January 28, 2010

அன்புள்ள டில்லி-7

ரீல் இல்லை; ரியல் தான்!
வாராவாரம் பத்திரிகைகளில் கதை, கட்டுரைகள், பேட்டிகள் எழுத வேண்டும் என்ற உத்வேகத்துடன் நான் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். டில்லிக்குச் சென்ற சில மாதங்கள் கழித்துப் பத்திரிகையில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். குமுதம் பத்திரிகை எனக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்தது. என் கட்டுரைகள் இல்லாத இதழே இல்லை என்று சொல்லும் அளவுக்கு.  சில சமயம் 3,4  கட்டுரைகள் கூட வந்துள்ளன. பத்திகையில் பெயர் வருவதனால் மிக்க மன நிறைவும், வாராவாரம் வரும் செக்குகளால் ஓரளவு பர்ஸ் நிறைவும் எற்பட்டது.  எழுதுவதற்கு மிகுந்த ஊக்கம் அளித்தவள்  என் மனைவிதான். அவள், ‘வீட்டுக்கவலைகளை எல்லாம் என்னிடம் விட்டு விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றாள். உண்மையிலேயே அவள் எல்லாவற்றையும் நிர்வகித்து வந்தாள். பேனாவையும் பேப்பரையும் எடுத்தால் போதும். வீட்டில் ரேடியோகூட போடமாட்டாள். அப்போது நான் இருந்தது உண்மையிலேயே ஒரு குட்டி போர்ஷன். ஒன்றே கால் அறை. அந்தக் கால் அறையில் சமையல்;. இப்போது நினைத்துப் பார்க்கும்போது ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. அந்த அரை அறையில் என்னை சந்திக்க வந்தவர்களை எண்ணிப் பார்க்கும்போது!  சாவி, நடிகர் கோபாலகிருஷ்ணன், எழுத்தாளர் சுஜாதா, பலரால் எளிதில் சந்திக்கவே முடியாத நிதி அமைச்சக (பட்ஜெட்)செயலர், பல பாராளுமன்ற உறுப்பினர்கள்.
அப்புறம்.... சொல்வதற்குத் தயக்கமாக இருக்கிறது. இன்று இந்தியாவின் நம்பர்-1 கம்பெனியாக இருக்கும் நிறுவனத்தின் அன்றைய முதன்மை அதிகாரி. (கம்பெனியின் பெயரைச் சொன்னால், “போய்யா, ரீலுக்கும் அளவு உண்டு” என்பீர்கள். ஆகவே தவிர்க்கிறேன்.) இன்னும் பலர்.

புத்தகங்கள் படிப்பது, கட்டுரைகள், பேட்டிகள் எழுதுவது, ஆபீசுக்கு போவது இடைவேளையில் பிரிட்டிஷ், அமெரிக்க லைப்ரரிகளுக்கு போகவேண்டியது- இது தான் என் அன்றாட வேலை. என் மனவிக்குத்  தினதந்தி நிருபர் வேலை கிடைத்ததால், வீட்டு வேலையுடன் அந்த வேலையையும் அவள் கவனித்துக் கொண்டாள்.
ராணுவ தளபதிக்குக் கடிதம்
நானும் சுறுசுறுப்பாக வாராவாரம் எதாவது கட்டுரை எழுதி அனுப்பிக்
கொண்டிருந்தேன். ஒரு நாள் ஒரு பத்திரிகையில் ஒரு சின்ன செய்தி கண்ணில் பட்டது. மத்தியப் பிரதேசத்தில் தமிழர்கள் நிறைந்த ராணுவ பட்டாலியனில் ராணுவத் தளபதி தமிழில் பேசினார் என்று இருந்தது. ராணுவத் தளபதி வங்காளக்காரர் அவர் தமிழில் பேசினாரா? ஆகா, சுவையான கட்டுரைக்கு விஷயம் கிடைத்து விட்டது!  தளபதியைச் சந்தித்து விவரங்களைக் கேட்க  எண்ணினேன்.
எப்படி அவரைப் பார்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே ஒரு இன்லண்ட் லெட்டரில் அவர் பெயருக்கே ஒரு கடிதம் எழுதிப் போட்டுவிட்டேன். அப்படி எழுதக்கூடாது என்று எனக்குத் தெரியாது. அப்போது நான் விவரம் தெரியாத இளைஞன். (இப்போது விவரம் தெரியாத முதியவன்!)
அந்தக் கடிதத்தை  ராணுவ உயர் அதிகாரிகள் பார்த்த பிறகு படிப்படியாகக் கீழிறங்கிப் பாதுகாப்புத் துறையின் செய்தி அதிகாரிக்கு வந்தது. "யார் இந்தப ஆசாமி, நேரடியாக தளபதிக்கே கடிதம் எழுதிவிட்டான்?'' என்று பிரஸ் இன்பர்மேஷன் பீரோவில் உள்ள ஒரு சில தமிழ் ஆபீசர்களை. அவர் விசாரித்திருக்கிறார். இதற்குள் அந்த வட்டாரத்தில் சிலருக்கு என் பெயர் ஏற்கன்வே தெரிந்திருக்கவே, "ஆமாம் ஒரு எழுத்தாளர் இருக்கிறார். தெரியும். என்ன சமாசாரம்?' என்று கேட்டுவிட்டு, எனக்குப் போன் செய்தார் ஒரு அதிகாரி.
"என்ன சார்... சீஃப் ஆஃப் ஸ்டாஃப். அவர் பெயருக்கே  இப்படி டைரக்டாக கடிதம் எழுதி விட்டீர்களே! இப்படி எழுதலாமா? மிலிடிரி விஷயம்.. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்'' என்றார். அவர் என்னைப் பயமுறுத்தவில்லை. அவர்தான் மிகவும் பயந்து போயிருந்தார். ஒரு தமிழ் எழுத்தாளன் "வம்பை' வரவழைத்துக் கொண்டதாகக் கருதி!
"என்ன சார்...இதில் தவறு என்ன? நான் என்ன ராணுவ ரகசியத்தையா கேட்டு வெளியிடப் போகிறேன்?' பேட்டி காண்ப்தற்குத்தானே நேரம் கேட்டிருந்தேன்.' என்றேன். “சரி.. நான் அவர்களுக்கு உங்களைப் ப்ற்றிச் சொல்லி விடுகிறேன்..இனிமேல் இப்படி ஏதாவது பேட்டி வேண்டும் என்றால் எனக்குப் போன் செய்யுங்கள். நான் எற்பாடு செய்து கொடுக்கிறேன்.” என்றார்.

சில நாட்கள் கழித்து, ராணுவத் தகவல் அதிகாரியே எனக்குப் போன் செய்து மிகவும் மரியாதையுடனும் நட்புடனும் பேசினார். "எதற்குத் தளபதியைச் சந்திக்க வேண்டும்? உங்களுக்கு வேண்டிய விவரங்களை எல்லாம் நான் தருகிறேன். அதற்குப் பிறகும் ராணுவத் தளபதியைச் சந்திக்க விரும்பினால், பார்க்கலாம்'' என்றார். நான் கேட்ட விவரங்ளையெல்லாம் தந்தார். தளபதி மெட்ராஸ் ரெஜிமெண்ட் தமிழ் வீரர்களின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஒன்றிரண்டு தமிழ் வார்தைகளைச் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான்.
பாதுகாப்புத் துறை தகவல் அதிகாரி கொடுத்த விவரங்களைக் கொண்டு  ஒரு கட்டுரை எழுதினேன்.

சுவையான பின்குறிப்பு
இந்தச் சம்பவத்திற்கு ஒரு சுவையான பின்குறிப்பு உண்டு. அதைச் சொல்லுமுன் வேறு ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும்.

தமிழ் பத்திரிகையில் நான் தொடர்ந்து எழுதி வந்ததால் ஒரு சிலருக்கு என்னைப் பற்றித் தெரிய ஆரம்பித்திருந்தது. இந்தச் சமயம் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் டில்லி அலுவலகம், சில விவசாயக் கட்டுரைகளை தமிழ்ப் படுத்துவதற்கு ஆளைத் தேடிக் கொண்டிருந்தது.  என் தமிழ் "ஆற்றலை"க் கேள்விப்பட்டு, மொழிபெயர்ப்பு செய்து தருமாறு கேட்டது.. நாலைந்து பக்க மொழிபெயர்ப்புக்கு (இன்றைய நாணய மதிப்புபடி) சுமார் 1000 ரூபாய் தருவதாகச் சொன்னர்கள்!
"சரி' என்று ஒத்துக் கொண்டேன். இருந்தாலும் அரசாங்க ஊழியன் என்பதால் ஒரு மாமூலான அனுமதி வேண்டியிருந்தது. என் அலுவலகத்தில் கேட்டேன்.. அனுமதி மறுத்து விட்டார்கள். அமைச்சருக்கு மனு செய்தேன். ஆனால் அவரும் உதவவில்லை. அரசு ஊழியர் வெளியாருக்குப் பணியாற்ற அனுமதி தர  முடியாதாம், அவை கலை, கலாசாரம்,விஞ்ஞானம் போன்ற விஷயங்களாக இருந்தாலும் என்று தெரிவித்து விட்டார்கள். ஆகவே நான் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவிற்கு எழுதவில்லை. இதனால் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவிற்குக் கொஞ்சம் நஷ்டம், எனக்கு நிறைய நஷ்டம்!

சரி, இதற்கும் தளபதிக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.தளபதி ஓய்வு பெற்ற சில வருடங்களுக்குப் பிறகு ஒரு விஷயம் வெளியாயிற்று.. "மிலிட்டரி கரஸ்பாண்டென்ட்'' என்ற பெயரில் அவர் , ராணுவக் கட்டுரைகளை ’ஸ்டேட்ஸ்மென்’ தினசரியில் பல வருடங்களாக எழுதி வந்திருக்கிறார்! கலை, கலாசாரம்,விஞ்ஞானம் போன்றவற்றை எழுதி இருந்தாலும் பரவில்லை. அவர் ராணுவ விஷயங்களைப் பற்றியே எழுதி வந்திருக்கிறார். ஏதோ ஒரு மூலையில் வேலை செய்யும் பொடியன் நான் ஒரு வயலும்-வாழ்வும் கட்டுரையை மொழிபெயர்த்தால் விதியை மீறியதாகுமாம்!
(தொடரும்)

10 comments:

 1. யதிராஜ சம்பத் குமார்January 28, 2010 at 10:12 AM

  அரசாங்க உத்யோகஸ்தர்கள் வெளி வேலைகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது பெயரளவில் உள்ள ஒரு விதிமுறை. ஆனால் பெரும்பாலானோரால் கடைபிடிக்கப்படுவதாகத் தெரியவில்லை. எனவே கட்டுரையாளரின் ஆதங்கத்திலும் நியாயம் இருக்கிறது. ஆயினும் நாம் நம்வரையிலும் நேர்மையாக இருந்து விட்டால், அடுத்தவர்களைக் குற்றம் காணும்போது ஏற்படும் குற்ற உணர்வு தவிர்க்கப்படும்.

  ReplyDelete
 2. சூப்பராக இருக்குது தலை(?)வா

  ReplyDelete
 3. Dear Shri Kadugu,

  Dinam dinam ungal site-i paarththu kaN pooththu viittathu! Thanks for posting a few articles today!

  Did the Army chief write the articles during his tenure or after retirement? Was no action taken when the truth was revealed?
  It is our Government policy to catch petty thieves and officials who take bribes of Rs 50 / 100 but to let the bigger fish scot free or let the case in the courts last longer than their lives! (Why didn't you think of using a 'binami'for the Rs 1000?)

  Is mami planning to open a blogsite to share her Delhi / Thanthi reporter experiences?

  -R. Jagannathan

  ReplyDelete
 4. 1.Please see my DEAR READER" posting.
  2. Reg Mami: No.. Mami's experiences etc will also be added at the appropriate places in this blog - like cashewnut in Sakkarai Pongal or Peanut in Puliyodari or Kothammalli in Rasa!
  3. The cat came out of the bag after the general passed away- Kadugu

  ReplyDelete
 5. I like your writing...I welcome your decision of posting 3 times a week. I feel like talking with my father, when I read your blog.

  Vengatanarayan
  Singapore

  ReplyDelete
 6. ராஜ சுப்ரமணியன்January 30, 2010 at 10:23 AM

  மிக நன்றாக இருக்கிறது; ரசித்துப் படிக்கிறேன். அதுவும் டில்லி வாழக்கையை நீங்கள் விவரிக்கும் பாணி மிகவும் சுவையாக உள்ளது.

  ReplyDelete
 7. பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.தொடர்ந்து படியுங்கள்
  == கடுகு

  ReplyDelete
 8. // அப்போது நான் விவரம் தெரியாத இளைஞன். (இப்போது விவரம் தெரியாத முதியவன்!)//

  LOL (Laughed Out Loud) here!!

  ReplyDelete
 9. Very Honest n Plain writings..
  ரசித்துப் படிக்கிறேன்!.

  S.Ravi
  Kuwait

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!