  எடுக்கணும்!  அது கடலில் கரைச்ச பெருங்காயம்தான்...''
"கள்ளச்சாராயம் குடித்துவிட்டு இருபது பேர் செத்துட்டுட்டாங்களாம். பாத்தியா தியாகு.''
"எல்லாம் பார்த்தேன்.  உயிரோடு போராடிக்கிட்டிருக்கவங்களை கைது செய்வாங்க. சட்டப்படி அவங்க குற்றவாளிகள். இல்லையா?  செத்த குடும்பத்திற்கு என்ன உதவி செய்யப் போறாங்க?  அவன்தான் பைத்தியக்காரன். குடிவெறியன், குடிச்சான், செத்தான். அவன் பெண்சாதி பிள்ளைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா?  நான்  நூறு ரூபாயை சீஃப் மினிஸ்டருக்கு அனுப்பி ஒரு உதவி நிதி ஆரம்பிக்கச் சொல்லப் போகிறேன்!''

இப்படித்தான், தன் கலியாணத்தைப் பற்றியும் அவன் கூறினான். "பேப்பரைப் பாருங்க.  எல்லாருக்கும் அழகான மணமகள் தான் தேவை.  இவன் என்ன மன்மதன் என்று எண்ணமா?  அழகு இல்லாத பெண்களை என்ன செய்கிறது?  நல்லதங்காள் மாதிரி கிணற்றில் தள்ளி விடுகிறதா?  எல்லாப் பெண்களும் சினிமா நடிகைகள் மாதிரி இருந்து விட்டால் அப்புறம் அவர்கள் நடத்தையும் அப்படியே இருந்து விடும்.  இவ்வளவு பேசுகிறவன் சினிமா நடிகையைக் கலியாணம் பண்ணிக்க முன் வருவானா?  பேசுவார்கள், ஆனால் கலியாணம் என்று வரும்போது ஆயிரம் யோசனை செய்வான். 
அதனாலே நான் என் அம்மாவிடம் சொன்னேன், ’பெண்ணைப் பார்க்கப் போகிறதில்லை’ என்று. என் மனைவி மரகதத்திற்கு என்ன குறை? குடும்பப் பாங்காக இருக்கிறாள். வீட்டை நன்றாக நிர்வகிக்கிறாள். தளுக்கு மினுக்கு எதுவும் கிடை.யாது.''
"கையிலே பத்தாயிரம் கொடுக்கிறார். ஸ்கூட்டர் கொடுக்கிறார். ஒரே பெண். பசையுள்ள ஆசாமி, சரி தான், நான் ஒத்துக்கறேன். அதுக்காக அவரோட பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொள்வதா? ஏனப்பா, பணத்திற்கு ஆசைப்பட்டு சம்மதம் தெரிவிக்க ரெடியா இருக்கிறே? அவள் மூக்கும் முழியுமா இருக்கிற பெண் இல்லை: மூக்கும் முழியும் பல்லுமா இருக்கிற பெண்! கோரைப்பல்லு! முட்டைக் கண்ணு! கொக்கு மூக்கு! "இவள் என் ஒய்ப்' என்று எப்படியப்பா  சொல்லுவாய்? லட்ச ரூபாய் கொடுத்தாலும் நான் செய்து கொள்ள மாட்டேன்.''
எதிர் எதிரான கருத்துக்களில் அகப்பட்டுக் கொண்டுத் தத்தளிக்கும் ஜீவன் தியாகு!

3 comments:

 1. Very genuine character! I have a friend very much alike 'Thyagu'! We use to enjoy by stating two different opinions of the same issue on two different occassions and smile when he opposes them on both the occassions!

  - R. Jagannathan

  ReplyDelete
 2. Thanks. Please await another character sketch which elicited response similar to yours from a VIP.-- Kadugu

  ReplyDelete
 3. Very very good... your characters take me back to old memories.... everyone in this world would have definitely met people like your Characters... Days have changed, So, I think you must continue to write about new new characters too...

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :