January 28, 2010

கமலாவும் காபியும்


காப்பி போடுவது ஒரு கலை என்றால், போட்ட காப்பியை ரசித்துக் குடிப்பது மற்றொரு கலை. இந்த இரண்டு கலைகளிலும் கமலாவின் (அதாவது என் அருமை மனைவி கமலாவின்!) தேர்ச்சி அபாரமானது.
    நாலு நாள் சாப்பாடு சாப்பிடாமல் இருப்பாள். பழைய புடவைகளைப் போட்டு எவர்சில்வர் பாத்திரம் வாங்காமல் ஒரு மாதம் முழுவதும் கூட இருப்பாள். தொடர்ந்தாற்போல் பதினைந்து நிமிடங்கள் என்னைத் திட்டாமல் கூட இருப்பாள்; ஆனால் காப்பி சாப்பிடாமல் அவளால் இருக்க முடியாது!
    அவள் போடும் காப்பியும் பிரமாதமாக இருக்கும்.டிகிரி காப்பி டிப்ளமா காப்பி எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்; கள்ளிச் சொட்டு காப்பி என்பார்களே அது எல்லாம். கமலாவின் காப்பி என்ற இமயமலைக்கு முன், வெறும் பரங்கிமலை.
    இப்படிக் காப்பி ரசிகை திலகமாகவும், காப்பி டிகாக் ஷன் பேரரசியாகவும் திகழ்ந்த கமலாவைத் திடீர் என்று ஆண்டவன் சோதனை செய்தான்.
    அவ்வப்போது வயிற்றில் எரிச்சலாக இருக்கிறது என்று டாக்டரிடம் போனாள் ஒரு நாள். (வயிற்றில் எரிச்சல் வேறு; வயிற்றெரிச்சல் வேறு.) டாக்டர் பரிசோதித்து விட்டு, மறக்காமல் ஃபீஸ் வாங்கிக் கொண்ட பிறகு, "ஹைபர் ஆசிட் தொல்லை... காரம், காப்பி எல்லாம் கூடாது'' என்றார்.

   டாக்டர் சொன்னதைக் கேட்டு கமலா இடிந்தே போய்விட்டாள். எதிர் வீட்டு கௌசல்யா "தீபாவளிக்குப் பட்டுப் புடவை வாங்கிக் கொண்டேன்' என்று கூறிய போது கூட கமலா இவ்வளவு கலங்கவில்லை. காரணம், கமலாவிற்குக் காப்பியின் மேல் அத்தனை உயிர்.  காரத்தைக் கூட அறவே விட்டாலும் விட்டு விடுவாள். ஆனால் காப்பியை....?
    ""டாக்டர், காப்பியைத்தானே விடணும்... விட்டு விட்டால் போச்சு...'' என்று மிகவும் சர்வ சாதாரணமாக, எவ்வித சலனமுமின்றிச் சொன்னாள் கமலா என்னும் இன்றைய நடிகையர் திலகம்!
    மறு நாள் காலை. நான் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும்போது, கமலா  காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்ததால், ""கமலா, அதிகம் சாப்பிட வேண்டாம். அரையே அரை கப் காப்பி சாப்பிடு...ஒண்ணும் தப்பில்லை'' என்றேன்.
    அடுத்த கணம் கமலா என் எதிரே இல்லை. தூணைப் பிளந்து வந்த நரசிம்ம மூர்த்திதான் காட்சி அளித்தார். ""என்ன, சொன்னீங்க? அரை கப் காப்பி.யா?.. அதைவிட அரை கப் விஷத்தை கொடுங்கோ.. காப்பி சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாதுன்னு டாக்டர் சொல்லி இருக்கிறார். என்னைக் கண்டாலே ஆகாது உங்களுக்கு... எதுக்கு டாக்டர்கிட்டே காண்பிச்சிங்க? வியாதியோ வெக்கையோ நான் எக்கேடு கெட்டுப் போறேன்... நீங்களும் உங்க மனுஷாளும் சௌக்கியமாக இருந்தால் சரி... எப்படித்தான் இந்த மாதிரி ஈவு இரக்கம் இல்லாமல் சொல்ல உங்களுக்கு மனசு வருகிறதோ ?'' என்று கத்திக் கொண்டே உள்ளே சென்றாள். நான் ஒன்றும் பேசவில்லை. (வழக்கம் போல்!)
    மறு நாள் ஒரு நண்பரின் வீட்டிற்குக் கமலாவும் நானும் சென்றோம்.
    ""என்ன சாப்பிடுகிறீர்கள்? காப்பியா, டீயா, கூல்ட்ரிங்கா?'' என்று நண்பர் கேட்டார்.
    ""கூல்ட்ரிங்கே போதும். கமலாவிற்குக் காப்பி கூடாது. பெப்டிக் அல்சர்'' என்றேன். இது பெரிய தப்பு என்று எனக்கு அப்போது தெரியாது. வீட்டுக்கு வந்ததும் கமலா தனது மூன்றாவது கண்ணைத் திறந்தாள்.  (அவளுக்கு சைவ, வைஷ்ணவ வித்தியாசம் கிடையாது, ஒரு சமயம் நரசிம்ம மூர்த்தியாக இருப்பாள்; மற்றொறரு சமயம் முக்கண் சிவனாக இருப்பாள்!) மூன்றாவது கண்ணைத் திறந்து விட்ட்துடன், ""அவர் காப்பியா, டீயா, கூல்ட்ரிங்கான்னு கேட்டதற்கு, ’கூல்ட்ரிங்க் போதும்’னு சொல்றது ’காப்பி வேண்டாம், கமலாவுக்கு அல்சர்' என்று சொல்லாவிட்டால் உங்கள் தலை வெடித்தா போய்விடும்? ஏன், உங்க அக்காவுக்கு சைனைஸடீஸ், உங்க அம்மாவுக்கு ஆர்த்ரைட்டீஸ், உங்கண்ணாவுக்கு மைக்ரைன் என்று ஏன் சொல்லலை?... கமலா வியாதிக்காரின்னு ஊரெல்லாம் டாம் டாம் போடறதிலே என்ன சந்தோஷமோ?'' என்று கத்தினாள். கண்களிலிருந்து கண்ணீரும் வந்து விட்டது. அந்தக் கண்ணீர், கடைக்குப் போய்ப் புதிதாய் வாங்கி வந்த சைனீஸ் சில்க் புடவையால் துடைத்த பிறகுதான் நின்றது!
    மூன்றாம் நாள் காலை, கமலாவுக்கும் வேலைக்காரிக்கும் வாக்குவாதம். நடப்பதைக் கேட்டு, ""என்ன கமலா, என்ன சமாசாரம்?'' என்று கேட்டேன்.
    "என்னவா?... இவள் வேலையா செய்கிறாள்? படு தண்டம். நாளையிலிருந்து வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டேன்.''
    "அவள் வராவிட்டால் எப்படி கமலா?....'' என்று ஆரம்பித்தேன்.
    ""நான்தான் சம்பளம் இல்லாத வேலைக்காரி ஒருத்தி இருக்கிறேனே?'' என்று சொல்லியபடியே "டொங்"கென்று சர்க்கரைப் புட்டியை மேடையில் வைத்தாள். அது சில பல துண்டுகளாக உடைந்தது. இந்த சமயம் பார்த்துத்தானா பால் பொங்கி அடுப்பில் வழிய வேண்டும்?
"சனியன் பிடிச்ச கேஸ் அடுப்பு... பிசாசாக எரியறது. இரண்டு நிமிஷம்தான் ஆச்சு.... அதுக்குள்ளே பால் பொங்கிடுத்து. நாளையிலிருந்து கரி அடுப்பு தான்...'' என்றாள் கமலா.
    அன்று மாலை டில்லியில் பிரபல டாக்டராக இருக்கும் என் நண்பர் என்னைப் பார்க்க வந்தார். மூன்று நாட்களாக கமலா படுகிற அவஸ்தையையும் மற்றவர்களைப் படுத்தி வைக்கிற பாட்டையும் விவரமாகச் சொன்னேன். அவர் கமலாவைக் கூப்பிட்டு, டாக்டர் என்ற முறையில் சில கேள்விகள் கேட்டுவிட்டு, ""உங்களுக்கு அல்சர் எதுவுமில்லை, வெறும் அசிடிடிதான். அசிடிடி பின்னால் அல்சரில் கொண்டு விட்டு விடக் கூடும் என்பதால் டாக்டர் முன் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லியிருப்பார். காரம் கூடாதுதான். கோங்குரா சட்டினி, மிளகாய் பஜ்ஜி, காரக் குழம்பு போன்றவைகளைத்தான் சாப்பிடக் கூடாது. லேசான காரம் சாப்பிட்டால் தப்பில்லை. காப்பி சாப்பிட்டாலும்  தப்பில்லை. ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று கப் காப்பிக்கு மேல் சாப்பிடாதீர்கள் பித்தமாகிவிடும்'' என்றார்.
    ""அப்படியா டாக்டர்.... இதோ, காப்பி கொண்டு வருகிறேன்'' என்று உள்ளே ஓடினாள்.  கமலா எப்போது புள்ளிமானாக ஆனாள்? முகத்தில் எப்படி இத்தனை புன்னகை மலர்களை வரவழைத்துக் கொண்டாள்?

    மறுநாள் காலை. பில்டரைத் தட்டும் "டங்"கென்ற ஓசையே கோயில் மணி ஓசையாக இருந்தது. சிறிது நாழிகையில் இரண்டு கப் காப்பியுடன் கமலா வந்தாள். அவள் ஒரு கப்பும் நான் ஒரு கப்பும் காப்பியை ரசித்துச் சாப்பிட்டோம். அப்பாடா, காப்பிக் கோப்பையிலே தோன்றிய புயல் கரையைக் கடந்தது!!!

20 comments:

  1. உங்கள் வீட்டில் ஒரு கப் காபி சாபிட்டமாதிரி இருந்தது... நன்றி...

    ReplyDelete
  2. இயல்பான நடை... ரொம்ப வாசனையான காபி....

    ReplyDelete
  3. அதாவது ஒரிஜினல் காபி என்கிறீர்கள். மிக்க நன்றி.
    -கடுகு

    ReplyDelete
  4. பேஷ்..பேஷ்..ரொம்ப நல்ல காபி!

    ReplyDelete
  5. பேஷ்.. பேஷ்... ரொம்ப நன்னா இருக்கு.(உசிலை மணி ஸ்டைலில் படிக்கவும்)

    ReplyDelete
  6. 'Subramaniam'and 'Arivili' overtook me in commenting and they used my words! Thanks, - R. Jagannathan

    ReplyDelete
  7. சார் ஒங்களோட நகைச்சுவை எழுத்துக்கு நான் அடிமை ஆயிட்டேன்.

    ReplyDelete
  8. மிகவும் நன்றி. ஏற்கனவே மணடை கனம் அதிகம்
    என்று பேர் பெற்றிருக்கிறேன். இப்படி எல்லாம் எழுதினால், மிக்க கனம் பொருந்தியவனாக ஆகிவிடுவேன்! - கடுகு

    ReplyDelete
  9. உங்களை அறிமுகபடுத்திய...இட்லி வடைக்கு நன்றி....!

    வேங்கடநாராயண்.
    சிங்கப்பூர்

    ReplyDelete
  10. நான் கடந்த நாற்பது ஆண்டுகளாக உங்கள் ரசிகன். வெகு நாட்களுக்குப் பிறகு உங்கள் எழுத்துக்களைப் படிக்கும் வாய்ப்புக்கு நன்றி. ரொம்ப நாளா ஒரு சந்தேகம்! மாமியையும் அவர் உறவினர்களையும் இவ்வளவு நக்கல் பண்ணி எழுதுகிறீர்கள். மாமியின் வாயால் உங்கள் உறவினர்களையும் அக்கம் பக்கத்தாரையும் ஒரு கை பார்த்து விடுகிறீர்கள். நிஜ வாழ்வில் எப்படி எல்லாரையும் (மச்சினரை, மாமியாரை, உங்கள் அக்காவை, பக்கத்து வீட்டு மாமா மாமியை) சமாளிக்கிறீர்கள்? எங்களைத்தான் இப்படி ஜாடை மாடையா எழுதுகிறீர்கள் என்று யாரும் சண்டைக்கு வருவதில்லையா?

    ReplyDelete
  11. சூர்யா அவர்களூக்கு, நல்ல கேள்வி. கணவன் மனைவி சண்டை இல்லாத வாழ்ககை உப்பு சப்பற்றது என்னும் போது, இப்படி எழுதி சண்டை வருவது பெட்டர்!

    ReplyDelete
  12. ராஜ சுப்ரமணியன்January 30, 2010 at 10:32 AM

    காலங்காத்தாலே முதல் டிகாக்‌ஷனில் சூடா காஃபி சாப்பிட்ட மாதிரி ஒரு சுவை. காஃபி, அதுவும் ஃபில்டர் காஃபி குடிப்பவர்களுக்குத்தான் கமலா மாமியின் வேதனை புரியும். அந்த இரண்டாவது டாக்டருக்கு நன்றிகள் - மாமியின் முகத்தில் மீண்டும் புன்னகை மலர்களை கொண்டுவந்ததற்கு.

    ReplyDelete
  13. Dear Sir

    Permit me to write in English. I am yet to download tamil font.I enjoy reading your blog.

    My periappa(V.sundaresan) amd family lived at(old no.) 86, vellala street in 60s and 70s.it was a joint family. I am sure kamala maami must be knowing my cousins nalini, chandra, naga, nimmi,gowri,bala,ramani,kumar.There is a pillayar koil in front of this house. of course, it has been re positioned now.

    I wonder whether you knew my other periappa santhanam who was in delhi till his demise in 1969.he was working with central Govt. he was actively involved with sri.T.Janakiraman and poornam viswanathan in tamil dramas.
    I am a CA -live and work in dubai.

    Namaskaram.

    raju

    ReplyDelete
  14. Dear Mr Raju, Thaks for your comments. I always welcoem any comments so long they are unadulterated praise fo rme!!!!
    I wiil check up with Kamala Mami about her Vellala Street friends.
    Yes, I know Mr Santhanam. He was an actor in South Indian Theater. I was also in S.I.T. Was Santhanam's brother a Police officer in Mount Road in 70s. In a future article I will be mentioning about them. --Kadugu

    ReplyDelete
  15. Dear sir

    thanks for your prompt response.

    Yes, you are referring to Mr. Dasaratha raman-we used to call him "police chitappa." He passed away, all of a sudden, last year.

    I look forward to an episode involving police chitappa.

    I have been reading your writing from your dinamani kadir days.

    Namaskarams.

    raju-dubai

    ReplyDelete
  16. நான் இன்று தான் உங்க ப்ளாக்கை பார்த்தேன். வந்ததும் நல்ல நகைசுவையோட+கமகம் டன்கின் டோனட்ஸ் ஒரு காப்பி குடிச்சுட்டேன். பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.

    ReplyDelete
  17. Sir,

    Without filter coffee, life is waste. Especially in the morning time, having filter coffee in one hand and newspaper in other hand.. Unforgettable moments.. Now I m missing both...

    ReplyDelete
  18. //காப்பி போடுவது ஒரு கலை என்றால், போட்ட காப்பியை ரசித்துக் குடிப்பது மற்றொரு கலை//

    this is 100% true. though i dont like and dont drink coffee. I have seen people who relish in that taste especially in the morning.

    ReplyDelete
  19. கமலா மாமி என்ன காபி பொடி யூஸ் பண்ணுவான்னு சொல்லவேஇல்லையே?

    ReplyDelete
  20. <<< Altruist said...கமலா மாமி என்ன காபி பொடி யூஸ் பண்ணுவான்னு சொல்லவேஇல்லையே? >>>
    காபி பொடி கடன்தான் கேட்கமுடியும். என்ன பொடி என்று இங்கிதமில்லாமல் கமலா கேட்கமாட்டாள்! :):)

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!