January 06, 2010

கேரக்டர்: சாரு

மெல்லிய லக்னோ மல் ஜிப்பா, கருப்பு பாண்ட், ஜீனத் அமன் ஹேர் ஸ்டைல், கறுப்பு மூக்குக்கண்ணாடி ,’பிளாட்பாரம்'. என்று நாகரீக நங்கையர்களால் அழைக்கப்படும் உயரமான மிதியடி,

தோளிலிருந்து தொங்கும் "ஜம்பப் பை', முகத்தில் ஓர் அலட்சியம், தவறிப் போய் பெண்ணாகப் பிறந்து விட்டோம் என்கிற நினைப்பு,, அந்த நினைப்பினால் உண்டான ஆண்மைத்தனமான அட்டகாசப்பேச்சு,  இவைகள் ஓரளவுதான் சாருவைப் படம் பிடித்துக் காட்டும். காரணம் சாருவின் குணமோ, நடை உடை பாவனைகளோ வர்ணனைக்குள் அடங்காதவை -சாருவைப் போல!

"யாருக்கு எதுக்கு அடங்கி நடக்கணும்? சொஸைடியில் பெண்ணைவிட ஆண் உயர்ந்தவன் என்பது தவறு மட்டுமல்ல, சரியான அசட்டுத் தனமும் கூட, வாட் டு யூ ஸே, ராஜா?'' என்று கேட்பாள் சாரு. ராஜா என்பது அவள் கணவன்!
ஆமாம், கல்யாணமாகி இரண்டு பெண்களுக்கு அம்மாவாகி விட்டவள்தான் சாரு. அவள் சதா சர்வ காலமும் ஷாப்பிங், ஸ்லிம்மிங், கார் டிரைவிங் என்று பல "ங்"குகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைத்தான் பலர் பார்த்திருக்கிறார்கள். வீட்டில் குழந்தைகளைக் கவனிக்கிறாளா, சமையல் செய்கிறாளா, ஏன் தன்னுடைய கர்சீஃபையாவது தானே தோய்க்கிறாளா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத விஷயங்கள். ஏன், பலர் அவளை ஒரு காலேஜ் குமரி என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். "இவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா? அட? இரண்டு குழந்தைகள் கூடவா? எல்லாம் அவளுக்கே தெரியாமல் நடந்து விட்டிருக்கவேண்டும்! அவள் டிரஸ்ஸ÷ம் பேச்சும் சினிமா ஸ்டாரைத் தூக்கி அடிக்கின்றன'”. என்று வியப்பவர்கள் தான் அதிகம்.

 "ராஜா, இன்னிக்கு நைட் ஷோ "டென் கமாண்ட்மென்ட்ஸ்" போகணும். உனக்கு டயர்டா இருக்குதா? நெவர் மைண்ட்... பக்கத்து வீட்டு அஷோக்கை அழைச்சிக்கிட்டுப் போகிறேன். அவனுக்கு இரண்டு நாளைக்கு.. லீவு. ஏய், ஆஷா, உஷா! நீங்க இரண்டு பேரும் "டாடி' யைத் தொந்திரவு செய்யக்கூடாது. சரியா எட்டரை மணிக்கு "டாடி'க்கு குட் நைட் சொல்லிட்டுத் தூங்கப் போகணும்... ஓகே...''

"என்ன சாரு, நம்ம கார் கூட இப்போ வொர்க் ஷாப்பிலே விட்டிருக்கிறோம். தியேட்டர் ரொம்ப தூரத்திலே இருக்கிறதே?''

"இருக்கட்டுமே, அஷோக்கின் மோட்டார் சைக்கிளில் போகிறேன். என்ன ராஜா, உன் பர்மிஷன் உண்டு தானே?''

"சாரு...சார் டியர்...''

"சாரு...சார்....என்ன "சார்'  வேண்டியிருக்கு? ஏற்கனவே என்னை எல்லாரும் ஆம்பளைன்னு சொல்றாங்க.நீ வேறு "சார்' போட்டால் என்ன ஆகிறது?''

சாரு தன் கணவனுக்கு மதிப்பு கொடுப்பவள்தான். அவன் மீது அன்பும் ஆசையும் கொண்டவள்தான். இருந்தாலும் வாக்கியத்திற்கு வாக்கியம் "எங்க ஹஸ்பெண்ட்', "என் வீட்டுக்காரர்', "எங்களவர்', "அவர்' என்றெல்லாம் சொல்லமாட்டாள்.  அவளைப் பொறுத்த வரை கணவன் ஒரு நண்பன். வழ்க்கைப் பயணத்தின் பார்ட்னர்.

"கல்யாணம் என்பது ஒரு கைகுலுக்கல் மாதிரி. இதில் மேலே கீழே என்ற பேச்சுக்கே இடமில்லை'' என்பாள்.சாரு பி ஏ. வும் படித்து பி.எட்--டும் படித்தவள்.

"வேலைக்குப் போகிறேன்'' என்றால் ராஜாவிற்குப் பிடிக்கவில்லை. ராஜாவிற்கு நல்ல சம்பளம். நெக்ஸ்ட் இயர் பிரமோஷன். ரீஜனல் மேனேஜர் வேலை கிடைக்கும். "நான் பி.எட். படித்தது வேஸ்ட்தானா?'  என்று கேட்டால், ராஜா ரொம்ப "நாட்டியா', இல்லை இல்லை "நாஸ்டியா' பதில் சொல்கிறது: பி.எட். என்றால் B-E-D  அதாவது படுக்கையாம்!"

 இப்படி சர்வ சாதாரணமாகத் தங்கள் வீட்டுக்கு வருபவர்களிடம் சாரு கூறுவாள்.  அச்சமயத்தில் கணவரும் இருப்பார். வருபவர்கள் தம்பதியராகவும் இருக்கக்கூடும்!

சாருவைப் பொருத்தவரை எந்த செய்தியும் கிசுகிசு செய்தியாக இருக்க  முடியாது. உடைத்துப் பேசுவாள். "லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ்', " ஓ கல்கட்டா', "டீப் த்ரோட்" போன்ற "ஏ' படங்களைப் பற்றி சர்வ சாதாரணமாகப் பேசுவாள்.

அவளைப் பற்றி ஒரு சிலர் கசமுச என்று பேசுவதும் அவளுக்குத் தெரியும். "யாராவது என் எதிரில் வந்து தைரியமாக ஏதாவது சொல்லட்டும், என்ன ஆகிறது என்று பார்க்கட்டும்.' சவாலாகச் சொல்வாள். அவள் நடை, உடை, பேச்சு எல்லாம் ஒரு மாதிரியாக இருந்தாலும், குணத்தில் அப்பழுக்கற்றவள்!

ஆனால் இந்த உலகில் பெரும்பாலோர் பசுத்தோல் போர்த்திக் கொண்டிருக்கும் புலிகள் தானே! ஆகவே அந்தப் புலிகள் சாருவைத் தாக்க முயல்வதில் வியப்பில்லை. ஆனால் எந்த சலசலப்பையும் சமாளிக்கக்கூடியவள் சாரு!

3 comments:

 1. சார், அனைத்து கட்டுரைகளும் மிகவும் நன்றாக உள்ளது. தாங்கள் கட்டுரைகளை அப்புசாமி.காம் தளத்தில் படித்திருக்கிறேன். அனைத்து "கமலா" கட்டுரைகளும் அற்புதம். இப்பொழுது தாங்கள் தளம் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். சில "கமலா" கட்டுரைகளும் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்கள் சிரிப்புப் பணி தொடரட்டும்.

  ReplyDelete
 2. அன்புள்ள சந்தோஷ், உங்கள் குறிப்பைப் பார்த்து சந்தோஷம்!
  கமலா கட்டுரைகள் நிச்சயம் வரும்.
  இந்த பதிவிற்காகப் புதிதாக எழுதி கொண்டிருக்கிறேன்.-- கடுகு

  ReplyDelete
 3. கடுகு சார்!
  சாரு காரெக்டர் எங்களுக்கு ஆச்சரியமே இல்லை.
  ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்து வீட்டிலும் ஒன்று அதற்கு மேற்பட்ட சாருக்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :