January 06, 2010

அன்புள்ள டில்லி - 4

அருமையான அமைச்சர்
மறுநாள் பாதுகாப்பு துணை அமைச்சரின் வீட்டிற்குப் போய் அவரைப் பார்த்தேன். மனுவைப் படித்துப் பார்த்தார். அடுத்த நிமிஷமே - ஆம்  அடுத் த நிமிஷமே-- "ஓ.கே. உங்கள் சகோதரரை ராணுவப்பணியிலிருந்து விடுவித்து விட உத்தரவு போடுகிறேன்.'' என்று சொன்னார்.  கை குலுக்கி எனக்கு விடை கொடுத்தார். அமைச்சர் உத்தரவு போட்டாலும் அதை செயல் படுத்த  அரசு அதிகாரிகள் எத்தனை முட்டுக்கட்டைகள் போடுவார்களோ என்று யோசித்துக் கொண்டே விடை பெற்றேன்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள்! அடுத்த மூன்றாவது தினம் புனாவிற்கு ஒரு  ராணுவ உத்தரவு ஒயர்லெஸ்ஸில்  சென்றது: "அவரை உடனடியாக மருத்துவக் கல்லூரியில் சேர அனுமதிக்கவும். ரிலீஸ் உத்தரவு பின்னால் வருகிறது.''
             ரிலீஸ் உத்தரவு கிடைத்து விட்ட செய்தியை என் சகோதரர் தெரிவித்ததும், நன்றி தெரிவிக்க திரு சவானைப் பார்க்கச் சென்றேன். நிறைய பழம்,  அவருடைய 3 வயது பேத்திக்கு பிஸ்கட் என்று வாங்கி கொண்டு போனேன்! ஆனால் அவர் ஒரு பழம் கூட வாங்கிக் கொள்ளவில்லை. "உங்கள் சகோதரருடைய கேஸ் லட்சத்தில் ஒன்று. இம்மாதிரியான உண்மையான, நியாயமான கோரிக்கையை எற்காவிட்டால் நான் மந்திரியாக இருக்க லாயக்கில்லாதவன். மேலும் நீங்கள் வாதித்த விதமும் என்னைக் கவர்ந்து விட்டது. பெஸ்ட் ஆப் லக்'' என்று சொன்னார்.
ராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவது என்றால் சுலபமில்லை. பென்ஷன் பேப்பர்கள் பல இடங்களுக்குப் போய் வர மூன்று மாதமாவது ஆகும். என் சகோதரர் விஷயத்திலும் அப்படியே மூன்று மாதம் ஆயிற்று.  அதுவரை அவர் டியூட்டியில் இருந்ததாகக் கருதி முழுச் சம்பளமும் கொடுத்தார்கள்.
என் சகோதரர் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். தனது 45 வது வயதில் டாக்டர் ஆனார். அவரது வாழ்க்கை லட்சிய்ம் பூர்த்தி  ஆயிற்று. எல்லாம் அமைச்சர் டி.ஆர்.சவானின் உதவியால்!  மறக்க முடியாத மந்திரி டி.ஆர்.சவான்.
டில்லியில் நான் இருந்த வருடங்களில் திரு. டி.ஆர். சவானைப் போன்ற வேறு சில அபூர்வமான அற்புதமான் மனிதர்களையும் பார்த்திருக்கிறேன்; பெரிய பதவியில் இருந்த சின்ன புத்திக்காரர்களையும் பார்த்து இருக்கிறேன்.

டில்லியைப் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும். தூரத்தில் உள்ள பொருள்கள் கண்களுக்குச் சின்னதாகப் புலப்படும் என்ற விஞ்ஞான உண்மைக்கு டில்லி விதிவிலக்கு. சென்னையிலிருப்போர்க்கு பெரிய மனிதர்களாகக் காட்சி அளிக்கும் டில்லிப் பிரமுகர்களை, டில்லிக்குப் போய் நெருங்கிப் பார்த்தால், அவர்கள் எவ்வளவு சின்னவர்கள் என்பது தெரியும்!
அந்தச் சின்னவர்களைப் பற்றி எழுதப் போவதில்லை. உண்மையிலேயே நட்புடனும் பண்புடனும் அன்புடனும் நடந்து கொண்டவர்கள் சிலரைப் பார்ப்போம்.


1967’ல் தி.மு.க. அபார வெற்றி பெற்றதை  ஒருவர் "விஷக்கிருமி' என்று அப்போது வர்ணித்தார். என்னைக் கேட்டால் அப்போது தேர்தலில் வெற்றி பெற்று வந்தவர்களை "ஜெர்ம்ஸ்'  (GERMS)அல்ல, "ஜெம்ஸ்' (GEMS) என்பேன்!
டில்லிக்கு வந்த எம்.பி.க்கள். திருவாளர்கள் கப்ரவேலு,  தெய்வீகன், மாயவன், செழியன், க.ராசாராம், (வேலூர் வி.டி.ஐ) ஜி. விசுவநாதன், முரசொலி மாறன் போன்ற பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவர்களைப் பற்றிப நிறையா எழுதலாம். (பயப்படாதீர்கள் இப்போது சுருக்கமாகவே எழுதுகிறேன்!)
ஒரே கோளாறு
"என்னய்யா ஒரே கோளாறு'' என்று அடிக்கடி கூறும் பழக்கத்தை உடைய திரு. ராசாராம் பல வருடங்கள்  டில்லியில் எம்.பி.யாக இருந்தார். பெரியார், ராஜாஜி, அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றவர். இவருடைய வெற்றிக்குக் காரணம் இவர் சாதாரணமானவர்களுடனும் நல்ல நட்புறவுடன் பழகுவது தான். டில்லியில் எம்.பி.க்கள் வாழும் நார்த் அவென்யூவில் ராசாராம் ஒரு கேந்திரமான மனிதர். இவருக்கு வாக்கிங், சினிமா இரண்டிலும் பயங்கர மோகம் உண்டு. விடிகாலை வாக்கிங் போகும்போது யாராவது எம்.பி.யையோ அல்லது என்னைப் போன்ற நண்பர்களையோ, "என்னய்யா, தூங்கிக் கொண்டிருக்கீங்களா?'' என்று வீட்டு வாயிலிலிருந்து குரல் கொடுத்து எழுப்பிக் கூப்பிடுவார்.


எல்லா பத்திரிகைகளையும் படிப்பார். நிறைய சினிமா பார்ப்பார்.சினிமாவிற்குப் போகச் செலவு பண்ண யோசிக்க மாட்டார். கூடச் செல்பவர்களுக்கும் டிக்கட் வாங்கி விடுவார். ஆனால் போய் வர  ஆகும் டாக்சி  செலவிற்குத்தான் யோசிப்பார். காரணம், இரவுக் காட்சிக்குப் பிறகு டில்லி டாக்சிக்காரர்களின் பேராசைக்கு எல்லையே கிடையாது.  அடிக்கடி என்னை சினிமாவுக்கு அழைத்துப் போவார். என் ஸ்கூட்டரில் போகலாம்: என்று சொல்வார்!!  பல சினிமாவிற்கு இப்படி நாஙள் போயிருக்கிறோம்.

டில்லியில் இருந்த ஆண்டுகளில் ராசாராம் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றேன். அவரிடம் போய் யார் வேண்டுமானாலும் உதவி கேட்கலாம்.
டில்லியில் வள்ளுவருக்கு ஒரு சிலை வைத்து, அந்தச் சிலை திறப்பு விழாவை ஒரு பெரிய கலை, இலக்கிய விழாவாக நடத்தினார். குடியரசு தலைவரை அழைத்து இருந்தார்.அந்தச் சமயத்தில் அவர் தமிழக அமைச்சராக இருந்தார். டில்லியில் இந்த விழா எற்பாடுகளை நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.
நம்ப மாட்டீர்கள், தினந்தோறும் இரவு பத்து மணி வாக்கில் எனக்குப் போன் செய்து, என்னென்ன காரியங்கள் நடைபெற்றுள்ளன, சென்னையில் அவர் செய்ய வேண்டியது என்ன என்றெல்லாம் கேட்பார். ஒரு மாநில அமைச்சருடன் கூடப் பேசுகிறோம் என்று கூட நினைக்காமல், "நாளைக்கு இதை பிரின்ட் பண்ணுங்கள், இன்னாருக்குப் போன் பண்ணுங்கள், இவ்வளவு பணம் அனுப்புங்கள்'' என்றெல்லாம் அட்டகாசமாக உத்தரவுகள் போடுவேன்!
சிலை திறப்பு விழாவிற்கு ஒரு வாரம் முன்பே டில்லிக்கு வந்து அன்றாடம் பல இடங்களுக்குச் சென்று பலரைச் சந்தித்து விழாவை வெற்றிகரமாக நடத்தினார்.
இரண்டு நாள் விழா, டில்லி அதுவரை அவ்வளவு பெரிய நிகழ்ச்சியைக் கண்டதில்லை. பிரம்மாண்டமான பந்தல். நாற்காலிகள் மட்டும் சுமார் 3000 போடப்பட்டன. குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்ட இதில் இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், கருத்தரங்கங்கள் என்று பல நிகழ்ச்சிகள்.
ராசாராம் அவர்களின் வெற்றியின் ரகசியத்தை அந்தச் சில நாட்களில் முழுமையாக அறிந்து கொண்டேன். அதே ரகசியத்தை நடைமுறையில் செயலாக்க எனக்குத் தெரிந்திருந்தால் நான் தமிழக சபாநாயகராக ஆகி இருப்பேன்! (தமிழகம் பிழைத்தது!)
ஆனால் பின்னால் நான் சபாநாயகராகவோ அமைச்சராகவோ கஆகிவிட்டால், தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு, என் மனைவி கமலா அப்போதே தயாராகிவிட்டாள். அந்த சில வாரங்களில் எனக்கு டெலிபோன் வரும் சமயங்களில் எல்லாம் கமலா, "அவர் பாத்ரூமில் இருக்கிறார்'' என்று சொல்ல ஆரம்பித்து விட்டாள்!
"கமலா, அப்படி எல்லாம் சொல்லாதே. யாருக்கு என்ன முக்கியமான விஷயமோ?'' என்பேன்.
ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு நானே கமலாவிடம், "யார் போன் பண்ணினாலும் பாத்ரூமில் இருப்பதாகச் சொல்'' என்று கூற ஆரம்பித்தேன். காரணம் என்ன தெரியுமா?
தமிழக அரசிடம் எந்த வேலை ஆக வேண்டியிருந்தாலும், என்னைப் பிடித்தால் திரு ராசாராம் மூலமாக முடித்துக்கொடுத்து விடுவேன் என்று பலர் (தப்பாக) எண்ணி, என்னைத் தொல்லைப்படுத்த ஆரம்பித்ததுதான்.
சரியான அட்டை
"சொன்னால் நம்ப மாட்டீர்கள்' என்ற தலைப்பில் சின்ன அண்ணாமலை ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அதில் விவரித்துள்ள மாதிரி, சில நம்ப முடியாத சம்பவங்கள் என் வாழ்க்கையிலும் ந்டந்திருக்கின்றன. என்னைப் பற்றியவை என்பதால் எழுதத் தயக்கமாக இருக்கிறது.. இருந்தாலும், வேறு சிலருடைய உயர்ந்த குணங்கள் வெளிப்படுவதால் எழுதுகிறேன்.


தி.மு.க. எம்.பி.க்களில் ஒருவரான திரு தெய்வீகன் அவர்களுடன்  அறிமுகம் கிடைத்த சில வாரங்களில் அவருடைய நெருங்கிய நண்பனாகி விட்டேன். ("சரியான அட்டை'' என்று என்னைச் சிலர் வர்ணிக்கக் கூடும்! ஒரு விதத்தில் அதுவும் சரிதான்!)
அந்த கால  கட்டதில் ஒரு ஸ்கூட்டர் வாங்க வேண்டுமென்றால் , புக் பண்ணி விட்டு  6,7 வருஷங்களாவது காத்திருக்க வேண்டும். வாங்கிய உடனே நூறு சத  அதிக விலைக்கு  விற்று  சிலர் லாபம்  பண்ணியிருக்கிறார்கள். எம். பி. களுக்கு ஒரு  ஸ்கூட்டர், ஒரு ஃபியட் கார் , ஒரு டெலிஃபோன் எல்லாம் உடனே  கிடைக்கும்.
ஆகவே,ஒரு நாள் தெய்வீகன் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு ஐஸ் வைத்தபடியே, "சார், எம்.பி.க்களுக்கெல்லாம் ஸ்கூட்டர் கோட்டா உண்டாமே... எனக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுக்க முடியுமா?'' என்று கேட்டேன்.(
"ஸ்கூட்டரா? ... இல்லை சார்.ஸாரி...ஸ்கூட்டர் நிறைய பேர் கேட்கிறார்கள். கிடைக்கக் கூடியது ஒரு ஸ்கூட்டர்தான். தொகுதியில் எனக்காக வேலை செய்தவர்கள் கேட்கிறார்கள். எம்.எல்.ஏ. நண்பர்கள் கேட்கிறார்கள்'' என்று அவர் சொல்ல ஆரம்பித்தார்.
"ஆமாம்... அவர்களுக்கு வாங்கிக் கொடுப்பது தான் சரி... நான் சும்மா கேட்டேன்'' என்று ஏமாற்றத்தைக் காட்டிக் கொள்ளாமல் சொல்லி விட்டேன்.
சில வாரங்கள் கழித்து, அவர் எனக்குப் போன் செய்தார். "கொஞ்சம் பணம் கடன் வேண்டும். ஸ்கூட்டர் அலாட்மென்ட் வந்து இருக்கிறது. இன்று டெலிவரி எடுக்க வேண்டும்.  பணம் கொஞ்சம் குறைகிறது. கொடுத்தால் சீக்கிரம் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்'' என்றார்.
"நாம் ஸ்கூட்டர் கேட்டோம். வாங்கித் தரவில்லை. யாரோ ஒருத்தருக்கு வாங்கித் தருவதற்கு நான் பணம் தர வேண்டுமாம். அவ்வளவு எமாந்த சோணகிரியா நான்?'' என்று நான் அவரைக் கேட்கவில்லை. (ஆனால் மனதில் நினைத்துக் கொண்டேன்!)
பாங்கில் ஒன்றும் பெரிய் தொகை இல்லை. இருப்பினும் பாங்கிலிருந்த பணத்தைச் சுரண்டி எடுத்துக் கொண்டு அவர் வீட்டுக்குப் போனேன்.  நானும் அவரும்  ஸ்கூட்டர் கம்பெனிக்குச் சென்றோம். பணத்தைக் கட்டி டெலிவரி எடுத்தோம். வீட்டுக்கு புது ஸ்கூட்டரில் வந்தோம். அப்போது எம்.பி. செய்த ஒரு காரியம் என்னைத் தூக்கி வாரிப்போட்டது.    (தொடரும்)

12 comments:

 1. நல்ல எடத்துல தொடரும்னு போட்டீர் ஓய்.. மன்ட வெடிச்சுடும் போல இருக்கே

  ReplyDelete
 2. How to write comment in Tamil?

  ReplyDelete
 3. http://software.nhm.in/products/writer என்ற தளத்தில் இலவச தமிழ் மென்பொருள் இருக்கிறது. எல்லா விவர்ங்களும் அங்கு உள்ளன.

  ReplyDelete
 4. யதிராஜ சம்பத் குமார்January 6, 2010 at 5:29 PM

  1967’ல் தி.மு.க. அபார வெற்றி பெற்றதை ஒருவர் "விஷக்கிருமி' என்று அப்போது வர்ணித்தார்.//

  இதைச் சொன்னது யாரென்று நிச்சயம் தெரியும். 1963’ல் முதல்வரானவர். ஆனால் இன்றைய சூழ்நிலையில் அவர் அன்று சொன்னதை ஒரு தீர்க்கதரிசனம் என்றே சொல்ல வேண்டும்.

  ReplyDelete
 5. Dear Sir,

  If you get an opportunity to be the Speaker of the TN Assembly now, what will your reaction be?!

  Even DMK / AIADMK had respectable reps. in those days, hmmm.... I can see your fear in writing about all the 'chinna' politicians - you are afraid of auto 'raids'!

  I will go through the http://software.nhm.in/products/writer and try to write in Tamil. Thank you,

  Regards,

  R. Jagannathan

  ReplyDelete
 6. We can also use google trasliteration for Tamil writing, by copying and paste from that window, after wrting in Tamil.

  ReplyDelete
 7. என BLOG-ல் அரசியல் எதையும் நுழைக்க விரும்பவில்ல. அதற்கு நிறைய பேர் உள்ளன்ர்.
  ஆகவே அன்பு கூர்ந்து அரசியல் கருத்துகளை இங்கு எழுத வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.

  ReplyDelete
 8. கடுகு மாமாக்கு ஒரு ஸ்கூட்டர் கெடச்சாச்சு...

  ReplyDelete
 9. Grt Going,,,(Vambu kekkarthunnale oru thani allathithan)

  ReplyDelete
 10. Really nice to read on. Waitiing for the next post.

  ReplyDelete
 11. "" என BLOG-ல் அரசியல் எதையும் நுழைக்க விரும்பவில்ல. அதற்கு நிறைய பேர் உள்ளன்ர்.
  ஆகவே அன்பு கூர்ந்து அரசியல் கருத்துகளை இங்கு எழுத வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்."
  yes .that will be nice.Mr ethiraj this is for you and you should go to idlyvai and vomit your things

  ReplyDelete
 12. Dear sir
  Its realy good.waiting for you next post

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :