January 14, 2010

அன்புள்ள டில்லி - 5


கண்டேன் சாந்தி தேவியை
எம்.பி.யும் நானும் ஸ்கூட்டரை டெலிவரி எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தோம். பளபளவென்று இருந்த ஸ்கூட்டரைப் பார்க்கப் பார்க்க, முகம் தெரியாத ஒருவர் மேல் எனக்குப் பொறாமை எற்பட்டது. அவர்தானே இந்த ஸ்கூட்டரை அனுபவிக்கப் போகிறார்!
வீட்டிற்குள் போனதும் எம்.பி. என்ன செய்தார் தெரியுமா? ஸ்கூட்டர் சாவிகளை எடுத்து, "இந்தாங்க சாவி. வண்டி உங்களுக்குத்தான்'' என்றார். இதைக் கேட்டதும் எனக்குப் புல்லரித்தது. கண்கள் குளமாயின. (சும்மா, இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் இப்படி எழுத வேண்டியது ஒரு மாமூல். உண்மையில் சாவிகளைப் பெற்றுக் கொண்ட போது மனதில் திடீர் குஷி எற்பட்டது.)
"கறுப்பில்' அதிக விலை போகும் ஸ்கூட்டரை, தன் பணத்தைப் போட்டு வாங்கிக் கொடுத்தவர் திரு. தெய்வீகன்.
கிருஷ்ணன் செய்தது என்ன?
என் நண்பர் பி.என். கிருஷ்ணன் என்பவரிடமும் புது ஸ்கூட்டர் அலாட்மென்ட் வந்தால் கொடுக்க முடியுமா என்று ஒரு சமயம் கேட்டிருந்தேன். அவர் ஸ்கூட்டருக்காக புக் பண்ணியிருந்தார் ஆனால் நகர நெரிசலில் போவது  நம்ம்மால் ஆகாது, நான் ஸ்கூட்டரை வாங்கப் போவதில்லை என்று சொல்லியிருந்தார்.
அலாட்மென்ட் வருவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு கரோல்பாகிலிருந்து அசோக் விஹாருக்கு (சொந்த வீட்டிற்கு) குடி போய்விட்டார். அசோக் விஹார்  அதிக தூரத்தி இருந்த  காலனி.  ஆகவே, "ஸார்...இப்போது  வீடு, ஆபீஸிலிருந்து வெகு தூரமாகிவிட்டது. அதனால் , நானே ஸ்கூட்டர் வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்'' என்றார்."ஓகே! என்னிடம் தான் ஸ்கூட்டர் இருக்கிறதே. ஆகவே எனக்குத் தேவையில்லை'' என்றேன்
.சில மாதங்கள் கழித்து ஸ்கூட்டர் டெலிவரி உத்தரவு  அவருக்கு கிடைத்தது. டெலிவரி எடுக்க என்னைக் கூப்பிட்டார். போனோம். மொத்த பணத்தையும் கட்டி வண்டியை வாங்கினார்.
அவருடைய வீட்டிற்குச் சென்றோம். புது வண்டி வந்திருக்கிறதே என்று கேசரி, அடை என்று அவரது மனைவி திருமதி அகிலா கொடுத்தார். நானும் ரசித்துச் சாப்பிட்டேன்.
"ரைட்... நான் கிளம்பட்டுமா'' என்று சொல்லி, விடைபெற எழுந்தேன்.
"ஒரு நிமிஷம்'' என்று சொல்லி திருமதி அகிலா கிருஷ்ணன், ஸ்கூட்டரின் சாவிகளை எடுத்து என் கையில் கொடுத்தார்.
"என்னது?'' என்று கேட்டேன்.
கை கூப்பியபடியே, "இந்த ஸ்கூட்டர் உங்களுக்காகத்தான் வாங்கியது. தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றார்.
"என்னிடம் தான் ஸ்கூட்டர் இருக்கிறதே'' என்றேன்.
"அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஸ்கூட்டரை நீங்கள் இப்போது எடுத்துக் கொண்டு போகிறீர்கள். பணம் பின்னால் செட்டில் செய்து கொள்ளலாம்'' என்றார் திருமதி அகிலா. கிருஷ்ணனும், "ஆமாம் இது உங்க வண்டிதான்'' என்று கூறிவிட்டார்.
அவரவர் பத்து வருஷம் காத்திருக்கிறார்கள் ஸ்கூட்டருக்காக. எனக்கு சுலபமாகக் கிடைக்கிறது!
ஏமாற்றம்
இப்படிப் பல ஆச்சரியங்களுக்கு நடுவே வேறு சில எமாற்றங்களும் நடந்துள்ளன.
"சைகாலஜிஸ்ட்' என்று இங்கிலாந்திலிருந்து வரும் பத்திரிகையில் ஒரு சுவையான கட்டுரை வெளியாகி இருந்தது. முற்பிறப்பை உணர்ந்த ஒரு சிறுமி சில வருஷங்களுக்கு முன் டில்லியில் இருந்தாள் என்றும், அவள் முழுக்க முழுக்க முற்பிறப்பை அறிந்தவள் என்பதைப் பல சோதனைகள் மூலம் பிரமுகர்கள் குழு கண்டறிந்தது என்றும் விவரமாக எழுதி இருந்தார்கள்.
கிட்டத்தட்ட 30 வருஷங்களுக்கு முன்பு எட்டு வயதுச் சிறுமியாக இருந்த போது அந்தப் பெண் (சாந்தி தேவி) இப்படி முற்பிறப்பு விவரங்களைக் கூறி டில்லியையே அதிசயிக்க வைத்தார் என்று எழுதியிருந்தது
சாந்திதேவியை எப்படியாவது கண்டுபிடித்துப் பேட்டி காண வேண்டுமென்று நினைத்தேன். கட்டுரை ஆசிரியருக்குக் கடிதம் எழுதினேன்-சைகாலஜிஸ்ட் பத்திரிகை மூலமாக. பதில் வரவில்லை. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த நபர்களில் ஒருவர் புதுவை ஆசிரமத்தில் இருக்கிறார் என்று இருந்தது. அவருக்குக் கடிதம் எழுதினேன். அவர் டில்லியில் ஒரு அட்வகேட்டைக் கேட்டால் தெரியும் என்றார். அட்வகேட் பெயர் குப்தா என்றும் குறிப்பிட்டிருந்தார். எப்படிக் கண்டுபிடிப்பது? டில்லி டெலிபோன் டைரக்டரியில் ஆறேழு பக்கங்கள் குப்தாக்கள் தான்!
சுமார் இரண்டு மாதம் நாயாய் அலைந்து, பேயாய் திரிந்து சாந்திதேவியைக் கண்டு பிடித்தேன் -- நாற்பது வயதுப் பெண்மணியாக.
எளிதில் பேட்டிக்கு ஒத்துக் கொள்ளவில்லை. "மதராஸிப் பையன்' மேல் (நான் தான்!) இரக்கப்பட்டு பேட்டிக்கு ஒத்துக் கொண்டார். புகைப்படமும்
எடுத்துக் கொள்ள அனுமதித்தார்.
கட்டுரை மிகவும் சிறப்பாக அமைந்தது. குமுதத்திற்கு அனுப்பினேன். அடுத்த வார இதழில் வருவதாகக் கடிதமும் வந்தது.
ஆனால் இதழைப் பார்த்த போதுஏமாற்றம். குமுதத்திலிருந்து கடிதம் வந்தது. "சாந்தி தேவி கட்டுரை அச்சிலேறிய பின் நிறுத்தப்பட்டது. காரணம் தெரிந்திருக்கும். அனுதாபங்கள்'' என்று எழுதியிருந்தார்கள்.
ஏன்ன காரணம் என்பது சில வினாடிகளில் தெரிந்து விட்டது. குமுதத்துடன் அவ்வார விகடனையும் வாங்கி வந்திருந்தேன். அதில் "சைக்காலஜிஸ்ட்"டில் வந்திருந்த சாந்திதேவி பற்றிய கட்டுரையை அப்படியே தமிழ்ப்படுத்தி போட்டிருந்தார்கள்..
சுமார் ஒரு மாதம் நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய கட்டுரையை ஒரு தகவல் எழுத்தாளர் (எடுத்தாளர்!) கொன்று விட்டார்.
பலருக்கு விஷயத்தை விளக்கி எழுதி மன்னிப்பு கோரினேன்.
(தொடரும்)

6 comments:

  1. Boss... It is nice. Finally one more twist at the end... Keep it up.
    Please do a post once in 3 days..

    Regards
    Nagappan

    ReplyDelete
  2. சார்..தங்கள் அனுபவப் பகிர்வுகள் நன்றாக இருக்கிறது. அந்த சாந்தி தேவி கட்டுரையை இங்கே பதிவிடுங்களேன். "அமானுஷ்யதிற்கு" என்றுமே மதிப்பும் சிலிர்ப்பு கலந்த ஆர்வமும் உண்டு. நானும் ஆவலாய் உள்ளேன்.

    /**(சும்மா, இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் இப்படி எழுத வேண்டியது ஒரு மாமூல். உண்மையில் சாவிகளைப் பெற்றுக் கொண்ட போது மனதில் திடீர் குஷி எற்பட்டது.)**/

    இதைப் படித்தவுடன் எனக்கு ஒரு பழைய கல்கி எழுத்து ஒன்று நினைவிற்கு வந்தது. கதையா இல்லை கட்டுரையா என்பது நினைவில் இல்லை. அதை கீழே கொடுத்திருக்கிறேன். படித்து விட்டு 'இப்படியா எழுதினார் கல்கி?' என்று என்னை அடிக்க தேடாதீர்கள்! நினைவில் இருக்கும் வரை என் சொந்த சரக்கில் பகிர்கிறேன். தாங்களும் கண்டிப்பாக படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அதன் சாராம்சம் என் நினைவில் இருக்கும் வரை...

    "கதை அல்லது கட்டுரை மாந்தர் மாட்டு வண்டியில் சென்று கொண்டிருக்கிறார். அது ஒரு கிராமத்தின் வெளிப்பபிரதேசங்களில் சென்று கொண்டிருக்கிறது. கல்கி எழுதுகிறார்.......'வெளியில் பச்சை போர்வை விரித்தது போல் வயல் வெளிகள் பிரகாசித்துக் கொண்டிருகின்றன.அதில் சின்னச்சின்ன மீன்கள் அங்குமிங்கும் துள்ளி விளையாடுகின்றன.மெல்லிய குயிலின் ஓசையும் இதமான காற்றும் வண்டியின் ஊடே மிதந்து ஒரு மனோரதமான உணர்வைக் கொடுத்தது.' நிற்க.உண்மையில் நான் இவை எதையுமே கவனிக்கவில்லை. பசியோ வயற்றைக் கிள்ளுகிறது. இதை எங்கே கவனிப்பது! ஒரு சரித்திரக் கதையில் இந்த இடத்தில இது போன்ற வர்ணனைகள் இருக்க வேண்டுமாதலால் எழுதுகிறேன். வேறு ஒன்றும் பிழையாக எண்ணிக கொள்ள வேண்டாம்."

    இதைப் படித்தவுடன் எப்படி சிரிக்காமல் இருப்பது....'கிச்சுகிச்சு' மூட்டி கூட சிரிக்காதவர்கள் கூட இதை படித்து சிரித்து விடுவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. "சிரிப்புச் சித்தர் கல்கி"!!!!

    ReplyDelete
  3. அனபு ந்ண்பர் சந்தோஷ் அவர்களுக்கு, பாராட்டுகளுக்கு நனறி,
    துரதிர்ஷ்டம், சாந்தி தேவி கட்டுரைப் பிரதி என்னிடம் இல்லை. ஜெர்ராக்ஸ் என்பதெல்லம் வருவதற்கு முந்தைய யுகத்தில் எழுதியது.

    - கடுகு

    ReplyDelete
  4. அடடா..என்ன சார்..ஒரு நல்ல கட்டுரை படிக்கும் வாய்ப்பு பறிபோனதே...சிறிது வருத்தமே...உங்கள் "கல்கியும் நானும்" கட்டுரையை இட்லி வடையில் வாசித்தேன்.மனம் நெகிழ்ந்து போனது கல்கியை பற்றி படித்தவுடன்.அது பற்றி தங்களுக்கு தனியே எழுதுகிறேன்.இன்னும் கல்கியை பற்றி அவருடனான உங்கள் அனுபவங்களை பகிருங்கள்.ஆர்வமாய் உள்ளேன்.

    ReplyDelete
  5. அந்த சாந்திதேவி கட்டுரை குமுதம் காரியாலயத்தில் இருக்கிறதா என்று விசாரித்துப் பார்க்கலாமே?

    ReplyDelete
  6. அப்போதே கேட்டு வாங்கி வைத்திருக்க வேண்டும்.
    எனக்குத் தோன்றவில்லை.. இத்தனை வருஷம் கழித்து யோசனை சொன்ன நீங்கள், அப்போதே சொல்லி இருக்கலாம் :):)

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!