January 01, 2010

அன்புள்ள டில்லி --3


           அந்தப் பெண் எம்.பி. எங்களைக் காலி செய்யச் சொன்னது ஏன் என்பதைச் சொல்வதற்கு முன்  வேறு ஒரு விஷயத்தைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
அந்தப் பெண் எம்.பி.யின் வீட்டுக்கு வந்த பல பிரமுகர்களில் ஒருவர், ஒரு மகாராஷ்டிர மாநில எம்.பி.  தன்னுடைய தமிழ் மாஸ்டர்ஜி என்று என்னை செல்வி அறிமுகப்படுத்தி இருக்கிறார்.  அவருடன் நான் ஆங்கிலத்தில் உரையாடுவது உண்டு.. என்னுடைய ஆங்கிலப் புலமை அவரைக் கவர்ந்து விட்டது. ஆகவே ஒரு நாள், "எனக்கு இங்கிலீஷ் ட்யூஷன் சொல்லித் தர முடியுமா?'' என்று கேட்டார்.
அவர் மகாராஷ்டிராவில் ஒரு மிகப் பெரிய பிரமுகர். எதிர்க் கட்சியின் தலைவராக இருந்தவர், அசெம்பிளியில் பின்னால் காங்கிரஸிற்கு வந்தார். இவரது மாப்பிள்ளை சில வருடங்கள் கழித்து பம்பாய் முதலமைச்சர் ஆனார்.
அவருக்கு இங்கிலீஷ் ட்யூஷன் சொல்லித் தர ஒத்துக் கொண்டேன். தினமும் ஒரு மணி நேரம் ஆங்கிலத்தில் உரையாடல், டிக்டேஷன் போன்று பாடங்கள். அவருக்கு ஆங்கிலம் தெரியும். ஆனால் நிறையத் தவறுகள் ஏற்பட்டு விடும். அவருடைய வீக் பாயிண்டுகளைக் கண்டுபிடித்து அக்கறையுடன் பாடம் சொல்லிக் கொடுத்தேன். என் மேல் அபார மதிப்பும் பிடிப்பும் எற்பட்டு விட்டது.

டெய்லி ரேட்
சுமார் மூன்று மாதங்கள் ஆகியிருக்கும். "கொஞ்சம் பணம் தேவையாக இருக்கிறது'' என்றேன்.
"அடேடே, உங்களுக்கு பீஸ் கொடுக்கவே மறந்து விட்டேனே... முன்னேயே ஏன் கேட்கக் கூடாது?'' என்று சொல்லிக் கொண்டே தன் ப்ரீஃப் கேஸைத் திறந்தார். அதிலிருந்து ஒரு டைரியை எடுத்து, பக்கங்களைப் புரட்டிக் கொண்டே வந்தார். சுமார் ஐந்து நிமிஷம் என் பொறுமையைச் சோதித்து விட்டுச் சொன்னார். அதை கேட்டதும் எனக்கு ஷாக் அடித்தது!
அவர் சொன்னார்: "மொத்தம் நாற்பத்தாறு நாட்கள் ட்யூஷன் எடுத்து இருக்கிறீர்கள். ஒரு ரூபாய் ரேட் வீதம் கொடுக்கிறேன். இந்தாருங்கள்  ஐம்பது ரூபாய். நாலு ரூபாய் பின்னால் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளலாம்!'' என்றார் சர்வ சாதாரணமாக!
ஒரு ரூபாய்! என்னை மட்டும்  அவர் குறைவாக மதிப்பிடவில்லை. நான் படித்த ஷேக்ஸ்பியரையும் வெர்ட்ஸ்வொர்த்தையும் ரென் அண்ட் மார்ட்டினையும் அல்லவா அவமதித்து விட்டார்! இத்தனைக்கும் அந்த மூன்று மாதத்தில் அவர் அபார முன்னேற்றம் அடைந்து விட்டார். பார்லிமெண்டில் நான் எழுதித் தந்த உரையைப் படித்துக் கொண்டு போய், பேசியும் இருக்கிறார்; பாராட்டும் பெற்றிருக்கிறார்
"சார்... பணம் மொத்தமாக வாங்கிக் கொள்கிறேன். அப்புறம், இத்தனை நாட்களாகப் பழகி விட்ட பிறகு நமக்குள் நல்ல நட்பும் எற்பட்டுவிட்டது. பார்க்கப் போனால் பீஸ் கேட்பதும் தவறு, கொடுப்பதும் தவறு'' என்றேன்.
"யு ஆர் ரைட், இருந்தாலும் என் மனசு கேட்காது. சமயம் வரும்போது நான் எதாவது செய்கிறேன்'' என்றார். (அந்த "சமயம்' இதுவரை வரவில்லை!)
போகட்டும், நம் செல்வி எம்.பி. கதைக்கு வருவோம்.
தமிழ் எழுத்தாளன் என்ற முறையில் "ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ' போல டில்லியில் எனக்குச் சிறிது பிராபல்யம் எற்பட்டு விடவே, பலர் என்னைத் தேடி வர ஆரம்பித்தார்கள். டெலிபோன் கால்களும் வர ஆரம்பித்தன. முக்கிய பதவிகளில் இருக்கும் பிரமுகர்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் பெண்ணின் அரங்கேற்றத்திற்கு வந்து, பார்த்து எதாவது எழுதும்படி கேட்டுக் கொள்வார்கள். (இந்த மாதிரி அழைப்புகளை ஏற்கவும் முடியாமல் நிராகரிக்கவும் முடியாமல் நான் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது!)
ஒரு சமயம் பிரதமரின் அலுவலகத்திலிருந்து கூட எனக்குப் போன் வந்த்து. (சாஸ்திரி பிரதமராக இருந்தார் அப்போது)
இப்படிபட்ட காரணங்களால் எம்.பி.க்கு என் மேல் பொறாமை எற்பட்டிருக்கலாம், அவரை விட ஒரு படி மேலே போய் விடுவேனோ என்று!
திடீரென்று ஒரு நாள், "என் அப்பா, அம்மா டில்லிக்கு வருகிறார்கள். ஆகவே பத்து நாளைக்குள் வீட்டைக் காலி பண்ணி விடுங்கள்'' என்று சொன்னார்.
"அதற்கென்ன காலி பண்ணி விடுகிறேன். ஆனால் பத்து நாளைக்குள் வேறு இடம் கிடைப்பது கஷ்டமாயிற்றே'' என்று ஆரம்பித்தேன்.
"ட்ரை பண்ணினால் கிடைக்கும். என் பெற்றோர் வருவதால் இடம்
போதாமல் இருக்கும். அப்புறம் ஒண்ணு...கமலா ரொம்ப சிரிக்கிறாள்'' என்ற அவர் சொன்னபோது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
ஒரு பிரபல நகைச்சுவை எழுத்தாளனாக (!) மலரப் போகிறவன், சிரிப்பு வரும்படிதான் பேசுவான். அவனைக் கலியாணம் பண்ணிக் கொண்ட பெண் (அந்த ஒரே காரணத்துக்காக அல்லது பாவத்துக்காக) சிரித்துக் கொண்டு தான் இருப்பாள். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகுமே, இது ஒரு தப்பா? அடப்பாவமே!

மாடி வழியில்
உடனே காலி பண்ணினோம். இடம். மேல் மாடி போகும் வழியில் இருந்த லேண்டிங். உண்மை. உண்மை.. மாடி போர்ஷனிலிருந்த நண்பர் ராமமூர்த்தி அன்புடன் உதவினார்.

இரண்டு தினங்களுக்குப் பிறகு எதிர்மாடி போர்ஷன் காலியாயிற்று. (என்னே ஆண்டவனின் கருணை!) அந்த போர்ஷன் வேறொரு எம்.பி.யைச் சேர்ந்தது. அவர் ஊரில் இல்லை. நல்லவேளை, மூன்றாம் நாள் அவர் வந்தார். எங்கள் நிலைமையைச் சொன்னோம். பலபேர் அந்த இடத்திற்குப் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும் எங்களுக்கு உடனே கொடுத்து விட்டார்.
அப்படி உடனே கொடுத்ததற்குக் காரணம், அவருக்கு எங்கள் மேல் எற்பட்ட அனுதாபம்  மட்டுமல்ல.  அவரும் அந்தச் செல்வி எம்.பி.யும் ஒரே மாநிலத்தவர்கள். இருவருக்கும் ஏதோ லேசான விரோதம். ’விரோதியின் விரோதி நண்பன்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நான் அவருக்கு நண்பன் ஆகி விட்டேன்.  அதனால் எங்களுக்கு இடம் கொடுத்து விட்டார்.
ஆக, அந்தப் பெண் எம்.பி.க்குத் தமிழ் சொல்லிக் கொடுத்ததில் எனக்கு ஒரு பிரமோஷனும் இல்லை; பீஸ், ஒரு பைசா கூட வரவில்லை; நட்பும் போயிற்று. (ஒன்று மட்டும் சொல்ல வேண்டும், அவர் வீட்டில் நாங்கள் இருந்ததற்கு வாடகை எதுவும் வாங்கவில்லை!)
இந்தப் பிரிவால் யாருக்கும் நஷ்டமில்லை. அந்தப் பெண்மணி உதவி மந்திரியானார். ஸ்டேட் மந்திரியானார். பிரதமருடன் பணியாற்றினார். கட்சி மாறினார்.  ராஜ்ய சபையிலும் இடம் பெற்றார்..
நானும் ஓரளவு முன்னுக்கு வந்தேன். நாலு பேருக்குத் தெரிந்த ஆசாமியாக இல்லாவிட்டாலும், மூன்று பேருக்குத் தெரிந்த ஆசாமியானேன். (இதில் இரண்டு பேர் என் மனைவி, என் பெண்!)
*     *      *     *              *             *
இந்த சமயம் என் மூத்த சகோதரர் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற விரும்பினார். எதற்கு? எம்.பி.பி.எஸ். படிப்பு படிக்க! அவருக்கு அப்போது வயது நாற்பது. இருந்தாலும் புனா மருத்துவக் கல்லூ ரியில் தகுதியின் அடிப்படையில் இடம் கொடுத்து விட்டார்கள்.
ஆனால் ராணுவத்திலிருந்து ஓய்வு தர மறுத்து விட்டார்கள். சீன ஆக்கிரமிப்பு நடந்த சமயம். ஆகவே யாரையும் ரிலீஸ் பண்ணக் கூடாது என்று அரசாங்கம் உத்தரவிட்டு விட்டது..
புனாவிலிருந்து என் சகோதரர் சற்று வருத்தப்பட்டுக் கடிதம் எழுதியிருந்தார்.
ராணுவ அமைச்சராக இருந்த  ஒய்.பி. சவான் அல்லது உதவி மந்திரியாக இருந்த  டிஆர். சவான் ஆகிய இருவரில் ஒருவரைப் பார்த்து. உதவி  கேட்கலாம் என்று நினைத்தேன். அமைச்சர்களைப் பார்ப்பது மகா கஷ்டமான காரியம் என்று தெரிந்திருந்தும், சகோதரருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உந்துதலால் செயல்படத் தொடங்கினேன்.
எம்.பி.யின் மூலமாக உதவி அமைச்சர் டி.ஆர். சவானைச் சந்தித்தேன். "சார். இருபது வருஷங்கள் ராணுவத்தில் பணியாற்றியவர் ஓய்வு கேட்கிறார். அப்பாவிற்கு உடம்பு சரியாக இல்லை, அம்மாவிற்கு உடம்பு சரியாக இல்லை என்று பொய் சாக்குகள் கூறாமல், மருத்துவப் படிப்பு சேருவதற்காக ஓய்வு கேட்கிறார். இது மாதிரி கோரிக்கை இதற்கு முன் வந்திருக்குமா என்பது சந்தேகம்'' என்று மளமளவென்று சொன்னேன். (இள ரத்தம் பேச வைத்தது.)
"எதாவது மனு கொண்டு வந்திருக்கிறீர்களா?'' என்று கேட்டார்.அமைச்சர்.
"இல்லையே. கொடுக்கச் சொன்னால்  தருகிறேன்'' என்றேன்.
"பரவாயில்லை.. நாளை காலை கொண்டு வந்து கொடுங்கள்'' என்றார் மிகவும் கனிவுடன்.                                ( தொடரும்)

12 comments:

 1. aahaa arumai. very interesting.

  ReplyDelete
 2. M.P.kkalidam fees ethirpaarththa arpudhap piravi neengal mattumaaiththaan irukka mudiyum! Suddha 'vellanthi'aaga irundhirukkireergal! Avrgalukku varumbadi yerpaadu seithu athil commission paarppadhuthaan nadaimurai.
  //மூன்று பேருக்குத் தெரிந்த ஆசாமியானேன். (இதில் இரண்டு பேர் என் மனைவி, என் பெண்!)// Thamizh pesum nallulagam therindha writerkku iththanai adakkamaa?
  -R. Jagannathan

  ReplyDelete
 3. Sir,

  This part Increasing the expectation !!!...
  Waiting for the next part.

  ReplyDelete
 4. Sir.
  You have mentioned about Junction Boxes to be made of Fibre glass which is a very good suggestion.M/S Devi Polymers who are having their manufacturing unit at Guindy industrial estate are manufacturing insulated Junction boxes for the past ten years.They have implemented in certain states and in private sector.But due to red tapism in TN Electricity board no one want to introduce this.

  ReplyDelete
 5. யதிராஜ சம்பத் குமார்January 3, 2010 at 9:47 AM

  கட்சி மாறினார். ராஜ்ய சபையிலும் இடம் பெற்றார்.//

  Yureka.....!! The penny is dropped. :-)

  ReplyDelete
 6. If you have guessed correctly, here is a pat on your back.
  As far as I know, it is Eureka and not Yureka as spelt by you. May be you are right. Our house was named EUREKA some 60 years back.
  -Kadugu

  ReplyDelete
 7. யதிராஜ சம்பத் குமார்January 3, 2010 at 4:35 PM

  I am sorry, it was my mistake. It should be spelt as EUREKA, as you said. :-)

  The MP whom i mentioned earlier had also switched her party and was nominated to Rajya Sabha by BJP.

  If i am not wrong, she must be the one, else i accept myself defeated and give it up.

  ReplyDelete
 8. ஓ! அவரா? சரிதான் சரிதான்... யுரேகா இல்லை - அதற்கு ரைமிங்?

  ReplyDelete
 9. டெல்லி அனுபவங்கள் ருசிகரமாய் உள்ளன.

  3டி படத்தில் 2010 நன்றாக உள்ளது.

  சேவல் படத்தில் முன்பக்கம் பின்பக்கம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது. மூக்கை சற்று கூராக பெரிதாக வடிவமைத்திருக்கலாமோ :).

  ஃபைவர் க்ளாஸ் ஜங்ஷ்ன் பாக்ஸ் அவ்வளவு ந்ல்லதல்ல. மின்சார short circuit போது தீப்பிடிக்கும் அபாயம் உண்டு.

  பல தினசரிகள் கட்டுரை ஆசிரியர்களின் மின்னஞ்சலை பெரும்பாலும் இப்போதெல்லாம் கொடுக்கிறார்கள். தாங்கள் கூறியது போல் வார மாத சஞ்சிகைகளும் கடைபிடித்தால் வரவேற்கப் படவேண்டியதுதான்.

  ரெட்டை தலை மைக் அபாரம்! பேட்டிக்கானப் போட்டியில் பல சானல்களின் ரெட்டை மைக்குகள் ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கொண்டு வேறு வித காமெடி ஆகிவிடும் :))

  ReplyDelete
 10. kggouthaman said...
  ஓ! அவரா? சரிதான் சரிதான்... யுரேகா இல்லை - அதற்கு ரைமிங்?>>
  சரியில்லை. விடுங்கள்,வீணாக எதற்கு மண்டையைக் குழப்பிக் கொள்கிறீர்கள்?


  கபீரன்பன் said...:).

  <>

  பத்து வருஷ்ங்களக ஒரு கம்பெனி தயார் செய்து வருகிறதாமே. பல மாநில அரசுகள் வாங்கி கொண்டிருப்பதாக ஒரு அன்பர் எழுதி இருக்கிறாரே?

  உங்கள்COOMENT-களுக்கு நன்றி.

  -கடுகு

  ReplyDelete
 11. This reading is good as well intersting. Please place pictures approrpriately from your library of pictures.

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!